கனடாவில் நடந்த பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூன்றாவது மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

கனடாவில் நடந்த பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூன்றாவது மாநாடு

ஒரு புதுமையான உலகம் உலகில் வரவேண்டும் என்று விருப்பப்பட்டவர் தந்தை பெரியார்.அந்தப் புதுமையான உலகத்தைப் படைத்திடும் ' சிற்பிகளின் கூட்டத்தில் நாமும் சேர்ந்து, நம்மாலான காரியங்களைச் செய்ய வேண்டும்' என்று விரும்பி வேலை செய்தவர் தந்தை பெரியார். 'எல்லோருக்கும் எல்லாம் ' என்னும் மகத்தான உலகம் அமைந்திட வேண்டும் என்று தன் வாழ் நாள் முழுவதும் ,95 வயதுவரை தொண்டு செய்து வாழ்ந்து மறைந்த தந்தை பெரியார் உண்டாக்கிய பெரியாரியல் என்னும் தத்துவக்காற்று நாடுகள் தாண்டி ,கண்டங்கள் தாண்டி கனடா நாட்டில் தென்றலாய்த் தவழ்வதை உணரும் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு நம்மில் சிலருக்கு கிடைத்தது.அதில் நானும் ஒருவனாய்...

முதன் முதல் வெளி நாட்டுப்பயணம். 18.09.2022 காலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துகளையும். அறிவுரை களையும் பெற்றுக் கொண்டதோடு, திராவிடர் கழகத் தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள் ளிட்டோரோடு ஒளிப்படமும் எடுத்துக்கொண்டோம்.

திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் எல்லோருக்கும் விரிவான வழிகாட்டுதல்களை நகைச்சுவையோடு ஓர் இருபது நிமிடங்கள்: பாடம் எடுப்பதுபோல எடுத்துரைத்தார்.அவர் சொன்ன விடயங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை பயண அனுபவம் உணர்த்தியது.

மொத்தம் 16 தோழர்கள் திராவிடர் கழகப் பொருளா ளர் வீ.குமரேசன் தலைமையில் புறப்பட்டோம்.

இணைந்த பயணம்

மதுரையிலிருந்து நான், நிலக்கோட்டையிலிருந்து சக்திவேல், அருணாதேவி, கோவையிலிருந்து சிவக் குமார், கல்லக்குறிச்சியிலிருந்து சுப்பராயன், புதுச்சேரி யிலிருந்து சிவ.வீரமணி, தருமபுரியிலிருந்து ஊமை.ஜெயராமன், தகடூர் தமிழ்செல்வி, சென்னையிலிருந்து தங்கமணி, தனலட்சுமி, வேண்மாள் நன்னன், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சோழிங்க நல்லூர் ஜெயராமன், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, முருகேசன் என தமிழ் நாட்டின் பல பகுதியிலிருந்தும் வந்த தோழர்கள் ஒன்றாக இணைந்து பயணம் செய்தது புதிய அனுப வமாக இருந்தது.

19.9.2022 அதிகாலை 5.30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணம்.இரவு 12 மணிக்கு விமான நிலையத் திற்கு சுரேசு உள்ளிட்ட தோழர்களோடு தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் முத்தை யன், மோகன்ராசு உள்ளிட்டோர் சென்னையிலிருந்து மாநாட்டிற்காக செல்லும் 16 பேருக்கும் பொன்னாடை அணிவித்து வழி அனுப்பி வைத்தனர்.

புது அனுபவம்

சென்னையிலிருந்து 10 மணி நேரம் லண்டன் பயணம், லண்டன் விமான நிலையத்தில் 5 மணி நேரக் காத்திருப்பு,பின்பு லண்டனிலிருந்து கனடா நாட்டின் மாண்டிரியல் என்னும் நகர் நோக்கி 8 மணி நேரப் பயணம் எனப் புது அனுபவத்தை இந்த விமானப் பயணங்கள் கொடுத்தது.

