இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் சிறப்புரை

 அய்ரோப்பாவில் அறிவு யுகம் தோன்றி செய்ததை, தன்னந்தனியாக ஒரு தனி மனிதன்,

தமிழ் மண்ணில் இந்தியாவில் செய்தார் என்றால், 

அது தந்தை பெரியார் மட்டும்தான்!

சென்னை, செப்.21 அய்ரோப்பாவில் அறிவு யுகம் தோன்றி செய்ததை, தன்னந்தனியாக ஒரு தனி மனிதன், தமிழ் மண்ணில் இந்தியாவில் செய்தார் என்றால், அது தந்தை பெரியார் மட்டும்தான். சுயமரியாதை என்ற அந்த சொல்லுக்குள் ஆழ்ந்த பொருள் இருக்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள்.

‘விடுதலை' சந்தா வழங்கும் விழா!

கடந்த 6.9.2022 அன்று மாலை  சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற 60 ஆண்டுகால ‘விடுதலை' ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் திரட்டிய ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தோழர்களே,

தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ‘விடுதலை’ ஏடு

60 ஆண்டுகள் அறிவியல் பூர்வமாக, பகுத்தறிவைச் சுமந்தபடி நடைபோடும், தந்தை பெரியாரால் தொடங்கப் பட்ட மகத்தான ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ‘விடுதலை’ ஏட்டில் 60 ஆண்டுகள் ஆசிரியர் பணி என்பது சாதாரணமானதல்ல.

அத்தகைய மிகுந்த வரலாற்றுப் பொருள் பொதிந்த அந்த சேவைக்கு, கடமைக்கு பாராட்டும் விதமாக இங்கே குழுமியிருக்கிற தமிழ்கூறும் நல்லுலகம் கட்டி அணைத்துக் கொள்கிற மகத்தான தலைவர்கள் இங்கே வீற்றிருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் நான் இருகரம் கூப்பி வணங்குகின்றேன்.

உங்களோடு சேர்ந்து இந்திய விடுதலைப் போர் காலம்தொட்டு இன்றுவரை சுயமரியாதைக் கருத்திற்காக, பகுத்தறிவு கருத்திற்காக, சமதர்மக் கருத்திற்காகக் கள மாடுகிற ஒரு மகத்தான பேரியக்கத்தின் உறுப்பினர் என்கிற வகையில், அதன் ஆயிரக்கணக்கான தொண்டர் களின் சார்பில் ஆசிரியர் இனமான தலைவர் திராவிடர் கழகத்தின் பேரன்பிற்குரிய தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்வாங்கு வாழவேண்டும் - மகத்தான சாதனைகள் புரியவேண்டும் என்று இதயபூர்வமான வாழ்த்துகளை நான் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்களே, நண்பர்களே 60 ஆண்டுகள் என்பது - அதிலும் ஆசிரியர் பணி என்பது சாதாரணமானதல்ல. அக்டோபர் புரட்சி வெற்றியடைந்த தருவாயில், ‘இஸ்காரா' என்கிற ‘தீப்பொறி' என்கிற பத்திரிகையை உருவாக்குவதாக லெனின் சொன்னார். இது எழுச்சி யூட்டும் ‘ஆர்கனைசர், ஆரேட்டர், அஜிடேட்டர்' என்று  அவர் சொன்னார்.

அதை இன்றுவரை பெட்ரோகிராட் வீதிகளில் லெனின் சொன்னதை, இந்தத் தமிழ் மண்ணில் தந்தை பெரியார் தொடங்கி, இனமான ஆசிரியர் வரை அதை இன்றுவரை செயல்படுத்துகிற ஒரு நாளேடு என்று சொன்னால், அது ‘விடுதலை’ - அதன் ஆசிரியர். ஒரு மகத்தான பணி இந்தப் பணி.

