இளமை கொண்டாடும் முதுமை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

இளமை கொண்டாடும் முதுமை!

வெற்றிச்செல்வன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை

பொதுவாகவே இளைய தலைமுறை யினருக்கு வயதில் பெரியவர்கள் வழங்கும் அறிவுரைகள் கசக்கத்தான் செய்யும். அது அந்த வயதின் கோளாறு. ஆனால் அதே தலைமுறை இன்று தந்தை பெரியாரைத் தேடுகிறது; ஏற்றுக் கொள்கிறது; விவாதிக் கிறது. புத்தகக் கண்காட்சிகளில் பெரியார் குறித்த நூல்கள் அதிகம் விற்பனையா கின்றன; சமூக வலைதள விவாதங்களில் பெரியார் கொள்கைகள் உயிர்ப்புடன் பரப் புரை செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் இன்றும் பெரியாரின் கொள்கைக்கான தேவைகள் இருப்பதால்தானே!

இளைய தலைமுறை பெரியாரைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் ஏராள மாக உள்ளன. உனக்குச் சரி என்று பட்ட தைச் செய் என்று சொன்னது மட்டுமன்றி, அதற்குப் பழைமைவாதத்தைத் துணையா கக் கொள்ளாமல், அறிவையும், அறிவிய லையும் துணையாகக் கொள்ள வேண்டும் என்றார் பெரியார். 

கல்வியும், காதலும் இளைஞர்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதவை; பின்னிப் பிணைந்தவை. பெரியாரின் கல்வி மற்றும் காதல் சார்ந்த சிந்தனைகள், இளைய தலைமுறையைச் சிந்திக்கத் தூண்டுவதா கவும், அவர்களுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளன.

கல்வி

கல்வியின் அவசியத்தைப் பற்றிய பெரியாரின் கருத்துரைகள் ஏராளம். அவரு டைய கல்விச் சிந்தனைகள் தனித் தொகுப் பாகவே வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி எப்படிப்பட்டதாக இருக்க வேண் டும்? எந்த மொழியில் அமைந்திருக்க வேண்டும்? பாடத்திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும்? பெண்கல்வியின் அவசியம், பகுத்தறிவுக் கல்வி எது என்று எல்லாத் தளங்களிலும் பெரியாரின் உரைகள் நிகழ்ந்துள்ளன.

கல்வியில் மதம் கலப்பது கூடாது என் பது பெரியாரின் முதன்மையான அறிவுரை. கல்வி என்ற பெயரில் மதத்தைப் போதிப்ப தால், அங்கு பகுத்தறிவுக்கும், ஆராய்ச்சிக் கும், முற்போக்குக்கும், சுதந்திரத்திற்கும் இடமே இல்லாமல் போய்விடும் என்கிறார் பெரியார்.

அறிவியல் பாடவகுப்பில், கோடிக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் செவ்வாய்க் கோள் இருப்பதாகப் பாடம் நடத்தி விட்டு, அடுத்து வரும் இலக்கியப் பாட வகுப்பில், நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்பு பற்றிப் பாடம் நடத்தினால் அந்த மாணவனுக்குப் பகுத்தறிவு எப்படி வள ரும்? பெரியாரின் அறிவுரை இந்த இடத்தில் எப்படிக் கச்சிதமாகப் பொருந்துகிறது என் பது எண்ணிப்பார்க்கத்தக்கது.

அறிவை வளர்க்கும் வகையில் பாடத் திட்டம் இருக்க வேண்டுமே தவிர, புராண, இதிகாசக் குப்பைகளுக்குப் பாடத்திட்டத் தில் முக்கியத்துவம் தருவதைப் பெரியார் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. பாடப் புத்தகக் கமிட்டியில் உள்ள தமிழர் களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண - பாரதக் கதைகளை சரித்திரத்திலும், வசன பாடத்திலும் சேர்க்கச் சம்மதித்து இருப் பார்களா என்ற கேள்வியை எழுப்பும் பெரியார், மற்ற நாடுகளைப் போல பாடங் கள், சரித்திரங்கள் ஆகியவற்றைப் பாடத் திட்டத்தில் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்

- குடிஅரசு”, 12.02.1944

பெண்கல்வியை மிகவும் வலியுறுத்திப் பேசியவர் பெரியார். ”பெண்களைப் பொறுத்த வரையில் இந்த நகைகளின்மேல் அவர்களுக்கு இருக்கும் பைத்தியம் தொலைய வேண்டும். அவர்களுக்கு இருக்க வேண்டிய ஆசை எல்லாம் நல்ல படியாக - நல்ல கல்வி, உத்தியோகம் இவற் றில்தான் இருக்க வேண்டும்” என்கிறார் 

- ‘விடுதலை’, 01.02.1973.

அதுமட்டுமன்று. ஆண்களும் பெண் களும் ஒரே பள்ளியில், கல்லூரியில்தான் படிக்க வேண்டும்; அப்போதுதான் சமத்து வம் வளரும் என்பதே பெரியார் கருத்து. பெண்களுக்குத் தனிப்பள்ளி, கல்லூரி என்பதை நிராகரித்தவர் பெரியார்.

காதல்

கல்வி அனுபவத்தைக் கூட, சில இளை ஞர்கள் கடந்திருக்கலாம். காதல் உணர் வைக் கடக்காத இளைஞர்கள் இருக்க முடியுமோ?

ஆனால் அன்று தொடங்கி இன்றுவரை, காதல் குறித்துத் தமிழ்ச் சமூகத்தில் காட்டப் படும் பிம்பம் என்ன? காதலைப் புனிதப் படுத்துவதையும், தெய்வீகமாகக் காட்டு வதையுமே நமது இலக்கியங்கள் செய்து வருகின்றன. வெறும் உணர்வு சார்ந்த மாயத் தோற்றமாக, கற்பனையாக காதல் என்கிற எண்ணம் நமக்குக் கற்பிக்கப்படு கிறது. ஆனால் பெரியார் காதலை மிகவும் முற்போக்காகவும், நடைமுறை யதார்த்தத் தோடும் அணுகியவர்.

“அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப் திக்குமேயொழிய, மனத்திற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாகக் காட்டுவதற்காகவா? (பெண் ஏன் அடிமையானாள்? மூன்றாம் அத்தியாயம் - காதல், பக்கம் 31).

“மனிதன் ஏன் பிறந்தானோ? ஏன் சாகி றானோ? என்பது வேறு விஷயம். ஆத லால், அது ஒரு புறமிருந்தாலும் மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும்  திருப்தியுமாகும். இதற்கு ஆணுக் குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கியச் சாதனமாகும்” (பெண் ஏன் அடிமையானாள்? நான்காம் அத்தியாயம் - கல்யாண விடுதலை, பக்கம் 35)

மேலும், “வாழ்க்கைத் துணை விஷ யத்தில் காதல் போதாது. அறிவு, அன்புப் பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங் களே முக்கியமானவையாகும்” என்றார் பெரியார் (‘குடிஅரசு’, 10.01.1948)

தனிநபர் விருப்பம் சார்ந்து இயங்கும் காதலை ஒரு சமூகம் ஜாதி, மதம், அந்தஸ்து, பணம் முதலியவற்றைக் கொண்டு எடை போடுகிறது. அவ்வாறான சமூகக் குறுக்கீடு களைப் புறந்தள்ளியவர் பெரியார். காதலை இருவர் தொடர்புடைய தனிப்பட்ட விஷய மாகப் பார்த்தவர்.

”ஓர் ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவ தற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்ப தற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.

இன்னும் திறந்து வெளிப்படையாய் - தைரியமாய் - மனித இயற்கையையும், சுதந் திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத் தையும் கொண்டு பேசுவதானால், இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஓர் ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக் குப் பிடித்த பலகாரக்கடையில் பலகாரம் வாங்குவது போலவும், சாமான் கடைகளில் சாமான் வாங்குவது போலவும் அவனவ னுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத் தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந் ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிர வேசிப்பது அதிகப் பிரசங்கித் தனமும், அநாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவது மேயாகும்’’ (‘குடிஅரசு’ - தலையங்கம், 18.01.1931).

இவ்வாறான ஏராளமான கருத்துகள் இளைஞர்களைப் பெரியார் நோக்கி ஈர்ப்பதற்கான காரணமாக அமைகின்றன. இன்றைய இயந்திரமயமான உலகில், வாழ்க்கைத் தேவைகளுக்காகச் சுழன்று கொண்டிருக்கும் இளைஞர் கூட்டம், பெரியாரை, பெரியாரின் கொள்கைகளைத் தேடித் தேடி வாசிக்கிறது என்றால் அதற்குக் காரணம், பெரியாரின் கொள்கை நேர்மை யும், துணிவும்தான் என்பதை யாரால் மறுக்க இயலும்.

No comments:

Post a Comment