திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 கனடா மாநாட்டில் ‘மனிதநேயர் சாதனை விருது' பெற்ற திராவிடர் கழகத் தலைவருக்குப் பாராட்டு - வாழ்த்துகள்!

திராவிடர் கழக முதல் பொருளாளர் பழையக்கோட்டை இளைய பட்டக்காரர் அர்ச்சுனன் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணுவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டுகோள்!

மூடநம்பிக்கைகளை அளவு கடந்த முறையில் ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடை செய்க!

கழகத் தலைவர் அறிவித்த அய்ம்பெரும் திட்டங்களைத் தொய்வின்றி செயல்படுத்துவோம்!

பன்னாட்டு மாநாட்டில் வழங்கப்பட்ட விருதினை தமிழர் தலைவரிடம், கழகத் துணைத் தலைவர் வழங்கினார்.

சென்னை, அக்.8 திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அய்ம்பெரும் திட்டங்களை செயல்படுத்துவது உள்பட 10 முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

8.10.2022 சனியன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானங்கள் வருமாறு:

இரங்கல் தீர்மானம்: 1

சின்னாளப்பட்டி மணி என்ற (எ) சுப்பிரமணி 

வயது 91  (மறைவு 10.09.2022), மலேசிய தலைவர் துன். சாமிவேலு (வயது- 86 மறைவு 15.09.2022), பாப்பி ரெட்டிபட்டி திராவிட முத்து (மறைவு 20.09.2022), மேனாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா (மறைவு 21.09.2022), நாகை குஞ்சு (மறைவு 29.09.2022), திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் அவர்களின் தாயார் திருமதி இருதயமேரி (வயது 85 மறைவு 29.09.2022), சீதாமூர்த்தி (மறைவு 07.09.2022), பெங்களூரு கோ.லோகநாதன் (வயது 86 மறைவு 09.09.2022), மஞ்சை அழகரசன் எ.சுந்தரமூர்த்தி (வயது 82 மறைவு 13.09.2022), சுசீலாவரதன்- விழுப்புரம் (மறைவு  02.09.2022) மேற்கண்ட பெருமக்களுக்கும், தோழர்களின் மறைவிற்கும் இச்செயற்குழுக் கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும்,உற்றார் உறவினர்களுக்கும் இக்கூட்டம் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மானம் எண்: 2

‘மனிதநேயர் சாதனை' விருது பெற்ற 

கழகத் தலைவருக்குப் பாராட்டு!

கனடா நாட்டில் டொராண்டா நகரில் கடந்த செப்டம்பர் 24, 25 ஆகிய இரு நாட்களிலும் பெரியார் பன்னாட்டு மய்யம் (Periyar International), ஆய்வு விசாரணைக்கான மய்யம் (Centre for Inquiry Canada Chapter), கனடா மனிதநேயர் அமைப்பு (Humanist Canada) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டில் நமது அருமைத் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான ‘‘மனிதநேயர் சாதனை விருதினை'' (Humanist Achievement Award-2022) வழங்கியமைக்குக் கழகத்தின் தலைமைச் செயற்குழு மிகவும் பெருமையும், பெருமிதமும் கொள்கிறது. கழகத் தலைவருக்கு இச்செயற்குழு பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

கனடா மாநாட்டுக் குழுவினருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. 


தீர்மானம் எண்: 3

பழைய கோட்டை இளைய பட்டக்காரர் அர்ச்சுனன் நூற்றாண்டு விழா

திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் ஈரோடு பழைய கோட்டை இளைய பட்டக்காரர் ந.அர்ச்சுனன் அவர்களின் நூற்றாண்டு விழாவை வரும் 14 ஆம் தேதி (14.10.2022) அன்று ஈரோட்டில் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 4

சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ஆக்கப்பூர்வமான உதவிகள் - பணிகள் மேற்கொள்வது!

திருச்சி சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பில் தந்தை பெரியார் குறித்த நிரந்தர வரலாற்றுச் சின்னங்களையும், அம்சங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்படவிருக்கும் ‘‘பெரியார் உலகம்'' நிர்மானத்திற்கு இயன்ற அனைத்து உதவிகளையும் முழு வீச்சில் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது..

தீர்மானம்: 5

அய்ம்பெரும் திட்டங்கள்

தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை' மலரில், தந்தை பெரியாரின் பிறந்த நாள் செய்தியாக, திராவிடர் கழகத் தலைவரும், ‘விடுதலை' ஆசிரியருமான மானமிகு கி.வீரமணி அவர்களால் வெளியிடப்பட்ட அய்ம்பெரும் முழக்கங்கள் மிகவும் முக்கியமானவை.

1. சனாதனம் ஒழியட்டும் - சமதர்மம் நிலைக்கட்டும்!

2. தேவை, தேவை, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை!

3. ஒன்றிய அரசே, தனியார்த் துறைகளிலும் சமூகநீதி தேவை - பாலியல் நீதியும் தேவை!

4. செயல்பட விடு, செயல்பட விடு - ‘திராவிட மாடல்' தமிழ்நாட்டு ஆட்சியை செயல்பட விடு! மாநில உரிமைகளில் தலையிடாதே, தலையிடாதே!

5. திராவிடப் பண்பாடு எமது பிறப்புரிமை, மதச் சார்பின்மை சட்டத்தின் கோட்பாடு! இவற்றிற்காக உயிர்த் தியாகமும் செய்ய நாங்கள் தயார்! தயார்!!

