தமிழ்நாட்டில்தான் உணவுப்பொருள்கள் விலையேற்றம் குறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

தமிழ்நாட்டில்தான் உணவுப்பொருள்கள் விலையேற்றம் குறைவு

 மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தகவல்

சென்னை,செப்.23-''மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், தமிழ்நாட்டில் மிகக் குறைவாக உள்ளது,'' என, தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்ட தாவது,

ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை சார்பில், மாநிலங்களில் நுகர்வோருக்கான விலைவாசி உயர்வு தொடர்பாக, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில், உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் மிகக் குறைவாக உள்ளது. இந்திய அளவில் விலைவாசி ஏற்றம், ஆகஸ்ட் மாதத்தில் 7.6 சதவீதம்; தானியங்கள் விலை ஏற்றம் 9.6 சதவீதம். தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகா, கேரளா போன்றவற்றில், உணவுப் பொருட்கள் விலையேற்றம், 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

இதற்கு காரணம், பொது விநியோகம் சிறப்பாக செயல்படுவது தான். தமிழ்நாட்டில் உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் 3.3 சதவீதம்; உணவு தானியங்கள் விலை ஏற்றம், 2.7 சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில், இலக்கு சார்ந்த பொது வினியோகம் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் எல்லாருக்குமான பொது வினியோகம் உள்ளது.

தமிழ்நாட்டில் சிறப்பு பொது வினியோக திட்டத்தில், 1 கிலோ பாமாயில், துவரம் பருப்பு வழங்குகிறோம். இது உணவுப் பொருட் களுக்கான செலவை கணிசமாக குறைக் கிறது.துவரம் பருப்பு அய்ந்து மடங்கு விலை குறைவாக, பாமாயில் ஆறு மடங்கு விலை குறைவாக வழங்கப்படுகிறது.இதற்கு, அரசு பெரும் தொகை செலவிட வேண்டி உள்ளது.

ஆண்டுக்கு 2,205 கோடி ரூபாய் அரிசிக்கு மட்டும் மானியம் வழங்குகிறோம். துவரம் பருப்புக்கு சராசரியாக ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய்; பாமாயிலுக்கு ஆண்டுக்கு 2,400 கோடி ரூபாய் மானியமாக செலவிடப்படுகிறது.பொது வினியோக திட்டத்தில் மக்கள் பயன்அடைவதால், உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் குறைவாக உள்ளது.

சிறப்பு பொது வினியோக திட்டம் குறித்து ஆய்வு செய்தபோது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வாங்கும் உணவுப் பொருட் களில், 63 சதவீதம் பொது வினியோகத்திலும், முன்னுரிமை அட்டைதாரர்கள் வாங்கும் உணவுப் பொருட்களில், 50 முதல் 60 சதவீதம் பொது வினியோக அரிசியையும் பயன்படுத்து கின்றனர்.

விலைவாசி ஏற்றம், ஏழைகளை அதிகம் பாதிக்கும். வருமானத்தில் 70 சதவீதம் உணவுக்கு செலவிட வேண்டிய நிலை ஏற்படும். விலைவாசி ஏறும்போது சாப்பிடுவதை குறைப்பர். அத்தகைய நிலை வராமல் இருக்க, அரசின் திட்டம் பயனுள்ள தாக உள்ளது. தேசிய அளவில் விலைவாசி ஏற்றம் 9 சதவீதமாக உள்ளது; தமிழ்நாட்டில் 5 சதவீதமாக உள்ளது. பொது வினியோக திட்டத்துக்கு, ஒன்றிய அரசு தடங்கலாக இல்லை. ஆனால், இலக்கு நோக்கிய பொது வினியோகத்துக்கு மாறும்படி கூறுகின்றனர். -இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment