ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : "பார்ப்பானின் வயிற்றில் அறுத்து வைப்பதற்காக" பெரிய கோயிலைக் கட்டி, தன்னை "பார்ப்பன அடிமையாக" பறைசாற்றிக் கொண்ட ராசராசனைக் கொண்டாடும் நம் மக்கள், தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, "தொலைநோக்கோடு, அறிவியல் அடிப்படையில்" கல்லணையைக் கட்டிய கரிகாலனைக் கொண்டாடாதது ஏன்?அறியாமையா? அடிமைப் புத்தியா?

- சீர்கழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் 1 : அதனால்தான் திராவிடர் கழகம், கல்லணை அருகில் திருக்காட்டுப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக கரிகாற் பெருவளத்தான் - பண்பாட்டுத் திருவிழாவை அருமையான நன்றித் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறது. இடையில் கோவிட்-19 காரண ஊரடங்கு - முடக்கத்தினால் நடைபெறவில்லை. மற்றபடி நாம் உணர்த்தி வருகிறோம், மக்களுக்கு.

---

கேள்வி 2 : தற்போது நடைமுறையில் இல்லாத மனு நூலில் உள்ளதாக சில செய்திகளை ஆ.ராசா பேசினார் என்று பி.ஜே.பி நீதிமன்றத்தில் புகார் செய்தது.ஆனால், சமீபத்தில் நீதிபதி பானுமதி மனுநூலில் உள்ள கர்மா அடிப்படையில் தீர்ப்பு அளித்திருந்தாரே இது சரியா?

- தா.பரமசிவம், தாம்பரம்

பதில் 2 : பி.ஜே.பி. கூறியது பச்சைப் பொய் என்பதற்கு இந்தப் புதிய அய்க்கோர்ட் தீர்ப்பே போதிய சான்றாகும். (அது சரியா தவறா என்பது வேறு பிரச்சினை).

---

கேள்வி 3 : பிஜேபிக்கு மாற்றாக, தன்னைக் காட்டிக்கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்களை அச்சிட வேண்டும் என்கிறாரே ?

- ஆ.அறிவழகன், கிடாரம் கொண்டான் திருவாரூர்

பதில் 3 : 28.10.2022 அன்று "விடுதலை"யில் வந்த நமது அறிக்கையைப் படியுங்கள். பதில் அதில் விரிவாகவே உள்ளது!

---

கேள்வி 4 : ஆதி திராவிடர், தலித் ,ஹரிஜன் - தீண்டாமை இந்தப் பெயர்களை ஒருவரும் சொல்லவோ எழுதவோ கூடாது என தமிழ்நாடு அரசு ஒரு சட்டம் இயற்ற இயலுமா? இயலுமானால் சட்டம் இயற்ற ஆவன செய்ய முடியுமா?

-சா.ஜெகதீசன், குத்தாலம்

பதில் 4 : சட்டப்படி உள்ள பெயரைப் பயன்படுத்தித்தான் தீரவேண்டிய கட்டாயம் உள்ளதே! "ஆதிதிராவிடர் நலத்துறை'' ஷி.சி., ஷி.ஜி., போன்றவை மட்டுமே சட்டப்படி பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகும். அதை எப்படி நீக்க முடியும்? ஆம். ஜாதி ஒழிக்கப்பட்டால்தான் அது முழு சாத்தியமாகும்.

---

கேள்வி 5 :  வாட்சப் வதந்திகளைக் கண்டு கொள்ளாத அரசும் சைபர்கிரைம் போலிசும் ஆதாரத்தோடு பதிவிடும் முற்போக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்கிறார்களே!

- இரா.பிரபாகரன், வ.பரணம்

பதில் 5 : ஆதாரங்களோடு எழுதுங்கள்.அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று பரிகாரம் தேட முயற்சிப்போம்!

---

கேள்வி 6 :  தொடர்ந்து நரபலி , வாஸ்து சாஸ்திர மோசடி, இரவு பூஜை என்று சட்டவிரோதச் செயல்கள் நடந்தவண்ணம் இருக்கிறதே, இதைத் தடுக்க எப்போதுதான் தனி சட்டம் வரும்?

-அ.தமிழ்க்குமரன், ஈரோடு

பதில் 6 : தமிழ்நாடு அரசு இதற்கு ஒரு தனி அவசரச் சட்டத்தை ஏற்படுத்திட வேண்டும். அலட்சியம் காட்டக் கூடாத அவசர, அவசியப் பணியாகும் இது!

---

கேள்வி 7 :   கேரளாவில் அமைச்சரை நீக்குங்கள் என்று ஆளுநர் ஆணையிடுகிறாரே?

-தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில் 7 : அரசியல் சட்டத்தைத் தவறாகப் புரிந்து இப்படி நடந்துகொண்ட ஆளுநரைத்தான் குடியரசுத் தலைவர் நீக்க வேண்டுமே தவிர, முதல்அமைச்சர் உரிமைப்படி முறையாகப் பெற்றுள்ள  நிதியமைச்சர் அல்ல, நீக்கப்பட வேண்டியவர்! பேரறிவாளன் வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள ஆளுநர் படித்துப் பார்ப்பது மிகவும் அவசரம்!

---

கேள்வி 8 : பாஜகவில் இணைய தெலங்கானா எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டது குறித்து?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில் 8 : இதுபோல் முன்பு டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டது பற்றி டில்லி முதலமைச்சர் கூறியதையும் இணைத்துக் கொள்ளுங்கள்! இணைய வராவிட்டால் டில்லி வருமானவரித்துறை அம்பு பாயும் என்றும் மிரட்டியுள்ளதாக தெலங்கானா எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர்.

---

கேள்வி 9 :  காவல்துறை மீது ஒன்றிய அரசின் கண் விழுகிறதே?

- த.மணிமேகலை, ஆவடி

பதில் 9 : சட்டம் - ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு என்று 27.10.2022 அன்று உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளதையும் படியுங்கள்!

---

கேள்வி 10 :  வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

-பாக்யா, பொன்னமராவதி

பதில் 10 : அறிவியல் முன்னேற்றம் - சட்ட ஓட்டைகள் இல்லாமல், 'கல்லா கட்ட' இதை ஓர் உபாயமாக ஆக்காமலிருந்தால் எல்லாமே சரி! சட்ட ஓட்டைகள் இருப்பினும் அடைக்கப்பட வேண்டும். தத்துவம் வரவேற்கத்தக்கது!


No comments:

Post a Comment