கனடா நாட்டில் 20ஆம் தேதி காலை மாண்டிரியல் நகரம்,21ஆம்தேதி அட்டோவா நகரம்,22ஆம்தேதி தவுசண்ட் அய்லண்ட் தீவுகள்,23ஆம்தேதி நயாகரா நீர்வீழ்ச்சி என சுற்றுப்பயணம் மிகச்சிறப்பாக அமைந் தது. 23ஆம்தேதி மாலை டொராண்டோ நகரில் இருக்கும் பெரியார் பன்னாட்டு மய்யம் ஏற்பாடு செய் திருந்த விடுதிக்குச்சென்றோம். அங்கு சென்றவுடன் கொஞ்ச நேரத்தில் டாக்டர் சரோஜா இளங்கோவன், அருள்செல்வி பாலகுரு உள்ளிட்டோர் வரவேற்றனர். வழிகாட்டினர். "என்ன கனடாவை நன்றாக சுற்றிப் பார்த்தீர்களா?" என்னும் கேள்வியோடு, டாக்டர் சோம.இளங்கோவன் வரவேற்றார். கொஞ்ச நேரத்தில் விடுதியில் இலக்குவன் தமிழ், பேரா.அரசு செல்லையா, மோகன் வைரக்கண்ணு என்று பல ஆளுமையர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

மனித நேயம் - சமூக நீதி

24.9.2022 காலை 8 மணிக்கு எல்லாம் 3ஆவது மாநாட்டிற்குச் சென்றோம். கல்லூரியின் அருமையான அரங்கு. குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் நிகழ்வு நடை பெற்றது. பெரியார் பன்னாட்டு  மய்யம் அமெரிக்கா, ஆய்வு விசாரணை மய்யத்தின் கனடா கிளை, கனடா மனித நேயர் சங்கம்,டொராண்டோ மனித நேயர் சங்கம்,டொராண்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனப் பெரியாரியல் அமைப்பு ஒன்றும். வெளி நாட்டு அமைப்புகள் மூன்றுமாய். நான்கு அமைப்புகள் இணைந்து 'மனித நேயம் மற்றும் சமூக நீதி' என்னும் தலைப்பில் நடத்திய மாநாடு இந்த மாநாடு ஆகும். மேலை நாட்டு மாநாடுகள் லட்சக்கணக்கில் கூடும் மனிதர்களைக் கொண்டதல்ல ,மாறாக லட்சியங்களைக் கொண்ட சில நூறு பேர் கலந்து கொள்ளும் மாநாடு களாகவே இருக்கின்றன. ஒரு மேசை - அதைச்சுற்றி 10,15 நாற்காலிகள். மேசையின் மேல் தண்ணீர், தம்ளர் கள். மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு வெளியே தேநீர், காபி, பழங்கள் என உணவு வகைகள். மிக ஆழமான புரிதலோடு, ஏற்கெனவே தாங்கள் தயாரித் துக் கொண்டு வந்திருக்கும் ஆய்வுக்கட்டுரைகள் போன்ற உரைகளை ஆய்வாளர்கள் கொடுக்கின்றனர். தங்கள் கருத்துகளை முன்வைத்து விவாதிக்கின்றனர்.

திட்டமிட்டு நடத்தி...

இந்த மாநாட்டின் ஒவ்வொரு நிகழ்வும் எவ்வளவு முன்னேற்பாட்டோடு செய்யப்பட்டிருக்கின்றன என் பதை உணர்த்தியது. அனைவரையும் ஒருங்கிணைத்து, பாசத்தோடும் அன்போடும் வேலை வாங்கி மாநாட்டை வெற்றிக்கு அழைத்துச்சென்ற பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களை எவ்வளவு பாரட்டினாலும் தகும். மாநாடு நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே மாநாட்டுக்குழு அமைத்து, வாரந்தோறும் கலந்துரை யாடி, இளையவர்கள்-முதியவர்கள் என அனை வரையும் ஒருங்கிணைத்து, திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு நிகழ்ச்சி களை அமைத்து, வசூல் முதல் தேநீர் வழங்குவது வரை அனைத்தையும் திட்டமிட்டு நடத்தி, ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு இலக்கணமான மாநாடாக இந்த மாநாடு அமைந்தது என்றால் அது மிகையாது.

