தஞ்சை, அக்.4 30-09-2022 அன்று மாலை 6.00 மணிக்கு, தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் சித்திரக்குடி பேராசிரியர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் வரவேற்று உரை யாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பேருரையாளர் பெரும்புலவர் ந.இராமநாதன் அவர்களின் படத்தினை திறந்துவைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் சோம.இளங்கோவன் அவர்கள் அனுப்பிய நூற்றாண்டு விழா குறுஞ்செய்தியை மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன் வாசித்தார்.
குழந்தையாக மாறி அறிவுரை வழங்குவார்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கல்லூரி பேராசிரியர் முனைவர் ந.எழிலரசன், தஞ்சை தமிழாசிரியர் புலவர் ம.கந்தசாமி, சித்திரக்குடி முனைவர் ப.கண்ணன், நூற்றாண்டு விழாக்குழு செயலாளர், சித்திரக்குடி பொறி யாளர் சு.பழநிராஜன், கரந்தை தமிழ்ச் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர், மாமன்ற உறுப்பினர் சு.செந்தமிழ்செல்வன், நாவலர் ந.மு.வே.நாட்டார் கல்லூரித் தலைவர் பேராசிரியர் மு.இளமாறன், நாவலர் ந.மு.வே.நாட்டார் கல்லூரி செயலாளர் புலவர் இரா.கலியபெருமாள், கோவை, சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவுனர், புலவர் செந்தலை கவுதமன் ஆகியோர் சித்திரக்குடி பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை, இயக்கச் செயல்பாடுகளை எடுத்து கூறி உரையாற்றினர். அவ்வுரைகளில் பயிற்சி வகுப்புகளில் ந.இராமநாதன் அய்யா அவர்கள் வகுப்பெடுக்கும் போது அவருடைய வயதிற்கும் மாணவர்களின் வயதிற்கும் 60 ஆண்டு கால இடைவெளி இருக்கும், ஆனால், அய்யா அவர்கள் ஒரு குழந்தையாக மாறி அறிவுரை வழங்குவார். அய்யா பெரியார் அவர்கள் ஈரோட்டில் நடத்திய பயிற்சிப் பட்டறைக்குப் பிறகு அஞ்சல் வழியாக அய்யா இராமநாதன் அவர்கள் பெரியார் பயிற்சியை தொடங்கி தொடர்ந்து நடத்தினார். அதனுடைய தொகுப்பாக பெரியார் பாடங்கள் என்ற நூல் வெளிவந்திருகிறது. அய்யா இராமநாதன் அவர்களுடைய நூல்கள் அனைத்தும் காலம் கடந்தும் பெரியார் கருத்துகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும். பெரியாரியல் பயிற்றுநராக, பெரியாரியல் பேருரை யாளராக விளங்கிய பேராசிரியர் இராமநாதன் அவர்களுடைய நினைவைப் போற்றுவோம் என்று உரையை வழங்கினர்.
பேராசிரியர் ந.இராமநாதன் பற்றிய நூல் வெளியீடு
பேராசிரியர் பெரியார் பேருரையாளர் ந.இராமநாதன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவையொட்டி சில பதிவுகள் என்ற தலைப்பில் சித்திரக்குடி பழநிராஜன் அவர்களும், முனைவர் இளமுருகன் அவர்களும் இணைந்து ஒரு சிறிய நூலை உருவாக்கியிருந்தார்கள், அதை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட, தி.மு.க. மேனாள் அமைச்சர், இலக்கியச் செல்வர் எஸ்.என்.எம். உபயதுல்லா, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சால்வைக்கு பதிலாக புத்தகம்
வருகை தந்திருக்கிற சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வைக்கு பதிலாக புத்தகங்களை, சந்தாக்களை வழங்க வேண்டும் என்ற தமிழர் தலைவர் அவர்கள் அறிவுரையின் படி பேராசிரியர் ந.இராமநாதன் எழுதிய "பெரியார் ஒரு முழு புரட்சியாளர்" என்ற புத்தகத்தினை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கினார்.
விருதாளர்களுக்கு சிறப்பு
தமிழ்நாடு அரசு பாவேந்தர் விருது பெற்றுள்ள சூலூர் பாவேந்தர் பேரவையினுடைய நிறுவனர், செந்தலை
ந.கவுதமன் தமிழ்நாடு அரசின் தமிழ் இலக்கிய மாமணி விருதை பெற்றிருக்கக் கூடிய இரா.கலியபெருமாள் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் சிறப்பு செய்யப்பட்டது.
சித்திரக்குடியில் கல்வெட்டு
30.09.2022, அன்று தஞ்சையில் பெரியார் பேருரையாளர் பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முன்னதாக அய்யா ந. இராமநாதன் பிறந்த ஊரான பூதலூர் வட்டம் சித்திரக்குடிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்று கழகக் கொடியினை ஏற்றி வைத்து, நா.இராமநாதன் அவர்கள் வாழ்ந்த வீடான ப.முத்தப்பா அவர்களது இல்லத்தில் பெரியார் பேருரையாளர் பெரும்புலவர் இராமநாதன் அவர்களது நூற்றாண்டு நினைவு கல்வெட்டினை திறந்து வைத்து, அங்கே கூடியிருந்த ஊர் பொதுமக்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு இராமநாதன் அவர்களது வாழ்வை, தொண்டை எடுத்துக்கூறி. இந்த ஊரில் பெரியார் பேருரை யாளர் பெரும்புலவர்
ந.இராமநாதன் அவர்களின் நினைவு பெரியார் படிப்பகம் ஒன்று அமைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள், திராவிடர் கழகம் அதற்கு துணை நிற்கும் என்று உரையாற்றினார்.
சித்திரக்குடி பொறியாளர் சு.பழநிராஜன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தமிழர் தேசிய முன்னணி பொதுசெயலாளர் அயனாவரம் முருகேசன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் மா.வீரமணி, பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் இரா.பாலு, ஒன்றிய செயலாளர் புகழேந்தி, பூதலூர் நகர தலைவர் செல்லமுத்து, சித்திரக்குடி ப.ஆண்டவர், ப.கண்ணன், சு.கலைக்கோவன் மற்றும் கழகத் தோழர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்கு வருகைபுரிந்த தமிழர் தலைவருக்கு கள்ளப்பெரம்பூரில், தஞ்சை வடக்கு ஒன்றிய அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, கருணாநிதி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

No comments:
Post a Comment