ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே!

எழுத்தாளர் 
ஜெயகாந்தன்

கல்பனா மாத இதழின் ஆசியராக இருந்த ஜெயகாந்தன் அவர்கள் 1980 ஜனவரியில் அவ்விதழில் 'எனது பார் வையில் ஆர்.எஸ்.எஸ்' என்றத் தலைப் பில் எழுதிய கட்டுரை.

1946-1947 கால கட்டத்தில் நடந்ததை நேரடியாக பார்த்தவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் தம் இளமை பரு வத்தில் ஆர்.எஸ்.எஸ் என்ன செய்து கொண்டிருந்தது, சுதந்திரம் கிடைத்த நாளில் சுதந்திரத்தை அது கொண்டாடிய விதம், எதற்காக காந்தியை அவர்கள் தம் பரம எதிரியாக கொண்டு கொலை செய்தனர் போன்றவற்றுக்கான பதிலைத் தம் சொந்த அனுபவத்திலிருந்து பகிர்கிறார்.

"ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்" என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது.

1945, 46, 47-ஆம் ஆண்டுகளில் நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் தஞ்சையிலும், கடலூரிலும், விழுப்புரத் திலும் வாழ்ந்தபோது அங்கெல்லாம் இந்த இயக்கம் என்னை விடாமல் தொடர்ந்து வருவது போல் தோற்றம் காட்டி, பெருகி வரும் காளமேகம் போல் விரிந்து பரந்து தமிழ் இளைஞர்களைக் கவர்ந்துகொள்ள முயன்றது. ஓரளவு நாடெங்கிலும் நம்மீது இது கவிந்து பற்றியது என்றும் சொல்லலாம்.

என் வயதொத்த ஆரம்பப் பள்ளிச் சிறுவர்கள் முதல், கல்லூரி மாணவர்கள் வரை, ஏன் – பல வயதான ஆசிரியர்கள் கூட அதனால் அக்காலத்தில் வசீகரிக்கப் பட்டிருந்தனர்.

மாலை நேரத்தில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுவர்களை அவர்களது பெற்றோர்களே “தம்பி சங்கத்துக்குப் போகலியா நீ! சீக்கிரம் போய்விட்டு வா’’ என்று ஊக்கப்படுத்தி அனுப்புகிற அளவுக்கு இந்தச் சங்கத்தின் நடவடிக் கைகள் பெரியோர்களையும், பெற்றோர் களையும் தன்பால் ஈர்த்திருந்ததை நான் அறிவேன்.

இந்தச் சங்கம் நமது இளைஞர்களுக்கு மதப் பற்றும், தெய்வ பக்தியும் ஊட்டி, தேக ஆரோக்கியத்துக்கான பயிற்சி களும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி, இளைஞர்கள் மத்தியில் கட்டுப் பாடும் ஒழுக்கமும் உருவாக்கி, சமூகப் பணி புரிவதாகவும் அக்காலத்தில் பெரிதும் நம்பப்பட்டது.

எனது பாலிய கால நண்பர்களும், எனது சகோதரர்களுக்கு இணையான என் சுற்றத்து இளைஞர்களும் "சங்கம், சங்கம்" என்று ஜபித்துக் கொண்டு இதில் சங்கமமானதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் பருவத்தில் எனக்கிருந்த விசேஷ மனோநிலையின் காரணமாய் நான் பொதுவாக குழந்தைகளின் இயல்பி லிருந்து மாறுபட்டவனாக இருந்தேன். பொதுவாக நான் வீதியாட்டங்களிலும் விளையாட்டுகளிலும் ஈடுபடாத `சீரியஸ் டைப்’ குழந்தையாகக் கன்னத் தில் ஊன்றிய கையுடன் இவற்றை யெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்தேன். அவர்கள் எனக்கு விடுத்த அழைப்பை நான் ஏற்றுக் கொள்ளத் தயங்கினேன். ஆயினும் ஒரு வேடிக்கை போல் அவர்களது நடவடிக்கைகள் என்னையும் ஈர்த்ததால் அவர்களிட மிருந்து நான் சற்று விலகி நின்று, ஆனால் அவர்களை உன்னிப்பாகக் கவனித்தேன்.

அவர்களில் முஸ்லிம் சிறுவர்களோ, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த சிறுவர்களோ, கிறிஸ்துவர்களோ ஒருவர் கூட இருக்கவில்லை. எனது பாலியப் பருவத்தில் நான் சிலகாலம் ஒரு முஸ்லிம் பள்ளியில் படிக்க நேர்ந்தது. எனது நண்பர்களில் சிலர் முஸ்லிம்கள்; சிலர் கிறிஸ்துவர்கள்; சிலர் பிராமணச் சிறுவர்கள்; சிலர் பிராமணரல்லாத மத்தியதர வர்க்கத்துப் பையன்கள். எனது பிராமண நண்பர்களும், பிராமணரல்லாத மத்தியதர வர்க்கத்துச் சிறுவர்களும்தான், – அனேகமாக அவர்களனைவருமே இந்த ஆர்.எஸ்.எஸ்.இல் பங்கு பெற்றிருந்தனர்.

