சுற்றுலாத் துறை சார்பில் அலுவலகம், தங்கும் விடுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

சுற்றுலாத் துறை சார்பில் அலுவலகம், தங்கும் விடுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை,செப்.28- தமிழ்நாடு அரசு நேற்று (27.9.2022) வெளியிட்டுள்ள தகவல் வருமாறு, சுற்றுலாத் துறையை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வாயிலாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு ஒட்டலில் ரூ.4 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் செலவில் 19,238 சதுர அடி பரப்பில் தங்கும் விடுதி மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், 110 பேர் அமரும் வகையில் தொழில் கூட்டங்கள் நடத்துவதற் கான கூட்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரத்தில் புதிய சுற்றுலா அலுவ லகக் கட்டடம் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட் டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் இந்த அலுவலகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும்.

இதுதவிர, மதுரை, கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா தர்கா மற்றும் மஸ்ஜித் வக்ஃப் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனிதத் தலமாகும். இங்கு நடை பெறும் கந்தூரி திருவிழாவுக்கு அதிகளவில் உள்ளூர் மக்களும், சுற்றுலாப்பயணிகளும் வருகை புரிகின்றனர்.

ஓய்வுக் கூடங்கள்: இந்த தர்காவுக்கு வரும் பயணியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையில் ரூ.1 கோடியே 80 லட்சத்து 21 ஆயிரம் செலவில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஓய்வுக் கூடங்கள், பொருட்கள் வைப்பறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் ஆகிய கூடுதல் வச திகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

காணொலி வாயிலாக.. இக்கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.9.2022) தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலாத் துறைச் செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment