‘திராவிட மாடல்’ தனித்துவத்தை பொது வெளியில் பரவலாக்கிய முன்னோடித் தலைவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

‘திராவிட மாடல்’ தனித்துவத்தை பொது வெளியில் பரவலாக்கிய முன்னோடித் தலைவர்!

- வீ.குமரேசன்,

பொருளாளர், திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் அவர்கள் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியர் பொறுப்பினைஏற்று, எழுதிய முதல் தலையங்கம், திராவிடக் கொள்கைகளை பின்னர் பொறுப்பேற்ற ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்திடும் வகையில் இருந்தது. ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதுதான் திராவிடத்தின் அடிப்படைக் கொள்கை. சிலருக்குத்தான் அனைத்தும், பெரும்பாலானவருக்கு இல்லை; கூடாது என்பதே சனாதனம் வலியுறுத்துவது.  அந்த வகையில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திட்டது சமூக உயர்வு தாழ்வுகளே; சமூக இழி நிலைகளே! பிற மாநில ஆட்சியாளர்கள் முன்னேற்றம் என்பது பொருளாதார முன்னேற்றமே என்று கருதி திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தி வந்தனர். 

தமிழ்நாட்டில் மட்டும் பொருளாதார முன்னேற்றத் துடன், சமூக முன்னேற்றம், சமூக நீதி பற்றியும் கருத்தில் கொண்டு ஆட்சியாளர்கள் கடந்த அய்ம்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக ஆட்சி செய்து வந்துள்ளனர். நாட்டின் மற்ற மாநிலங்களின் நீரோட்டத்திலிருந்து தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் மாறுபட்டு, ஆட்சி அதிகார நிதிநிலை அறிக்கைகள், சமூகநீதியின் படிப்படியான வளர்ச்சிநிலைகள் - என தனித்துவமாக இயங்கி வந்தது.  இந்த வளர்ச்சி நிலைக்கு அடிப்படைக் காரணங்கள் திராவிடர் இயக்க அரசியல் கட்சிகளின் ஆட்சியும், அதற்கு முன்னர் ஆண்ட அரசியல் கட்சித் தலைவர்களும் திராவிட கருத்தியல் வளர்ச்சிப் போக்கு டன் ஆட்சி நடத்தியதுமே ஆகும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி நிலையினை, மற்ற மாநிலங் களிலிருந்து மாறுபட்ட நிலையினை ஒன்றிய, மாநில அரசுகளின் அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ குறிப்புகள், தரவுகள் கொண்டு கல்வி - ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வி ஆராய்ச்சி பேராசிரியர்கள் முனைவர்.  ஏ.கலையரசன் மற்றும் முனைவர். எம்.விஜயபாஸ்கர் ஆகியோர் தமிழ்நாட்டு வளர்ச்சி குறித்து நடத்திய ஆய்வின் முடிவுகள் 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன.  அந்த ஆய்வு முடிவுகள் ஆங்கிலத்தில் புத்தகமாகவும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு அந்த வெளியீட்டு நிகழ்வுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  அந்த நிகழ்ச்சி நடைபெற்ற காலத்தில் கொரோனா கொடுந்தொற்று கடுமையாக இருந்தது. 

பொது வெளிநிகழ்வுகள் அனைத் தும் தடை செய்யப் பட்டிருந்த காலம்.  சற்று தளர்வினை அரசு அறிவித்த நிலையில் பொதுவெளி நிகழ்ச்சியாக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த  அந்த நிகழ்ச்சியில் வெளியிடப் பட்ட புத்தகம்தான்¡ “Dravidian Model - Interpreting the Political Economy of Tamil Nadu.”  புத்தக வெளியீட்டு நிகழ்வில் தமிழர் தலைவர் பங்கேற்க முடியாதநிலையில் திராவிடர் கழகத் தின் சார்பாக பங்கேற்றிட பொறுப்பாள ரைப் பணித்தார்.  புத்தக வெளியீடு நடைபெற்ற நாள் 16.04.2021.  இதுபற்றிய செய்தி வெளிவந்தது தமிழ் ஏடுகளில் ‘விடுதலை’யில் மட்டுமே.  விரிவாக செய்தி வரவேண்டுமென்பதில் ஆசிரியர் அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார்.  காரணம் எந்த ஆட்சி நிர்வாக நடைமுறைகள் மக்களுக்குப் பயனளிக்கும் எனக் கருதப்பட்டதோ. அதனைப்பற்றி கல்வி ஆராய்ச்சி அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு ஆவணப்படுத்தி அதனை ‘திராவிட மாடல்’ என்ற தலைப்பிலேயே வெளியிட்டனர்.

புத்தகம் வெளியிடப்பட்ட அன்றிரவே ‘திராவிட மாடல்’ புத்தகம் ஆசிரியர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஒரே நாளில் புத்தகம் முழுவதையும் படித்துவிட்டு மூன்று நாள்கள் காணொலி மூலம் ‘திராவிட மாடல்’ எனும் தலைப்பில் தொடர் உரை ஆற்றினார்.   ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள திராவிடர் இயக்கம் ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்திய கருத்துகள் அதன் நடைமுறைகள் பற்றிய விபரங்களை காணொலி வாயிலாக சாதாரண பொதுமக்களுக்கும் விளங்கிடும் வகையில் ஆசிரியர் கொண்டு சென்றார். 

 கடினமான ஆழ்ந்த கருத்துகளையும் எளிமையாகச் சொல்லிப் புரிய வைக்கும் கடினக் கலையில் வல்ல வரல்லவா ஆசிரியர் அவர்கள்!  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முதன்மை ஆசிரியராக வெளியிட்டு வரும்‘The Modern Rationalist’ ஆங் கில மாத இதழிலும், ‘உண்மை’ தமிழ் இருவார இதழிலும் ‘திராவிட மாடல்’ குறித்து கட்டுரைகள் இடம் பெற்று அது பற்றிய செய்திகளை மக்கள் மத்தியில் பரவலாக்கிடும் பணியிலும் ஆசிரியர் அவர்கள் முதன்மையாளராக இருந்தார். 

தந்தை பெரியாரின்  கருத்துகளை - அதன் நடைமுறை வெற்றியை, அதனால்  மக்கள் அடைந்த முன்னேற்ற நிலைகள்  பற்றிய ஆய்வு ஆவணத்தை பொதுவெளியில் பரப்புரை செய்வதை  அடிப்படைக் கடமை எனக் கருதினார். ‘திராவிட மாடல்’ எனும் சொல்லாக்கத்தை பொதுவெளியில் அனைவரும் அறிந் திட காலம் கருதாது அரும்பாடுபட்டார்.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை யிலான கூட்டணி வெற்றி பெற்று சமூக நீதியின் சரித்திர நாயகர் என தாய் கழகமான திராவிடர் கழகத்தால் பாராட்டப் பெறும் வகையில் மானமிகு மு.க.ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்றார். ஆட்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து திராவிடர் இயக்கக் கொள்கைத்தடத்தில்  இது ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று பறைசாற்றி நல்லாட்சி வழங்கி வருகிறார்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் தனிச் சிறப்புகளில் ஒரு கீற்று:

ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை - 2020 இலக்குகளில் ஒன்றாக - பள்ளிக் கல்வியினை முடித்து கல்லூரிப்படிப்பிற்குச் செல்லும் மாணவர் விகிதம் (Gross Enrolment Ratio-GER)  50 விழுக்காடு    என நிர்ணயிக்கப்பட்டுள்ளது (அதன் தற்போதைய தேசிய நிலவரம் 27.1 தான்) ஆனால், தமிழ்நாடு கல்விப் புரட்சியினை பல ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி தேசிய கல்விக் கொள்கை நிர்ணயித்த GER விகிதத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துவிட்டது. (தமிழ்நாட்டின் GER 51.4 ஆகும்). இதனால்தான் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை தமிழ் நாட்டிற்கு உகந்தது அல்ல, மாநில கல்விக்கு மாநில அரசே கல்விக் கொள்கையினை வகுத்துக் கொள்ளும் என முதல்வர் தெரிவித்துள்ளார். முன்னேற்றம் என்பதில் பொருளாதார முன்னேற்றமும், அடிப்படையில் சமூக முன்னேற்றமும் அடங்கியது என்பதை விளக்கிடும், நடைமுறைப்படுத் திடும் ஆட்சிமுறையே ‘திராவிடல் மாடல்’.

இன்று நிலவிடும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அடிப் படைக் கூறுகளில் முக்கியமான ‘சமத்துவ சமுதாயம்’ பற்றிய கருத்து வெளிப்பாடு, 1962ஆம் ஆண்டில் ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை’ ஏட்டில் எழுதிய ‘வரி இல்லாமல் ஆட்சி வேண்டுமா?’ எனும் தலையங்கத்தின் மூலமே வெளிப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ‘திராவிட மாடல்’ எனும் சொல்லாக்கம் அது தொடர்பான ஆதார ஆவணக் குறிப்புகள், தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்தது பற்றிய தரவுகள், மற்ற கல்வி ஆராய்ச்சிக் குறிப்புகளைப்போல் நிறுவன நூலகங்களில் முடங்கிவிடாமல் பொதுவெளியில் ‘திராவிட மாடல்’ எனும் சொல்லாக்கத்தினை பரவலாக்கியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆவார். திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் கொள்ளை வழித் தோன்றல் என்பதை ‘விடுதலை’ ஏட்டில் தான் எழுதிய முதல் தலையங்கத்திலிருந்து, இன்றைக்கும் தொடர்ந்திடும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குப் பக்கபலமாக இருந்து சமுதாயப் பணி ஆற்றிவருகிறார்.

திராவிட இயக்க கொள்கைகளை நடைமுறைப்படுத் திடும் ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர்ந்திடுக!

அரசியல் தளத்தில் ஊக்கப்படுத்திவரும் தமிழர் தலைவரின் ஆக்கப் பணிகள் தொடர்ந்திடுக!

No comments:

Post a Comment