சமூக வலைத்தளங்களில் கடந்த 2018 முதலே - 4 ஆண்டுகளுக்கு மேலாக - ஒரு செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.
முதுமையடைந்த மூத்த குடிமக்களுக்குப் பயன் பெறக் கூடியவைகளான அந்தத் தகவல்களும், ஏதோ எப்போதோ, யாருக்கோ ஏற்பட்ட தனித்த சில அனுபவ நிகழ்வுகளை பொது உண்மைகள் போல சித்தரித்து அதைப் பலரும் கடைப்பிடிக்கத் துவங்கினால் ஏற்படும் விளைவுகள் நோயை விட அதற்குச் சொல்லப்படும் சிகிச்சைகளே ஆபத்துகளாக, விபத்துகளுக்கு வித்துக்களாக ஆகிவிடக் கூடும் என்பதால் - அந்தச் செய்தியை நமது "வாழ்வியல் சிந்தனைகள்" வாசகப் பெருமக்களுக்கு அளிக்கிறோம்.
திடீரென சிறுநீர் கழிக்க இயலாமற் போனால் என்ன செய்ய வேண்டும் - என்பது பற்றி வெளிவந்த அந்த தகவல் இதோ:
"இது மருத்துவர் ஒருவர் தனது மருத்துவக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஓர் அனுபவம் ஆகும். '70'-களைக் கடந்த அவர் ஒரு காது, மூக்கு, தொண்டை நிபுணர். அவர் பகிர்ந்த இந்த அனுபவத்தைக் கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அன்று காலையில் எழுவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். 'சிறுநீர் கழிக்க வேண்டும்' என்ற உணர்வு ஏற்பட்டிருந்தாலும், அவரால் அதைச் செய்ய இயலவில்லை. வயது அதிக மாகும்போது சிலர் இப்படிப்பட்ட பிரச்சினை களை எதிர்கொள்வது உண்டு. இரண்டு, மூன்று முறை முயன்றால் பெரும்பாலும் சிறுநீர் கழித்துவிட முடியும். அவர் மீண்டும் மீண்டும் முயன்றும் அது பலனளிக்கவில்லை. அவருடைய தொடர் முயற்சிகள் வீணாகிப் போனபோது தான், அவர் தனக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதை உணர்ந்தார்.
ஒரு டாக்டராக இருந்தாலும், எல்லோரையும் போல அவரும் சதையும் எலும்புமுள்ள மனிதனே என்பதால் இப்படிப்பட்ட உடல் உபாதைகளுக்கு அவர் விலக்கு அல்ல - அவருடைய அடிவயிறு கனத்து, உட்காரவும், எழவும் இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது. உடலினுள் அழுத்தம் அதிகரித்ததால் சிரமப் பட்டார். உடனடியாக அவர் தனக்குத் தெரிந்த ஒரு சிறுநீரக மருத்துவரைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கிக் கூறினார். சிறுநீரக மருத்துவர், "இப்போது நான் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். இன்னும் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் நான் உங்கள் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு வருவேன். அதுவரையிலும் உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?" என்று கேட்டார். "நான் முயற்சி செய்கிறேன்" என்று டாக்டர் பதில் கூறினார்.
அதே நேரத்தில், அவருடைய இளவயது நண்பரான இன்னொரு ஆங்கில மருத்து வரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. வயதான டாக்டர் தனது நிலைமையை சிரமத்துடன் அந்த நண்பருக்கு விளக்கினார்.
அந்த நண்பர். "உங்கள் மூத்திரப் பை நிறைந்துவிட்டது. ஆனால் சிறுநீர் கழிக்க கஷ்டப்படுகிறீர்கள் - கவலைப்பட வேண்டாம். நான் கூறுவதுபோல செய்யுங்கள் - உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும்" என்று கூறிவிட்டு தன் ஆலோசனையைக் கூறினார்.
"எழுந்து நின்று மேலும் கீழும் வேகமாக குதியுங்கள், குதிக்கும்போது இரண்டு கைகளை யும் மரத்திலிருந்து மாங்காய் பறிப்பதுபோல் மேலே தூக்குங்கள். இப்படி 15லிருந்து 20 முறை செய்யுங்கள்"
என்ன??
நிறைந்த மூத்திரப்பையுடன் நான் குதிக்க வேண்டுமென்றா அவர் சொல்லுகிறார்?
சந்தேகம் ஏற்பட்டாலும், வயதான டாக்டர் அப்படியே செய்தார் என்ன ஆச்சரியம்? 5 அல்லது 6 முறை குதித்தவுடனேயே சிறுநீர் வெளிவர ஆரம்பித்தது. அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து விட்டார். இத்தனை எளிய முறையில் தன் பிரச்சினையைத் தீர்க்க உதவிய தனது இளவயது நண்பருக்கு நன்றி கூறினார். இல்லையென்றால், அவர் ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மூத்திரப் பையினுள் ஒரு கதீட்டரை நுழைத்து அவருக்கு ஊசிகள் போட்டு, பலவித ஆண்டிபயாட்டிக் மாத்திரைகளை விழுங்கக் கொடுத்து, ஆயிரம் டாலருக்கும் அதிகமான ஒரு பில்லையும் கையில் கொடுத்திருப்பார்கள். அவருக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் அதிகமான மன அழுத்தப் பிரச்சினையும் ஏற்பட்டிருக்கும்."
இதுபற்றி - இக்கருத்து சரிதானா என்று ஆராய்ந்து அதற்குப் பிறகே இதனைப் பரப்பவோ, இதுபற்றி எழுதவோ வேண்டும் என்று எண்ணி 'The Quint' என்ற தளத்திற்குச் சென்றால் - அதில் டாக்டர் கேசவவாணி என்ற சிறு நீரகத்துறை நிபுணர் - இந்த டாக்டர் மாக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறுநீரகத் துறை (Urology) இயக்குநராக உள்ளார்!
அதே போல டாக்டர் விக்ரம் கைரா என்ற கூடுதல் இயக்குநர் (நெப்ராலஜி துறை) இருக்கிறார்.
"அது ஓர் ஆபத்தான முயற்சி. பொதுவாக முதுமையில் குதித்தால் எலும்பு உடையும் ஆபத்து உண்டு. பல உறுப்புகள் அதன் பலத்தை முதுமையில் இழந்துள்ள நிலையில் இந்த விபரீத விளையாட்டுகள் - விபத்தினை ஏற்படுத்தி, சிகிச்சையளிப்பதில் மேலும் பல ஆபத்தான விபத்து போன்ற வீண் விளைவுகளுக்கு வழி வகுத்து விடும்.
எனவே அதில் இறங்காமல் முறையாக டாக்டர்களிடமே சென்று தீர்வு காணுவதே சிறப் பானது; அறிவுடமையாகும்" என்று கூறியுள்ளார்!
அறிக - கற்க - நிற்க!