மாநாடு காலை 9.15 அளவில் தொடங்கியது மாநாட்டில் , கனடா நாட்டின் மனித நேய அமைப்பின் தலைவர் மார்ட்டின் பிரித் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். (கனடாவில் சுயமரியாதைத் திரு மணங்களை ஆயிரக்கணக்கில் நடத்திவரும் அமைப்பு இந்த கனடா நாட்டின் மனித நேய அமைப்பாகும்). “தந்தை பெரியார் பற்றியும் நமது இயக்கம் பற்றியும், நமது இயக்கம் சார்பாக நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்கள் பற்றியும், ஆசிரியர் அவர்களைப் பற்றியும் நன்றாக அறிந்தவர் மார்ட்டின் பிரித் ஆவார்" என்று டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் முன்பே குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஒப்ப  தந்தை பெரியாரைச் சுட்டி மார்ட்டின் பிரித் வரவேற்றார். பெரியார் பன்னாட்டு அமைப்பு - அமெரிக்காவின் பொருளாளர் அருள் செல்வி பாலகுரு  இணைப்புரையை அருமையான ஆங்கிலத்தில் வழங்கினார். இந்த மாநாட்டில் அறிமுக உரையை பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா வின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் ஆற்றினார்.

அடுத்து மாநாட்டில் உரையாற்றுபவர்களை அறி முகம் செய்து, பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் உரையாற்றினார். பன்னாட்டு மாநாடு கனடாவில் நடைபெற்ற நேரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், கழகப் பொறுப்பாளர்களும், முன்னோடிகளும் பெரியார் திடலில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் இருந்து காணொலி வழியாக மாநாட்டு நிகழ்வுகளைக் கண்டு களித்தனர்.

இந்தியாவிற்கே உரிய துயரம்

தொடக்க உரையினை காணொலி வாயிலாக சென்னை பெரியார் திடலில் இருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றினார். உடலால் சென்னையில் இருந்தாலும் நான் உணர்வால் உங்களோடு இருக்கிறேன் என்றார். ஜாதி என்பது இந்தியாவிற்கே உரிய துயரம்.இந்தியாவின் துயரமான ஜாதி அமைப்பை ,கனடா நாட்டில் வாழும் வேற்று இனத்தவர், மாநாட்டில் கலந்து கொண்ட வேற்று நாட்டவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர் அவர்கள் ஆங்கிலத்தில் பாடம் எடுத்தார். எனக்கு முன்னால் இருந்த மேஜையில் அமர்ந்திருந்த கனடா மனித நேய அமைப்பைச் சார்ந்தவர், ஆசிரியர் அவர்களின் உரை முழுவதையும் கேட்டுக்கொண்டு குறிப்புகள் எடுத்த வண்ணம் இருந்தார்.  சில இடங்களில் கைதட்டினார்.  சில இடங்களில் தன்னுடைய ஆச்சரி யத்தை வெளிப்படுத்தும் வண்ணம் புருவங்களை உயர்த்தி தலை அசைத்தார்.

ஜாதி என்பது எவ்வளவு தீமையானது, கொடுமை யானது என்பதை பார்க்கக்கூடாதவர்கள், பழகக் கூடாதவர்கள், தொடக்கூடாதவர்கள் என்று பிரித்து வைத்திருந்ததை எல்லாம்  மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர்கள்,மாணவர்கள் எல்லாம் உணர்ந்து கொள்ளும் வண்ணம் ஆசிரியர் அவர்களின் உரை அமைந்தது.

ஜோதிட மடமையினை புறந்தள்ளுவோம்

ஆசிரியர் அவர்களின் தொடக்க உரைக்குப் பின் தேநீர் இடைவேளை. தமிழ் ஈழத்து கொழுக்கட்டையும், இனிப்பு வகைகளும் என விதவிதமான பலகாரங்கள். ஒரு பிடி பிடித்தோம்.தொடர்ந்து  'ஜோதிட மடமையினை புறந்தள்ளுவோம்' என்னும் தலைப்பில் நாத்திக நட்புறவு ஏட்டின் ஆசிரியர் ஹேமந்த் மேத்தா உரை யாற்றினார். "12 ராசிகளுக்குரிய ஜோதிடப்பலன்களை மட்டும் எழுதி வைத்து, அந்த ராசிகள் இடத்தில் எல்லாம் வெறுமையாக விட்டிருந்தார். சுழல் நாற்காலி போல இந்தப்பலன்கள்தான் சுற்றிக்கொண்டிருக்கும். ஒரு பத்திரிகையில் வரும் ஜோதிடப்பலன்களை 2 மாதம் கட்பண்ணி வைத்து ஆராய்ச்சி செய்து பாருங்கள்" என்று மிக எளிதாகப்புரியும் விதத்தில். .ஆராய்ச்சி மனப்பான்மையை தூண்டும் விதத்தில் அதே நேரத்தில் நகைச்சுவை கலந்த ‘பவர் பாயிண்ட்' பிரசண்டேசனுடன் கூடிய உரையாக இவரின் உரை அமைந்தது.

புலம் பெயர்பவர்களின்...

அடுத்து டொராண்டோ நகர் மனித நேயர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்டு டாசெட்  அவர்களின் உரையில், பல நாடுகளில் இருந்து புலம் பெயர்பவர்களின் கூடாராமாகத் திகழும் கனடா நாட்டின் பன்மைத்துவம் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.முதன் முதலில் கனடா வந்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், இப்போது புலம் பெயர்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் மனித நேய அடிப்படையில் அவற்றை அணு குவதில் கனடா நாடு காட்டும் அக்கறையையும்,இன்னும் எடுக்கவேண்டிய சில விடயங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

தமிழ்நாட்டின் சமூக நீதி

சென்னைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வீ. அரசு  அவர்கள்  காணொலி வாயிலாக ‘தமிழ்நாட்டின் சமூகநீதி நேற்று, இன்று, நாளை' எனும் தலைப்பில் சிறப்பான ஆய்வுரை யினை வழங்கினார்.கனடா மனிதநேயர் அமைப் பினைச் சார்ந்த சிருஷ்டி ஹூக்கு ‘மனிதநேயத்தின் மூலம் மகளிருக்கான உரிமைகளை வென்றெடுப்பது எப்படி?’ எனும் தலைப்பில்  உரையாற்றினார். இலங் கையில்  ‘ஜாதியின் சமூக அரசியல் மற்றும் சமூகநீதி’ எனும் தலைப்பில் பேராதனை, பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் எஸ்.சிவசேகரம் அவர்கள் காணொலி மூலம் ஆய்வுரை  வழங்கினார்.

“ஜாதி சூழ் உலகு"

செவிக்கு உணவு கொடுத்த பின்பு, வயிற்றுக்கு வகை வகையான உணவு கொடுக்கப்பட்டது. அசைவம், சைவம் எனப் பிரித்து மிகச் சிறப்பாக உணவு ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில் மதிய உணவை முடித்து அரங்கில் அமர்ந்த வுடன்  ‘நக்கலைட்ஸ்’ யூடியூப் குழுவினர் 'ஜாதி சூழ் உலகு' என்னும் தலைப்பில் மிகுந்த நக்கலோடும் கருத்தோடும் பார்ப்பனியம் எப்படி அமெரிக்காவிலும் படம் எடுத்து ஆடுகிறது என்பதனை குறும்படமாக ஆக்கியதை காணும் வாய்ப்பு கிடைத்தது. அத்தனை கதாபாத்திரங்களும் மிக சிறப்பு. அதிலும் சுப்புணி கதாபாத்திரம் மிக அருமையான நடிப்பு.

