மகத்தான மனித சங்கிலி அறப்போரின் வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

மகத்தான மனித சங்கிலி அறப்போரின் வெற்றி!

"சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர்" எனும் தலைப்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மதச் சார்பற்ற - சமூகநீதி முற்போக்கு சக்திகள் - கட்சிகள் - அமைப்புகள் ஒன்று திரண்டு எழுச்சியுடன் நடத்திக் காட்டின.

தமிழ்மண் மாச்சரியங்களுக்கும், பிளவுகளுக்கும், சச்சரவு களுக்கும் அப்பாற்பட்ட சுயமரியாதை மண் - சமத்துவ மண் - சமதர்ம மண் என்று மீண்டும் ஒருமுறை வரலாற்றுக்குப் பறை சாற்றிய நிகழ்ச்சி அது.

காவி மண்ணாக்கி விடலாம் தமிழ்நாட்டை என்று பகற் கனவு காணும் பார்ப்பனிய சக்திகளுக்கு மரண அடி கொடுத்த நிகழ்ச்சி அது.

சுயமரியாதை இயக்கமும், பொதுவுடைமைக் கட்சியும் ஒரே ஆண்டில்தான் (1925) பூத்தவை. ஹிந்து மகாசபையும் கூட அவ்வாண்டில்தான் தொடங்கப்பட்டது.

ஆனாலும் தமிழ் மண்ணில் அந்த ஹிந்து மகாசபை, காவிக் கூட்டத்தின் கதை எடுபடவில்லை.

ஒரு காலகட்டம் இருந்தது; காங்கிரஸ் மாநாடுகளில் ஒரு பகுதி ஹிந்து மகா சபை மாநாடாக நடைபெற்றதுண்டு. காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

முதல் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் வழக்குரைஞர் பார்ப்பனர்கள் அடுத்த ஆண்டு நீதிபதி ஆகிவிடுவார்கள்.

காங்கிரஸ் மாநாடுகளில் பங்கு ஏற்கும் பார்ப்பனர்களுக்கு என்று தனி பங்களாக்கள், உணவு ஏற்பாடுகள் செய்யப்படும்.

கல்கத்தாவில் முதல் காங்கிரஸ் மாநாடு, பம்பாயில் இரண்டா வது மாநாடு, சென்னையில் மூன்றாவது மாநாடு நடந்தது பற்றி ‘சுதேசமித்திரன்‘ இவ்வாறு எழுதுகிறது.

"இவ்வருஷத்து காங்கிரஸ் சபையில் ஒரு முக்கியமான புது அம்சம். ஜாதி, ஆச்சாரம் பார்க்கும் பிரதிநிதிகளுக்கு ஒரு பங்களாவை, அவர்களுடய ஜாதி, ஆச்சாரங்களுக்கு ஏற்றபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன" என்று ‘சுதேசமித்திரன்' கூறுகிறது.

சென்னை காங்கிரஸ் மாநாட்டில் கூடிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை 381. இதில் பார்ப்பனர்கள் மட்டும் 138 என்பது கவனிக்கத்தக்கதாகும்.

எந்தச் கூடாரத்தில் இருந்தாலும் பார்ப்பனர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதிலும், மற்றவர்களைவிட தாங்கள் தான் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் என்பதை நிலை நாட்டுவதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

இப்பொழுது பா.ஜ.க.வை எடுத்துக் கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ்.ஸை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் ஆணி வேர் என்பது பார்ப்பனிய உயராதிக்க மேல்தட்டு நிலைப்பாடுதான் என்பது விளங்கும்.

அத்தகைய ஒரு பார்ப்பன - ஹிந்து ராஜ்ஜியத்தை அமைப்பதுதான் அவர்களின் நோக்கம். அவர்கள் கூறும் ஹிந்து ராஜ்ஜியம் (ஒரே மதம்), ஒரே மொழி - சமஸ்கிருதம், ஒரே கலாச்சாரம் - ஆரியக் கலாச்சாரமே யாகும்.

இன்றைக்கு ஒன்றிய அரசு அவர்களின் கைகளில் இருக்கிறது.

வடக்கே பல மாநிலங்களில் அவர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எந்தெந்த வகைகளில் எலலாம் தங்களின் காவி சித்தாந்தத்தைத் திணிக்க முடியுமோ அப்படி எல்லாம் சன்னமாகச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

தேசிய கல்வி என்ற பெயரால் சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்கள். செத்துப்போன சமஸ்கிருதத்திற்குக் கோடிக் கோடியாகக் கொட்டி அழுகிறார்கள்.

சமஸ்கிருதம் படித்திருப்பதாக ஒரு கால் கடுதாசியில் சான்று காட்டினால் அவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பொறியியல் கல்லூரியிலும் சேர்ந்து கொள்ளலாமாம்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடு நிமிர்ந்து எழுந்து கொடுக்கும் ‘மரண அடி‘ அவர்களைக் கலங்க அடித்துக் கொண்டு இருக்கிறது.

ஓர் ஆளுநரைக் கொண்டு வந்து இங்கு திணித்து ஆரிய லாலி பாடிக் கொண்டிக் கொண்டு அலைகிறார்.

கோயில் திருவிழாக்களைக் கையில் எடுத்துக் கொண்டு பக்திப் போதையை ஏற்றி இங்குக் கால் ஊன்றலாம் என்று நூல் விட்டுப் பார்க்கின்றனர்.

திருக்குறள், தமிழ் இவற்றின் மீது அக்கறை கொண்டவர்கள் போல புது உருவாக்க ஜிகினா வேலையில் ஈடுபடுகிறார்கள்.

காவிக்கூட்டமே, ஆர்.எஸ்.எஸ். பன்னாடைகளே, பார்ப் பனர்களே உங்கள் பருப்பு இங்கு வேகாது என்று காட்டவே நேற்று நடைபெற்ற தமிழ்நாடு தழுவிய மனித சங்கிலி அறப் போராட்டம்!

பெரிய திட்டமிடல் என்றெல்லாம் கூடக் கூற முடியாது. சில நாட்கள் இடைவெளியிலே அறிவித்து, மகத்தான மக்கள் சக்தியைத் தமிழ் மண் காட்டி விட்டது.

இளைஞர்கள் ஏராளம்! ஏராளம்!! எழுச்சியின் இரீங்காரம்! கொள்கை முழக்கம்!! ஒரு சிறு துரும்பு அளவுக்கும் அமைதிச் சீர் குலைவு இல்லை.

இதையே ஆர்.எஸ்.எஸ். கும்பல் நடத்தியிருந்தால் எத்தகைய விபரீதங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு இருக்கும்? எண்ணிப் பாருங்கள். இது தொடக்கம்தான். தமிழ் மண்ணின் அடையாளத்தை அவ்வப்பொழுது கூர் தீட்டிக் காட்டுவோம் - காவி சித்தாந்தத்தை விரட்டுவோம்!

மனித சங்கிலி அறப்போர் வெற்றிக்கு உழைத்த - பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்!!

No comments:

Post a Comment