மானமிகு ஆ. இராசா கூறியதில் குற்றமென்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

மானமிகு ஆ. இராசா கூறியதில் குற்றமென்ன?

கலி. பூங்குன்றன்

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான மானமிகு ஆ. இராசா அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற - 'விடுதலை' ஆசிரியர் மானமிகு 

கி. வீரமணி அவர்களுக்கு 'விடுதலை' சந்தா வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் (6.9.2022) ஆற்றிய பகுத்தறிவு மணக்கும் சுயமரியாதைச்  சூடேற்றும் திராவிட இயக்கக் கோட்பாட்டு உரையை மய்யப்படுத்தி மடிசஞ்சிகள் பூணூலை முறுக்கிக் கொண்டு 'விட்டேனா பார்!' என்று 'வீர வஜனம்' பேசிக் கொண்டு திரிகிறார்கள் -  சமூக வலைதளங்களில். பந்தை அடிக்க முடியாதவன் எதிராளியின் காலை அடிப்பதுபோல, அவாளுக்கே உரித்தான வகையில் வசைமாரிப் பொழிகிறார்கள்.

இதில் கட்சி வித்தியாசம் இல்லை - பா.ஜ.க. நாராயணனிலிருந்து காங்கிரஸ் நாராயணன் வரை துள்ளிக் குதிக்கிறார்கள். பூணூல் பாசம் அவர்களை இறுக்கிப் பிடிக்கிறது. 

அண்ணாமலையும் ஆவேசப்படுகிறார். இராமாயண காலத்திலிருந்து விபீஷணர்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

அவாளாக இருந்தாலும், அனுமாராக இருந்தாலும் சரி, மானமிகு ஆ. இராசா பேசியதில் கண்ட குறை என்ன? உண்மைக்கு மாறான தகவல்கள் என்ன? அறிவு நாணயமிருந்தால் அந்தத் தளத்திலிருந்து அல்லவா வாதாட வேண்டும். 

மானமிகு ஆ. இராசா என்ன பேசினார்?

"சனாதனம், இந்துத்துவாபற்றி, நாம் இனிமேலும் சொல்லத் தயங்கக்கூடாது; ‘விடுதலை'யாகட்டும், ‘முரசொலி'யாகட்டும், ‘தீக்கதிர்' ஆகட்டும் எல்லா வற்றிலும் யார் இந்து? நான் இந்துவாக இருக்க விரும்பவில்லை? என்னை ஏன் இந்துவாக வைத் திருக்கிறாய்? என்று கேட்கின்ற உரிமை நமக்கு வரவேண்டும்.

இப்படி ஒரு மதத்தை நாம் பார்த்ததில்லை. லிங்காயத்துகள் உச்சநீதிமன்றத்தில் மனு போடு கிறார்கள்; எங்களுடைய வழிபாட்டு முறை வேறு; எங்களுடைய ஆன்மிகக் கொள்கை வேறு; எங்களை இந்துவாக ஆக்காதே என்று சொல்கிறார்கள்.

ஆனால், உச்சநீதிமன்றம் சொல்லுகிறது,  

நீ கிறித்துவனாக இல்லை என்றால்,

நீ இஸ்லாமியனாக இல்லை என்றால்,

நீ பார்சியாக இல்லையென்றால், நீ இந்துவாகத்தான் இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது.

இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?

இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்.

சூத்திரனாக இருக்கின்றவரை நீ விபச்சாரியின் மகன்.

இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்.

இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன்.

எத்தனைப் பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகின்றீர்கள்? என்கின்ற கேள்வியை உரக்கச் சொன்னால்தான், அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை, ‘விடுதலை'யும், ‘முரசொலி'யும், திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது." என்று பேசினார்.

 ஹிந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வருண பேதம் உண்டா இல்லையா? அந்த வருண அடிப்படையில் பார்ப்பனர் அல்லாதார் சூத்திரர்கள் என்று கூறப்பட்டு இருக்கிறதா இல்லையா?

சூத்திரன் என்று வருகிறபோது விபச்சாரி மகன் என்று ஹிந்து மதத்தின் மிக முக்கிய முதலாவதான ஸ்மிருதியாகிய மனு தர்ம சாஸ்திரம் என்ன கூறுகிறது? (மனுதர்மம் என்றால் சாதாரணமா? பதினெட்டு ஸ்மிருதிகளுக்குள் மனுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காய் சொல்லியிருந்தாலும் அது ஒப்புக் கொள்ளத் தக்கதன்று. மனு ஸ்மிருதிக்கு விரோதமான ஸ்மிருதி புகழடையாது என்கிறது மனுதர்ம சாஸ்திரத்தின் பீடிகை)

அந்த ஒண்ணாம் நம்பர் மனுதர்ம சாஸ்திரத்தின் 8ஆம் அத்தியாயம் 415ஆம் சுலோகம் என்ன கூறுகிறது?

