உள்ள கோவில்கள் போதாதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

உள்ள கோவில்கள் போதாதா?

05.02.1933 - குடிஅரசிலிருந்து...

இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. 

இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர் புதுக்கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை அனுமதித்திருக்கிறார்களாம். இதை தேசியப் பத்திரிகைகள் போற்றுகின்றன. 

இது என்ன அக்கிரமம்? எவ்வளவு முட்டாள்தனம்? என்பதை பார்க்க வேண்டுகிறோம். பழைய கோவில்களில் ஆதி திராவிடர்களை விடவில்லையானால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்டமான காரியமல்லவா? 

தீண்டப் படாதவர்களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக் கோவில் கட்டி அவர்களுக்குப் பிரவேசமளித்து விட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா? என்று கேட்கின்றோம். தேசியம் என்ற பித்தலாட்டச் சூழ்ச்சி என்று ஆரம்பமானதோ அன்று முதல் இன்று வரை  தேசியத் தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ்வொரு விஷயத்திலும் இந்தமாதிரியான சூழ்ச்சிகளும், பித்தலாட்டங்களுமே நடைபெற்று மக்களையும் முழுமூடர்களாக்கிவருகின்றது. என்றுதான் இந்த புரட்டுகளும், கேடுகளும் ஒழியுமோ? 

No comments:

Post a Comment