கனடா நாட்டில் பெரியார் - சுயமரியாதைக்காரர்கள் சென்ற - கவின்மிகு சுற்றுலா (3-4) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

கனடா நாட்டில் பெரியார் - சுயமரியாதைக்காரர்கள் சென்ற - கவின்மிகு சுற்றுலா (3-4)

மூன்றாம் நாள் சுற்றுலா

அடுத்த நாள்  (21.09.2022) காலைச் சிற்றுண்டியை விடுதியிலேயே முடித்துவிட்டு மாண்ட்ரியல் விடுதியைக் காலி செய்து விட்டு, 10 மணி அளவில் ஆட்டாவா (ளிttணீஷ்ணீ) நகரை நோக்கிப் பயணித்தோம்.  ஏறக்குறைய 200 கி.மீ;  3 மணி நேரப்பயணம் - இடையில் தேநீர் இடை வேளைக் காக 30 நிமிட நிறுத்தம்.  3 மணி நேரப் பயணத்தில் இருபுறமும் நீர் வளம், இயற்கையான பசுமை வளம்  நிறைந்திருந்தது. ஆட்டாவா நகரைச் சரியாக பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்தோம்.

ஆட்டாவா - (Ottawa)

கனடா நாட்டின் தலைநகர் ஆட்டாவா.  நாட்டின் அரசியல் தலைமையிடம் என்பதால் நாட்டின் பன்முகப் பண்பாட்டை எடுத்துக் கூறும் விதமாகக் கனடா வரலாற்று  காட்சியகம், கனடா மின்ட், கனடா தேசியக் கலைக்கூடம், தேசிய கலை மய்யம், நாடாளுமன்ற வளாகம், போர்வீரர் நினைவிடம் ஆகிய பல இடங்களை உள்ளடக்கிய நகரம்.  நான்கு மணி நேரமே பகல் எஞ்சி இருந்த நிலையில்  நண்பகல் உணவினைத் தமிழ் தெரிந்த சென்னையில் வாழ்ந்த ஒருவர் நடத்திடும்  உணவகத்தில் முடித்துக் கொண்டோம்.

ஆட்டாவாவிலும் ஒரு கனடா நாட்டுப் பெண் வழிகாட்டி எங்களுடன் சேர்ந்துக் கொண்டார். பிற்பகல் 2 மணிக்கு நாங்கள்  ஆட்டாவா வந்துவிடுவோம் என்று கூறியிருந்த நிலையில் 3 மணிக்குத் தான் வழிகாட்டி  எங்களுடன் சேரும் வாய்ப்பினைத் தந்தோம்.  நேரக் கடைப்பிடித்தலைப்  பின்பற்றி அடுத்த ஒரு மணி நேரம்தான் எங்களுடன் இருக்க முடியும் என்ற முன்னறிவிப்புடன் விரைவாக சிற்றுந்தில் இருந்தவாறே ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அந்தப் பகுதி பற்றிய விளக்கங்களை அளித்தார்.  சரியாக 4 மணிக்கு எங்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டார்.  முக்கிய இடங்களை இறங்கிப் பார்த்திட வேண்டும் என நாங்கள் விரும்பிய நிலையில் எங்கள் ஓட்டுநர் (ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்)  எங் களைச் சில இடங்களுக்கு அழைத்துச்செல்வதாகக் கூறினார். அந்த இடங்களைப் பார்க்கக் கிளம்பினோம்.  

கனடா நாட்டு தேசிய காட்சிக் கூடம்:

சில திரைப்படங்களில் பார்த்த முன்வாயில்புறம், எட்டுக்கால் சிலந்திப்பூச்சி போன்று பெரிய அளவில் செய்து, அதன் நடுப்பகுதியான வயிற்றுப் பகுதியில் வெள்ளை முட்டைகள் இருப்பது போன்று அமைத் திருந்தார்கள் அந்தப் பூச்சி சிலை பிரெஞ்சு அமெரிக்க சிற்பி லூயிஸ் போர்ஷ்வா அமைத்தது. அதன் முன்பு நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம்.  காட்சிக்கூடத் தின் அலுவல் நேரம் மாலை 5 மணியுடன் முடிவடைய இருந்தது.  விரைவாக உள்ளே சென்று மேலோட்டமாக  சிலவற்றைப் பார்த்துவிட்டு அதே வேகத்தில் வெளியே வந்து விட்டோம்.

