சுயமரியாதைத் திருமணமும்; சுற்று வட்டார கிராமங்களும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 25, 2022

சுயமரியாதைத் திருமணமும்; சுற்று வட்டார கிராமங்களும்!

கிழக்கு கடற்கரை சாலை, கீழமஞ்சக்குடியில்  நடைபெற்ற தோழர்கள் குமார், சுவாதி இணையேற்பு நிகழ்வுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி,வீரமணி அவர்கள் 14.09.2022 அன்று ஜெகதாபட்டினம் வருகை தந்தார்கள். 

ஆசிரியர் அவர்களோடு எத்தனையோ பயணங்களில் நாமும் கலந்துள்ளோம்! ஆனால் இந்த ஊர் நம்மை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது. இது தொடர்பான விரிவான தொகுப்பு 15.09.2022 விடுதலையில் வந்துள்ளது. 

மீண்டும் பயணம்!

மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், எஸ்.பி.பட்டினம், தொண்டி என நீண்டு செல்லும் இந்த கடற்கரைகளில் ஜெக தாபட்டினம் தான் மிக முக்கியமான மீன் பிடித்  துறைமுகம் என்கிறார்கள். இங்குதான் ஆசிரியர் அவர்கள் திருமணத்திற்கு வருகை தந்தார்கள். அன்றைய தினம் மீனவர் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர், கிராம நல அமைப்பு, இஸ்லாமிய இயக்கங்கள், பல்வேறு அரசியல் அமைப்புகள், பொது மக்கள் என ஆசிரியர் அவர்களை வரவேற்கக் குவிந்து விட்டனர். இந்நிகழ்வு முடிந்து ஆறு நாட்கள் ஆனது. ஆனாலும் அங்குள்ள அமைப்புகள், அவ்வூர் மக்கள் ஆசிரியரிடமும், நம் தோழர்களிடமும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆசிரியர் வாகனம் அந்த கடற்கரை சாலையில் பீறிட்டு சென்றது - இன்று வரை பேசு பொருளாக இருக்கிறது. எழுத்தின் சுவைக்காக நாம் மிகைப்படுத்தவில்லை. மாறாக அம்மக்களின் அன்பை மேலும் பெறவும், அம்மக்களின் மனதில் உள்ளதை அறியும் பொருட்டும் மீண்டும் பயணமானோம் ஜெகதாபட்டினம்!

ஆசிரியரைப் பார்க்கும் ஆவல்!

திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கரு.இராமநாதன் அவர்களைக் கடற்கரை சாலையின் கடை ஒன்றில் சந்தித்தோம்! திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காகத்  தோழர் குமாருடன் நானும் சில இடங்களுக்குச் சென்றேன். அழைப்பைப் பார்த்தவர்கள் ஆசிரியர் வருகிறாரா? கண்டிப்பாக வருகிறாரா? எனக் கேட்டுக் கொண்டே  இருந்தார்கள். அன்றைய நாளில் ஆசிரியர் வருவதை அறிந்த மக்கள், வரவேற்பு கொடுக்க பேருந்து நிறுத்தத்தில் நின்று ஆசிரியரைப்  பார்த்த பிறகுதான் சென்றார்கள். இது நான் நேரில் கண்ட காட்சியாகும்! 

காரணம் இங்கு நடைபெறும் திருமண அழைப்பிதழ்களில் தலைவர்களின் பெயர் போட்டு அடிப்பார்கள். ஆனால் யாரும் வரமாட்டார்கள். அதுமட்டுமின்றி இந்தப் பகுதிகளில் சீர்திருத்தத் திருமணம் என்பதே மிக,மிகக் குறைவு. அதனால் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.

இயல்பான தலைவர்! 

மளிகைக் கடை வைத்திருக்கும் முகமது ரபி அவர்கள், கோட்டைபட்டினம் சாலையில் நின்றிருந்த எங்களைக் கைபிடித்துக்  கடைக்குள் அழைத்துச் சென்றார். ஒரு குழந்தை போல் பேசுகிறார்; குதூகலிக்கிறார்! கடையை விட்டு நான் எங்குமே போக மாட்டேன். ஆனால் குமார் எங்கள் வீட்டுப் பிள்ளை போல! திருமணத்தில் சமையல் வேலைகளை நானே முன்னின்று கவனித்தேன். நிறைய பேருக்கு ஒரு ஆதங்கம் இருந்தது. குறிப்பாக எனக்கு நிறைய இருந்தது. ஆசிரியர் அவர்களை அருகில் பார்க்க முடியவில்லையே, கைகுலுக்க இயலவில்லையே, படம் எடுக்க வாய்ப்பில்லையே என்பதுதான் அது! 

அதேநேரம் ஒரு எளிமையான தொண்டருக்கு அய்யா அவர்கள் வருகை தந்ததுதான் இன்றைக்கும் இங்கு பேசுபொருள்! மிகையில்லாமல் இயல்பாக நடந்து கொண்ட தலைவரை நாங்கள் என்றும் மறக்க முடியாது. எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த அற்புதமான தருணத்தில் நானும் விடுதலை வாசிக்க விரும்புகிறேன்; அதற்குப் பணமும் தருகிறேன் என்று வழங்கினார். 

நிறைந்த மகிழ்ச்சியும், பெருமையும்!

தோழர் குமாரின் சகோதரர் - அவர் பெயரும் குமார். எங்களுக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல; மிகுந்த பெருமைக்கு உள்ளாகி இருக்கிறோம். சுயமரியாதைத் திருமணம், தலைவர் வருகை, அவர்களின் வெளிப்படையான பேச்சு என எல் லாமே எங்களுக்குப் புதியவை. எங்கள் உறவுகள் மட்டுமல்ல, சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திலுமே இந்நிகழ்வு குறித்து இன்று வரை விசாரிக்கிறார்கள். தவிர குமார் என்பவர் யார் எனக் கேட்கும் அளவிற்கு அவருக்குத் தனித்த அடையாளம் கிடைத்துள்ளது. மணமேல்குடியில் ஆசிரியராகப் பணிபுரியும் விக்டர் என்பவர் அரைமணி நேரம் இவைகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

விடை தெரியாத கேள்விகள்!

திருமணத்தன்று வழிநெடுக வரவேற்பு இருந்த வேளை யில், ஓரிடத்தில் இரு சக்கர வாகனத்தில்  கணவன், மனைவி மட்டும் நின்று கொண்டு, ஆசிரியர் வ்ருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்கள் தான் லாவண்யா - சாமிநாதன். லாவண்யா அவர்கள் நாம் கருத்துக் கேட்க பல இடத்திற்கும் சென்ற போது, கூடவே கடைசி வரை பயணித்தார். அவர் கூறும் போது, ஒரு எளிமையான தொண்டருக்கு, ஒரு சிறு வயது தோழருக்கு, இவ்வளவு தூரம் பயணம் செய்து  அய்யா அவர்கள் எப்படி வந்தார்கள்? அதுவும் உடல்நிலை சற்றுச்  சிரமமாக இருந்ததாக  சொன் னார்கள். அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என்பது தான் இப்பகுதி மக்களுக்கு இன்று வரை விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. மட்டுமின்றி நானும், எனது இணையரும் ஆசிரியர் அவர்களைச் சந்தித்ததை, இணை யருடன் பணிபுரியும் சக ஆசிரியர்கள் வியப்பாகப் பார்க் கிறார்கள். எங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் வரவேற்பு கொடுத்ததே ஒரு பெரிய பிரச்சாரம் தான்!

நெகிழத்தக்க நிகழ்வு!

கோட்டைப்பட்டினம் விசைப்படகு சங்கத் தலைவரும், ஜமாத் தலைவருமான அசன் முகைதீன் அவர்கள் கூறும்போது, எனக்கு குமார் அறிமுகம் இல்லை. ஆனால் ஆசிரியர் வருகிறார் என்பதைப் பலரும் சொன்னார்கள். மண்டபம் வாசலில் நின்று ஆசிரியர் அவர்களின் பேச்சை கேட்டேன் என்றார். நாங்கள் நெகிழ்ந்து தான் போனோம்! 

கிராம மக்களின் மகிழ்ச்சி!

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் முடித்துக் கொண்டு, கீழமஞ்சக்குடி கிராமம் நோக்கி சென்றோம். அங்கு தான் மதிய விருந்து! "உணவு எப்படி இருந்தாலும் பரவாயில்லை; பரிமாறுதல் அன் பாய் இருக்க வேண்டும்", என் பார்கள். கிராம மக்களுக்கு அன்பு குறித்து நாமா சொல்ல வேண்டும்! விருந்திற்குப் பிறகு கிராமத்  தலைவர் பல்த சார் அவர்களைச் சந்தித் தோம்! எங்கள் கிராமத்தில் 200 வீடுகள் உள்ளன. குமாரை அனை வருக்கும் தெரியும். நான் பெரியார், அம்பேத்கர் நூல் களைப் படிப்பேன். ஆசிரியர் பேச் சைக் கேட்டுள்ளேன். 

எங்கள் கிராமத்திற்கே இந்தச் சுயமரியாதைத்  திரு மணம் புதிது. ஆசிரியர் அவர்களின் பேச்சு நல்ல வழிகாட்டி. அதில் அரசியல் பேச்சு இல்லை. வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளே இருந்தன. அனைவரும் நன்கு படிக்க வேண்டும், பெற்றோரை மதிக்க வேண்டும் எனப் பேசியதைக் கேட்டு, எங்கள் கிராம மக்கள் மகிழ்ந்து போனார்கள். எங்கள் கிராமத்தில் ஆண், பெண் இருபாலரும் படித்துள்ளார்கள். பொதுவாக எங்கள் கிராமத்தில் ஒருவர் தான் திருமணத்திற்கு வருவார்கள். ஆனால் தலைவரைப் பார்க்க நிறைய வீடுகளில் குடும்பமாக வந்தார்கள். பக்கத்து ஊரில் ஒரு இஸ்லாமியத் தோழர் திருமணம் பார்க்க ஆசைப்பட்டார். அழைப்பு இல்லாததால் அவர் வரவில்லை. நம் சமுதாய மாற்றத்திற்குப் பெரியார் தான் காரணம் என அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். 

புரட்சி என்பது வார்த்தையல்ல; வாழ்க்கை! 

இளம் வயதிலேயே தம் கணவரை இழந்தவர் செவத் தியம்மாள். எல்லோருக்கும் உணவு கொடுத்து முடித்து, ஓய்வாய் இருந்த நேரத்தில் பேசினோம். எவ்வளவோ சிரமங்கள், துன்பங்கள் எனக் கூறியவர் சேலையால் முகத்தை மூடிக் கொண்டார். உங்கள் மகன் குமார் எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்? எனக் கேட்டதும், முகத்தில் அப்படி ஒரு உற்சாகம்! என் மகன் கறுப்புச் சட்டை போட்டிருக்கிறார். எல்லோருடனும் நன்றாகப் பழகுகிறார். இந்தத் திருமண முறையைச் செய்ததன் மூலம் ஊரே பாராட்டும்படி பெயர் வாங்கித் தந்துள்ளார். தொடக்க காலத்தில் குடத்தில் தண்ணீர் எடுத்து ஒவ்வொரு வீடாக கொடுத்து வருவேன். ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய் கிடைக்கும். அவர்கள் எல்லாம் என் மகன் திருமணத்திற்கு வந்து, என்னையும் பாராட்டி  சென்றார்கள். என் மகன் எது செய்தாலும் சரியாக செய்வான் என்பது என் நம்பிக்கை. அதனால் திருமணத்தின் போது நானும் கருப்பு சேலை தான் கட்டியிருந்தேன் என்றார்.   

பெரியாரின் மகத்தான பணிகள்!  

மணமகள் சுவாதி என்ன சொல்கிறார்? சுயமரியாதைத் திருமணம் நான் பார்த்திராத, கேள்விப்படாத ஒன்று! குமார் அவர்கள் என்னைச் சந்தித்து விவரித்த போது, இப்படி யெல்லாம் நடக்குமா என வியந்து போனேன். அதன் தொடர்ச்சியாக பெண் ஏன் அடிமையானாள்?, பெரியாரின் மகத்தான பணிகள் உள்ளிட்ட சில நூல்களை வாசித்தேன். குமார் அவர்கள் எனக்கும், என் பெற்றோருக்கும் பொறுமை யாக அனைத்தையும் எடுத்துக் கூறினார். பிறகு தான்  எங்கள் குடும்பத்தில் ஒப்புக் கொண்டார்கள். 

ஆசிரியர் அய்யா அவர்கள் இவ்வளவு தூரம் வந்ததே எங்களுக்குக் கிடைத்த பெருமை! அதுவும் உடல்நிலை சற்று சிரமமாக இருந்ததாகக் கூறினார்கள். அந்த நிலையிலும் வந்தது இன்று வரை  எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்தில் பேசும் போது பெண்ணுரிமை, பெண் கல்வி குறித்து மிக, மிகச் சிறப்பாகப் பேசினார்கள். அதேபோல மீனவர் நலன் குறித்துப் பேசியது எங்கள் பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. திருமணத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது.  

பொதுவாக நல்ல விசயத்திற்கு கருப்பு உடையைப் பயன்படுத்த மாட்டோம். ஆனால் நானே கருப்பு சேலை, குமார் அவர்கள் கருப்பு சட்டை என எங்கள் சுற்றம், சூழ வியந்து பார்த்தார்கள் அல்லது மிரண்டு பார்த்தார்கள். நாங்கள் எளிய குடும்பம், சாதாரண குடும்பம்! இது அனை வருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது, இவ்வளவு பெரிய தலைவர் எப்படி வந்தார் என்று தான் இப்போது வரை எங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

புதிதாய் ஒரு கறுப்புச் சட்டை!

