எனக்கு மட்டுமல்ல, எனது உடலுக்கும் சுயமரியாதை கிட்ட வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

எனக்கு மட்டுமல்ல, எனது உடலுக்கும் சுயமரியாதை கிட்ட வேண்டும்!

பெரியார் பெருந்தொண்டர் துரை.முத்துக்கிருஷ்ணன் அவர்களுடன்  - ஒரு நேர்காணல்

பெரியாரியத்தைப் புரிந்துகொள்வதற்கு பெரிதாக சிரமப்பட வேண்டியதில்லை. கொஞ்சமே கொஞ்சம் சுயமரியாதை உணர்வு மட்டும் இருந்தால் போதும். பெரியாரியம் தானாகவே நம்முள் வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல மெள்ள நுழைந்துவிடும். அதற்குப்பிறகு ஜாதியோ, மதமோ இல்லை; கடவுளோ, ஆணாதிக்கமோ, அல்லது இவைகளெல் லாம் இணைந்து ஒரு வலிமையான பாறை போலவே கெட்டி தட்டிப்போய் இறுகிக் கிடந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக விரிசல்விட்டு, பின்னர் சுக்கல் சுக்கலாகவே பொலபொலவென உதிர்ந்துவிடும். அதன்பிறகு இந்தத் தளைகளிலிருந்து விடுபட்ட மனிதர்கள் சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ்வர்! அப்படி சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டைத் தோழர்களில், 83 வயதான பெரியார் பெரும் தொண்டர் துரை. முத்துகிருஷ்ணனும் ஒருவர். ஆவடியை அடுத்துள்ள அம்பத்தூரில் அவரது வீட்டுக்குச் சென்று அவருடன் பேசியபோது, தான் ஒரு பெரியாரின் தொண்டர் என்கின்ற அறிவுத் திமிர் அவரிடத்தில் இருந்ததைக் கண்டு வியந்துபோனோம். 

கேள்வி:  வணக்கம், உங்களைப் போன்ற ஒரு பெரியார் தொண்டரைக் காண்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களைப் பற்றிக் கூறுங்கள்ஞ்

முத்து: வணக்கம்! ஊரு ஆரணி, எங்கப்பாரு பேரு, என். துரைக்கண்ணு, நெசவுத்தொழில் செய்தவர். எளிமை யானவர். எங்கப்பா சொன்னா தான் மகாபாரதம் மகாபாரதமா இருக்குமாம்; எங்கப்பா சொன்னா தான் இராமாயணம் இராமாயணமா இருக்குமாம்! அந்தளவுக்கு, ஆத்திகராக இருந்தார். என் கூடப் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். 1957 மார்ச்சில் எஸ்.எஸ்.எல்.சியில் பள்ளியில் முதல் மாணவனாக தேர்வானேன். குடும்பத்தில் வறுமை சூழல் காரணமாக எங்கப்பாவால் என்னை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாமல் போனது. எனக்குப் பிறகு இரண்டு தங்கைகள். 1958 அக்டோபர் 4 இல், 18 வயதில் தஞ்சாவூரில் சுகாதாரத் துறையில் பணியில் சேர்ந்தேன், அப்போது சம்பளம் 100 ரூபாய். 

கேள்வி: திராவிட இயக்கச் சிந்தனைகள் உங்களுக்கு எந்த வயதில் அறிமுகம் ஆனது? 

முத்து: பள்ளிப் பருவத்திலேயே ஆகிவிட்டது. ஆரணியிலிருந்து பள்ளியில் மூனாவது பாரமோ, நாலாவது பாரமோ படிக்கும் போதே நூலகத்துக்கு “திராவிட நாடு” இதழ் வரும். பசங்க மறைச்சு வச்சுப் படிப்பாங்க. சிறீராமன்னு தமிழாசிரியர் ஒருத்தர், அப்புறம் வி.சி.முனுசாமின்னு நம்மாளு. அவருகூட, தன்னை யாருன்னு அடையாளப் படுத்திக்க மாட்டாரு. வகுப்பு அழகா எடுப்பாரு. ஆங்கிலமும் எடுப்பாரு. சோசியல் ஸ்டடீசுக்கும் வருவாரு. அவ்வளவு அருமையா மாணவர்களை கவர்ந்து பாடம் நடத்துவாரு. அப்போ ஒரு முறை, “எல்லாரும் குளிச்சிட்டுதானே வந்தீங்க? அப்பிடின்னு கேட்டாரு. “குளிச்சிட்டுதாங்க வந்தோம்” அப்பிடின்னு நாங்க சொன்னோம். அவரு என்னைப் பார்த்து, “என்ன முத்துக்கிருஷ்ணன் எல்லாரும் குளிச்சிட்டு வந்ததாச் சொல்றாங்க. நெத்தியில சாம்பல் அப்படியே இருக்கு” அப்பிடின்னு கேட்பாரு. நான் சிரிப்பேன். அது மறக்க முடியாத நினைவு. திராவிட இயக்கச் சிந்தனைகள் அங்கேயே தொடங்கிவிட்டது.