எல்லா ஊர்களிலும் ஒரு மைதானத்தில் இவர்கள் கூடிப் பலவித விளையாட்டுக் களில் ஈடுபட்டிருப்பார்கள். மல்யுத்தம், வாள்வீச்சு போன்ற தீர விளையாட்டுக் களைப் பயிற்றுவிப்பார்கள். ஒருமுறை கேடயமும் வாளும் ஏந்தி இரண்டு வீரர்கள் அங்கே போர் பயின்றனர். அந்த வீர விளையாட்டை அனைவரும் புகழ்ந்தனர். எனக்கு ஏனோ அதைக் காணும்போதும், மற்றவர்கள் அந்த வாட்போரைப் புகழ்ந்தபோதும் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது.

ஏனெனில், அக்காலத்தில்தான் டாங்கிகளும், நீர்மூழ்கிக் கப்பல்களும், நவீன யந்திரத் துப்பாக்கிகளும் குண்டு மழை பொழிந்து உலகைக் குலுக்கிய இரண்டாவது மகாயுத்தம் நடந்து முடிந்திருந்தது. பாவம் இந்தப் பிராமணப் பிள்ளைகள் இந்தக் காலத்தில் வாளும் கேடயமும் தூக்கிக் கொண்டு, பண்டைக் கால காட்டுமிராண்டிகள்போல் ஆடுகி றார்களே என்று எனக்கு வேடிக்கையாக இருந்ததில் அதிசயம் என்ன!

இவர்கள் தங்களுக்கு அரசியல் நாட்ட மில்லை என்று சொல்லிக் கொண்டார்கள்; ஆனால் விளையாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் அடிக்கடி உட்கார்ந்து அரசியல் விமர்சனங்களே செய்து கொண்டிருந்தார்கள். அந்த அரசியல் விமர்சன விவாதங்களில் மட்டும் நான் ஆர்வமாகக் கலந்துகொண்டேன்.

"நான் ஒரு ஹிந்து" என்று ஒருவகை, அருவறுக்கத்தக்க ஆவேசத்துடன் இவர்கள் கூறிக் கொண்டார்கள். அமைதியும் சாந்தமும் அகிம்சையும் வடிவமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்த மகாத்மா காந்ந்திஜியின் மூலம் இந்த "ஹிந்து" என்ற வார்த்தைக்கு உயரிய பொருள் கொண்டு – நானும் ஒரு ஹிந்துவே என்று உணர்ந்தவன் நான். ஆயினும் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நான் ஹிந்துஞ் ஹிந்து" என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு நின்றபோது - `நான் ஹிந்து இல்லைஞ் ஹிந்து இல்லை' என்று கத்திக் கொண்டு ஓட வேண்டும்போல் எனக்குத் தோன்றியது.

இரண்டாம் உலக மகாயுத்த நிகழ்ச்சி கள் அக்காலத்தில் என்னுள் உலகத்தைப் பற்றிய விரிவான பார்வையை உருவாக்கி விட்டிருந்தன போலும்!

நான ஹிட்லரைப் பற்றியும், நாஜிசத் தைப் பற்றியும் அறிந்திருந்தேன். அந்த யுத்தத்தைப் பற்றியும், ஹிட்லரைப் பற்றியும் எனது ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள் வேறுபட்ட விபரீதமான கருத்துகளை வைத்திருந்ததையும் அவர்களோடு பேசி, விவாதித்து அறிந்தேன்.

ஆனால், ஹிட்லர் தோற்றொழிந்தான். அவனது ஸ்வஸ்திக் கொடிகள் செஞ்சேனையின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து வீறு அழிந்தன! அவை பறந்த இடங்களி லேயே அவற்றின் சுவடற்றுப் போயிற்று. ஆரிய இனவெறியின் ஆதிபத்தியம் என்கிற கோஷமே சமாதிக்குள் நிரந்தரம் கொண்டது. உலகையே அழித்து அடிமை கொள்ளும் அந்த மாபெரும் அச்சுறுத் தலை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து பாசிசத்தின் மீது உலகமே வெற்றி கொண்டு விழாக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் நம்மூர் மைதானத்தில் அதே ஸ்வஸ்திகா சின்னத்துடன் ஒரு காவி முக்கோணக் கொடியை ஏற்றி நெஞ்சில் கை வைத்து சல்யூட் அடித்து நின்றனர்ஞ் எனது ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள்!

`என்ன அநியாயம் அல்லது அறிவீனம்!' என்றுதான் நான் அப்போது அலட்சியமாக எண்ணினேன். இது என்ன ஆபத்து என்று எனக்குத் தோன் றவே இல்லை. எனக்குத் தோன்றாததில் அதிசயம் ஒன்றும் இல்லை. யாருக்குமே தோன்றவில்லை அக்காலத்தில் – அது ஒரு புதிய ஆபத்தின் அறைகூவல் என்று!

நான் எனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் குடைந்து குடைந்து கேள்விகள் கேட்டேன். அவர்களனை வரும் ஒன்று – தேசியவாதிகள்; அல்லது – கம்யூனிஸ்டுகள். அவர்கள் தந்த தகவல்களின் உதவியோடு ஆர்.எஸ். எஸ்.காரர்களின் கொள்கைகளையும் வாதங்களையும் சீர்தூக்கிச் சிந்தித்ததில் இவர்கள் முற்றமுழுக்க பாசிசத்தையே ஹிந்து வர்ணம் பூசித் தரித்துக் கொண்ட வர்கள் என்று கண்டேன். அப்போதுகூட அது ஒரு வேஷம் அணிந்துகொண்டு பூச்சாண்டி காட்டும் சிறுபிள்ளைத் தனம் என்றே நினைத்தேன்.

(தொடரும்...)


No comments:

Post a Comment