அரசியலில் திருப்பம் சோனியா காந்தியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ், லாலு சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

அரசியலில் திருப்பம் சோனியா காந்தியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ், லாலு சந்திப்பு

புதுடில்லி,செப்.26- டில்லியில் நேற்று (25.9.2022)காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர்  சந்தித்துப் பேசினர்.

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக, அய்க்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜக வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார். அணி மாறிய பிறகு, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் தீவிரமாக ஈடு பட்டுள்ளார்.

அண்மையில் டில்லி சென்ற அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, டில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து, இந்திய தேசியலோக் தளம் சார்பில் அரியானாவின் ஃபதே பாத்தில் நேற்று (25.9.2022) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் நிதிஷ் பங்கேற்றார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு 10 மாநிலங்களைச் சேர்ந்த, 17 தலைவர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், பீகார் முதலமைச்சரும், அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமார், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி   தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு டில்லி சென்ற நிதிஷ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அவர்களுடன், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தும் இணைந்து கொண்டார்.

2024இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து மூவரும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் லாலு பிரசாத் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் நானும், நிதிஷும் சில பரிந்துரைகளைத் தெரிவித்தோம். 

‘காங்கிரஸ் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவரைச் சந்தித்து தேர்தல் வியூகங்களை வகுக்கலாம்’ என்று சோனியா பதில் அளித்தார். என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைக்க முடியாது. பாஜகவுக்கு எதிராகப் போரிடவும் முடியாது” என்றார்.

 

No comments:

Post a Comment