கனடா கவர்னர் ஜெனரல் இல்ல வளாகம் :

நமது நாட்டு குடியரசுத் தலைவருக்கு இணையான ஆட்சிப் பொறுப்பு, முதன் முதலாக அந்தப் பொறுப்பிற்கு வரும் ஆதிக்குடியினர் வழித்தோன்றலான ஒரு பெண்மணி அந்தப் பதவியில் உள்ளார். மக்களாட்சியின் தத்துவ வெளிப்பாடு மிளிர்ந்தது. பரந்த வெளியில் புற்பரப்பு மிகுதியில் ஆங்காங்கே நிறைவாக மேப்பிள் மரங்கள் (Maple Trees) பச்சை நிற ஒளியில் மாலைக் கதிரவன் கதிரில் இதுவரை பார்த்திராத - அறிந்திடாத இயற்கையை ரசிக்கும் உணர்வினை எங்கள் உள்ளமெங்கும் - உடலெங்கும் நிறைத்தன. கவர்னர் ஜெனரல் இல்ல வளாகம், அச்சுறுத்தும் வகையிலான ஆயுதமேந்திய பாதுகாவலர் எவருமின்றி, தயக்கமின்றி அனைவரும் வளாகத்தைச் சுற்றிப்பார்த்து வரும் சூழ லுடன் இருந்தது. ஆதிக்கமற்ற  ஆட்சிமுறையென்பதால் தான் பாதுகாப்பு அச்சுறுத்தல், பயமின்றி, பாகுபாடின்றி கவர்னர் ஜெனரல் இல்ல வளாகம் அனைவரையும் வரவேற்றது. கவர்னர் ஜெனரலின் அலுவலகப் பணிப்பகுதிக்கு மட்டும் செல்ல இயலாத சூழல்; அது அவசியமும்அல்ல. கனடா, தனி நாடுதான் எனினும் அங்கே நிலவும் இரட்டையாட்சி முறை காரணமாக, இங்கிலாந்து நாட்டின் அரசி அல்லது அரசர்தான் கனடாவுக்கும் அரசு முறைத் தலைவர், அவருடைய பிரதிநிதிதான் கவர்னர் ஜெனரல். மக்களால் தேர்ந் தெடுக்கப்படும் நாடாளுமன்றம் அடுத்த நிலை. எனவே, கனடாவிலும் இராணியான இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலர்க் கொத்து களை வைத்து மரியாதை செலுத்தினோம். கவர்னர் ஜெனரல் இல்ல வளாகத்தை விட்டு வெளியில் வந்ததும் அங்கு அமைந்திருந்த குதிரையில் அமர்ந்தவாறு இங்கிலாந்து இராணியார் அமர்ந்திருக்கும் சிலை கம்பீரமாக தோற்றமளித்தது.  

கனடா நாட்டு இயற்கை வளத்தின் தனித்தன்மை - மேப்பிள்  (Maple) 

கனடா நாடு முழுவதும் பரந்து வளர்ந்து, காட்சிக்கு அழகாக இருப்பது மேப்பிள் மரம். பெரிய மரத்திற்கும் சிறிய செடிக்கும் இடைப்பட்ட நிலையில் வளர்ந்து நிற்கும் தாவர வகை, இயல்பாகத் தோன்றி வளர்ந்திருந்தாலும் நாட்டின் இயற்கை அடையாளமாக கனடா முழுவதும் மேப்பிள் மரம் நட்டு வளர்க்கப்படுகிறது.  மேப்பிள் தாவர வகை அமெரிக்க அய்க்கிய நாட்டிலும் பரவலாக காணப் படுகிறது.  நாட்டின் இயற்கை வளத்தின் குறியீடாகக் கனடா நாட்டுக் கொடியில் மேப்பிள் மர இலை தனித் துவமாக இடம் பெற்றுள்ளது. கொடியில் சிவப்பு நிறத்தில் மேப்பிள் மர இலை திகழ்ந்தாலும் நாடு  முழுவதும் பச்சை, பழுப்பு நிறத்தில் மேப்பிள் மரங்கள் ஒரு மலர் செடியைப் போல் பார்ப்பவர் மனத்தினை கவர்கின்ற வகையில் வளர்ந்து காட்சிக்கு இனிக்கிறது. மேப்பிள் மரத்தினைப் பார்க்கின்ற, எந்த  நாட்டைச் சார்ந்தவரும் கனடா நாட்டை நினைக்காமல் இருக்க முடியாது. இயற்கையோடு இயைந்த நாட்டின் அடையாளக் குறியீடு!