கேள்வி: திராவிடர் கழகத்திற்கு நீங்கள் வந்த பின்னணியைப் பற்றிக் கூறுங்கள்ஞ்

முத்து: முதலில் நான் திராவிடர் கழகத்திற்கு வரவில்லை. தி.மு.க. பற்றில் இருந்தேன். ஈ.வெ.கி.சம்பத்துன்னு அய்யா வுக்கு அண்ணன் மகன் இருக்காரில்ல, அவர் பேச்சில் அளவில்லாத பற்று எனக்கு உண்டு. அண்ணா அவருக்கு ‘சொல்லின் செல்வர்’ன்னு பட்டம் கொடுத்தாரு. எல்லாரையும் அரவணைச்சுப் போவாரு. அண்ணா, அய்யாவிடம் சில மனக்கசப்பு ஏற்பட்டு வெளியில் வந்த நேரத்தில், கலைஞர், நாவலர், அன்பில் தர்மலிங்கம் இவங்க ளெல்லாம் ஒன்னாச் சேர்ந்து வெளியில வந்தாங்க. அப்படி வந்தபோது, ஈ.வெ.கி. சம்பத்தை ஓரங்கட்ட நினைச்சாங்க. அதனால, 1962 இல் சம்பத் தமிழ்தேசியக் கட்சி ஆரம்பிச்சாரு. முதல் கூட்டம் மெரினா சீரணி அரங்கத்தில் நடந்தது. அந்த அரங்கம் அப்பதான் ஏற்படுத்தினாங்க. சம்பத் எங்கிருந்தாலும் வாழ்கன்னு அண்ணா சொன்னாரு. சம்பத் ஆரம்பிச்ச கட்சி நிற்கவில்லை. அதுக்கப்புறம் அவருக்கு காமராஜர் மேல ஒரு லயிப்பு வந்து, காமராஜரை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் பெரியாருக்கு கணக்கு எழுதறவரு ஒருத்தர்; குள்ளமா கருப்பா இருப்பாரு; தண்டையார்பேட்டை; பெயர் நினைவுக்கு வரவில்லை. அவரு எனக்கு நட்பானாரு. அதுக்கப்புறம்தான் எனக்கு அய்யா பேருல ஒரு மரியாதை வந்தது. 

கேள்வி: அய்யாவோட எந்தக் கருத்து உங்களை முதலில் ஈர்த்தது?

முத்து: இனநலம், சுயமரியாதை, கடவுள் மறுப்பு.

கேள்வி: பெரியார் தொண்டர் ஆனபிறகு உங்களின் அனுபவங்களைச் சொல்லுங்கஞ்

முத்து: அதுக்கப்புறம் நான் பெரும்பாலும் கருப்புச்சட்டையோடதான் இருப்பேன். கல்யாண வீடாயிருந்தாலும் சரி, கருமாந்தர வீடா இருந்தாலும் சரி, ’மாமா உங்க தலைவரு இதுல என்ன சொல்லியிருக் காரு’-ன்னு என்னை சீண்டுவாங்க. நானும் ஒத்த ஆளா அவங்க கேட்ட கேள்விக் கெல்லாம் சளைக்காம டக்டக்குன்னு பதில் சொல்லிக்கிட்டே வருவேன். அதையேதான் திருப்பித் திருப்பிக் கேட்பாங்க. நானும் விடாம சொல்வேன். ஒருகட்டத்தில, கேட்க றீங்களே தவிர, திருந்த மாட்டேங்கிறீங்க ளேன்னு கோபமாகவும் பேசியிருக்கிறேன்.

