2022 ஆம் ஆண்டிலும் இப்படியொரு அநாகரிகமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

2022 ஆம் ஆண்டிலும் இப்படியொரு அநாகரிகமா?

கத்தியால் வெட்டிக் கொள்ளும் காட்டுமிராண்டித்தன கோவில் திருவிழா! 

பக்தியின் பெயனரால் மூடத்தங்கள், உயிரிழப்புகள்


சென்னை, அக்.6 அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கடவுளின் பெயராலும், பக்தியின் பெயராலும் மனித உயிர் இழப்புகள் பெருகி வருகின்றன.

அவற்றின் விவரம் வருமாறு:

கத்தியால் வெட்டிக் காயப்படுத்திக் கொள்வதா?

கோவை ராஜவீதியில் உள்ள சிறீராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா (பராக்கத்தி) என்ற பெயரில் பக்தர்கள் தங்களை கத்தியால் காயப்படுத்திக் கொண்டனர். கோவை மாநகரில் உள்ள ராஜவீதியில் சிறீராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பாத்தியப்பட்ட  சிறீலட்சுமி கணபதி கோயில் ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா சாலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று, சவுடாம்பிகை அம்மனை அழைக்கும் விதமாக சிறீலட்சுமி கணபதி கோயிலில் இருந்து சிறீராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலை நோக்கி திருமஞ்சன தீர்த்த பாகு கலச கும்பம் புறப்பாடுடன் - பராக்கத்தி எனப்படும் கத்தி போடும் திருவிழா நடத்தப்படும். 

நேற்று (5.10.2022) பராக்கத்தி ஊர்வலத்தைத் தொடங்கினர். தங்களின் இரு கைகளிலும் பட்டை தீட்டப்பட்ட கத்தியை வைத்துக் கொண்டு, தோள் பட்டைக்கு அருகே மாறி மாறி வெட்டிக் கொண்டனர்.காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்த பகுதிகளில் திருநீற்றை வைத்தபடி தொடர்ந்து வெட்டிக் கொண்டு சென்றனர்.

ஆயுத பூசை பெயரால் 

மின்சார ரயிலில் கற்பூரம் ஏற்றிய அவலம்

செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில்  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய குறிப்பிட்டஒரு ரயிலின் குறிப்பிட்ட பெட்டியில் பயணிகள் சிலர் நேற்று முன்தினம் (4.10.2022) ஆயுதபூசை கொண்டாடினராம். 

ரயில் பெட்டிக்குள்ளேயே வண்ணக் கலர் பேப்பர்களை தோரணமாகக் கட்டி, சாமி படம் வைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கினர். சக பயணிகளுக்கு சுண்டல், பொங்கல் உள் ளிட்டவற்றை வழங்கினராம். இது தொடர்பான காட்சிப் 

பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்த ரயில்வே பாது காப்புப் படைக்கு சென்னை கோட்ட மேலாளர் உத்தர விட்டுள்ளார். 

ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதுபோல, கற்பூரம் ஏற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்சார ரயிலில் கற்பூரம் ஏற்றி ஆயுதபூசை கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ஆயுதபூசை கொண்டாடியது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினருக்கு சென்னை ரயில்வே கோட்டம் உத்தரவிட்டுள்ளது.

துர்க்கை சிலையை கரைக்கச்சென்றபோது வெள்ளத்தில் மூழ்கி 10 பேர் பலி

துர்க்கை சிலையை ஆற்றில் கரைக்கச் சென்ற போது ஆற்று வெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டனர், 10 உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

வடமாநிலங்களில் நவராத்திரி விழாவையொட்டி துர்கா பூசை நடைபெறும்.  இறுதியில் விநாயகர் சிலை கரைக்கப் படுவதுபோல துர்கா சிலைகளையும் கரைத்து விடுவார்கள். 

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மால் ஆற்றில் துர்கா சிலை கரைப்பின்போது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கினர். இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல்போன பலரை தேடி வருகிறோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

துர்கா சிலைகளைக் கரைக்கச் சென்றபோது 10 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆற்றில் துர்கா பூசை சிலைக் கரைப்பு நிகழ்வின்போது, வரிசையாக மக்கள் தொடர்ந்து அடித்துச் செல்லப்பட்ட காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துர்கா சிலையை மழைநீர் தேங்கிய குழியில் கரைக்கச் சென்ற 5 பேர் உயிரிழப்பு

இராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் நந்துலா கிராமத் தில் நசீராபாத் சதர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக துர்கா பூசையில் சிலர் ஈடுபட்டு உள்ளனர். இதன்பின்னர் துர்கா சிலையை நீரில் கரைப்பதற்காக சென்றுள்ளனர். 

அவர்கள் சிலையை எடுத்துச் சென்று, அந்த பகுதியில் மழை பெய்து நீர் நிரம்பிய குட்டையில் கரைத்து விடலாம் என சென்றுள்ளனர். அந்த குழியில் ஆழம் குறைவாக இருக்கும் என நினைத்தபடி நீரில் அவர்கள் 5 பேரும் இறங்கியுள்ளனர். ஆனால், அந்த குழி பல அடி ஆழத்தில் இருந்துள்ளது. இதில் அவர்கள் அனைவரும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். 

அவர்கள் பவன் ராய்கர் (வயது 35), கஜேந்திரா ராய்கர் (வயது 38), ராகுல் மேக்வால் (வயது 24), லக்கி பைரவா (வயது 21) மற்றும் ராகுல் ராய்கர் (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இறந்தவர்களின் உடலை மீட்டு காவல்துறையினர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கி நேர்த்திக்கடனாம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினராம்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் கோவிலில் விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் விநோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த 26ஆம் தேதி இந்த திருவிழா கணபதி ஹோமம் மற்றும் கொலு பூசையுடன் துவங்கியது. இவ்விழாவில் குடகு நாட்டில் இருந்து அம்மன் சிலையை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.  

பூசைகள் முடிந்த பின் கோவில் பூசாரி பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்து பக்தர்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினாராம். இதன் பின் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கியும் நேர்த்திக்கடன் களை செலுத்தினராம்.

No comments:

Post a Comment