'நீட்' தேர்வு விலக்கு மசோதா: குடியரசுத்தலைவர் ஒப்புதல் தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

'நீட்' தேர்வு விலக்கு மசோதா: குடியரசுத்தலைவர் ஒப்புதல் தேவை

அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


திருவனந்தபுரம், செப். 4 நீட்’ தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளாவில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். 

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று (3.09.2022) நடந்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

தென் மாநில முதலமைச்சர்கள்  கூட்டத்தை நடத்தி அதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் தலைமை வகிப்பது நல்ல முயற்சியாகும். பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளக்கூடிய சாதகமான கூட்டமாக இதை நான் பார்க் கிறேன். 

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் எங்கள் நோக்கம். இதை 50 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிந்தபோது நாங்கள் சிறுபான்மையாக இருந்தோம். இன்று, அனைத்து மாநில அரசுகளும், கட்சிகளும் எங்கள் நோக்கத்தை தழுவியுள்ளன. 'அனைத்தும் அனைவருக்கும்' என்ற கொள்கையின் அடிப்படையில் திராவிட மாடல் செயல்பாடுகளை நாங்கள் வடிவமைத்து உள்ளோம். எங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கியமான நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம்.

குடியரசுத்தலைவரின் ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மாநில அரசுகளின் நிதிக்கான தன்னாட்சி உரிமையில் அதிக அளவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே அதன் இழப்பீட்டு கால அளவு 2 ஆண்டுகள் வரை நீட்டிக் கப்பட வேண்டும். பேரிடர் நிவாரண நிதி போன்ற நிதிகள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவக்கல்வி சேர்க்கைக்கான ('நீட்' தேர்வு விலக்கு) சட்டமசோதா தமிழ்நாடு சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் தலையிட்டு, அந்த மசோதாவுக்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்குவதன் மூலம் பொருளாதார உயர்வு, மாசு குறைவான அதிக போக்குவரத்து சக்தி கிடைக்கிறது. 

இது விமானம், வாகனங்கள் உருவாக்கும் மாசைவிட குறைவாக உள்ளது. பயணிகளின் சராசரி பயண வேகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி போன்ற சில முக்கிய இடங்களையும், பக்கத்து மாநிலங்களையும் இணைக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்கித் தர வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான செயல்பாட்டு முறையை அமைப்பதற்கான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். 

ஏனென்றால் மாநில அரசுகளுடன் தூதரகங்கள், ஒன்றிய அமைச்சகங்கள், முகமைகள் மற்றும் வெளிநாடுகள் புரிந் துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள விரும்புகின்றன. சில நேரங்களில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து தடையில்லை என்ற அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, சில விஷயங்களில் குறிப்பாக முதலீட்டு மேம்பாடு, பல்கலைக் கழகங்களை வலுப்படுத்துவது, தொழில் கள் போன்றவை தொடர்பாக, மற்ற நாடுகள், ஒன்றிய அமைச் சகங்கள், முகமைகளுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந் தங்களில் கையெழுத்திடும் செயல்முறையை எளிமையாக்க வேண்டும்.

 நாட்டிலேயே அதிகமாக 27 ஜிகாவாட் நிலக்காற்று சக்தியை பெற்றுள்ள மாநிலம் தமிழ்நாடு

சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது. எனவே மின்சார சட்ட திருத்த மசோதா-2022 திரும்ப பெறப் பட வேண்டும். மாநில அரசுக்கு சொந்தமான மின் விநியோக உரிமை பெற்றவர்களை, மக்களுக்கு உகந்த விலையில் மின் வினியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும். ரெய்கார்-புகழூர்-திரிசூர் 800 கிலோவாட் எச்.வி.டி.சி. அமைப்பு, தேசிய சொத்தாக அறிவிக்கப்பட வேண்டும். சிறந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்புக்காக, காற்று வீசும் காலமான ஜூன், ஜூலை மாதங்களில் வருடாந்திர மறுசீரமைப்பு திட்டம் மற்றும் அணுமின் நிலையங்களில் எரிபொருள் நிரப்புதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். நாட்டிலேயே அதிகமாக 27 ஜிகாவாட் நிலக்காற்று சக்தியை பெற்றுள்ள மாநிலம் தமிழ்நாடாகும். எனவே இதற்கான எந்திரங்கள் அதிக அளவில் இயக்கப்படலாம். இந்த மின்சக்தி முழு வதையும் தமிழ்நாடே கொள்முதல் செய்ய விரும்புவதால் அதற்கேற்ற வசதிகளை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பாதுகாப்புக்காக உன்னிப்பான மற்றும் நிலையான கண்காணிப்பு, சட்டம் -ஒழுங்கு பராமரிப்பு, சமூக நல்லிணக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டிக்காத்து வருகிறது. எனவே மாநில பாதுகாப்புக்கான தகவல்கள் இருந்தால் அவற்றை உரிய நேரத்தில் அளிக்கவேண்டும். மேலும், தென் மாநிலங்களின் உளவுப்பிரிவு தலைவர்களுக்கு இடையே இன்னும் நல்ல ஒருங்கிணைப்பை வலியுறுத்துகிறேன். தென் மாநிலங்களான நாம், பொதுவாக பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். நமது கலாச்சாரம், மொழி ஆகியவை பல ஒற்றுமைகளையும், நீண்ட வரலாறையும் கொண்டவை ஆகும். 

தமிழ்நாட்டிற்கு 

ஒரு வாய்ப்பைத்தர வேண்டும்

‘திராவிட குடும்பம்' என்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை நமது மொழிகள். ராபர்ட் கால்டுவெல் என்பவரால் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் நம்மிடையே சகோதரத் துவ உணர்வோடு ஒற்றுமையாக, ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற வழியில் செயல்பட வேண்டும். இந்த அன்பு, நல்லிணக்கத்துடன் நாம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு, ஒற்றுமை மற்றும் வளர்ச்சியில் முன்னேறுவோம். அடுத்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை நடத்த தமிழ்நாட்டிற்கு ஒரு வாய்ப்பைத்தர வேண்டும். 

இவ்வாறு தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கிலத்தில் உரையாற்றினார். 

No comments:

Post a Comment