தீயாய் சுட்ட தீபாவளி 'பரிசு' இதுதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

தீயாய் சுட்ட தீபாவளி 'பரிசு' இதுதான்!

 தமிழ்நாட்டில் 284 இடங்களில் தீ விபத்து 500க்கு மேற்பட்டோர் காயம்

சென்னை,அக்.26- தமிழ்நாட்டில் ‘தீபாவளி’ பெயரால் பட்டாசு வெடித்தது உட்பட பல்வேறு காரணங்களால் 284 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துகளில் 500-க்கும் மேற் பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ‘தீபாவளி’ கொண்டாட்டத்தின்போது, அதிகாலை முதலே பட்டாசுகள் வெடித்தனர். தமிழ்நாடு அரசு பட்டாசு வெடிப்பதில், பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து, எச்சரித்தபோதிலும், பட்டாசு வெடித்ததால் பல்வேறு இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான தீ விபத்துகள் ஏற்பட்டன. அந்தவகையில் தமிழ்நாடு முழு வதும் அக்டோபர் 24ஆம் தேதி காலை முதல் இரவு 12 மணி வரை 284 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

அசோக் நகர்: சென்னை அசோக் நகர் 2ஆவது தெருவில் ஒரே கட்டடத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான 2 மருந்து குடோன்களில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தக வலின் பேரில் நிகழ்வு இடத்துக்கு அசோக்நகர், தியாகராயர் நகர், தேனாம்பேட்டையில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, 3 மணி நேரம் போராடி தீயை அணைத் தனர்.

இந்த விபத்தில் குடோனில் வைக்கப்பட்டி ருந்த மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், 2 சிறிய ரக சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு கார் தீக்கிரையானது. பட்டாசு தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சென்னை அய்அவுஸ் :  அஜிஸ் முல்க் தெருவில்  காலை 4 இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. பட்டாசு தீப்பொறி பட்டு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருவொற்றியூரில் குடிசை வீடு தீப்பிடித்து மூதாட்டி மரணம்

திருவொற்றியூரில் ராக்கெட் பட்டாசு விழுந்து குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் தீயில் சிக்கி மூதாட்டி பலியானார். திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 65). இவர், சங்கர் என்பவரது வீட்டின் மாடியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். தீபாவளியையொட்டி அப்பகுதியில்  முன்தினம் காலை முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. காலை 11 மணி அளவில் திடீரென்று ராக்கெட் பட்டாசு ஒன்று தீப்பொறியுடன் பறந்து வந்து மல்லிகாவின் குடிசை வீட்டின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென் பரவி குடிசை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.  மூதாட்டி மல்லிகாவால் குடிசை வீட்டில் இருந்து உடனடியாக வெளியே வரமுடியாததால் தீயில் சிக்கிக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கீழ் வீட்டில் இருந்த வீட்டின் உரிமையாளர் சேகர், உடனடி யாக மேலே சென்று மல்லிகாவை மீட்டார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. மூதாட்டி மல்லிகாவின் உடல் முழுவதும் தீயில் கருகியது. மேலும் அவரது வீட்டில் இருந்த கட்டில், பீரோ பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீக்கிரை யாகின.

உயிருக்குப் போராடிய மல்லிகாவை கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால்  அதிகாலை சிகிச்சை பல னின்றி மூதாட்டி மல்லிகா பரிதாபமாக உயிரிழந் தார். இதுபற்றி சாத்தாங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 9 குடிசைகள் இதேபோல் அன்னை சிவகாமி நகரில் சுந்தரி, மணி உள்பட 6 பேரின் குடிசை வீடுகள் பட்டாசால் தீப்பிடித்து எரிந்தன.