கழகத் தலைவரால் வெளியிடப்பட்ட இந்த அய்ம்பெரும் முழக்கங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வினை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் : 6

சிறப்புப் பயிற்சிப் பட்டறைகள்!

கிராமங்கள்தோறும், கிளைக் கழகங்கள் - கழகக் கொடி பறக்காத ஊரே இருக்கக்கூடாது என்ற நிலை உருவாக்கம், சுடுகாட்டிலும் ஜாதி என்ற கொடுமைக்கு முற்றுப்புள்ளி. அனைத்துப் பாலின இளைஞர்களையும், மாணவர்களையும் கொள்கை வழியில் நெறிப்படுத்தி, களப் பணியாளர்களாக்கிட தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருவதோடு, இவ்வாண்டு பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், களப் பணியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் : 7

காணொலிமூலம் பயிற்சி வகுப்பு

முன்பு நடத்தியதுபோல, பல ஊர்களிலும் பெரியார் உயராய்வு மய்யத்தின் மேற்பார்வையின்கீழ் காணொலி வழி ஒரு வாரம் தொடர்ச்சியாக நாள்தோறும் இரவு 7 மணிமுதல் 8 மணிவரை தொடர்ந்து நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் : 8

தமிழ்நாடு ஆளுநரின் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகள்!

மதச் சார்பற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்து தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்ற வேண்டிய திரு.ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாட்டின் ஆளுநராக வந்ததுமுதல், அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக்கு விரோதமாகவும், பச்சையான இந்துத்துவச் சிந்தனையோடும் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பிரிவு மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்கவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதற்கு மாறாக, சனாதனம், ஆன்மிகம் போன்ற மூடநம்பிக்கைக் கருத்துகளை தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து பரப்பி வருவது சட்ட விரோத செயலேயாகும்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று கூறிய திருவள்ளுவர், பிறப்பின் அடிப்படையில் பேதம் வளர்க்கும் வருணாசிரமம்  பேசும் இந்து மதத்தின் ஆன்மிகச் சிந்தனையாளர் என்று ஆளுநர் திரிபுவாதம் செய்வது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

ஆளுநர் இத்தகைய பிற்போக்குத்தனமான, சட்ட விரோத போக்குகளை மாற்றிக் கொள்ளாவிடின், மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று இச்செயற்குழு தெரிவிக்கிறது.

தீர்மானம் எண் : 9

ஆன்லைன் சூதாட்ட தடை போல, 

மூட நம்பிக்கைகளை ஒளிபரப்பும் ஊடகங்களை தடை செய்க!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தந்துள்ளதை தலைமைச் செயற்குழு வரவேற்கிறது. அண்மைக் காலமாக தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில், குறிப்பாக பகுதிவாரியாக இயங்கும் ஊடகங்களில், பில்லி, சூன்யம் போன்ற விளம்பரங்கள் வெகுவாக அதிகரித்து உள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் இதன்மூலம் தீர்வு காணப்படும் என்ற விளம்பரங்களும், நிகழ்ச்சிகளும் எளிய மக்களை வெகுவாக ஈர்த்து அவர்களின் பணம் பறிக்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தைப் போல இந்த மூட நம்பிக்கைகள் அதிகரிப்பதன் காரணமாக சில இடங்களில் உயிர் பலி வரை செல்லும் செய்திகளும் வருகின்றன.

ஆகவே, தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றியதுபோல, மூட நம்பிக்கைகளை ஒளிபரப்பும் போக்கைத் தடை செய்ய வேண்டுமென்று மாநில ஒன்றிய அரசுகளைத் தலைமைச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் : 10

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் 

அதிகம் கவனம் தேவை!

சூழியல் சார்ந்து திராவிடர் கழகம் தொடர்ந்து தனது கவனத்தைத் தெரிவித்துக் கொண்டே இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்களுக்கான பத்து உறுதிமொழிகளை வழங்கியபோதும் சுற்றுச் சூழல் காப்பை மூன்றாவது உறுதியாகவே வைத்து அதனை முக்கியத்துவப்படுத்தி இருந்தது. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பை திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையிலும் முன்வைத்திருந்தது. இந்நிலையில், இன்றைய சூழல் இன்னும் நெருக்கடியான நிலைக்கு மாறியிருப்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று இந்தச் செயற்குழு கருதுகிறது. 

உலகம் வெப்பமயமாகிறது (Global warming) என்ற கடந்த கால எச்சரிக்கை உச்சமாகி, காலநிலை மாற்றம் (Climate Change)  என்னும் பேராபத்து இன்று உருவாகியிருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட சூழல் கேடு இப் புவிப் பந்தின் எதிர்காலத்தையும், மனித குலத்தின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கியிருப்பதை கட்சி, ஜாதி, மதம், மொழி, இனம் தாண்டி அனைத்து மக்களும் பொறுப்புணர்வோடு அணுகவேண்டும் என்பதையும், இன்னும் 8 ஆண்டுகளில் (2030 ஆம் ஆண்டுக்குள்) கார்பன் உமிழ்வு 50 ஆகக் குறைக்கப்பட வேண்டும் என்றும், 2050-க்குள் நிகர சூழிய உமிழ்வை (Net Zero Emission) எட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கும் IPCC-இன் அறிக்கையை உலக நாடுகள் மிகுந்த அக்கறையோடு ஏற்றுக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது. மேலும், காலநிலை மாற்றம் தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கிறது.

No comments:

Post a Comment