பணியில் சேர்ந்த தொடக்கத்திலேயே பகுத்தறிவாளர் கழகமுன்னு அய்யா சொல்லிக் கேட்டிருக்கேன். ஓரளவுக்கு அந்தக் கருத்துகள் புரியும். சரி, பகுத்தறிவாளர் கழகம் ஒன்னு ஆரம்பிச்சுடலாமே அப்பிடின்னு நினைச்சு ஆரம்பிச்சேன். நான் ஒரே ஆளு. அப்போது வந்த எதிர்ப்புகள் கொஞ்ச, நஞ்சமில்லை. நேரிடையா என்னை யாரும் எதிர்க்க முயலவில்லை. ஆனா, மேலெழுந்தவாரியா மனசுக்குள்ள இவனைத் தெரியாதா? அப்பிடின்னு என்னைப்பற்றி நினைச்சுக்குவான். ஏன்னா என்னால பலபேரு பயனடைஞ்சவன். இரவு 12:00 மணிக்கு மேலகூட வயித்துவலின்னு வருவான். என்னைப்பற்றித் தவறாக எண்ணுபவர்கள், பேசுபவர்கள் என்று யார் அழைத்தாலும் நான் சலிக்காமல் போய் சிகிச்சை செய்வேன்.

பணி நிமித்தமாக அம்பத்தூர் வந்தபோது, அங்கே நான் ஒருவன் மட்டும்தான் கருப்புச்சட்டை. நீண்டநாள் சென்று, நான் என்னுடைய சம்பந்தி வீட்டுக்குப் போகும்போது, ஒருத்தர் கருப்புச்சட்டை போட்டிருந்ததைப் பார்த்தேன். வியப்புடன் இவரு கருப்புச்சட்டை போட்டிருக்கிறாரே, போய் அணுகலாமா? அப்பிடின்னு ஒருநாள் பக்கத்தில போய் துணிச்சலா கேட்டேன். “அய்யா, என் பெயர் முத்துக்கிருஷ்ணன். நானும் கருப்புச் சட்டைக்காரன்தான்.” அப்பிடின்னு சொன்னவுடனே அவரு, “ரொம்ப மகிழ்ச்சி! ரொம்ப மகிழ்ச்சி! உங்களைப் பார்த்ததிலே! இங்கே நம்மாளுங்க யாரும் இல்லை. நான் தி.மு.க.தான். என் பெயர் ஏழுமலை. இனி மேல்  நாம இணைபிரியாமப் போவோம்; வருவோம்” அப்பிடின்னுட்டாரு. அவரு பேருந்து ஓட்டுநர். நல்ல உயரமா இருப்பாரு. தோளில் சிவப்புத் துண்டு போட்டிருப்பாரு. அன்று தொடங்கிய அவருடனான தோழமை என்பது அவரது இறப்பு வரையிலும் இருந்தது. அதுக்குப்பிறகு இவர் மூலமாக அறிமுகம் ஆனவர்தான் நடத்துநர் தி.மு.க. ஆ.வெ.நடராஜன், அதன் பிறகு தி.க. ஏழுமலை. இப்போது அம்பத்தூர், ஆவடி என்று ஏராளமான பெரியார் தொண்டர்கள் இருக்கின்றனர். நான் இங்கே திராவிடர் கழகத்தில் அம்பத்தூர் நகரத் தலைவராக 20 ஆண்டுகள் இருந்தேன். 

கேள்வி: உங்கள் திருமணம் காதல் திருமணமா? பெற்றோர் பார்த்து செய்துகொண்டதா?

முத்து: 1969 இல் எனக்குத் திருமணம் நடைபெற்றது. பெற்றோர் செய்து வைத்த திருமணம்தான். இவங்களை பெண் பார்க்கப் போயிருந்தப்ப, எங்க சித்தப்பா வீட்டில் தூணுக்கு மறைவில் அவங்களை உட்கார வச்சுட்டாங்க. எதிரில் நான் உட்கார்ந் திருக்கேன். எங்க சித்தப்பா, “நல்லா பார்த் துக்கடா, அதோ அந்தத் தூணுக்குப் பின்னால இருக்காங்களே அவங்கதான்” அப்பிடின்னாரு. நான், “யாரைச் சொல்றீங்க சித்தப்பா, அந்த தூணையா?” அப்பிடின் னேன். அதுக்குப் பிறகுதான் அவங்க ”ஆமாய்யா, எதுக்கு மறைச்சுவச்சு உட்கார வச்சிருக்கீங்க. வெளியில வந்து உட்கார வச்சாங்க. ஒரே பெண்ணுதான் பார்த்தேன். பிடிச்சுருச்சு, திருமணம் செஞ்சுகிட்டேன். இவங்க அதிகமாப் பேசவே மாட்டாங்க. திருமணம் நடந்து இப்போ 53 ஆண்டுகள் ஆயிற்று. எங்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் எம்.தங்கராஜ், எம்.கஜலட்சுமி. எம்.தியாகராஜன். மூவரும் நன்றாகப் படித்து நல்ல பணிகளில் இருக்கின்றனர்.

