பெரியார்மீது காழ்ப்பு - ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

பெரியார்மீது காழ்ப்பு - ஏன்?

ராஜராஜசோழன் எங்கள் ஜாதி என்று ஒருவர் சொல்கின்றார். நாங்கள் பல்லவன் வழி வந்தவர் என்று ஒருவர் சொல்கிறார். போரிட்டு வென்ற புகழ்பெற்ற மன்னர்களை எல்லாம் ‘எங்கள் ஜாதி; எங்கள் ஜாதி என்று அந்தந்த ஜாதிப் பாசத்தோடு பிணைக்கப் பார்க்கின்றார் கள் அல்லவா, எவனாவது தமிழ்- தமிழர் என்கிற உணர் வோடு பார்க்கின்றானா?

‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று சொல்லுகின்ற அவர்கள், என்ன சொல்ல வேண்டும்? உண்மையைச் சொல்ல வேண்டும் அல்லவா? இந்த மன்னர்கள் காலத் தில் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள். அவர்கள் தமிழகத் தையும் தாண்டி ஆண்டார்கள். ஆனால் ஆன்றவிந்து அடங்கிய ஆன்றோரின் ஆலோசனையின்படி நடந்த தமிழ் மன்னர்கள் காலம், சங்க காலம்.

பக்தி காலத்தில் என்ன ஆயிற்று? அவிசொரிந்த மறையோர்களிடம் அவர்கள் ஆலோசனைப் பெற்றார் கள். பார்ப்பனன் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தப் பட்டன. பார்ப்பனன்தான் தலைமையில் இருப்பான். அவ னுக்காக உள்ளூர் மண்ணின் மைந்தர்களின் நிலங்கள் தேவதானம், பிரமதேயம், பட்டவிருத்தி, வேதவிருத்தி எனப் பல்வேறு பெயர்களில் சிறு சிறு நிலங்கள் அல்ல - பெரிய பெரிய கிராமங்கள் கொத்துக் கொத்தாக அவர் களிடமிருந்து பறிக்கப்பட்டன.

அப்படி இழந்தவர்கள் தமிழர்கள்; தானம் பெற்றவர் கள் பார்ப்பனர்கள்; கொடுத்தவர்கள் தமிழ் மன்னர்கள். இழந்த தமிழர்கள் கொதித்து இப்படி எழுந்தார்கள். பல கல்வெட்டுகளில் செய்திகளை ‘சென்சார்’ செய்து நம் மிடம் கொடுக்கிறார்கள். எது முக்கியமான தகவலோ அதைத் தருவது இல்லை.

பிரமதேயம் கொடுத்தார் என்பது  வேறு. பிரமதேயம் கொடுப்பதில் ஒரு சிக்கல் வந்தது. இழந்த விவசாயிகள் மண்ணின் மைந்தர்கள் நமது மக்கள்- இந்த நில இழப்பைத் தவிர்க்க எதிர்த்துப் போராடினார்கள். அதற்கு இவர்கள் இந்த மாபெரும் மன்னர்கள் - கொடுத்த பெயர் மறக்கேடு. அந்தப் போராட்டம் என்பது இந்தச் செப்பேடுகளை உடைக்கச் செய்தது. கல்வெட்டுகளை உடைக்கச் செய் தது... சிதற அடித்தார்கள். ‘எங்கள் நிலத்தை அந்நியனுக்குக் கொடுப்பானேன்’ என்று அவர்கள் போராடினார்கள். போராடியவர்களில் ஒருவன் பெயர்கூட இருக்கிறது. பாண்டிய மன்னனது அந்தச் செப்பேட்டில் வருகிறது - கம்பளை என்று ஒருவர் எதிர்த்துப் போராடினார் என்று. அவனை அடித்துக்கொன்று, மீண்டும் அந்தச் செப்பேட் டைக் கொடுத்து, அந்தப் ‘பெருமை மிக்க’ காவியத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் - (இளையான்புத்தூர் செப்பேடு) தமது செப்பேடுகளில்.

இழந்தவர்கள் தமிழர்கள் - தமிழ் மக்கள். தமிழர்கள் தங்களது உழைப்பில் தாங்கள் பெற்ற வருவாயில் மிக உயர்ந்த கோபுரங்களையும், கோவில்களையும் கட்டினார் கள். கட்டுவதற்குத் தமிழன்; கட்ட வைத்தவன் தமிழ் மன்னன். கட்டிய கோவிலுக்குள் நுழைய தமிழனுக்கு உரிமை இல்லை; தமிழுக்கும் உரிமையில்லை. தமிழும் நுழைய முடியாது, தமிழனும் நுழைய முடியாது. இதை எல்லாம் துவக்கியவர்கள் யார்? இதையெல்லாம் செய் தவர்கள் யார்? இதை, பெரியாரியம் கேள்வி கேட்கிறது.

‘எப்படி ஒரு நாட்டின் மன்னன், தன் மக்களை ஒழித்துவிட்டு, மாற்றானான இந்தப் பார்ப்பனனைத் திருப்திப்படுத்துவதற்காக, தன் நாட்டை இவ்வாறு தானம் அளித்தான்?’ -என்ற கேள்வியே பெரியாரியம் கேட்கிறது. பெரியாரின் மீது காழ்ப்பு ஏன் என்றும், பார்ப்பன எதிர்ப்பு ஏன் என்றும் நமக்குத் தெரியும்.

- பேராசிரியர் கருணானந்தன்


No comments:

Post a Comment