உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்

உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும்.

கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு மேம்பட்ட தெய்வீகச் சக்தி என்கின்ற எண்ணமோ மனிதனுக்கு இல்லாமல் இருந்து இருக்குமானால், இன்று மனிதன் குறைந்தது இந்த 3,000 - 4,000 ஆண்டுகளில் அவனது அறிவின் பயனாய், சிந்தனா சக்தியின் பயனாய் 500 ஆண்டுகளாவது உயிர் வாழத்தக்க தன்மையை அடைந்திருப்பான். இறக்கை இல்லாமலேயே ஆகாயத்தில் பறக்கும் சக்தியை அடைந்திருப்பான் என்பதோடு, கவலை இல்லாமலேயே வாழும் தன்மையையும் அடைந்திருப்பான்.

சர்வசக்தி உள்ள கடவுள் ஒன்று இருக்கிறது. ‘எல்லாம் கடவுள் செயல்’ எனக் கருதும் மக்களில் யாருக்குத் துக்கமும், ஏமாற்றமும், கவலையும் இல்லாமல் இருக்க முடிகிறது?

எனவே, மனித சமுதாய வளர்ச்சிக்கும், மனித ஜீவனுக்குத் துக்கமும், கவலையும் இல்லாமல் இருப்பதற்கும் “சர்வ சக்தி உள்ள கடவுள்” ஒருவர் இருக்கிறார் என்கின்ற எண்ணம் அடியோடு ஒழிந்து ஆகவேண்டும்.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என் கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி, அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்கு வதைவிட, உலகில் ஜீவகாருண்யத் தன்மை வேறு இல்லை என்றே சொல்லுவேன்.

மோட்சம் என்ற சொல்லுக்குப் பொருள் என்னவென்றால், “துக்க நாசம் சுகப்பிராப்தி” என்று தான் சொல்லப்படுகிறது.

இச்சொல்லுக்கு ஆதாரப்பூர்வமான பொருளும் (அர்த்தமும்) இதுவாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலைக்கு அறிவுதான் காரணம். அதாவது ஞானம்தான் என்றும் காணப்படுகிறது. இதனாலேயேதான் “ஞானிக்கு துக்கமில்லை, கவலை இல்லை” என்று சொல்லப்படுவதோடு, “ஞானிக்கு கடவுளும் இல்லை, கல்லெடுப்பும் இல்லை” என்று சொல்லப் படுகிறது.

ஞானி என்றால் என்ன பொருள்? அவன் யார் என்று பார்த்தால் ஞானமுடையவன் ஞானி - புத்தி உடையவன் புத்தன் - அறிவை உடையவன் அறிவன் என்பதாகும். இவர்களுக்கெல் லாம் கடவுள் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன?

அறிவையோ, புத்தியையோ, ஞானத்தையோ கொண்டு சிந்திப்பதாலேயே கடவுள் என்ற சொல்லே தென்படுவதற்கு இல்லாமல் போய் விடுகிறது. ஞானிக்கு கடவுள் இல்லை என்பது மாத்திரமல்லாமல், “துறவிக்கு கடவுள் இல்லை” என்று சொல்லப்படுகிறதல்லவா? அதன் பொருள் என்ன? துறவி என்றால் ஆசை அற்றவன், பற்று அற்றவன் என்பதுதான் பொருள். துறவிக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்றும் இல்லை. அவனுக்கு எதைப் பற்றியும் ஆசை இல்லை. ஆனதால் அவனுக்குக் கடவுளைப் பற்றிய கவலை இல்லை என்பதோடு, அவனுக்குக் கடவுள் தேவையும் இல்லை. இயற்கையோடு இயைந்து கொள்ளுகிறான்.

எனவே, இயற்கையை நல்ல வண்ணம் உணர்ந்து கொள்ளுவது அதற்கேற்ப தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும் அறிவுதான் முன் குறிப்பிடப்பட்ட ஞானமாகும்.

எனவே, பகுத்தறிவு பெற்ற மனித சமுதாயம் ‘மனிதத் தன்மை’ அடைவதற்குப் பகுத்தறிவுவாதியாக, அதாவது பஞ்சேந்திரியங்களுக்குப் புலப்படாத, தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களை அவை எவையானாலும் சிந்திக்காமலும் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமலும் இருப்பதுதான் மனிதத் தன்மையாகும்.

(தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை- ‘விடுதலை’ 10.6.1971)

No comments:

Post a Comment