எனது இணையர் பேரு ருக்குமணி. என்னைப் பற்றியோ, நான் சார்ந்துள்ள இயக்கம் பற்றியோ அவருக்கு விமர்சனமே இல்லை. அப்போதும் ஒன்னும் சொல்ல வில்லை; இப்போதும் அப்படித்தான். நான் தொட்டதுக்கெல்லாம் சுயமரியாதை பேசுவேன், பெரியாரைப் பேசுவேன், திராவிடர் கழகத்தையும் பேசுவேன், கடவுள் மறுப்பு பேசுவேன். இப்போதும் அவங்க அவங்களாகவே இருக்காங்க. நான் நானாகவே இருக்கிறேன். பிள்ளைகளும் அப்படித்தான். அவங்கம்மா மாதிரிதான். என்னுடைய பணி காரணமாக இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். இதை நான் ஒரு கெட்ட வாய்ப்பாகத்தான் நினைக் கிறேன். இப்போதும் அந்தக் குறை எனக்கு உண்டு. 

கேள்வி: பெரியாரை நேரில் எப்போது பார்த்தீர்கள்?

முத்து: 1970ன்னு நினைக்கிறேன். சென்னை அரசு பொது மருத்துவமனையில் நான் உத்தியோகத்தில் இருந்தபோது, ஆய்வுக் கூடத்தில் உட்கார்ந்திருக்கேன். அப்போது, ஒரு பையன் ஓடி வந்து, “முத்துக்கிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன்” அப்பிடின்னான். “என்னய்யா, என்னாச்சு? ஏன் பதட்டப்பட்டு ஓடிவர்றீங்க?” என்று கேட்டேன். “உங்க தலைவர் அய்யா, வந்திருக் காரய்யா” என்றான். அப்போதான் பெரியாருக்கு முதல் அட்மிசன். அதே போலத்தான் ஆசிரியருக்கும் முதல் கார்டியாலஜி அட்மிசன் இங்கதான். அதையும் ஒரு பையன்தான் சொன்னான். பெரியாரைப் பார்க்கிறதுக்காக போய் வணக்கம் சொல்லிட்டு நின்னேன். கூட யாரு இருந்தாங்கன்னு இப்போ சரியாக நினைவு இல்லை. ”அவரு, நம்ம கழகத்தவருய்யா” அப்பிடின்னு கத்திச் சொன்னாங்க. அய்யா, “யாரு?” அப்பிடின்னாரு. “வணக்கமய்யா, இங்கதான் வேலை செய்யறேன்” அப்பிடின் னேன். மறுபடியும் கேட்டாரு. மறுபடியும், ”நம்ம இயக்கப் பற்றுள்ளவரு”ன்னு சொன்னாங்க. அந்த நிலைமையிலும் எழுந்திருக்கிறாரு! (இப்போதும் முத்துக் கிருஷ்ணன் முகத்தில் அளவுகடந்த வியப்புப் படருகிறது) நான் பதறிப்போய், ”அய்யா, உட்காருங்கய்யா, உட்காருங்கய்யா” அப்பிடின்னு சொன்னேன். அவரும், “உட்காருங்க தம்பி” அப்பிடின்னாரு. நான் நின்னுகிட்டே சில வார்த்தைகள்தான் பேசினேன். “அட்மிசன் ஆயிருக்கீங்கன்னு கேள்விப்பட்டு, அய்யாவைப் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்.” ன்னு சொல்லிட்டு திரும்ப வந்துட்டேன்.

கேள்வி: ஆசிரியர் பற்றிய அறிமுகம் எப்போது?

முத்து: 1962 இல் நான் நாகப்பட்டினத்தில் பணியில் இருந்தேன். நூலகத்திற்குப் போவேன். அங்கே எந்தப் பத்திரிகையைப் படிக்கிறனோ, இல்லையோ விடுதலையைப் படிச்சுடுவேன். அதில் அறிக்கைகள் வரும். திடீரென்று ஒருநாள் ஒரு அறிக்கை வந்தது. ’நான் நிறுத்தலாம்ன்னு இருந்த பத்திரிகை யைத் தடுத்திருக்காரு தோழர் ஒருத்தரு, அவரு காசுகூட வாங்காம உழைக்க முன்வந்திருக்காரு. எனக்கு கண்டிசன் போடறாரு. நான் “சம்பளம் இல்லய்யா, ஹானரோரியம் கொடுக்கிறேன் அப்பிடின்னேன்” என்று பெரியார் விட்ட அறிக்கை வந்திருந்தது. அந்த அறிக்கை படக் காட்சி போல என் முன்னால இப்பவும் போயிட்டிருக்கு. இவரு, ’ஹானரோரியம் அப்பிடின்னாலும், சம்பளமுன்னு சொன்னாலும் ஒன்னுதான்ய்யா” அப்பிடிங்கறார். (சொல்லிக்கொண்டே முத்துக்கிருஷ்ணன் வாய்விட்டு சிரிக்கிறார்) 

