இதே மோகன் பகவத் 2013 இல் கூறியது என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

இதே மோகன் பகவத் 2013 இல் கூறியது என்ன?

டில்லி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பின்னரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மேற்கத்திய நாடுகளைப் போலவே நமது நாட்டிலும் கலாச்சார மாற்றங்களால் பிரச்சினைகள் எழுகின்றன என்றும், குடும்ப உறவுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்குக் காரணம் என்றும் 

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், இதனை தெரிவித்த அவர், பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வராது என்றார்.

திருமணம் என்பது சமூதாயத்தில் நடக்கும் ஒரு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி,‘‘நீ நமது வீட்டை பார்த்துக்கொள்; நான் உனது எல்லா தேவைகளையும் பார்த்துக் கொள்கிறேன்; உன்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறி அந்த ஒப்பந்தப்படி மனைவி நடக்கும்வரை அவன் அவளுடன் இருக்கிறான்.

ஆனால், அந்த ஒப்பந்தத்தை மனைவி மீறினால், அவள் அவனுக்குச் சொந்தமில்லாதவளாக ஆகிறாள். எனவே, பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல், கணவரின் தயவில் வாழ்கிறோம் என்பதை உணர வேண்டும். வீட்டை கவனிப்பது பெண்களின் பொறுப்பு. குடும்பத்திற்கு வருமானத்தை ஈட்டுவது ஆண்களின் வேலை என்று அவர் மேலும் கூறினார். விசுவ ஹிந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மோகன் பகவத்தின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 

சில நாள்களுக்கு முன்னர்தான் பலாத்காரங்கள் ‘‘இந்தியா”வில்தான் நடக்கின்றனவே தவிர, ‘‘பாரத''த்தில் அல்ல என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் மோகன் பகவத் என்பது குறிப்பிடத்தக்கது. (6.1.2013).

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, திரித்துப் பேசுவது எல்லாம் ஆர்.எஸ்.எஸின் உடன்பிறந்த குணம்.

இப்பொழுது வேறு தொனியில் இரட்டை நாக்கில் பேசுவானேன்? பெண்கள் வாக்கு வங்கித் தேவைப்படுகிறதோ - அதுதான் காரணம்!

No comments:

Post a Comment