அர்ச்சுனன் நூற்றாண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

அர்ச்சுனன் நூற்றாண்டு

செல்வச் செழிப்பில் திளைத்தவர் - பாரம்பரிய மிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் - பழைய கோட்டை பட்டக்காரர் குடும்பம் என்றால் பட்டொளி பறக்கும் நிலை.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் - கருப்புச் சட்டை அணிந்து, கழகத்தில் சேர்ந்து, அடித்தட்டு மக்கள் மத்தியில் சென்று, தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்பினார்...  ஓர் இளைஞர் என்றால் அது சாதாரணமான ஒன்றன்று.

பழைய கோட்டைப் பண்ணை இளையப் பட்டக்காரர் என். அர்ச்சுனன் தான் அவர்.

தோற்றத்திலும் பொலிவிலும் ஈர்ப்பு நிறைந்தவர் - 23 வயதில் மரணத்தைத் தழுவினார் என்று எண்ணும் போது இதய நாளமெல்லாம் வெடித்துச் சிதறுகிறது. 

அந்த 23 வயது நிறைந்த காளை திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் என்ற பெருமைக்கு உரியவர்.

காங்கேயம் என்ற காளையை உருவாக்கம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த காளையின் நூற்றாண்டுத் தொடக்கம் இன்று.

அந்த நிகழ்ச்சியை திராவிடர் கழகம் இன்று ஈரோடு மாநகரில் நடத்துகிறது. கழகத் தலைவர் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்.

நூற்றாண்டு விழா நடத்தப்படும் கருஞ்சட்டைப் பெரியார் பெரும் தொண்டர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பலர் நூற்றாண்டு காணும் வாலிபர்களாக மிடுக்குடன் ஏறுநடை போடுகின்றனர்.

கழகம் அந்த மாபெரும் இயக்கச் செம்மலுக்குத் தன் மதிப்பு மிக்க மரியாதைக் கிரீடத்தைச் சூட்டி மகிழ்கிறது.  "நன்றி மறப்பது நன்றன்று" என்று குறள் ஆசான் கூறியதுண்டே.  இளைய பட்டக்காரர் அர்ச்சுனன் மறைந்த பொழுது, தந்தை பெரியார் நெஞ்சுருகும் அறிக்கையை வெளியிட்டார் (குடிஅரசு 19.10.1946). அந்த அறிக்கையின் ஒரு பகுதி இதோ:

"தோழர் அர்ச்சுனன் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்ட ஒவ்வொரு திராவிடரும் கண்ணீர் விடாமலிருக்க முடியாது; காரணம் அர்ச்சுனன் திராவிடர் கழகத்தின் ஒப்பற்றத் தூணாய் விளங்கியதுதான்.

அர்ச்சுனன் தனது 23ஆம் வயதில் இயற்கை எய்தினார். அவர் மறைந்த அடுத்த நாளில்தான் அவரது 23ஆம் ஆண்டும் மறைந்தது. அவர் திராவிடர் கழகத்தில் சுமார் 3 ஆண்டுகளாகத்தான் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்தார். 3 ஆண்டுகளாகத்தான் திராவிடர் கழகத்தில் பங்கு கொண்டார் என்றாலும் அவர் தனது 20ஆம் ஆண்டிற்கு முன்பே திராவிடத் தொண்டராகிவிட்டார் என்று கூறலாம். அம்மூன்று ஆண்டுகளில் அவர் திராவிட மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் - வீட்டுப் பேச்சில் கலந்து பேசும்படியான அளவுக்கு வியாபகம் பெற்றுவிட்டார். திராவிடச் செல்வர்களுக்கு வெட்கமும், சங்கடமும். பொறாமையும் ஏற்படும்படியான அளவுக்கு அவ்வியாபகம் உச்சம் பெற்றிருந்ததென்றே சொல்லலாம். ஏனெனில் அர்ச்சுனன் ஒரு இலட்சம் ஏக்கர் நிலமுடையவர் மாத்திரம் என்பதல்லாமல், பல ஆயிரக்கணக்கான கால்நடைகளைக் கொண்டவர் என்பது மாத்திரமல்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்களைத் தனது பண்ணை ஆட்களாகக் கொண்டிருந்தார் என்பது மாத்திரமல்லாமல், கொங்கு நாட்டு வேளாள சமுதாயத்திற்கு 'சாமிங்களே' 'எஜமாங்களே' என்று அழைக்கும்படியான சமுதாயத் தலைமைத் தான முடிசூட்டப் பெற்ற மன்னராயும் விளங்கினார். இப்படிப்பட்ட ஒரு இளவல், மாணிக்கம் தனது தகைமையைத் துறந்து சாதாரணத்தன்மையில் இருந்து கொண்டு, பாமர மக்கள் இடையில் கலந்து தொண்டாற்றுவதையும், அதனால் அவர் பொது மக்களால் பாராட்டிப் புகழப்படுவதையும் காணும் பெரும் பெரும் பண்ணைகளும், ஜமீன், மிட்டாக்களும் தங்கள் தன்மைக்கு மதிப்பில்லாமல் போவதால் சங்கடப்பட வேண்டியதும், மக்கள் இலட்சியம் செய்யாததால் வெட்கப் பட வேண்டியதும் - தம்மிலும் உயர் புகழ் அவருக்கு ஏற்பட்டுவிட்டதால் பொறாமைப்பட வேண்டியதுமாக ஆகிவிட்டார்கள் என்று குறிப்பிட்டோம்.