சூத்திரன் யார்? (1) யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் - என சூத்திரன் ஏழு வகைப்படுவர் என்று சொல்லப்பட்டுள்ளதே!

இதன் பொருள் என்ன? நாம் ஹிந்து என்று ஒப்புக் கொண்டால் நாம் சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். சூத்திரன் என்று ஒப்புக் கொண்டால் தேவடியாள் மகன், விபச்சாரி மகன் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

நாங்கள் ஒப்புக் கொள்ளாததால் ஹிந்து மதத்தை விமர்சிக்கிறோம் - குற்றம் சுமத்துகிறோம்.

காங்கிரசில் அமெரிக்கை நாராயணன்களும், பிஜேபி நாராயணன்களும் ஒப்புக் கொள்வார்கள்.

காரணம் - பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணோத்தமர்கள் அவர்கள் (மனு அத்தியாயம் ஒன்று சுலோகம் 87).

நாராயணன்கள் ஆராதிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அண்ணாமலைகளுக்கு என்ன வந்தது? சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்கிறாரா?

அவருக்கும் சேர்த்துதானே ஆ. இராசா பேசினார். 

பார்ப்பனர் அல்லாதார் அனைவருக்கும் சேர்த்துத்தானே "சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி!" என்று சுயமரியாதைச் சூரியன் தந்தை பெரியார் தனது 95ஆம் வயதிலும் போர்க் குரல் கொடுத்தார்.

ஒரு செய்தி தெரியுமா அண்ணாமலைக்கு? காஞ்சி சங்கரமடத்திற்கு சென்ற  ஒன்றிய அமைச்சராக இருந்த திரு. பொன். ராதாகிருஷ்ணன் சங்கராச்சாரிக்கு முன்னால் தரையில் உட்கார வைக்கப்பட்டார். அதே நேரத்தில் சுப்பிரமணியசாமி சென்றபோது, சங்கராச்சாரியாரோடு சரி சமமாக ஆசனத்தில் அமர்ந்தாரே!

என்ன காரணம்? இதற்குப் பதவுரை, பொழிப்புரை சொல்ல வேண்டுமா?

கடவுளுக்கு மேலே பிராமணன் என்பதுதானே ஹிந்துமதம்?

ரிக்வேதம் 62ஆம் பிரிவு 10 ஆவது சுலோகம் என்ன கூறுகிறது?

"தெய்வாதீனம் ஜகத் சர்வம்

மந்த்ராதீனம் துதெய்வதம்

தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்

தஸ்மத் பிரம்மணம்பிரபு ஜெயத்"

- இதன் பொருள் என்ன?

"உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள்" - இதுதான் வேதம்.

அர்த்தமுள்ள ஹிந்துமதம் யாருக்கானது என்று புரிகிறதா?

இவற்றை ஏற்க முடியாது என்று ஆ. இராசா சொல்லக் கூடாதா? 

சுயமரியாதை உள்ளவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். ஆனால் அண்ணாமலை?

சரி, எந்தக் காலத்திலோ, யாரோ எழுதி வைத்து விட்டுச் சென்று இருக்கலாம் -  அதை எல்லாம் இப்பொழுது பேச வேண்டுமா என்று முற்றும் துறந்த முனிபுங்கவர்கள்(?) போல சிலர் பேசுவதுண்டு.

நமது காலத்திலேயே சங்கராச்சாரியார் சொன்னதுண்டே!

9.10.2002 அன்று சென்னை, நாரதகான சபையில் 'தாம்ப்ராஸ்' எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.  நூலை வெளியிட்டு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசியது என்ன?

"எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார் - மதுரையை நாயக்கர்கள் ஆண்ட போதும் அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட அப்புறம்தான் அந்தணன்தான் முதலில் ('நக்கீரன்' - 15.11.2002) 

அண்ணாமலைகளே, கொஞ்சம் அறிவைச் செலுத்தி அறியக் கூடாதா?

'ஹிந்து ராஜ்ஜியம் ஏற்படுத்தப் போகிறோம்.' 'ராமராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கப் போகிறோம்' - என்று கூறும் பிஜேபி, சங்பரிவார்க் கூட்டத்தில் உள்ள 'சூத்திர', 'பஞ்சம' மக்களுக்கு ஒரு செய்தி தெரியுமா?

இராமாயணம் - உத்தரகாண்டத்தில் சம்பூகன்வதம் புரியுமா?

சம்பூகன் என்ற சூத்திரன் தவமிருந்ததால் ஒரு பிராமணனின் மகன் மரணம் அடைந்து விட்டானாம்.

"இராமா, உன் ஆட்சியில் தர்மம் கெட்டு விட்டது. சூத்திரன் தவம் செய்ததால் என் மகன் மரணம் அடைத்து விட்டான்!" என்று புலம்ப, காட்டில் தவம் செய்து கொண்டிருந்த சம்பூகன் என்ற சூத்திரனை இராமன் வாளால் வெட்டிக் கொல்ல, செத்துப் போன பிராமண ஆத்துக் குழந்தை உயிர்ப் பிழைத்து விட்டதாம்.

இந்த இராம ராஜ்ஜியத்தைத் தான் அமைக்கப் போகிறீர்களா அண்ணாமலைகளே!

அதற்காகத்தான் அவசர அவசரமாக அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு  முன் அயோத்தியில் இராமன் கோயிலைத் திறக்கப் போகிறீர்களா?

'ராமச்சரித்மனஸ்' துளசிதாஸ் இந்தி இராமாயணம் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

அதில் கூறப்படும் விவரங்களைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

"பிராமணர்கள் அதிகாரத்தால் அடக்கப்பட இயலாதவர்கள் (பால காண்டம் 164-1, 2, 3)

தாராளமாகப் பிராமணர்களுக்கு அள்ளிக் கொடுங்கள், வழிபடுங்கள்! (பால காண்டம் 168).

பிராமணர்கள் சாபம் மிகவும் கொடியது. அதன் விளைவுகளிலிருந்து யாரும் தப்பவே முடியாது. (பால காண்டம் 178) 

மறுபிறவியிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழி என்னவென்றால், பிராமணர்களின் பாதங்களை மிகுந்த அன்புடன் தொழுவதே யாகும். (ஆரண்ய காண்டம் 15-3)

ராமன் கூறுகிறான் -

"பிராமணர்களை வெறுப்பவர்கள் என்னால் விரும்பப்படுவதில்லை. அவர்களின் செல்வாக்கின் கீழ் உள்ள சிவனும் மற்ற கடவுள்களும் பிராமணர்களை வணங்குகிறார்கள். பிராமணன் திட்டினாலும், கொலை செய்தாலும், கடுஞ் சொற்களைப் பேசினாலும் அவன் வணங்கத்தக்கவனே" (ஆரண்யகாண்டம் 32,33).

இரு முறை பிறந்த பிராமணனுக்கு சேவை செய்வது கடவுளை மகிழ்விக்கும். பிராமணனை அவமதிக்காதே! கடவுளுக்கு இணையானவன் என்பதை அறிந்து கொள். (உத்திரகாண்டம் 120-12).

பிராமணர்களை நிந்திப்பவன் பல நரகங்களில் உழன்று மறுபடியும் ஒரு காகமாகப் பிறப்பான் (அஜீத்ஜ காண்டம் 14)

புரிகிறதா? இப்பொழுது பறக்கும் காகங்கள் எல்லாம் போன ஜன்மத்தில் பிராமணர்களை நிந்தித்தவர்கள்! - அப்படித்தானே!

வில் வித்தையில் தேர்ந்த ஏகலைவனின் கட்டை விரலைத் தானமாகக் கேட்ட துரோணச் சாரிகள் காலம் மலையேறி விட்டது இது பெரியார் சகாப்தம் - இது பெரியாரியல் திராவிட மண்.

மானமிகு ஆ. இராசா பெரியார் திடலில் பேசியதன் அடிப்படையில் புகார் செய்துள்ளார்களாம். வழக்கும் தொடுக்கட்டும்.

வீதிகளில் பேசியதை நீதிமன்றத்திலும் வண்டிவண்டியாகக் கொட்டி, கிழி கிழி என்று கிழிப்பதற்கு நாங்கள் தயார்! தயார்!!

அதுவும் மானமிகு ஆ. இராசா எம்.எல். பட்டதாரி அவரை வாரிச் சுருட்டி விடலாம் என்று பொய் வழக்குப் போட்டவர்களை தானே நீதிமன்றத்தில் வாதாடி பொய்ம்மைத் திரையைக் கிழித்து, தந்தை பெரியாரின் தலை சிறந்த மாணவனாக வெற்றிகரமாக ஜொலித்து வெளிவந்தவர் திராவிட மாடல் அரசின் வைரம் பாய்ந்த தூண்களுள் ஒருவர் அவர்.

இது என்ன  தூசு?

சூத்திரன் - தேவடியாள் மகன் என்பதை ஏற்காதவர்கள் - நாங்கள் ஹிந்து இல்லை என்றுதான் ஓங்கியடித்துக் கூறுவோம்.

பாதிக்கப்பட்டவர்கள், இழிவுபடுத்தப் பட்டவர்கள் குமுறுவார்கள்தாம். பாதிப்புக்குக் காரணமானவர்கள் இன்றைக்கும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துடிக்கிறார்கள் என்றால், இதன் பொருள் என்ன? பாதிக்கப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு இன்னும் போதுமான சொரணை இல்லை என்றுதானே அர்த்தம். அதனால்தான் ரோசத்தை உண்டாக்கத்தான் சுயமரியாதை இயக்கத்தை உண்டாக்கினேன் என்றார் தந்தை பெரியார்.