இவர்கள் வீட்டில் அலெக்சாண்டர் என்றொரு தம்பி இருந்தார்.விசாரித்தால் மன்னார்குடி அருகே வெட்டிக்காடு கிராமம் என்றார். குமார் திருமணத்திற்கு உதவி செய்வதற்காக வந்துள்ளார். இவர் தலைமையில் தான் ஆசிரியரை வரவேற்று 32 பிளக்ஸ், 200 கொடிகள் கட்டப்பட்டதாம்!  வேலைகள் அனைத்தையும் செய்தவர் திருமண முறையைப்  பார்த்துள்ளார், ஆசிரியர் பேச்சைக் கேட்டுள்ளார், தோழர் களின் அன்பை, அணுகுமுறைகளை ரசித்துள்ளார்.  விளைவு... கறுப்புச் சட்டை அணிந்து இயக்க ஆதரவாளராக மாறிவிட்டார். 

திராவிடர் கழக மாப்பிள்ளை!

மணமேல்குடி ஒன்றியம், உசிலங்காடு பகுதியில் வசிக்கும் மணமகள் சுவாதி அவர்களின் பெற்றோரை சந்தித்தோம்!  தம் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துக் கொண்டார் சூ.அருளாந்து அவர்கள். நான் உழைப்பின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பவன். அதனால் கடவுள் மீது பெரி யளவு ஈர்ப்பு இருந்ததில்லை. எங்கள் குடும்பத்தின் சுயமரி யாதைத் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. இனிமையும், பெருமையும் சேர்ந்த நிகழ்வாக இது அமைந்துவிட்டது. ஆசிரியர் அய்யாவின் படிப்புக் குறித்த பேச்சு பெண்களை மிகவும் ஈர்த்தது. குறிப்பாகப் பெண் குழந்தை வைத்திருப்போர் பெரிதும் விரும்பினர். எங்கள் பிள்ளைகளுக்கும் திராவிடர் கழக மாப்பிள்ளைப்  பாருங்கள் எனச் சிலர் என்னிடம் கேட்டார்கள். 

திருமணத்தில் இறுதி வரை யாரும் எழவில்லை. எல் லோரும் வியந்து போகும் வண்ணம் நிகழ்ச்சி அமைந்து விட்டது.  ஒருமுறை பார்த்தால் ஆசிரியர் அய்யாவை அனைவருக்கும் பிடித்துவிடும் போல! நூறாண்டை கடந்து அவர்கள் வாழ வேண்டும் என்றார் அருளாந்து அவர்கள்! 

ஆசிரியர் பேச்சில் அசந்த 

ஆர்.எஸ்.எஸ். நண்பர்!

நிறைவாக மணமகனும், தோழருமான குமார் பேசும்போது ‘‘மீனவர் சங்கம், வணிகர் சங்கம், கிராம நல அமைப்பு, இஸ்லாமிய இயக்கங்கள், பல்வேறு அரசியல் அமைப்புகள், பொது மக்கள் என ஆசிரியர் அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர். ஆசிரியர் வருகைக்குப் பின்னர் முற்போக்கு எண்ணம் கொண்ட பலர், தங்களைத் தாங்களே வந்து அறிமுகம் செய்து கொள்கின்றனர். 

நமது பகுதிக்குப் பெரிய தலைவர்கள் யாரும் வந்ததில்லை என வயதில் பெரியோர்  கூறினார். எனது உறவினர்களில்  சிலர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளனர். அவர்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர். ஆசிரியர் பேச்சை வெகுவாகப் பாராட்டிப் பேசினர். பேச்சில் எங்குமே கடவுள், மதம், ஜாதி குறித்து இல்லை, முழுக்க முழுக்க கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் நலம். பெற்றோரை மதிப்பது, திட்டிமிட்டு வாழ்வது என மனநிறைவான பேச்சாக இருந்தது. பெரியார் கருத்துகள் என்பதில் எவ்வளவு அடக்கமா என வியந்து கேட்டனர்.    

இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும் என என் மாமனார் அவர்கள் தம் விருப்பத்தைப் பதிவு செய்தார்கள்.

காவல்துறையில் கூட சிலர், உங்கள் இயக்கம் கட்டுக்கோப்பானது, பாதுகாப்பு பெரிதாகத் தேவையில்லை. எங்களுக்குப் வேலையும் இருக்காது. உங்களுக்கு என்ன பாதுகாப்பு... உங்களை விட? எனக் கேட்டார்கள். இந் நிகழ்வுக்குப் பிறகு நிறைய மாற்றத்தை, நிறைய ஆதரவுகளைப் பார்க்க முடிகிறது. அதை வளர்த்தெடுக்கவேண்டும்'' என குமார் கூறினார். 

பங்கேற்பு!

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மண்டலத் தலைவர் பெ.இராவணன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாநில இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, துணைச் செயலாளர் அ.உத்திராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்! 


No comments:

Post a Comment