அமெரிக்க எழுத்தாளர் காரிசன்

அமெரிக்க எழுத்தாளர் காரிசன் சொல்வார் - எப்பொ ழுதுமே நீங்கள் நகைச்சுவையாகவே எழுதுகிறீர்களே, உங்கள் வாழ்க்கையில் துயரம் இல்லையா, துன்பம் இல்லையா? என்று அவரிடம் கேட்டபொழுது,

அவர் சொல்வார்,

என்னுடைய எழுத்துகளை உரித்துப் பாருங்கள்; அதில் வடிகின்ற ரத்தம் உங்களுக்குத் தெரியும் என்று.

அடக்குமுறைகள் தெரியும், ரணம் தெரியும், வேதனை தெரியும், எதிர்கொண்ட எதிர்நீச்சல் தெரியும்!

88 ஆண்டுகாலம் தந்தை பெரியார் தொடங்கி, ஆசிரியரின் 60 ஆண்டுகாலம் வரை - அந்த எழுத்துக் களை உரித்துப் பார்த்தால், அதில் இருக்கிற அடக்கு முறைகள் தெரியும், ரணம் தெரியும், வேதனை தெரியும், எதிர்கொண்ட எதிர்நீச்சல் தெரியும்; அத்தனையும் ஒரு வடிவாக ஒவ்வொரு எழுத்துக்களாக உரித்துப் பார்க் கின்ற துணிச்சல் வேண்டும்.

நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம், நான் ஏறத்தாழ 35 ஆண்டுகள் ‘விடுதலை'யை வாசிக்கின்றவன். நாங்கள் மறந்தாலும், எங்கள் அலுவலகத்தில் ‘முரசொலி' இருக்கும், ‘விடுதலை’ இருக்கும்.

நீங்கள் எப்படி ‘தீக்கதிரை', ‘ஜனசக்தி'யைத் தேடுகிறீர்களோ, அதேபோல ‘விடுதலை’யை, ‘முரசொலி'யைத் தேடுவோம்; அது எங்களுக்கு இயல்பு.

அந்த வகையில் ‘விடுதலை’யில் வெளிவந்த பல தலையங்கங்களை நான் பார்த்திருக்கிறேன். இதே மேடையில், அவர் பேசுவதை, நூறு முறை நான் கேட்டி ருக்கிறேன்.

பகை முரண் அல்ல - வளர் முரண்!

நமக்கான உறவுகள் முரண்பட்ட காலங்களிலும் அவர் எழுதியிருக்கிறார்; ‘தீக்கதிருக்கு'ப் பதில், ‘ஜன சக்தி'க்குப் பதில்.

முரண் இருந்திருக்கிறது - தாக்கி எழுதியிருக்கிறார்; அது பகை முரண் அல்ல - வளர் முரண் என்பதை எந்த இடத்திலும் நம்மால் சொல்ல முடியும்.

தந்தை பெரியார் ‘சுதேசமித்திரனுக்குப்' பதில் சொல் லியிருப்பார்; ‘இந்து' நாளிதழுக்கு நம்முடைய இனமான ஆசிரியர் பதில் சொல்லியிருப்பார். அவையெல்லாம் பகை முரண். 

எனவே, இந்த முரணுக்கும், அந்த முரணுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த வகையில், முரண் பட்டு இருக்கிறோம்; அப்பொழுதும் நீதி வழுவாமல், அந்தத் தோழமை வழுவாமல் எழுதுகிற எழுத்தை நான் பலமுறை ரசித்திருக்கிறேன்.

என்னால், அறுதியிட்டுச் சொல்ல முடியும் - தமிழகப் பத்திரிகைகளில் நீதிமன்றத்தை நேருக்கு நேர் சந்தித்து, தலையங்கங்கள் எழுதி, மிகக் கடுமையான சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்ற துணிச்சல் நம் ஆசிரியருக்கு இருந்திருக்கிறது.

ஆண்டு வாரியாக என்னால் சொல்ல முடியும்; தேதி வாரியாக என்னால் சொல்ல முடியும்; அவற்றை நான் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.