நாடாளுமன்ற வளாகம்

கலை நுணுக்கம் நிறைந்து கட்டப்பட்டுள்ள நாட்டின் வருங்காலப் பாதையையும் நிகழ்காலத்தையும் நிர்ண யிக்கின்ற இடம், கனடா நாட்டின் பெருமைகளுள் ஒன்றாகத் திகழ்வது! பெரும்பாலான சுற்றுலா இடங்களில் ‘நீர் ஊற்று’ பார்த்திருக்கிறோம். நினைவிடங்களிலும், போற்றுதலுக்குரிய இடங்களிலும் ‘அணையா விளக்கு’ எரிந்து கொண்டு இருப்பது உண்டு. நீரும் நெருப்பும் நேர் எதிரானவை. நீர் ஊற்றின் மீது அணையாவிளக்கு என்பது கனடா நாடாளுமன்ற வளாகச் சிறப்புகளுள் ஒன்றாகும். ஊற்றிலிருந்து நீர் வெளிவந்து தழும்பி வழியும்; அதன் மேலே சுடர் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். எதிர் எதிர் நிலையாளர்களும் அமர்ந்து நாட்டு நிலையினை விவாதித்து நல்லன செய்திடும் இடம் நாடாளுமன்றம் என்பதைக் குறியீடாக ‘நீர் ஊற்று’ - அணையா விளக்கு விளங்கி வருகிறது. பன்மைத்துவம் மட்டுமல்ல, பகைமையையும்  நேர்கொண்டு நெறி கண்டு வரும் காட்சிக் கூடமாக நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ளது.   

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலேயே நடந்து செல்லும் துரத்தில் ‘போர்வீரர் நினைவிடம்’ உள்ளது. அங்கும் சென்று பார்த்தோம்; கனடா நாட்டின் வரலாறு குறுகிய காலத்திற்குரியதேயானாலும், வளம் குன்றா பாரம்பரியத்தைப் பார்த்துப் பரவசமடைந்தோம். இரவுப் பொழுது வந்து விட்டது. உணவு விடுதிக்குச் செல்லும் வழியிலேயே கனடா நாட்டு உச்சநீதிமன்றக் கட்டடம் நவீன கலையுணர்வுடன் உள்ளதைப் பார்த்தோம். இரவு உணவிற்குப்பின் தங்க வேண்டிய முன் பதிவு செய்யப் பட்ட விடுதிக்கு வந்து சேர்ந்தோம். பழைமையும் புதுமை யும் சார்ந்த கலவையாக காட்சிக்கு மகிழ்ச்சியாக, நிறைவாக விளங்கியது ஆட்டாவா நகரம்.    

நான்காம் நாள்- 22.09.2022

அடுத்த நாள்  காலை, தங்கியிருந்த விடுதியிலேயே சிற்றுண்டியை அருந்திவிட்டு காலை 10 மணி அளவில் மாநாடு நடைபெறும் நகரமான டொரண்டோ நகருக்குப் புறப்பட்டோம்.  450 கிலோ மீட்டர் தூரம்.  4.30 மணி நேரப்பயணம்.  டொரண்டோ நகருக்குச் செல்லும் பாதை யில் உள்ள சுற்றுலா இடமான 1000 தீவுகள் (1000 மிsறீணீஸீபீs) பகுதியைப் பார்த்துச் செல்வதாகத் திட்டம்.

1000 தீவுகள் 

கனடா நாட்டு அண்டாரியா மாநிலப் பகுதியில் அமைந்துள்ள இடம். புனித லாரன்ஸ் நதியில் அமைந்துள்ள இந்த தீவுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 1800 ஆகும்.  ஒவ்வொரு தீவிலும் தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் உள்ளன.  புனித லாரன்ஸ் நதியானது கனடா, அமெரிக்க நாடுகளின் முக்கிய நகரங்களை இணைக்கக் கூடியதாகும். அதற்கேற்ப படகுப் போக்குவரத்து உருவாக்கப்பட்டுள்ளது.  இயற்கையாக அமையப்பெற்ற நீர்ச்சூழலை, ஆழப்படுத்தி உள்நாட்டு, வெளிநாட்டு நீர் வழிப்போக்குவரத்தின் மூலம் வணிகத்தை நடத்தி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1000 தீவுப்பகுதி படகுச் சவாரிக்கும், தனிப்பட்ட தங்குதலுக்கும், மீன்பிடித்தலுக்கும், தீவுகளில் உள்ள சிறு குன்றுகளின் மீது ஏறும் பயிற்சி என சுற்றுலா பயணிகளைப் பல விதத்திலும் ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.  சுற்றுலாப் பயணிகளைக் கவருவதும், வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் மூலம் வருவாயைப் பெருக்குவதும் இயல்பான தொடர்  வணிகமாகவே நடைபெறுகிறது.  1000 தீவுகளின் படகுச் சவாரிக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தோம்.  

படகுப் பயணம் துவங்க வேண்டிய நேரம் - 11.30 மணி என்ற அளவில் சரியாக 5 நிமிடங்களுக்கு முன்னர் அந்த இடத்தை அடைந்து - எங்களுக்குரிய படகில் ஏறும் சீட்டு மட்டும் மீதி இருந்த நிலையில் அதைப் பெற்றுக்கொண்டு விரைவாக படகில் ஏறும் முனைக்குச் சென்றோம்.  இதர பயணிகள் அனைவரும் ஏறி புறப்படத் தயாரான நிலையில் எங்களின் வருகைக்காக படகு காத்திருந்தது.  நாங்கள் ஏறி அமர்ந்ததும் படகு புறப்பட்டது.  இரண்டு தளங்கள் கொண்ட பெரிய விசைப்படகு. தரை, வான்வழி பயணப்பட்டு வந்த எங்களுக்கு, படகுப் பயணம் - சிறு கப்பலில், கடல் போன்ற பரப்புடைய நீர்நிலையான புனித லாரன்ஸ் ஆற்றில் பயணித்தது ஒரு மாறுபட்ட அனுப வமாக இருந்தது.   பயண நேரமான ஒரு மணி நேரத்தின் சரிபாதியில் சுற்றிலும் நீர்நிலை நிலவிய சூழல்,  இயற்கையோடு இணைந்ததாக இருந்தது.  பயணம் முடிந்து படகினை விட்டு இறங்கிட மனம் ஒப்பவில்லை.  அடுத்த பயணத்திற்கு பயணிகள் படகில் ஏற காத்திருந்த வேளையில், நாங்கள்தான் படகினை விட்டு இறங்கிய கடைசி ஆட்களாக இருந்தோம்.

1000 தீவுகள் அமைந்துள்ள முகத்துவாரப் பகுதியான ஆர்க்கிபெலகோ  (Archipelago)  விலிருந்து டொரண்டோ செல்லும் சாலையில் அமைந்துள்ள கன னோக்வே (Gananoque)  நகருக்குச் சென்றடைந்தோம். 1000 தீவுகள் செல்லும் பயணிகளைக் கவரும் நகரம் அது.  முதலில் நகரைச் சென்றடைந்ததும் இந்திய உணவு விடுதி ஒன்றில் உணவருந்தினோம். பெரும்பாலான இந்தியர் களுக்கு, சுயத்தொழில் தொடங்கிட வாய்ப்பான வணிக மாக இருப்பது உணவு விடுதி நடத்திடுவது.  மிகவும் குறைந்த பணியாளர்களை, சமைப்பவர்களை - தேவை யானால் குடும்பத்தினரே சமைத்து - ஒரே ஒரு பணியாளர் (உரிமையாளர்) மட்டும் உணவை மேசை களில் வைத்துவிடுவர்.  உணவு வேண்டியவர்கள் அவர் களாகவே எடுத்து பரிமாறிக்கொள்ள வேண்டும்.  ஆர்டர் செய்த 15 - 20 நிமிடங்களிலேயே உணவைச் சமைத்து விடுகின்றனர்.  விரைவு உணவாகவே (Fast Food)  வேண்டிய அளவு மட்டும் சமைத்து, சமைத்த பொருட்கள் வீணாவதையும் தடுத்து விடுகின்றனர். குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையானவற்றையும் ஒரே வேலையாக சமைத்து விட முடிகிறது.  சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களில் உணவு விடுதி அமைத் திடுவது நல்ல இலாபகரமான தொழிலாக இருக்கிறது. வேலைத் தேடிச்செல்லும் வெளிநாட்டவரும் - உரிய வேலை கிடைக்காத நிலையில் உணவு விடுதித் தொழிலில் ஈடுபட்டு வருவதை அவர்களுடன் உரை யாடும் பொழுது அறியமுடிந்தது.  உணவருந்திவிட்டு வெளியில் வந்த நிலையில், எங்கு சென்றாலும் சுற்றுப்புறச் சூழலை உன்னிப்பாகக் கவனிக்கும் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார், அருகிலேயே குறைந்த விலையில் பலவகை பயன்படுப் பொருள்கள் கிடைப்பதை அறிந்து சொன்னார். ஏறக்குறைய அனைவருமே அந்த அங் காடிக்குள் நுழைந்துவிட்டோம். 

பொதுவாக அமெரிக்கா, கனடா நாட்டுப் பல்பொருள் அங்காடியினர், பொருள் வாங்குபவரின் தேவைக்குரிய பொருட்களுடன், சில பயன்படு பொருள்களையும் வாங்கிடும் ஆர்வத்தைத் தூண்டிட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர்.  பயன்படு  பொருள்களை எப்போதும் ஒரே வடிவமைப்பில் தயாரிக்காமல், பொருளை - அதன் பயன்பாட்டைச் சீரமைத்து, சிறுசிறு மாற்றங்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்துவரும் போக்கினைக் காண முடிந்தது.  எடுத்துக்காட்டாக வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரப் பயன்படுத்தும் பையை சுருக்கிச் சுருக்கி கைக்கு அடக்க மாக வைத்துக்கொள்ள முடியும்.  தேவைப்படும் பொழுது பிரித்துப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  சாதாரண பாலித்தீன் பைகள் போல் அல்லாமல் மிகவும் உறுதியாகத் தயாரித்த கைக்குள் அடங்கும் பையாக அது இருக்கிறது.  

முகச் சவரத்தின் பொழுது மீசை மற்றும் காதுகளில் இருக்கும் முடிகளை வெட்டப் பயன்படுத்திடும் சிறு கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டால்,  கத்தரிக்கோலின் முனை கூர்மையாக இருப்பதால், எப்படித்தான் கவன மாகப் பயன்படுத்தினாலும் பெரும்பாலான நேரங்களில் கத்தரிக்கோலின் வெட்டுக்கு நமது முகப்பகுதிகள் தப்பிவிட முடியாது.  இதைக் களையும் விதமாக இரு முனைகளும் வளைந்த ஆனால் கூர்மையாக வெட்டும் கத்தரிக்கோலை வடிவமைத்து   விற்பனைக்கு வைத் துள்ளனர்.  கூடவே, கத்தரிக்கோலுக்கு உதவியாக சிறு சீப்பையும் சேர்த்து விற்கிறார்கள்.  

இப்படி எத்தனையோ பொருட்களை விவரித்துக் கொண்டு செல்லலாம். இதை வாங்குகின்றோமோ இல்லையோ அந்த சிறு பொருட்களின் வடிவமைப்பைச் சீர்படுத்திடும் போக்கை மேற்கத்திய நாடுகளில் காணமுடிகிறது.  

அந்த அங்காடிக்குள் நுழைந்ததற்கு மேலும் ஓர் அவசியம் இருந்தது.  தமிழ்நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பே கனடாவில் நிலவிடும் கடுங்குளிர் பற்றி எச்சரித்தும் சில தோழர்கள் உரிய காப்பு உடைகளை வேண்டிய அளவில் எடுத்துவரவில்லை. திருச்சி புலவர் முருகேசன் அய்யா அவர்கள் வேட்டி, சட்டை, செருப்பு என வழக்கமான உடை அணிந்தே பயணித்து வந்தார்.  எங்களுக்கு வியப்பாக இருந்தது.  85 வயதில்  கடுங்குளிரை எப்படித் தாங்கிக்கொள்கிறார் என்று வியப்படைந்தோம்.  இருப்பினும் நிலவிடும் குளிர், பின்னர் சில விளைவுகளை ஏற்படுத்திவிடும் என கூறி புலவர் அய்யா அவர்களை உல்லன் சுவெட்டர் ஒன்றையும் - தலைபுறத்தைப் பாதுகாத்திடும் குல்லாய் ஒன்றையும் வாங்கச்செய்து அதை அணிந்து கொண்டுதான் வெளியில் வரவேண்டும் என வேண்டி அதை வாங்கச்செய்து விட்டோம்.  பல உடுப்புகளை எடுத்துச் சென்றிருந்தாலும், காதுப்பகுதியை மறைத்திடும் வகையில் குல்லாய் எதுவும் நான் எடுத்துச் செல்லவில்லை.  அந்த அங்காடியிலேயே கருப்பு - சிவப்பு வண்ணத்தில் இருந்த உல்லன் குல்லாயை வாங்கிக்கொண்டேன். அவரவர்களும் இப்படி தங் களுக்கும், - தங்களது உறவினர்கள், நண்பர்களுக்குப் பரிசளித்திடும் வகையிலும் பொருள்களை வாங்கிக் கொண்டு டொரண்டோ நகரத்திற்குக் கிளம்பிச் சென்றோம், 

