சரியான ஒரு தருணத்தில் சரியானதொரு தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

சரியான ஒரு தருணத்தில் சரியானதொரு தலைவர்

காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்கவுள்ள மல்லிகார்ஜூன கார்கே கருநாடகத்தின் கலபுரகியில் பிறந்தவர். 

1942இல் பிறந்த மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வயது 80 ஆகும். இவர் தற்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

இவர் கடந்த 1972 முதல் 2008 வரை கருநாடகத்தில் நடந்த 9 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார். 

10 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்தார். இதற்குப் பலனாக அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் ரயில்வே துறைகளில் ஒன்றிய அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு 2014இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார்.இருப்பினும் கடந்த 2019இல் நடந்த தேர்தலில் கலபுரகி நாடாளுமன்ற தொகுதியில் மல்லிகார்ஜூன கார்கே தோல்வியடைந்தார்.  

இதன்மூலம் தேர்தல் அரசியலில் தோல்வியை சந்திக்காதவர் என்ற மல்லிகார்ஜூன கார்கேவின் பெருமை முடிவுக்கு வந்தது. இருப்பினும் அவரது அரசியல் அனுபவத்துக்காக மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தற்போது கருநாடகத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

சமீபத்தில் குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் மல்லிகார்ஜூன் கார்கே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இதுதவிர மல்லிகார்ஜூன் கார்கே கருநாடகத்தில் அமைச்சராகவும், கருநாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.  மேலும் கடந்த 11 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்ந்து பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 

தீவிர காங்கிரஸ் தொண்டராக தனது வாழ்க்கையைத் தொடங்கி தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருக்காக நடந்த தேர்தலில் வெற்றிபெற்று தலைவராக பதவி ஏற்கவுள்ளார்.

இது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கதாகும். சமூக நீதியில் அக்கறை உள்ள அனைவரின் வாழ்த்துகளும் அவருக்கு உறுதியாக உண்டு.

அவரைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால்  நாடாளுமன்ற விவாதத்தில் மல்லிகார்ஜுன் கார்கே ஆற்றிய ஓர் உரை போதுமானது. 

மதச் சகிப்பின்மை தொடர்பாக அம்பேத்கர் குறித்து  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின்  பேச்சுக்கான பதிலடி அது.  நாங்கள் திராவிடர்கள் - நீங்கள் ஆரியர்கள். நீங்கள் தான் வெளியில் இருந்து வந்தவர்கள்   என்றாரே பார்க்கலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாள் மற்றும் இந்த சட்டத்தை வடிவமைத்த, சட்டமேதை அம்பேத்கரின், 125ஆவது பிறந்த நாள் போன்றவற்றைக் கொண்டாடும் விதமாக, மழைக்கால கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களும் விவாதம் நடத்த, ஒன்றிய அரசு திட்டமிட்டு இருந்தது.

மக்களவையில் இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் அம்பேத்கர் குறித்த சிறப்பு விவாதம் துவங்கியது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு பின், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: "அரசியல் சட்டம் வடிவமைக்கப்பட்ட நேரத்தில், 'சமதர்மம், மதச்சார்பின்மை' என்ற வார்த்தைகளே கிடையாது. ஆனால், 42ஆவது திருத்தமாக, அவை சேர்க்கப்பட்டன. அம்பேத்கருக்கே தோன்றாத இந்த வார்த்தைகள், அரசியல் காரணங்களுக்காக புகுத்தப்பட்டன. மதச்சார்பின்மை என்ற வார்த்தையே ஒழிக்கப்பட வேண்டும். அம்பேத்கரின் சிந்தையில் உதித்தது தான், கூட்டாட்சி தத்துவம்; அதை முழுமையாக பின்பற்றுகிறது மோடி அரசு. சட்டமேதை அம்பேத்கர், மிகுந்த அவமானங்களை சந்தித்த போதிலும் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஒரு போதும் கூறியதில்லை" இவ்வாறு ராஜ்நாத் சிங்  பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் மக்களவைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்ச்சனை செய்தார். "சமதர்மம், மதச்சார்பின்மை' என்ற வார்த்தைகளைச் அம்பேத்கர் சேர்க்க நினைத்தார். ஆனால், அதை ஏற்கவில்லை, கடுமையாக எதிர்த்தார்கள்,   நீங்கள், ஆரியர்கள்; வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள். நாங்கள், 5,000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறோம். ஆனாலும், தொடர்ந்து இங்கு தான் வசிக்கிறோம்; இனியும் இங்கு தான் வசிப்போம்?" என்று கர்ச்சனை செய்தார் (27.11.2015)

பாடத் திட்டம் மாற்றப்பட்டது குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதும் குறிப்பிடத்தக்கது.

  "ஹெட்கேவாரின் 1921 உரையைக் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று பிஜேபியினர் விரும்புகிறார்கள். நாட்டின் விடுதலைப் போரில் ஹெட்கேவாரின் பங்களிப்பு என்ன? பாடங்களில் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை சேர்த்து பகத்சிங், நேரு மற்றும் காந்தி ஆகியோரை ஒவ்வொன்றாக அகற்ற முயல்கிறார்கள். இதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்" என்று சாட்டையடி கொடுத்தார் (3.6.2022).

ஆக சரியான தலைவர் சரியான ஒரு நேரத்தில் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பொருத்தமானதேயாகும்.

No comments:

Post a Comment