சமூகநீதி பாதிக்கப்படுகிறபொழுது...

நீதிமன்றத்தை அவர் கேள்விக்குள்ளாக்கி இருக் கிறார். அதிலும் குறிப்பாக சமூகநீதி பாதிக்கப்படுகிற பொழுது, நீதிமன்றத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத் துகின்ற துணிச்சல் அவர் எழுத்திற்கு இருந்திருக்கிறது; நிறுத்தி இருக்கிறார்.

நீதிமன்றம் ஒன்றும் பெரிதல்ல; அது ஒன்றும் வரம்பற்று வரவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் அதற்கு ஒரு இடத்தை ஒதுக்கி யிருக்கிறார். அதிகமாகச் சொல்லுகிறார் அல்லவா ஆளுநர், அவருக்கே ஓர் இடம் இருக்கிறது. யார் ஆளுநர்? மக்களுக்கு யார் அவர்? அவர் பெயர் என்ன?

முப்படை தளபதிக்கும் பெயர் 

சர்வண்ட் டூ தி பீப்பிள்!

நான் தேநீர்க் கடைக்குச் சென்றால் எனக்குத் தேநீர் தருபவருக்குப் பெயர் என்ன? ‘சர்வண்ட்' டூ தி பீப்பிள்.

டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார், ஆளுநர் அல்ல - முப்படை தளபதிக்கும் பெயர் சர்வண்ட் டூ தி பீப்பிள் என்று ஓரிடத்தில் வைத்திருக்கிறார்.

எனவே, அதிகமாக சட்டமன்றத்தின் தலையின்மீது ஏறி அமரக்கூடாது; அமர முயற்சிக்கவும்கூடாது; முயற் சிக்கிறார் ஆளுநர் - அவருடைய உயரம் தெரியாமல்.

எனவே, நீதிமன்றத்தையே நமது இனமான ஆசிரியர் அவர்கள் தலையங்கத்தில் பலமுறை கேட்டிருக்கிறார் - நீதி சட்டத்திற்கு மேலல்ல. அடிக்கடி நம்முடைய நீதிபதிகள் சட்டத்தின் தலையில் அமரப் பார்க்கிறார்கள், நல்லதல்ல என்று பலமுறை அவர் எச்சரித்திருக்கிறார்.

நேருக்கு நேர் சந்தித்தது ‘விடுதலை’

நீதிமன்றத்திற்கு ஓர் உயரம் இருக்கிறது; அது நாடாளுமன்றத்தின் தலையில் அமர்ந்துவிட முடியாது. அடிக்கடி முயற்சி செய்கிறது; இப்பொழுது அதிகமாக முயற்சி செய்கிறது. 

இந்த நேரங்களிலும், மிகக் கடுமையான  சொல்லா டலில் அதை நேருக்கு நேர் சந்தித்தது ‘விடுதலை’ என்பதை நம்மால் அழுத்தமாகச் சொல்ல முடியும்.

88 ஆண்டுகால பணிகளில் ‘விடுதலை’ மட்டுமல்ல - ‘விடுதலை’க்கு அடுத்துப் பார்த்தால் ‘ஜனசக்தி' - அதற்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது. ‘முரசொலி'க்கு ஒரு பங்கு இருக்கிறது

தந்தை பெரியாரின் பாங்கு சற்றும் குறையாமல்...

தந்தை பெரியார் அவர்களே அச்சுக் கோர்ப்பார்கள்; பணியாட்கள் வரவில்லை என்று சொன்னால், அவருடைய பெயரைச் சொல்லி, அவர் ஏன் வர வில்லை? என்று கேட்பாராம். பணியாளர்கள் உணவு அருந்தி விட்டார்களா? என்று கேட்பாராம். அவரே பிழை திருத்துவாராம்; சாதாரண ஏழைத் தொழிலாளி களைக் கட்டி அணைப்பாராம். 

அந்தப் பாங்கு சற்றும் குறையாமல், அச்சு இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும்பொழுது, அங்கே சென்று பணியாளரின் தோளில் கரம் போடுகிறவர்தான் நம்மு டைய ஆசிரியர் என்பதை அருகிலிருந்து பார்த்தவன் நான்.

எனவே, பத்திரிகை பணி என்பது சாதாரணமானதல்ல. இவற்றையெல்லாம் நாங்களும் அனுபவிப்பவர்கள். சந்தா சேர்ப்பதில் நீங்கள் எப்படி ஈடுபடுகிறீர்களோ, அப்படி ஈடுபடுகிறவர்கள் நாங்கள். சாதாரணமானதல்ல அந்த வலி.

ஒரு புதிய நீதிக்காக, 

புதிய உலகுக்காக களமாடுவது!

60 ஆண்டுகள், 80 ஆண்டுகள் ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது சாதாரணமானதல்ல. அதிலும் நிலவுகிற சமூகத்தைப் பாதுகாக்கின்ற பத்திரிகைகள் வேறு; இந்த சமூக அமைப்பையே மாற்றி, ஒரு புதிய நீதிக்காக, புதிய உலகுக்காக களமாடுவது என்பது வேறு.

நம்முடைய சமூக அமைப்பை மறுத்து எழுதுதல் என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல.

அய்ரோப்பாவில் பலர் தோன்றினார்கள்; சுயமரி யாதை இயக்கம் என்கிற சொல்லே, உலகத்தில் நான் பார்த்தவரை, தமிழ் மண்ணில்தான் தோன்றிய சொல் லாக என்னால் உணர முடிகிறது.

அய்ரோப்பாவில் அறிவுச் சமூகம் ஒன்று தோன்றிவிட்டது. அறிவுலகம் ஒன்று தோன்றிவிட்டது. அந்தப் பின்னணியில்தான் மார்க்ஸ், ஏங்கல்ஸ்கூட பிறக்கிறார் கள்; பிறப்பெடுக்கிறார்கள், தோன்றுகிறார்கள்.

அய்ரோப்பாவில் தோன்றிய 

ஓர் அறிவு யுகம் போன்று

ஆனால், இங்கே அத்தகைய ஓர் அறிவு யுகம், அறிவுச் சமூகம் தோன்றவில்லை. செழுமையான தமிழ் மொழி இருந்தது. கலாச்சாரமும், பண்பாடுக் கூறுகளும் இருந்தன. ஆனால், அய்ரோப்பாவில் தோன்றிய ஓர் அறிவு யுகம் போன்று இங்கே தோன்றவில்லை. 

தன்னந்தனியாக ஒரு தனி மனிதன், 

தமிழ் மண்ணில் இந்தியாவில் செய்தார்

அய்ரோப்பாவில் அறிவு யுகம் தோன்றிச் செய்ததை, தன்னந்தனியாக ஒரு தனி மனிதன், தமிழ் மண்ணில் இந்தியாவில் செய்தார் என்றால், அது தந்தை பெரியார் மட்டும்தான்.

எனவே, சுயமரியாதை என்ற அந்த சொல்லுக்குள் ஆழ்ந்த பொருள் இருக்கிறது.

எனவேதான், அந்த இயக்கம் இன்னும் உயிர் வாழ்கிறது. அதற்குள் சமத்துவம் இருக்கிறது; சமூகநீதி இருக்கிறது. ஒரு மனிதன் எதன் பொருட்டும் இன்னொரு மனிதனை அடக்கக் கூடாது; அடிமைப்படுத்தக் கூடாது.

இன்னொரு மனிதன் தான் அடிமையாக இருக்கி றோம் என்பதை உணராமல் இருக்கக் கூடாது.

தந்தை பெரியார் சொன்னதில், எவ்வளவு ஆழம் இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். சுயமரியாதை என்பதைச் சுருக்கிவிட்டார்கள்.

அது வெறும் கடவுள் மறுப்பா?

அது வெறும் பெண்ணுரிமை மட்டுமா?

மதத்தை மறுப்பது மட்டுமா? என்றால், அல்ல.

தந்தை பெரியார்தான் தமிழ் மண்ணில் 

மிகத் துணிச்சலாகச் சொன்னார்

சுயமரியாதை என்பது 40 கோடி பேருக்குத் தேவை யான செல்வ வளங்களை ஒருவன் சுருட்டி வைத்திருக் கிறான் அல்லவா - பதுக்கி வைத்திருக்கிறான் அல்லவா அதுவும் சுயமரியாதைக்கு எதிரானதுதான். இதை தந்தை பெரியார்தான் தமிழ் மண்ணில் மிகத் துணிச்சலாகச் சொன்னார்.

இதை அழுத்தமாகச் சொல்லவேண்டிய அவசியம் இன்றைக்கு நமக்கு இருக்கிறது.

எனவே, மிக மகத்தான ஒரு பெரும் பணி - அந்தப் பணியில் அவர் மட்டும் இல்லை. இடதுசாரிகள் இருக்கி றோம்; ஜனநாயக சக்திகள் இருக்கின்றன. அவருடைய அந்தப் பணி தொடரவேண்டும்.

பெரும் நெருக்கடியான காலச் சூழல் - உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நிலவாத ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம் நம்முடைய நாட்டில் நிலவுகிறது.

டாக்டர் அம்பேத்கர், ஜவகர்லால் நேரு போன்ற மேதைகள் அதை நமக்கு அளித்திருக்கிறார்கள்.

இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இந்தியா வெறும் சொல் அல்ல. ஒரு தேசத்தின் குறியீடு அல்ல. ஆழ்ந்த பொருளை அறிவியல் பொருளை தன்னகத்தே கொண் டிருக்கிறது.

ஒன்றை ஒன்று நிரப்பிக் கொள்வது - நிராகரிப்பதல்ல!

இந்தியா என்றால், பன்முகம். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் அது இல்லை.

இந்தியா என்றால், அனுசரிப்பு -

ஒன்றை ஒன்று நிரப்பிக் கொள்வது - நிராகரிப்பதல்ல.

ஒன்றின் சிறப்பை ஒன்று நிரப்பிக் கொள்வது. அது மதமாக இருந்தாலும், மொழியாக இருந்தாலும், இனமாக இருந்தாலும், நிலப்பரப்பாக இருந்தாலும், கண்டங்களாக இருந்தாலும், ஒன்றை ஒன்று நிரப்பிக் கொள்வது. அப்படி நிரப்பிக் கொண்டுதான் இந்தியா உயிர் வாழ்வதாக டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்.

வெல்ல முடியாமல் இந்த நாடு முன்னேறுவதற்குக் காரணம், அது நிரப்பிக் கொள்கிறது. ஒன்றிலிருந்து ஒன்று நிரப்பிக் கொள்கிறது.

அப்படி நிரப்பிக் கொண்ட காரணத்தினால், எல்லாவற்றையும் வென்று இந்தியா வாழ்கிறது என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னார்.

அதுதான் இந்தியாவின் பன்முகம்.

எந்த மதத்தையும் சாராது இருப்பது இந்தியா!

மதச்சார்பின்மை இந்தியா!

எல்லா மதங்களையும் சார்ந்திருப்பது அல்ல இந்தியா! எந்த மதத்தையும் சாராது இருப்பது இந்தியா!

எந்த மதம் வேண்டுமானாலும் இருக்கலாம்; இந்தியா என்ற கருத்தாக்கத்திற்குள் அது இருக்கிறது. அதே போன்று நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற நான்கு தூண்கள் நமக்குத் தெரியும்.

அதில் இரண்டு தூண்களை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நிறுவினர்.

ஒன்று, விவாத முறை; இன்னொன்று எதிர்க்கட்சி.

