எதிர்கொள்ளக் காத்திருக்கிறோம் மழையே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

எதிர்கொள்ளக் காத்திருக்கிறோம் மழையே!

சென்னையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்:

வெள்ளத்தில் இருந்து இம்முறை தப்பிக்குமா?ஜல், தானே, நீலம், வர்தா, ஒக்கி, கஜா ஆகிய புயல்கள் தமிழக மக்களால் மறக்க முடியாதவை. அதில், 2016ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரை கடந்து சென்ற வர்தா புயல், சென்னையைத் தாக்கிய மிகப்பெரிய புயல்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

192 கி.மீ. வேகத்தில் வீசிய சுழல் காற்று சென்னையில் நீண்டகாலமாக இருந்த மரங்களைச் சாய்த்தது. பெருநகரத்தின் பல பகுதிகளில், மரங்கள் விழுந்து மின் கம்பிகள் அறுந்து, மின்சார விநியோகம் தடைபட்டது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத பேரிடராக இருந்தது. அந்தப் பேரிடருக்கு பிறகு, சென்னையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் நகர்ப்புற ஏழை மக்களிடையே ஒவ்வோர் ஆண்டும் புயல், கடும் மழைப் பொழிவு என்பவை ஏற்பட்டாலே ஓர் அச்சம் ஆழ்மனதில் எழுந்து விடுகிறது.

குறுகிய காலகட்டத்தில் அதிதீவிர மழைப்பொழிவை எதிர்கொள்வதன் விளைவாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. போக்குவரத்து பாதிப்பு, நீர் மூலம் பரவும் நோய்கள் போன்றவற்றின் அபாயங்களும் பல்வேறு சிரமங்களுக்கு மக்களை ஆளாக்குகின்றன.

இந்திய பெருநகரங்களின் சவால்கள்

இந்தியாவில், 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நீர்சார் பேரிடர்கள் அதிகம் நிகழக்கூடிய மாவட்டங்களில் வசிப்பதாக ஆற்றல், சுற்றுச்சூழல், நீருக்கான கவுன்சில் (Council on Energy, Environment and Water) என்ற அமைப்பு 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகிறது. அதிலும் இந்திய தென் மாநிலங்கள் தான் உச்சகட்ட காலநிலை நிகழ்வுகளால் பாதிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

அத்துடன், இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகள் வெள்ளப் பேரிடர் களால் அதிகம் பாதிக்கப்படும் அதே வேளையில், மத்திய இந்தியாவின் பகுதிகள் உச்சகட்ட வறட்சியை எதிர்கொள்கின்றன. அசாம், ஆந்திரா, மகாராட்டிரா, கருநாடகா, பீகார் ஆகிய மாநிலங்களிலும், வெள்ளம், வறட்சி, புயல் போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயங்கள் மிக அதிகமாக உள்ளன.

வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு போன்றவை இயற்கையான நிகழ்வுகள் தான். ஆனால், அந்த வெள்ளம் மனித தலையீடுகளால் நிலத்தின் சூழலியல் சிதைக்கப்படும்போது தான் தொடர்ச்சி யான பேரிடர்களாக மாறுகின்றன. அதன் விளைவாக இந்தியாவில் 20 இந்தியர்களில் 5 பேர் வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றில் ஏதாவதொரு பேரிடரால் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக ஆற்றல், சுற்றுச்சூழல், நீருக்கான கவுன்சிலின் அறிக்கை கூறுகிறது.

சென்னையில் 2015இல் ஏற்பட்ட வெள்ளம், 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி ஆகியவற்றிலிருந்து, சென்னை பெருநகரம் காலநிலை நெருக்கடிக்கான உலகளாவிய விவாதங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்தியப் பெருநகரங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே இத்தகைய சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்த ஆண்டின் மழைக்காலத்தில் பெங்களூரில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. புவி வெப்பமடைவ தாலும் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகமாவதாலும், தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகளுக்கு வழிவகுத்து, பெங்களூரு போன்ற நகரங்களில் வெள்ளப்பெருக்கு என்பது இனி ஒவ்வோர் ஆண்டும் நடக்கக்கூடிய பொதுவான நிகழ்வாக மாறலாம்.

முன்னரே கூறியதைப் போல், வெள்ளம் ஏற்படப் பல காரணிகள் இருப்பினும், காலநிலைக்கு ஏற்ற உள்கட்டமைப்பு இல்லாதது, வெள்ளத்தின் தீவிரத்தை அதிகரிப்பதை சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகியவற்றில் காண முடியும்.

செப்டம்பர் மாதத்தில் உலக வானிலை அமைப்பு வெளியிட்ட யுனைடெட் இன் சயின்ஸ் அறிக்கை, "நகரங்களில் ஏற்படும் காலநிலை நெருக்கடி அதிக மழைப்பொழிவு, துரிதப்படுத்தப்பட்ட கடல் மட்ட உயர்வு, வெள்ளம், கோடையில் சராசரியை விட அதிக வெப்பநிலை மற்றும் தீவிர வெப்ப அலை நிகழ்வுகள், கடுமையான வறட்சி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்," என்று எச்சரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், குறிப்பாக அசாமில் இதுபோன்ற நகர்ப்புற வெள்ளங்கள் பெரிய சேதங்களை ஏற்படுத்தின. பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களையும் இதற்கு உகந்த சான்றாகக் குறிப்பிடலாம்.

2022ஆம் ஆண்டின் உச்சகட்ட காலநிலை நிகழ்வுகள்

அக்டோபர் 10, 2022 வரையிலான பேரிடர் மேலாண்மை பிரிவின் தரவுகள்படி, இப்போது உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம், 16 மாவட்டங்களில் 777 கிராமங்கள் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப் பட்டுள்ளன, 12,325 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம், வறட்சி போன்ற நிகழ்வுகள் மற்றும் மின்னல் போன்ற பிற தீவிர வானிலை நிகழ்வுகள் இந்தியா முழுவதும் இழப்புகளின் தடங்களை விட்டுச் செல்கிறது, 114 நாட்களுக்கு நீடித்தது தென்மேற்குப் பருவமழைவடகிழக்கு இந்தியாவில், அசாம், மேகாலயா மாநிலங்களில் ஜூன் மாதம் சீசன் தொடங்கியபோதே வெள்ளப் பேரிடர் களும் தொடங்கின. அதற்கு அடுத்த இரண்டு மாதங்களில் தலைகீழாக, அந்தப் பகுதிகள் வறண்ட நிலையில் இருந்தன.

ஜூலை மாதத்தில், குஜராத், ராஜஸ்தான், மகாராட்டிரா மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது. ஆகஸ்ட் மாதம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் வெள்ளத்தை எதிர்கொண்டன. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை தரவுகள், இந்த ஆண்டில் 396 மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு, மின்னல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றன.

அக்டோபர் 10 வரையிலான தரவு களின்படி, நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகளில் 719 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் மின்னல் தாக்கியதில் 555 பேரும் நிலச்சரிவு காரணமாக 183 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 162 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சீசனில் மட்டும் 408 மாவட்டங்கள், திடீர் வெள்ளம், மின்னல் தாக்குதல், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப் பட்டுள்ளன.

இந்த பருவமழையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 15 லட்சத்திற்கும் அதிகமான எக்டேர் வேளாண் நிலங்கள் சேதமடைந்துள்ளன.

வடகிழக்குப் பருவமழைக்கு சென்னை தயாராக உள்ளதா?

கடந்த மே மாதம், தமிழ்நாடு நீர்வளத் துறைக்கு சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சுமார் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, நகர மெங்கும் மழைநீர் வடிகால் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நகராட்சி அதிகாரி கள் செயல்பட்டு வருகின்றனர். திருவான் மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் போன்ற பகுதிகள் சென்னையில் இயற்கையாக மழைநீரை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய தன்மையைக் கொண்ட மண் நிறைந்த பகுதிகளாக இருந்தன. ஆனால், அவை இப்போது கட்டடங் களாகவும் சாலைகளாகவும் மாறி விட்டன. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அடிப்படையில் நிலத்தடி நீர் மீள்நிரப்புப் பகுதி இல்லை. ஆனால், அந்தப் பகுதி களிமண் நிறைந்தது. ஆகவே, எவ்வளவு மழைநீர் பெய்தாலும் அதைப் பஞ்சு போல் ஈர்த்துக் கொள்ளக் கூடிய தன்மை உண்டு. ஆனால், சுமார் 70 சதவிகிதம் பகுதி அங்கு முன்பு இருந்ததைப் போல் இல்லை.

கடற்கரையைப் பொறுத்தவரை, மெரினா, பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் அதிகமான மண் பரப்பு இருப்பதால் அந்த நிலம் மழைநீரை நன்கு உள்வாங்கிக் கொள்கின்றது. ஆனால், பெசன்ட் நகர், திருவான்மியூர் என்று வந்துவிட்டால், அங்கெல்லாம் கடற்கரைக்கு மிக நெருக்கமாக கட்டடங்கள் வந்துவிட்டன. சென்னை யின் நிலவியல் அமைப்பை இப்போது கருத்தில் கொண்டால், பெரிய பெரிய நிலத்தடி நீர் மீள்நிரப்பு கட்டமைப்புகளை அமைப்பது சிறிதளவு நன்மையையே வழங்கும். அதைவிட, அனைத்து கட்டடங்களிலுமே மழைநீரைப் பிடித்து நிலத்தடி நீர் மீள்நிரப்பு செய்யும் கட்டமைப்புகளை உருவாக்கினால் அது நன்றாகப் பயனளிக்கும்.

எங்கு பார்த்தாலும் சாலைகள், கற்களால் அமைக்கப்பட்ட தரைகள், கட்டடங்கள் என்று மாறிவிட்டதால் நீர் மண்ணுக்குள் செல்வதற்கான வசதியே எங்குமில்லை. இப்போதுள்ள சூழலில் அதைப் பெரியளவில் உருவாக்கி பராமரிப்பதைவிட, அனைத்து வீடுகளி லும் கட்டடங்களிலும் சின்னச் சின்ன கட்டமைப்புகளை உருவாக்கி, நிலத்தடி நீர் மீள்நிரப்பு செய்தால் அதன்மூலம் நிலத்தின் மேற்பரப்பில் வெள்ள நீர் தேங்குவதைத் தடுக்க முடியும்," என்று கூறுகிறார் அண்ணா பல்கலைக் கழகத்தின் நிலவியல் பேராசிரியர் எல்.இளங்கோ. பேராசிரியர் இளங்கோ கூறுவதைப் போல், அனைத்து திட்டங்களையும் பிரமாண்டமாகவே மேற்கொள்வது அதிக ஆற்றல் மற்றும் உழைப்பு விரயத்திற்குக் கூட வழிவகுக்கலாம். குழாய் வழித்தட இணைப்பு, சிறுபாலங்கள் என்று நகரம் முழுவதையும் ஒரே இணைப்புக்குள் கொண்டு வர முயல்வதைவிட, இயற்கைக்கு உகந்த வகையில், சிறு சிறு அளவில் அந்தந்தப் பகுதிகளிலேயே மேலாண்மை செய்யக்கூடிய வகையி லான மய்யப்படுத்தப்படாத கட்டமைப்பு களை உருவாக்குவது, நிர்வகிக்க எளிதாகவும் பெரும் கட்டமைப்புகளை விட அதிகம் பயனுள்ளதாகவும் இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

130 கி.மீ. மழைநீர் வடிகால் அமைப்பு கட்டி முடிக்கப்பட்டு, 1,400 கிமீட்டருக்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்ற நிலையில், இந்த முறை வெள்ளச் சேதம் கட்டுப்படுத்தப்படும் என்று முதலமைச் சரும் அதிகாரிகளும் நம்புகின்றனர். ஆனால், காலநிலை நெருக்கடியால் ஒரே நாளில் ஒரு வாரம், ஒரு மாதம் பெய்யக்கூடிய அளவிலான மழைப் பொழிவு கூட கொட்டித் தீர்க்கும் சூழலில், வடிகால் அமைப்பை உருவாக்குவது மற்றும் தூர்வாரும் நடவடிக்கைகள் மட்டுமே போதாது.

 பருவமழை நமக்கு அதிகம் சோதனை கொடுப்பதில் முதலிடம் மின்சாரம்,

அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக இருந்தாலும் எவ்வித பாதிப்பு களும் இல்லாத அளவிற்கு சீரான மின் விநியோகம் செய்வதற்காக நடைபெற்ற பணிகள், நடைபெறும் பணிகள், இன்னும் முடியாமல் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மின்மாற்றிகள் 14,442, மின்கம்பங்கள் 1,50,932 தயார் நிலையில் உள்ளன. 12,780 கி.மீ அளவிற்கு மின் கம்பிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்த 39,616 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. இடையிலே 25,080 புதிதாக மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 1,759 கி.மீட்டருக்கு மின்கம்பிகள் புதிதாக போடப்பட்டுள்ளன.

சென்னையில் 5 கோட்டங்களில் புதைவட கம்பிகள் பதிக்கும் பணிகள் 2 மாதத்தில் முடிவடைகிறது. அடுத்த 2 மாதங்களில் சென்னையில் உள்ள 7 கோட்டங்களில் பணிகள் நடைபெற வுள்ளன. மின்னகத்தில் மழைக் காலங் களில் அதிக அழைப்புகள் வரும் என்பதால் கூடுதலாக ஒரே நேரத்தில் 60லிருந்து 75ஆக தொலைப்பேசி இணைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த அய்ந்து ஆண்டுகளில் தமிழ்நாடு மின்வாரியத்தில் சொந்த நிறுவுதலில் 50 விழுக்காடு மின் உற்பத்தி அதிகரிக்கப் படும். கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தாண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் என்று கூறினார்

அடுத்து மழை நீரால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மேயர் பிரியா கூறும் போது;

 கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத் துவம் அளிக்கப்பட்டு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்பணிகள் தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ள சூழலில், எஞ்சியுள்ள 10 சதவீத பணிகளையும் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள தாகவும் கூறினார். சென்னையில் மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், ஓவ்வொரு வார்டுக ளிலும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மின்மோட்டோர்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும், சேதமடைந்து விழக் கூடிய நிலையில் இருக்கும் மரங்களை கண்டறிந்து அகற்ற கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரிடர் மேலாண்மை குறித்து முதலமைச்சரின் ஆலோசனை

“வருமுன் காப்பதே அரசு; வந்த பின் திட்டமிடுவது இழுக்கு” என்ற அடிப் படையில் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக இந்த ஆலோசனைக் கூட்டத்தை நாம் நடத்தி இருக்கிறோம். இத்தகைய முன்னெச்சரிக்கைக் கூட்டங்கள்தான் அவசிய, அவசரமானவை. அதனை அனைத்து அரசுத் துறைகளும் உணர்ந் திருப்பதை அறிந்து உள்ளபடியே பாராட்டுகிறேன். அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னெச் சரிக்கை நடவடிக்கை களையும், பாது காப்பு நடவடிக்கை களையும் இங்கு பேசிய அதிகாரிகள் அனைவரும் விரிவாக எடுத்து சொன்னீர்கள். அனைத்துத் துறையும் தயார் நிலையில் இருப்பதை அறிந்து மன நிறைவடைகிறேன். கடந்த ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தபோது பெருமழையைச் சந்தித்தோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நமக்கெல்லாம் பெரும் சவாலாகவே இருந்தது. மீண்டும் அது போன்ற ஒரு நிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று நாம் அப்பொழுதே முடிவெடுத்தோம். அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டோம்.

இதற்கான வழிமுறைகளை அரசுக்கு எடுத்துரைக்க அய்.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த ஆலோசனைப்படி பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். சென்னை மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் எல்லாம் மேற்கொள்ளப் படவேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக் கைகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு துவக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சென்னையிலே கடந்த ஆண்டு அதிக அளவிலே வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளை கண் காணித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகமிக அவசியமானது. 

இதுமட்டுமின்றி சென்னையின் முதன்மையான நீராதாரங்களாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் ஏற்கெனவே போதிய அளவில் நீர் இருப்பு உள்ளதாக நான் அறிகிறேன். ஆகவே பருவ மழையையொட்டி இந்த ஏரிகளின் நீர்வரத்து, நீர் இருப்பு அளவு ஆகிய வற்றை தொடர்ந்து கண்காணித்து, அதை முறையாக கையாள வேண்டும். மழைக் காலத்தின்போது நகர்ப்புறங்களில் மின் கம்பிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் தடுப்புகளின்றி இருப்பது விபத்துகளை ஏற்படுத்தக்கூடும். அது மட்டுமின்றி, கடும் போக்குவரத்து நெரிசலையும் அவை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, மழைவெள்ளத் தடுப்பு தொடர்பாக துவக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்க நீங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டு மென்று உங்கள் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஏற்கெனவே தொடக்கத்தில் சொன்னதுபோல, ஒவ்வொரு மாவட்டத் திற்கும் என நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும் (Monitoring Officers)  மழைக்காலத்திற்கு முன்பாக ஓரிரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று அதை பார்வையிட வேண்டும். அந்த மாவட்டத்திலேயே தங்கி, பள்ளிக் கட்டடங்கள் மற்றும் நிவாரண மையங்களை ஆய்வு செய்யுங்கள். இதில் குறிப்பாக பள்ளிக் கட்டடங்களில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு நாம் சந்தித்த இடர் பாடுகளின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி னோம். முக்கியக் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொண் டோம். இதன் மூலமாக இம்முறை சென்னை நகரில் முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்காது என்று நான் ஓரளவுக்கு நம்பிக் கொண்டிருக்கிறேன், எதிர்பார்க்கின்றேன். அதே வேளையில், தேங்காது என்கிற நினைப்போடு நீங்களும் மெத்தனமாவும் இருந்து விடக் கூடாது.

மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை ஆகிய பல்வேறு துறை அலுவலர்களும் தனித் தனியாக இயங்காமல், அனைவரும் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அரசுத் துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங் கிணைந்து செயல்படக்கூடிய சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து முன்னெச் சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது நல்ல பலன் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மய்யங்கள் முறையாக செயல் படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கடந்த முறை வானிலை எச்சரிக்கைத் தகவல்களைக் குறித்த காலத்தில் பெறுவதில் தாமதங்கள் காணப்பட்டது. அதனைத் தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு உரிய காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவல்களை பெறுவதோடு தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் அளிக் கும் தரவுகளையும், வருவாய்த் துறையில் ஒப்பிட்டு அதனடிப்படையில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான அறிவிப்புகளைச் நீங்கள் செய்ய வேண்டும். நிவாரண மய்யங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர் களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதில் குறைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை.

ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் நாம் கவன மெடுத்து செயல்பட்டால், கடும் மழை யினால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய மக்கள், உழவர்கள், மீனவர்கள் போன்றவர்களுக்கு ஏற்படக்கூடிய துயரை நாம் ஓரளவுக்கு குறைக்க முடியும். அதுதான் இந்த அரசினுடைய நோக்கம். உங்களுக்கு ஏற்படக்கூடிய எண்ணங் களை, உடனுக்குடன் அரசுக்கு நீங்கள் தெரிவித்து அந்தப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் மட்டும் தான் ஆலோசனை சொல்ல வேண்டும் என்பது இல்லை.

உடனுக்குடன் நீங்கள் சொல்ல வேண்டும்.

பொதுத் தொலைபேசி எண்களைப் பரப்ப வேண்டும்.

நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும்.

பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

-- மொத்தத்தில் மக்களைக் காக்க வேண்டும். அது ஒன்றே நமது இலக்கு!

ஆகவே, நீங்கள் அனைவரும் இதில் முழுக் கவனத்துடன், ஈடுபட வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment