ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: காவல் துறை மற்றும் சில அரசு அதிகாரி களின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஆர்.எஸ். எஸ். அமைப்பின் வேர்கள் தலைமைச் செயலகம் தொடங்கி தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவி விட்டது போல் தெரிகிறதே, எதிர்கொள்வது எப்படி?

- அ.தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்:  காவல்துறையில் ஊடுருவியுள்ள சில அரசு அதிகாரிகளின் உடை - வெளியில் காக்கி, உள்ளே காவியோ என்று எண்ணும்படி அவர்களது நடவடிக்கை உள்ளது.

தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் காவல்துறை உள் ளது என்பதைக்கூட அவர்களுக்குப் பல நேரங்களில் நினைவுபடுத்த வேண்டியுள்ள மோசமான நிலை உள்ளது.

இதற்கு முதலமைச்சர் அவர்கள் விடியல்  அமைச் சரவையால் விடிவு காண விரைந்து செயல்பட வேண்டும் - படுவார் என்று நம்புகிறோம்.

- - - - -

கேள்வி: தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான மோதல் ஒன்றிய- மாநில அரசுகளிடம் இருப்பது போல் தெரிந்தாலும், அதன் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை பின்பற்றுவதாக முற்போக்கு கல்வியாளர்களால் தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப் படுகிறதே!

-தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில்:  இதுபற்றிய விரிவான விளக்கமான கருத்து களையும், கட்டுரை விளக்கங்களையும் -இப்படிக் கருதும் நண்பர்கள் காலதாமதம் செய்யாமல் எழுதி நமக்கு அனுப்பட்டும். நாமும் நம் பங்கைச் செய்யத் தயார்!

- - - - -

கேள்வி: திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசாவுக்கு எதிராக சங்கிகள் தமிழ்நாடு தழுவிய போராட்டம் நடத்தும் நிலையில் முற்போக்கு சக்தி களின் ஆதரவு பலமாக இல்லையே?

- கலியபெருமாள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), கோரைக் குழி

பதில்:  எல்லோரும் ஆதரிப்பவர்களே!- தேவைப்படும் போது அதன் ‘விஸ்வரூபம்’ வெளியே தெரியும். (நீங்கள் நினைப்பதுபோல யாரும் ஒதுங்கவில்லை).

- - - - -

கேள்வி: இந்த இக்கட்டான சூழலில் இந்திய தேசிய காங்கிரசுக்குத் தேர்தல் நடைபெறுவது சரியா?

- கா.பெரியார் செல்வன், ஜெயங்கொண்டம்

பதில்:  மேலும் தாமதிப்பது அதைவிட ஆபத்து  - அசோக் கெலாட் போன்ற பிற்படுத்தப்பட்ட - தலைவர் கள்  வருவது விரும்பத்தக்கதே! -தலைவரின்றி காங் கிரஸ் தனது தேர்தலைச் சந்திப்பது சரியாகாது!

- - - - -

கேள்வி: உள்ளாட்சி பொறுப்புகளுக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட பெண்கள் சுதந்திரமாக செயல்பட அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது போல் இருக்கிறதே, முழு உரிமை எப்போது கிடைக்கும்?

- நித்தியா, வளசரவாக்கம்.

பதில்:  ஒரே நாளில் வராது; அதுதானகவே நடப்பது காலத்தின் கட்டாயம். இன்னும் சில மாதங்களில் அவர்களே - மகளிரே- தயாராகிவிடுவார்கள். கவலை வேண்டாம்!

- - - - -

கேள்வி: நாம் எத்தனை முறை வேண்டுகோள் வைத்தாலும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத் துள்ளாரே, சட்டரீதியாக இதற்கு தீர்வே இல்லையா?

- உ.விஜய், சோழங்குறிச்சி

பதில்:  சட்டரீதியாகவும், மக்கள் மன்ற ரீதியாகவும் தீர்வு தேட வேண்டிய அவசரம் நெருங்கிக் கொண்டு உள்ளது. ஆளுநரே, மக்கள் எதிர்ப்பு நெருப்போடு விளையாடுகிறார்!

- - - - -

கேள்வி: தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை சீர் குலைத்து மத மோதலை உருவாக்கும் அளவிற்கு மோசமான பதிவுகளைப் போடும் சங்கிகளை சொந்த ஜாமீனில் விடுதலை செய்கிறதே நீதிமன்றம்?

- தமிழ்ச்செல்வன், சிறுபாக்கம்

பதில்:  என்ன செய்வது? அங்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம், முந்தைய அரைக்கால் சட்டை ஆதிக்கம், பூணூல் ஆதிக்கம்; அதோடு சில நீதிபதிகள் நாட்டின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்காமல், தங்களின் எதிர்காலம் பற்றியே சிந்திக்கும் வேதனையான வெட்கப்படும் படியான நிலையும் உள்ளதே!

- - - - -

கேள்வி: தமிழ்நாட்டில் ஓர் உணவகத்திற்கு பெயர் வைத்தால்கூட இப்படி கலவரம் செய்கிறார்களே சட்டரீதியாக மட்டும் இவர்களை சமாளிக்க முடியுமா?

- கிருபாகரன், பெருங்களத்தூர்

பதில்:  சட்டரீதியாகத் தான் தற்போது நடவடிக்கை கள். துள்ளுகிற மாடு பொதி சுமக்கும். கூலிப்படைகள் கடைசி வரை தேறாது!

- - - - -

கேள்வி: அரசு விழாக்களில் தொடர்ந்து பூமி பூசை என்ற பெயரில் மதச்சடங்கை செய்கிறார்களே? இதனை எதிர்த்து களமாடும் தருமபுரி டாக்டர் எம்.பி. செந்தில் அவர்களுக்கு கட்சியிலும் வெளியிலும்  ஆதரவு  உள்ளதா?

- திலீபன், எருக்கஞ்சேரி

பதில்: ஆதரவு இருக்கிறதா என்பதைவிட, அவரது செயலில் நியாயமும் அரசமைப்புச் சட்டப்படியான ஒழுங் கும் நெறியும் இருக்கிறதா என்ற கேள்விதான் முக்கியம். பின்பகுதிக்கு, இருக்கிறது என்ற பதிலே முக்கியம்! இப்படி முதுகெலும்பு உள்ளவர்களும் இருப்பது மகிழ்ச்சியே!

- - - - -

கேள்வி: மனுதர்மம் இந்துக்களால் இப்போது பின்பற்றப்படவில்லை என்று கூறுகிறார்களே?

- கார்த்திகேயன், பருத்திப்பட்டு

பதில்: ‘அப்படியா? பிறகேன் பார்ப்பனர்கள் முதுகில் பூணூல்? ஆவணி அவிட்டக் கொண்டாட்டம் ஏன்? ஆகமம், பூஜை, சமஸ்கிருத மந்திரப் புரோகிதர் எல்லாம் அவாளே வரவேண்டும் என்று அடம்பிடிக்கும் அழி வழக்குகள் ஏன் என்று அவர்களிடம் கேளுங்கள்!


No comments:

Post a Comment