இரண்டையும் அடித்து நொறுக்கி சாய்க்கிறார்.

அதேபோன்று அரசமைப்புச் சட்டம் இன்றைக்கு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நிலவாத ஒரு கூட்டிசைவு இருக்கிறது அல்லவா இந்தியாவில் - எவ்வளவு வேறுபாடுகள், மாறுபாடுகள் இருந்தாலும். ஒன்றை ஒன்று மதித்து, நிரப்பிக் கொள்கின்ற அந்தக் கூட்டிசைவு இருக்கிறதே அது இன்றைக்கு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

பெரியாரின் சிந்தனைகள் கூடுதலாகத் தேவைப்படுகின்றன!

இந்தத் தருணத்தில், நமது தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எழுத்து கூடுதலாகத் தேவைப் படுகிறது. பெரியாரின் சிந்தனைகள் கூடுதலாகத் தேவைப்படுகின்றன.

60, 70 ஆண்டுகளுக்கு முன்பு  தந்தை பெரியார் சொன்னார், அரசியல் இயக்கங்களே கல்விச் சாலை களாக மாறவேண்டும் என்று.

அந்தத் துணிச்சல் எத்தனைக்கட்சிகளுக்கு இருக்கிறது?

எங்கே பார்த்தாலும் ஜாதி, மதம், பிரிவினைவாதம், போதைப் பொருள், நாட்டைச் சீரழிக்கிற அதிகார வர்க் கத்தின் வெறிகள், பெண்கள்மீதான தாக்குதல், ஒடுக்கப் பட்ட மக்கள்மீதான தாக்குதல், நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைகுலைகிற எல்லா சூழலும் நிலவி வருகிறது ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால்.

தந்தை பெரியாரின் 

தொலைநோக்குப் பார்வை!

இதை எப்படி எதிர்கொள்வது?

சமூக அறிவியல் கூடாரங்களாக அரசியல் கட்சிகள் மாறவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன் னார். எவ்வளவு தொலைநோக்குப் பார்வை பாருங்கள்!

அரசியல் இயக்கங்கள் அவ்வாறு மாறவேண்டும்; அத்தகைய துணிச்சல், பெரியாருக்கு அருகில் வருகிற - நெருங்குகிற துணிச்சல் நமக்கு இருக்கிறது; நம்மைப் போன்ற இயக்கங்களுக்கு இருக்கிறது.

பெரியார் நமக்கு முன்னிலும் 

அதிகமாகத் தேவைப்படுகிறார்

பெரியார், நமது எழுத்தினை இந்த உலகை மாற்றுவதற்குத், தமிழகத்தை மாற்றவதற்கு ஒரு புதிய சமூகத்தை நிறுவச் செய்வதற்கு, பெரியார் நமக்கு முன்னிலும் அதிகமாகத் தேவைப்படுகிறார்; டாக்டர் அம்பேத்கர் முன்னிலும் அதிகமாகத் தேவைப்படுகிறார்; மார்க்ஸ்  முன்னிலும்அதிகமாகத் தேவைப்படுகிறார்.

இந்த மகத்தான மனிதர்கள் எல்லாம் நமது பல்கலைக் கழகம் - பேராசிரியர்கள் - எனவே, இதை உள்வாங்கியவர் நம்முடைய தமிழர் தலைவர். அவர் நீடூழி வாழவேண்டும்.

ஆசிரியருடைய எழுத்துகளுக்கு மரணமுமில்லை - தோல்வியும் இல்லை!

அவருடைய எழுத்துகளுக்கு மரணமுமில்லை - தோல்வியும் இல்லை. அது வெற்றி பெறவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில், அதன் மாநில செயலாளர் முத்தரசன் அவர்களின் சார்பில், ஆயிரக்கணக்கான தொண்டர் களின், தோழர்களின் சார்பில் இதயபூர்வமாக வாழ்த்தி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!.

- இவ்வாறு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment