பெரியார் குறித்துப் பேசாதீர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 20, 2022

பெரியார் குறித்துப் பேசாதீர்கள்!

சென்ற வாரம் திருப்பூரில் அனிச்சம் கண்காட்சிக்கு  25+ வயதில் நான்கு பெண்கள் ஒன்றாக வந்திருந் தனர்...

அவர்களில் ஒருவர் என் அருகில் வந்து என்னுடைய கைகளை பற்றிக் கொண்டு "ரொம்ப நல்லா பண்றீங்க அக்கா, உங்கள ரொம்ப பிடிக்கும் ... அந்த பெரியாரை பேசறத மட்டும் நிறுத்துங்க அக்கா?"னு சொன்னார் ...

"எதற்காக மா நான் பெரியார் குறித்து பேசுவதை நிறுத்தணும்னு" கேட்டேன் ...

"பொண்ணுங்க வாழ்க்கைக்கும், அந்தாளுக்கும் என் னக்கா சம்பந்தம்? நாம படிச்சோம், நாம சம்பாதிக்கறோம்.. பேரு மட்டும் பெண்ணுரிமைப் போராளினு அந்தாளுக்கா?" என்றாள். 

அவளுடைய வயதைக் கேட்டேன், 26 என்றாள். திருமணத்தின் போது வயது என்னவென்று கேட்டேன் 25 என்றாள்.

ஏன் லேட்?  எனக் கேட்டதற்கு, "டபுள் டிகிரி முடிச்சு எனக்கு புடிச்ச வேலயை 2 வருசம் பண்ணிட்டு தான் கல்யாணம்னு இருந்தேனுங்கக்கா" என்றாள் ...

குழந்தை என்றேன், "மேரேஜ்க்கு அப்புறம் 2 வருசம் ஊர் உலகத்தை சுத்திட்டு தான் குழந்தைனு அருண் கிட்ட கன்டிசன் போட்டுத்தான் ஓகே சொன்னேங் கா..."

யாருமா அருண்? என்றேன், "அவரத்தான் சொல்றேன் கா" என்றாள்.

இறுதியாக, துப்பட்டா அணியாத குர்தியில் தெரிந்த அவளுடைய கழுத்தை பார்த்துக் கொண்டே  அவளிடம் ஒன்றை கேட்டேன் ,

"திருப்பூருல கொடி போட்டுக்கற  பழக்கம் ரொம்ப குறைஞ்சிருச்சு போல கண்ணுனு ..."

"ஆமாங்க கா நாங்க போடறதே இல்லைங்கா, கழுத்து கறுப்பாகறதுக்கு ரீசனே அதுதானுங்கக்கா ..."

எப்பவாது கோயிலுக்கு  போகும் போது யூஸ் பண்ணறதோட சரினு சொன்னா ... 

"நீ இப்போ பேசுன எதையும் 30 வருசத்துக்கு முன்னாடி உங்க அம்மா இப்படி பேசியிருக்க முடியுமானு?" கேட்டேன் ... "காலம் மாறுது இல்லிங்கக்கா, நாமளும் மாற வேண்டியது தான்" என்றாள்.

500, 1000 வருசமா மாறாத காலம், இந்த 50 வருசத்துல இவ்ளோ வேகமா பொம்பள புள்ளைங்க வாழ்க்கைய மாத்திருக்குனா அதுக்கு காரணம் பெரியார், 

"பெண்ணின் திருமண வயதை 21 ஆக மாற்றி சட்டம் போடனும்னு 50 வருசத்துக்கு முன்னாடியே சொன்னவரு, ... பொம்ள என்ன குழந்தை பெத்துத்தர இயந்திரமானு கேட்டவர் பெரியவர்... பெண்ணுக்கு சுதந்திரம் வேணும்னா அவ வேலைக்கு போய் சம்பாதிச்சு அவளோட தேவைகளை அவ காசுல செஞ்சாத்தான் இங்க எல்லாமே மாறும்னு" முழங்கினது "பெரியார்"னு  சொல்லி அனுப்பி வைத்தேன்.

- அனிச்சம் கனிமொழி

சமூக வலைத்தளப் பதிவு


No comments:

Post a Comment