தாம்பரம்: மேற்கு தாம்பரம், காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மேனகா (60). இவர், மகனுடன் வெளியே சென்று இருந்தார். அப்போது பட்டாசு தீப்பொறி விழுந்ததில் மேனகாவின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தும், குடிசை முற்றிலும் எரிந்துபோனது. வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மற்றும் டி.வி., பிரிட்ஜ், துணி துவைப்பு இயந்திரம் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுபற்றி தாம்பரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  

கோயம்பேடு : கோயம்பேடு, ஜெய் நகர் பகுதியில் பட்டாசுகள் வெடித்தபோது தீப்பொறி விழுந்து அங்கிருந்த 3 தென்னை மரங்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தது. கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தென்னை மரத்தின் உச்சியில் எரிந்த தீயை அணைத்தனர்.

அரும்பாக்கம்: இதேபோல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந் ததில் 2 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலானது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

பல்லாவரம்: ஜமீன் பல்லாவரம் மலங்கநந்த புரம் பகுதியில் பட்டாசு வெடித்ததில் வேளாங் கண்ணி ராஜா, ஏசுதாஸ், கம்சாபீவி ஆகியோரது குடிசை வீடுகளும், பம்மல் பகுதியில் ராதிகா மற்றும் தேவராஜ் ஆகியோரது வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீடுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. 

மேடவாக்கம்: சென்னை அடுத்த கீழ்க் கட்டளை -  மேடவாக்கம் நெடுஞ்சாலையில் இரும்பு பொருட்கள் கடை நடத்தி வருபவர் சுந்தர். இவரது கடையின் அருகில் பெயிண்ட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கிடங்கில்  முன்தினம் இரவு பட்டாசு விழுந்து தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க முயன்ற சுந்தரின் தம்பி சுபாஷ் (40) கையில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி, பெருங் களத்தூர் பகுதியில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத் தனர். எனினும் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப் புள்ள பொருட்கள் தீயில் எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி மடிப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பட்டாசு வெடிப்பு  271 பேர் மீது வழக்கு

 தீபாவளி   நாளன்று, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. மீறுப வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் அக்.23 முதல் 25ஆம் தேதி காலை வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறிபட்டாசு வெடித்தது தொடர்பாக  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் "உச்ச நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி சென்னையில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தது தொடர்பாக 271 வழக்குகளும், விதிகள் மீறி பட்டாசு கடைகள் நடத்தியது தொடர்பாக 14 வழக்குகளும், அளவுக்கு அதிக மான சத்தத்தில் பட்டாசு வெடித்த குற்றத்திற்காக 69 வழக்குகளும் என இதுவரையில் மொத்தம் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற ஆணையின் பேரில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் பேரில், தீபாவளியை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரங்கள் மட்டும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட் டிருந்தது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையா ளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னையில் 211 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப் படுகிறது. தீபாவளியின்போது சேகரமாகும் பட்டாசு கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என்பதால் மாநகராட்சியின் சார்பில் இக்கழிவு களை தனியாக சேகரித்து கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப் படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் தீபாவளி   முன் னிட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங் களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேகர மாகும் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப்பணியா ளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த 23ஆம் தேதி 7.92 டன் பட்டாசுக் கழிவுகள், 24-ஆம் தேதி (தீபாவளியன்று) 63.76 டன் பட்டாசு கழிவுகள், 25-ஆம் தேதி  139.4 டன் பட்டாசு கழிவுகள் என மொத்தம் 211.08 டன் பட்டாசு கழிவுகள் தூய்மைப்பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பட்டாசுக் கழிவுகளை கொண்டு செல்ல மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என 30 தனி வாகனங்கள் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 50 டன் பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாய கரமான கழிவுகளை முறைப் படுத்தும் செய லாக்க நிலையத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. மீதமுள்ள பட்டாசுக் கழிவுகளை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி பட்டாசு: சென்னையில் காற்றுமாசு அபாய அளவை தாண்டியது

தீபாவளி பட்டாசால் சென்னையில் 5 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை தாண்டியதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை, தீபாவளி நாளன்று பட்டாசு வெடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை கண்டறிய சென்னை பெசன்ட்நகர், தியாகராயர் நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார் பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 7 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இந்த இடங்களில் தீபாவளி நாளன்று குறைந்தளவு ஒலி மாசு பெசன்ட்நகரிலும், அதிகளவு ஒலி மாசு திருவொற்றியூரிலும் கண்டறியப்பட்டது. பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களிலும் பதிவான ஒலி மாசு, தீபாவளி அன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலி மாசுபாட்டின் அளவுகளை விட மிக அதிக அளவானதாகும்.  காற்று மாசுவைப் பொறுத்தமட்டில் அன்றைய தினம் பெசன்ட்நகரில் குறைந்தளவும், சவுகார்பேட்டையில் அதிகளவும் பதிவாகி இருந்தது. பெசன்ட்நகர், தியாகராயநகர் ஆகிய இடங்களில் மிக மோசமான அளவும், நுங்கம் பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 5 இடங்களில் அபாயகரமான அளவும் காற்று மாசு பதிவாகி இருந்தது. தீபாவளிக்கு முன்பு 17-ஆம் தேதி பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களில் காற்று மாசு பதிவிடப்பட்டது. அதன்படி, தீபாவளி   ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 7 இடங் களில் குறைந்தளவு காற்று மாசு பதிவான பெசன்ட்நகரில் வழக்கத்தை விட 8 மடங்கு அதிகமாகவும், அதிகளவு காற்று மாசு பதிவான சவுகார்பேட்டையில் 11 மடங்கு அதிகமாகவும் காற்று மாசு பதிவாகி இருந்தது. காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மை, காற்றின் மிகக்குறைந்த வேகம் ஆகிய வானிலை அமைப்பு பட்டாசுகளை வெடித்ததால் ஏற்பட்ட புகையை வான்வெளியில் விரவுவதற்கு ஏதுவான சூழ்நிலையாக அமையவில்லை. இதுவே, சென்னை மாநகர பகுதியில் தீபாவளி அன்று   காற்று மாசு அதிகமானதற்கு காரணம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

டில்லி: தடையை மீறி பட்டாசு வெடிப்பு - காற்று மாசு உச்சம்

தலைநகர் டில்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டில்லியில் ஜனவரி 1, 2023 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் டில்லியின் காற்றின் தரத்தின் சராசரி தரவுகளின்படி, ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரக் குறியீடு 312 அதாவது 'மிகவும் மோசமான' வகை இருந்ததாக தெரிவித்துள்ளது. தீபாவளி நாளான  உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டில்லியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூரும் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளியன்று (நவம்பர் 4, 2021) டில்லியின் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் (காற்றின் தரக் குறியீடு 382) இருந்தது. மேலும் டில்லியின் நெருங்கிய நகரங்களான காஜியாபாத் (301), நொய்டா (303), கிரேட்டர் நொய்டா (270), குருகிராம் (325) மற்றும் ஃபரிதாபாத் (256) ஆகியவை மோசமான காற்றின் தரம் மற்றும் மிக மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன. காற்றின் தரம் காற்று மாசு நிலை 0 முதல் 50 நல்லது 51 முதல் 100 திருப்திகரமானது 101 முதல் 200 மிதமானது 201 முதல் 300 மோசமானது 301 முதல் 400 மிகவும் மோசமானது 401 முதல் 500 கடுமையானது.

குஜராத் பட்டாசு வெடிப்பில் மோதல்

குஜராத் மாநிலம், வதோதராவில் தீபாவளியின்போது பட்டாசுகள் வெடிப்பதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தெர்டர்பாக 19 பேரை காவல்துறையினர் காவலில் வைத்துள்ளனர். 

தீபாவளி   அன்று வட இந்திய மாநிலமான குஜராத்தின் வதோதரா நகரில்  நேற்று (25.10.2022) அதிகாலை 12.45 மணியளவில் பனிகேட் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. 

அந்தப் பகுதியில் மின்சாரம் இல்லாத நிலையில், பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் வாகனங்கள் சேமடைந்தன. வாகனங்கள் சூறையாடப்பட்டன.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீதும் பெட்ரோல் குண்டை மோதல் நிகழ்வில் ஈடுபட்டவர்கள் வீசி எறிந்தனர். எனினும், இதில் யாரும் காயம் அடையவில்லை. அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று பட்டாசு பறந்து வந்து விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது என்று காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment