அறிவுதான் நாத்திகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

அறிவுதான் நாத்திகம்

நாமெல்லாம் மனிதர்கள், நமக்கெல்லாம் பகுத்தறிவு இருக்கிற தென்று பெயர். வாழ்வில் பல காரியங்களில் நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துகின்றோம் என்றாலும் பகுத்தறிவுக் கழகம் துவக்கப் படுவது மனிதன் பகுத்தறிவுவாதியாக வேண்டும் என்பதற்காகவே யாகும்.

இங்கு ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் பிறக்கும்போது வேட்டியும், புடவையும் கட்டிக் கொண்டு பிறக்க வில்லை. பிறந்து, பின் பகுத்தறிவு காரணமாகவே உடை உடுத்து கின்றனர். உண்பனவற்றிலும் பகுத்தறிவைப் பயன்படுத்துகின்றனர். பின் ஏன் பகுத்தறிவுக் கழகம் ஏற்படுத்தி மக்களெல்லாம் பகுத் தறிவு பெற வேண்டுமென்கின்றோமென்றால், நமது முன்னோர்கள் என்கின்ற அயோக்கியர்கள், கடவுள், மதம், சாஸ்திரம் என்பதாக ஏற்படுத்தி அவைகளுக்கு அடிமையாக்கி மக்களை இழிபிறவி களாக்கியதோடு, அதுபற்றிச் சிந்திக்கக் கூடாது என்றாக்கி விட்டார்கள்.

நான் ஏன் முன்னோர்களை அயோக்கியன் என்று சொல்கி றேனென்றால், இவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்கக் கூடாது. பெரியவர்கள் சொன்னபடி நடக்க வேண்டுமென்கின்றானே - அதனால் தான் சொல்கின்றேன். முன்னோர்கள் நடந்த மாதிரி இன்று எல்லா காரியங்களிலும் மக்கள் நடக்கின்றார்களா என்றால் கிடையாது.

100, 200 வருடங்களுக்கு முன்னுள்ளவர்கள் நடந்தபடி கூட இப்போதுள்ளவர்கள் நடப்பது கிடையாது. முன்னோர்கள் என்று சொல்பவனெல்லாம் மடையன் மட்டுமல்ல, அயோக்கியனாவான். நம் வளர்ச்சிக்குக் கேடாக இருப்பதெல்லாம் நம் முன்னோர்கள் செய்தது. அதற்குப் பாதுகாப்பாக இருப்பது ஆகியவைகளை அழிப்பதுதான் பகுத்தறிவு.

சிந்திக்கக் கூடாது என்று சொல்பவைகளைத்தான் கண்டிக்கி றோம். அதுபற்றி தான் இன்று சிந்திக்கின்றோம். நாளுக்கு நாள் எவ்வளவு கேடானது, முட்டாள்தனமானது போன்ற காரியங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றோம். சுமார் 60, 70 வருடங்களுக்கு முன்வரை காலரா, அம்மை வந்தால் வெளியே செல்வது கிடை யாது, வைத்தியமும் செய்து கொள்வது கிடையாது; இப்போது அப்படியல்ல.

எனவே, நம் மக்களுக்குத் துணிச்சல், முயற்சி, மாற்றம் யாவும் வேண்டும். இன்றைய தினம் நாம் நம் வளர்ச்சிக்கு, சிந்தனைக்குத் தடையாக இருக்கும் கடவுள், மத, சாஸ்திரங்களைப் பற்றிதான் பேசப் போகிறோம்.

கடவுள், மத, சாஸ்திர, ஜாதி அமைப்பெல்லாம் மடையர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதென்று சொல்லலாம். ஆழ்ந்து சிந்தித்தால் இது அயோக்கியர்களால் அயோக்கியத்தனமாக, தனது சுயநலத் தைக் கருதி நம்மை  இழிவுபடுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட் டவைகள் என்பதை உணரலாம். சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரத்தைப் பார்த்தால் கோயில்கள் எப்படி தோன்றின என் பதை உணரலாம். மக்களை மடையர்களாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவைதான் கோயில்களாகும். இந்த அமைப்பே மக்களை மக்கள் சிந்திக்காதவர் களாக இருக்க வேண்டுமென் பதற்காக அயோக்கியத்தனமாக ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

பகுத்தறிவிற்கு மாறாக அநேக காரியங்கள் நடைபெறுகின்றன. அதற்கு ஆளாவதால் மக்கள் சிந்தனையற்று விட்டனர். பகுத் தறிவை எந்தெந்த காரியத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று தடை வைத்திருக்கின்றானோ அந்தக் காரியங்களில் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் பகுத்தறிவாளர் கழகம் அமைப்பதன் நோக்கமாகும்.

நமது முன்னோர்கள் என்பவர்கள் மடையர்கள் மட்டுமல்ல, அயோக்கியர்களுமாவார்கள். பகுத்தறிவில்லாததால் நாம் அனுபவிக்கிற கேடு என்ன, பகுத்தறிவின் பயனால் மற்றவர்கள் அனுபவிக்கின்ற பலன் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். ஏன் முன்னோர்களை அயோக்கியர்கள் என்கின்றேன் என்றால், “எவன் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்கின்றானோ அவன் நாத்திகன். அவனை அரசன் நாட்டில் வைத்திருக்கக் கூடாது. பிராமணன் ஆயுதம் எடுத்து போர்  செய்து அவனைக் கொல்ல வேண்டும்” என்கின்றான். அறிவாளியைக் கொல்ல வேண்டும் என்கின்றான் என்றால் அவன் அயோக்கியன்தானே!

இங்கு இருக்கிற கடவுளெல்லாம் நமக்குத்தான். இந்த நாட்டை விட்டு தாண்டினால் இது மாதிரி கடவுள்கள் கிடையாது, கடவுள் கதைகள் கிடையாது. ஒரு கடவுள் தான், அதை நம்புகிறவர்களும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றார்கள். இங்குதான் புதுப்புது கடவுள்களை உற்பத்தி செய்து கொண்டு வருகின்றார்கள். இந்தக் கோயில்கள் எல்லாம் மனிதன் மடையனாக வேண்டும், முட்டாளாக வேண்டும், சிந்தனையற்றவனாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவைகளே ஒழிய, வேறு எந்த நல்ல நோக்கத்திற்காகவுமல்ல. பகுத்தறிவும், மானமும் உள்ள மனிதன் குறைந்தது நான்கு கோயிலையாவது இடிக்க வேண்டும். இரண்டு, மூன்று சாமிகளையாவது போட்டு உடைக்க வேண்டும்.

பகுத்தறிவு என்பது சமுதாய வளர்ச்சிக்காக, நம் சமுதாய இழிவு நீக்கத்திற்காக, நாம் மனிதர்களாக, மக்கள் சமுதாயம் ஒன்றாகவுமேயாகும்.

நம் நாட்டில் மக்கள் பெருக்கத்திற்குக் காரணம் கடவுள் கொடுக்கிறார் என்கின்ற முட்டாள்தனமாக குழந்தைகளைப் பெறுவதாலேயாகும். அட மடையா முகத்தில் வளர்கிற முடி கடவுள் கொடுப்பதுதானே. அதையேன் சிரைக்கின்றாய்? பகுத் தறிவு என்பது நம் கேடுகள் அனைத்திற்கும் ஒரு மருந்தாகும். எப்படி சர்வரோக சஞ்சீவி என்கின்றார்களோ, அதுபோன்று நமது சமுதாயத்திலிருக்கிற நோய்கள் அனைத்தையும் போக்கக் கூடி யது பகுத்தறிவேயாகும். பகுத்தறிவாளர்கள் நெற்றியில் சாம்பல் மண் பூசக் கூடாது. பண்டிகைகள், விழாக்கள் கொண் டாடக் கூடாது.

(18.10.1971 அன்று நெய்வேலி நகர பகுத்தறிவாளர் 

கழகத் துவக்க விழாவில் தந்தை பெரியார் அவர்கள் 

ஆற்றிய பேருரை - ‘விடுதலை’ 28.10.1971)


No comments:

Post a Comment