மக்களில் எவ்வளவு ஞானம் பெற்றவர்களும் தங்கள் செல்வத்தையும் மனைவி மக்களையும் துறந்து விடலாம். ஆனால் ஒருவன் தனது அந்தஸ்து என்னும் தகைமையைத் துறப்பது என்பது உண்மையான தொண்டனுக்குத்தான் முடியும். ஏன் எனில் துறவிகள் எதைத் துறந்தாலும் தாங்கள் முற்றும் துறந்த துறவிகள் என்கின்ற அந்தஸ்தைத் துறக்க மாட்டார்கள். அதற்குத் தகுந்த பயனை எதிர்நோக்கியே அனுபவித்தே நிற்பார்கள் - உண்மைத் தொண்டர்களுக்கு அந்தஸ்தும் இருக்காது - பயன் எதிர்பார்ப்பதும் இருக்காது  - தொண்டு செய்வதையே தொண்டாகவும், அத்தொண்டில் ஏற்படும் உற்சாகத்தையே பயனாகவும் கருதிக் கொண்டு இருப்பவர்களாவார்கள். ஆதலால் அர்ச்சுனன் தனது தகைமையையும் மறந்து தொண்டர் தன்மையையே சதா கருத்தில் வைத்து, மனமொழி மெய்களால் உண்மைத் தொண்டாற்றி வந்த சேவகனாகவே இருந்தார். இது திராவிடர் கழகத்தில், திராவிட மக்கள் நலத்துக்கு ஆற்றும் தொண்டில் அவர் இருந்த நிலை என்றால் மற்றப்படி அவர் தமது பண்ணையில் பாட்டாளி மக்களிடத்திலும் மிக அன்பாய் நடந்து கொள்வார். பாட்டாளி மக்களும் மக்கள்தான் என்ற எண்ணம் எப்போதும் அவர் உள்ளத்தில் தாண்டவமாடும். வேலையாட்களுக்கு வேண்டியவற்றைச் சற்றும் தயக்கம் இல்லாது வழங்கி வந்தார்." (குடிஅரசு 19.10.1946).

தந்தை பெரியார் உள்ளத்தில் எத்தகைய இடத்தைப் பெற்றிருந்தார் அர்ச்சுனன் என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

1983ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சி - பவானியையடுத்த பெருமாள் மலையில் இரட்டை மாட்டு வண்டியை ஏற்றி தனது அற்புத சக்தியை நிகழ்த்துவதாக ஒரு சாமியார் நடத்திக் காட்டினார்.

அதற்குப் பதிலடி கொடுக்க திராவிடர் கழகம் முன்வந்த நிலையில் அதற்கான காங்கேயம் ஜோடி காளைகளைத் தந்து அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியதற்குப் பேருதவி புரிந்தவர் மறைந்த நமது அர்ச்சுனன் அவர்களின் மகன் சிவகுமார் மன்றாடியார் என்பதையும் அர்ச்சுனன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் நினைவு கூர்வோம்.

அர்ச்சுனன் உடலால் மறைந்திருக்கலாம்; தொண்டால் நம்மிடம் நிறைந்திருக்கிறார்.

வாழ்க அரச்சுனன் புகழ்!

வாழ்க அவர்  விரும்பி

ஏற்ற கழகப் பணி!


No comments:

Post a Comment