டொரண்டோ நகரத்தைச் சென்றடைய இரவு 7.30 மணி ஆகிவிட்டபடியால் நேராக உணவுவிடுதிக்கு சென்றோம்.  சென்னையைச் சார்ந்தவர் உணவு விடு தியை நடத்துகிறார்.  உணவுவகைகளும் நம் ஊரில் உள்ளது போலவே இருந்தன.  உணவிற்கான தேவையைக் கூறிவிட்டு  காத்திருந்தோம்.  உணவு விடுதியின் சுவர்கள்  முழுவதும் தமிழ்த்திரைப்பட நடிகர், நடிகையர் ஒளிப்படங்கள் சட்டமிடப்பட்டு சுற்றுலாப் பயணிகளை - குறிப்பாக தமிழர்களைக் கவரும் விதமாக மாட்டப் பட்டிருந்தன.  எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி இன்றைய தமிழ் நடிகர்கள் வரையிலான படங்கள் இருந்தன.  அனைவரும் படங்களை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், விடுதலை நகர் தோழர் சி.ஜெயராமன் அவர்கள் உணவு விடுதி நடத்தியோரைப் பார்த்து, பழைய நடிகர் படங்களை வைத்துள்ளீர்களே; ஏன் திரைப்படத்தின் மூலம் பெரியாரின் கருத்துகளைப் பரப்பிய நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கே படங்களை வைக்கவில்லை எனக் கேட்டார்.  “படங்கள் கிடைக்கவில்லை” என விடுதி உரிமையாளர் சொன்னார். “ படங்களை அனுப்புகிறோம் ; அவசியம் சுவர்களில் மாட்ட வேண்டும்” என்று தோழர் ஜெயராமன் கூறினார்.  ‘அவசியம் மாட்டுகிறேன் ; படங்களை அனுப்பி வையுங்கள்’ என  பதிலளித்தார் உணவுவிடுதி உரிமை யாளர்.  உணவு பரிமாறப்பட்டதும் அருந்திவிட்டு தங்கும் விடுதிக்குப் பயணமானோம்.  

அதுவரை தங்கிய விடுதிகளிலெல்லாம் வெள்ளையர் வரவேற்புப் பணியில் இருந்தனர்.  டொரண்டோவில் நாங்கள் சென்ற விடுதியில் கருப்பர் இனத்தவர் இருந்தார். மிகவும் மரியாதை கலந்த உரையாடலுடன் தங்கும் அறைக்கான திறவு அட்டைகளை அளித்தார்.  ஒரு  வேண்டுகோளையும் விடுத்தார்.  விடுதியில் விரிவாக்கப் பணிகள் உணவு அருந்தும் இடம் உட்பட பல பகுதிகளில் நடந்துகொண்டிருந்ததால் காலைச் சிற்றுண்டியை உண வகத்தில் எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்று அருந்திட வேண்டிக்கொண்டார்.   டொரண்டோ நகர் தங்கும் விடுதியில் மட்டும் 24 மணி நேரமும் காபி, தேநீர் சூடாக அருந்திட கீழ்த்தளப் பகுதியில் ஏற்பாடுகள் இருந்தன. வேண்டுபவர்கள் காபி, தேநீர் அருந்தி மகிழ்ந்தனர்.  

அடுத்த நாள் சுற்றுலாவாக டொரண்டா நகரிலிருந்து உலகின் கவனத்தை ஈர்க்கும் ஓர் இடத்திற்கு செல்ல வேண்டியதை தோழர்களுக்கு நினைவூட்டி சீக்கிரம் புறப்பட வேண்டும் எனக் கூறி தூங்கிடச்சென்றோம். 

(தொடரும்)


No comments:

Post a Comment