”அய்யா நான் வர்றதுக்குத் தயார். விடுதலையை நிறுத்தாதீங்க. குடிஅரசுக்கு அப்புறமா இந்த ஒரு பத்திரிகைதான் இருக்குங்கிறாரு” இவரு. ”இல்லே லட்சக் கணக்கான ரூபாய் நஷ்டமாயிட்டே இருக்கு. எப்படி நடத்தறது? வாரப் பத்திரிகை ஆக்கிறா லாமுன்னு பார்க்கிறேன்.” அப்பிடிங்கிறாரு பெரியாரு.’ இப்படி அறிக்கையில வருது. அதைப் பார்த்துட்டு எனக்கு அதிர்ச்சி. ’வந்திருக்கிறாரு ஒருத்தர், அவரு பேரு கடலூர் வீரமணி’ அப்பிடின்னு வந்தது. அப்புறம் அய்யா சொன்னா மறுவிடை இல்லை. அப்படித்தான் நடந்தது. அப்போ தான் எனக்கு அவரைத் தெரியும்.

மற்றபடி ஆசிரியரோடு நேரிடையாக நான் சம்பந்தப்படவில்லை என்றாலும், நம்மைப் பார்க்கும் போதே நம்மைப் பற்றி மதிப்பிட்டுவிடுவார். என்மீதும் அவருக்கு நல்ல மதிப்பீடு உண்டு. எத்தனை நாளா வந்திருக்கிறான். இந்தக் கூட்டத்துக்கு ஏன் வரவில்லை? இப்படி எல்லாரையும் அறிந்து வைத்திருப்பார். ஆயிரக்கணக்கான தொண் டர்களில் அவர் நம்மை எங்கே கவனிக்கப் போகிறார் என்று சிலர் எண்ணுவார்கள். ஆனால், எல்லோரையும் கவனித்துக் கொண்டுதான் இருப்பார். இயக்கத்தையும் சிறந்த முறையில் வழிநடத்துகிறார். பெரியாரை உலகம் முழுவதும் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார்.

கேள்வி: பெரியார் தொண்டராக இந்தச் சமூகத்தை அணுகுவது பெரும் சிக்கலாக இருக்கிறதே அப்பிடின்னு என்றைக்காவது சலிப்பு வந்ததுண்டா? 

முத்து: (இல்லை என்பது போல தலையை வேகமாக ஆட்டியபடியே பேசுகிறார்) கருப்புச்சட்டைக்காரனாக இருப்பது எனக்கு எல்லையில்லாத மகிழ்ச் சியைக் கொடுக்கிறது. எல்லாரும் எதிர்த் தாலும் பெரியாரின் தொண்டராக இருப்பதில் நான் பூரிப்படைகிறேன். இன்னமும் என்னுடைய வயது கூடுவதற்கு இதுவொரு முக்கியமான காரணமாகப் பார்க்கிறேன். இவ்வளவு இடர்பாடுகளுக்கு மத்தியிலும், எனது மூச்சு அடங்கும் வரையிலும் என் கொள்கை மாறாது; யாராலும் என்னை மாற்றவும் முடியாது. (முத்துக்கிருஷ்ணனின் முதுகுத்தண்டு தானாக நிமிர்கிறது) எனக்கு மட்டுமல்ல, என்னுடைய இறுதி நிகழ்வில் எனது உடலுக்கும் சுயமரியாதை கிட்ட வேண்டும். அதற்காகத்தான் உடற் கொடைக்கு பதிவு செய்திருக்கிறேன். இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் ஆவடி மாவட்டத் தோழர்கள்தான்.

முத்துக்கிருஷ்ணனின் முதுகுத் தண்டு மட்டுமல்ல, அதைக் கேட்கின்ற நமது முதுகுத் தண்டும் தானாகவே நிமிர்கிறது. ஒரே ஒரு பெரியாரால் இப்படி பல்லாயிரக்கணக்கான முதுகுத் தண்டுகள் நிமிர்ந்ததால்தானே, கொடூரமான பார்ப்பனியத்தின் முதுகுத் தண்டு சல்லிசல்லியாக நொறுங்கியிருக்கிறது என்று உணர்வு வயப்பட்ட நிலையில், நாம் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பினோம்.

- உடுமலை வடிவேல்


No comments:

Post a Comment