1. மகாபாரதம் கூறும் நீதி

பிராமணப் பெண்ணுக்கும் சூத்திர ஆணுக்கும் பிறப்பவன் கண்டிப்பாக கொடியவனாகத்தான் இருப்பான். ஒருவன் கொடியவனாக இருப்பதை வைத்தே அவன் பிராமணனுக்கு பிறக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்து விடலாம். பிராமணனுக்கு பிறந்தவர்கள் கொடியவராக இருப்பதில்லை.

கிருஷ்ண யஜுர் வேதத்தில், 7.1.1 என்கிற சுலோகத்தின் மொழிபெயர்ப்பு ஒன்றிய அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இருக்கிறது

தலையில் இருந்து பிராமணன் பிறந்தான், தோளில் இருந்து சத்திரியன் பிறந்தான் என்று வேதத்தில் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம்

தலையில் இருந்து பிராமணன் மட்டும் பிறக்கவில்லையாம். அக்கினியும் பிறந்தானாம். வெள்ளாடும் பிறந்ததாம். அதே போல, தோளில் இருந்து சத்திரியனும் பிறந்தான், இந்திரனும் பிறந்தான், பள்ளை ஆடும் பிறந்தது. வயிற்றில் இருந்து, வைசியனும் பிறந்தான், விசுவே தேவர்களும் பிறந்தார்கள், பசுவும் பிறந்தது. காலில் இருந்து சூத்திரனும் பிறந்தான், குதிரையும் பிறந்தது, ஆனால் எந்த தேவர்களும் பிறக்கவில்லை. 

ஆகவே, பிராமண சத்திரிய வைசியர்கள் என்ற மூவண்ணத்தார்க்கு பணிவிடை செய்வதே  சூத்திரர்களுக்கும் குதிரைக்கும் இடப்பட்ட பணிகள். சூத்திரர்களுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. காலில் இருந்து பிறந்தமை கொண்டே, சூத்திரர்களும் குதிரையும் காலினால் செய்யும் தொழிலால் பிழைக்கின்றனர்.

2. இஸ்கான் அமைப்பை உருவாக்கிய சாமியார் பிரபுபாதா  அளித்த பேட்டியில்

...சூத்திரர்கள் நாயைப் போன்றவர்கள். நான்காம் தர மனிதர்கள். அவர்களுக்கு நல்ல எசமானர் வேண்டும். எசமானர் இல்லாத சூத்திரர்கள் தெருநாயைப் போன்றவர்கள். கலியுகத்தில் சூத்திரர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள்"

இந்தக் காட்சிப் பதிவு சமூவலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது

3. சூத்திரர்கள் முட்டாள்களாம் - பிஜேபி எம்.பி

Kshatriya ko kshatriya keh do, bura nahi lagta. Brahmin ko brahmin keh do, bura nahi laga. Vaishya ko vaishya keh do, bura nahi lagta. Shudra ko shudra keh do, bura lag jata hai. Kaaran kya hai? Kyunki samajh nahi paate: BJP MP Pragya Singh Thakur in Sehore, MP 

 சத்திரியர்களை சத்திரியர்கள் என்றால் யாருக்கும் வலிப்பதில்லை. பிராமணர்களை பிராமணர்கள் என்று அழைத்தால் யாருக்கும் தவறாகப்படுவதில்லை. வைசியர்களை வைசியர்கள் என்று அழைத்தால் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். 

 ஆனால் சாஸ்திரம் வகுத்த விதிகளின் படி சூத்திரர்கள் என்று கூறினால் பலருக்கும் கோபம் வருகிறது, ஏதோ அசிங்கத்தை மிதித்தது போல் பார்க்கிறார்கள் - ஏன்? ஏனென்றால் சூத்திர்கள் சாஸ்திரவிதிகளை புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு (சூத்திரர்களுக்கு) புரிதல் இல்லை.

 பாஜக போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் மத்தியப் பிரதேசம் சேஹூர் என்ற இடத்தில் 13.12.2020 - அன்று பேசியது.

இதைப்பற்றி எல்லாம் நாராயணன்களும் அண்ணாமலைகளும் வாய் திறக்க மாட்டார்களா?

நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு  ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். ('தெய்வத்தின் குரல்' முதல் பாகம் பக்கம் 267-268)

கிறித்தவர்களை இழித்தும், பழித்தும் ஏகடியம் செய்யும் கூட்டம் அந்தவெள்ளைக்கார கிறித்தவன் வைத்த பெயரைச் சூட்டிக் கொண்டு திரிவது வெட்கமாக இல்லையா? 

No comments:

Post a Comment