வாழ்வின் சடங்குகளில் சமூக நீதி

தந்தை பெரியாரின் உயரிய சிந்தனைகளை உலகுக்கு அறிவிக்க உருவாகும் கருத்துக்கூடமாம் ‘பெரியார் உலகம்' பற்றிய செய்தித்தொகுப்பு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஏற் பாட்டில் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அடுத்ததாக 'வாழ்வின் சடங்குகளில் சமூக நீதி 'என்னும் தலைப்பில் கனடா மனிதநேயர் அமைப்பின் மார்ட்டின் பிரித் உரையாற்றினார். தொடர்ந்து அருமையான ஆங்கிலத் தில், திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காலையில் எடுத்த ஜாதி அமைப்பு பற்றிய பாடத்தின் தொடர்ச்சி போல திராவிடர் கழகப் பொருளாளர் ஜாதி அமைப்பு பற்றியும்,தந்தை பெரியார் கடைப்பிடித்த சமூக நீதி அணுகுமுறைகள், இன்றைக்கு திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்கள் கடைப் பிடிக்கும் சமூக நீதி அணுகுமுறை என மிக விளக் கமாக உரையாற்றினார்.அடுத்ததாக மாநாட்டினை வாழ்த்தியும் பாராட்டியும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான ஆட்சியை நடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை ஒலிபரப்பப்பட்டது. அந்த உரை கேட்டு மாநாட்டில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் மகிழ்ந்தனர். முதலமைச்சர் அவர் களின் உரை, ஆங்கில சப்டைட்டில் விளக்கங்களோடு ஒளிபரப்பப்பட, வெளி நாட்டவரும் ஆர்வத்தோடு கேட்டு மகிழ்ந்தனர்.

திருவள்ளுவரும் சமூக நீதியும்

தேநீர் இடைவேளைக்குப்பின்  கனடா - பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் நண்பர்கள் புயல் உள்ளிட்ட நான்கு பேர், ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யும்,உண்மையும் என்னும் தலைப்பில் விவாத நிகழ்வாக நடத்தினர்.   தொடர்ந்து  'திருவள்ளுவரும் சமூக நீதியும்' என்னும் தலைப்பில் இளைஞர் அமரன் அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றினார். தொடர்ந்து ‘பசிப்பிணிக்கு எதிரான சிறார்’ திட்டத்தின்கீழ் உலகில் பசியால் வாடும் குழந்தைகள் பசியாற்றிட உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கும் பணியில் மாநாட்டில் பங்கேற்றோர் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து இயங்கினர் அடுத்ததாக நடக்கப்போகும் கலை நிகழ்ச்சிகளின் தொடக்கமாக முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் நடனமாடத்தொடங்க, பலரும் அவரோடு இணைந்து நடனமாடினர். முறைப்படியான  கலை நிகழ்ச்சிகள் அடுத்து நடைபெற்றன.  4 ஈழப்பெண்கள் இணைந்த  அஃகேனம் குழுவினரின் ‘பறை இசை'யால் அரங்கம் அதிர்ந்தது.. பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலின் மெட்டுகளை நாதஸ்வரத்தின் மூலம் இசைத்து இன்பமூட்டினார்கள்  நாதஸ்வர - தவில் கலைஞர்கள் எம்.பி. நாகேந்திரன் - சூர்யகுமார் ஆகியோர் .புரட்சிக் கவிஞரின் பாடல் உள்ளிட்ட சில பாடல்களை மிக அருமையாக பாடி பாடகர் சின்மியி மகிழ்வித்தார், நிகழ்வின் இறுதியாக பரத நாட்டியக் கலைஞர் டில்ஷாவின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி, மாநாட்டுக் குழுவினர் சிறப்பித்தனர்.சிறப்பான இரவு உணவு அங்கேயே வழங்கப்பட்டது.நல்ல குளிரோடு கூடிய மழை. மழையோடு நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.    

                        (தொடரும்)


No comments:

Post a Comment