ஊன்றிப் படித்துப் பரப்பவேண்டிய அறிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

ஊன்றிப் படித்துப் பரப்பவேண்டிய அறிக்கை!

‘‘ஜாதி வருணம், பேதத்தை வலியுறுத்தும் அருவருக்கத்தக்கவை - நீக்கப்படவேண்டும்'' என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

ஓநாய் சைவமாகுமா? ஆர்.எஸ்.எஸ். அரசு ஜாதி வருணத்தை ஒழிக்க முன்வருமா?

‘‘ஒரே நாடு, ஒரே மதம்'' என்போர் - ஒரே ஜாதி என்று சட்டம் செய்வார்களா?

ஜாதி, வருண பேதத்தை வலியுறுத்தக் கூடியவை - அவை நீக்கப்படவேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் - அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து அனைவரும் ஒரே ஜாதி என்று சட்டம் செய்வார்களா? ஓநாய் சைவமாகுமா? ஆர்.எஸ்.எஸ். ஜாதியை ஒழிக்க முன்வருமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பகவத் உருமாற்ற வித்தைகளில், இதற்குமுன் இருந்த பல முந்தைய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைவிட மிகவும் கைதேர்ந்த சாணக்கியப் பார்ப்பனர்!

புதிய ‘‘வித்தைகளை''க் காட்டுபவர் 

ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத்!

1. திடீரென்று டில்லியில் இமாமை சந்திப்பார்; இஸ்லா மியர்களை வெறுப்பதல்ல எங்கள் அமைப்பு என்று வெறுப்பு  அரசியல் குடியுரிமைச் சட்டங்களை மூடி மறைத்து அதன்மீதே அமர்ந்துகொண்டு புதிய வித்தை காட்டுவார்; நமது மக்களில் - குறிப்பாக அறிவு ஜீவிகளில் சிலரும்கூட, ‘‘ஆஹா, பாருங்கள் ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு மாறிவிட்டது பாருங்கள்; முந்தைய ஆர்.எஸ்.எஸ். வேறு; இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். வேறு'' என்று விளக்கங்கள், வியாக்கியானங்களைத் தருவார்கள்.

இன்று ஊடகங்கள் அவர்கள் காலடியில்தானே பெரும்பாலும்!

திடீரென்று இஸ்லாமிய மக்களின் மதத் தலைவர்மீது பொழிந்த பாசப் பிணைப்பும் - அவரும் அந்த நிலை கண்டு புளகாங்கிதம் அடைந்து புகழ்ந்ததும் இதற்குமுன் காணாத அரிய வித்தைக் காட்சிகள்.

2. அதற்கடுத்து ‘‘ஜாதி, வருணம் என்பது பேதத்தினை வலியுறுத்தும் அருவருக்கத்தக்கவை. அவை அறவே நீக்கப்படல் வேண்டும்'' என்று ஒரு சரவெடியைக் கொளுத்திப் போட்டு வெளிச்சம் காட்டியுள்ளார்.

கோல்வால்கர் எழுதியது என்ன?

இதற்குமுன் இவரின் கூற்று, ‘அவாளின்' தத்துவகர்த்தா ‘‘குருஜீ கோல்வால்கர்'' ஜாதி, வருணம் பற்றி, அவர்களது கொள்கை நூலான ‘‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்'' என்ற ‘ஞானகங்கையில்' எழுதியது என்ன?

படியுங்கள்!

‘‘நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பு ஆகும். இன்று அது ஜாதி வாதம் என்று கூறி, கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். அந்த நால்வருண அமைப்பில் உருவாகிய சமூக அமைப்பினை, சமூகநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.''

- பக்கம் 102

‘‘இன்று ஹிந்து சமுதாயத்தின் வருண அமைப்பு முறை உருத் தெரியாத அளவிற்குக் கெட்டுவிட்டது. காலப் போக்கில் ஏற்பட்ட தீய சக்திகளால் வருணம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்துடன் இன்று ஜாதி முறையை வானளாவப் பேசிக் கண்டிக்கும் கூட்டத் தாரின் போக்கினாலேயே ஜாதிமுறை கட்டுப்பாடு இறுகி வரக் காண்கிறோம்'' 

என்று கோல்வால்கரின் ‘ஞானகங்கை'யில் கூறப் பட்டுள்ளது.

1935 இல் பெயரளவுக்குப் 

பெண்களை அனுமதித்தனர்!

3. ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட 1925 இல் - அடுத்த பத்தாண்டுகள் - 1935 வரை பெண்களையே அதில் சேர்க்காமல், அவர்களது பணி அடுப்பங்கரையில்தான் - வீட்டில் அடைந்து மனுதர்ம முறைப்படி வளர்க்கப்பட்டு, வாழ்க்கைப்பட்டு, வதைக்கப்பட்டு இருந்தாலும், பொறுத்து வாழ வேண்டியதே ‘ஸ்திரீ தர்மம்' என்ற தத்துவம் பேசியவர்கள் 1935 இல் சற்றுக் கதவு திறந்து பெயரளவுக்குப் பெண்களை அனுமதித்தனர்!

இப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவரும், அமைப்பும் பெண்களுக்கான உரிமைகள் - பங்களிப்புகளின் முக்கியத்துவம்பற்றி திடீரென்று வற்புறுத்திப் பேசி, புதிய ஞானோதயத்தை ஞாலத்திற்குக் காட்டுகிறார்கள்!

இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். கொள்கை கர்த்தா அதே நூலில் பக்கம் 176 இல் என்ன கூறுகிறார்?

‘‘தற்போது பெண்களுக்குச் சம உரிமை - ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து பெண்களை மீட்போம் என்று அறைகூவல்கள் எழுந்துள்ளன. பதவி நிலை - நிலைகளில் ஆண், பெண் என்ற பால் பிரிவினையின் பெயரில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு ஏற்கெனவே உள்ள ஜாதி, மொழிப் பிரிவினைகளோடு புதிதாக இந்த பால் பிரிவினையும் சேர்க்கப்பட்டுள்ளது.

(ஹிந்து பெண்களுக்கு குடும்பத்தில் ஆண் மகன்களைப்போல மகள்களுக்கும் சொத்துரிமை சட்டத் திருத்தத்திற்காகவே சட்ட அமைச்சரின் சட்டத்தினை எதிர்த்து நிறைவேற்ற போட்ட முட்டுக்கட்டைதானே அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரை வெளியேற வைத்தது என்பதை எவரே மறக்க முடியும்?)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் தனது நிலைப்பாட்டில் மாற்றம் என்று காட்ட முன்வருவாரா?

இப்போது கோல்வால்கரை மூலையில் தள்ளி, மோகன் பகவத் பேசிடும் பேச்சு உண்மையாகவே அவர்கள் உரிமையில் அக்கறைக் காட்டும் கவலை மிக்க கருத்துதான் என்று அவர்கள் சார்பில் பதில் கூறப் படுமானால், கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்குமேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் ஊறுகாய் ஜாடியில் ஊறிடும் 33 சதவிகித மகளிர் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் அழுத்தம் கொடுத்து, தனது நிலைப்பாட்டில் மாற்றம் என்று காட்ட முன்வருவாரா?

அதுபோலவே,

இனி ஒரே ஜாதிதான் என்று அவசர சட்டம் கொண்டு வருவார்களா?

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என்று தொடர்ந்து ‘‘கோரஸ்'' பாடும் ‘‘ஒரே, ஒரே'' வரிசையில், ஏன் உடனடியாக தற்போதுள்ள புல்டோசர் மெஜாரிட்டியைப் பயன்படுத்தி, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசு ‘‘இனி ஒரே ஜாதிதான்'' என்ற ஒரு அவசரச் சட்டத்தையோ அல்லது நாடாளுமன்றம்மூலம் தனிச் சட்டத்தையோ கொண்டு வந்து நிறைவேற்றிட முன்வந்து, எங்களது குரல் உண்மையான கொள்கை நிலைப்பாடு மாற்றமே தவிர, வெறும் உதட்டளவிலான உருமாற்ற உச்சரிப்பல்ல - என்பதை உலகுக்கு உணர்த்திட முன்வரலாமே ஆர்.எஸ்.எஸ்.

செய்யுமா? - இந்த இரண்டை நிறைவேற்ற இப்போது அவர்களுக்கு எது தேவை?

மாற்றம் வேறு; ஏமாற்றம் என்பது வேறு

‘‘ஓநாய் எந்தக் காலத்தில் சைவமாகிறதோ'', அந்தக் காலத்தில் வேண்டுமானால் இந்த ‘‘அதிசயம், அற்புதத்தை'' நிகழ்த்த முடியும்.

எனவே, உருமாற்ற வித்தைகளைக் கண்டு ஏமாற மக்கள் தயாராக இல்லை. 

மாற்றம் வேறு; ஏமாற்றம் வேறு என்பதைப் புரிந்தவர்கள்தான் இன்றைய இளைஞர்கள்.

2024 இல் வாக்களிக்கப் போகும் வாக்காளர்களே இதனை நினைவில் நிறுத்துங்கள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.10.2022


No comments:

Post a Comment