அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (3)

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (3)

புகழ் வேட்டை என்பது புலி வேட்டையை விடக் கடுமையானது! ஏன் சில நேரங்களில் கொடுமையானதும்கூட!  

பொதுவாக 'வேட்டையாடுதல்' என்பதற்குள் பொதிந்துள்ள பொருளே, தேடிச் சென்று பிடித்துக் கொண்டு வருதல் என்பதுதானே!

தானே வந்தால் தான் அது உண்மையாகவே 'புகழ்!'

இன்றேல் இடையில் வந்தால் 'இகழ்' அது!

தேடிப் பிடித்து வருதல் என்பது கொச்சையாக சொல்ல வேண்டுமானால் ஒருவகை வன்புணர்ச்சி இன்பமாகும்!

'புகழ்' என்பது தானே கனிந்த பழத்தின் ருசியாக இருக்க வேண்டுமே தவிர, மருந்து.. போட்டு செயற்கை முறைகளால் பழுக்க வைத்த விரும்பத்தகாத பழம் போன்று இருக்கலாமா?

தேடி, தானே வரும் புகழ் நிலைத்த புகழ்! செயற்கையாக 'நாமாவளி' பாட வைத்து கேட்டு ரசிக்கும் புகழ் கூலிக்கு மாரடித்தவர்களின் ஒப்பாரியின் எதிர் நிலை உவமையாகும்!

சில கட்சிகள் - திடீர்த் தலைவர்கள் தங்க ளுக்குப் "புகழ்" சம்பாதிக்க சில கூலிப் படைகளை 'கூவும் படைகளாக்கி' சில இடங்களில் "வாழ்க, வாழ்க" முழக்கம் போட்டு கடைசியில் காணாமல் போன செலவுக் கணக்குகள் ஏராளத்தைக் கண்டு சுவைத்தது உண்டா?

நல்ல வேடிக்கை நகைச்சுவைகள் இவை. சிலர் -  போலிப் பட்டங்களை விலைக்கு வாங்கி (200 டாலர் 'டாக்டர்' பட்டங்கள்கூட உலகெங்கும் உள்ள போலிப் பல்கலைக் கழகங்களால் தரப் படுகின்றன!)  அப்படி டாக்டர்களாகும் மன நோயாளிக்கு இறுதியில் மிஞ்சுவது துயரமோ, துன்பமோ தானே!

உண்மையாகவே ஆய்வு மூலம் பெற்ற பட்டங்களின்மீதுகூட சாயம் அடித்து, விஷமத் தனப் பிரச்சாரம் செய்யும் கோயபெல்சின் குருநாதர்கள் இந்த பித்தலாட்டத்தைக் கண்டும் காணாத கனவான்கள்!

'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்ற குறளைக் கூட சிலர் தவறாக, 'பிறக்கும்போதே புகழுடன் பிறக்க வேண்டும்' என்று பொருளுரை கூறியபோது, பகுத்தறிவாளர்கள் தான், ஒரு குறுக்குக் கேள்வியை கேட்டு சரியான விளக்க வுரையை அக்குறளுக்குத் தந்தார்கள்!

ஒருவர் தோன்றும்போது, - பிறக்கும்போது என்று பொருள் கொண்டால், பிறக்கும்போது ஒருவர் எப்படி புகழோடு பிறக்க முடியும்? வாழும்போதுதானே அவர்தம் சீரிய சிந் தனைகளால், செயல் திறன் - சாதனைகளால் பெருமை, புகழ் எல்லாம் அடைய முடியும்? அதற்குச் சரியான பொருள் "தோன்றிற் புகழ் என, எந்த அவையில், அரங்கில்  நிற்கும்போது அவர்தம் ஆற்றல் என்பது புகழ் ஈட்டித்தரத் தக்க வகையிலான களச் செயலாக அமைதலே காரணமாக வேண்டும்" என்ற பொருள் விளக்கமே சரியான, பொருத்தமான விளக்கமாக இருக்கிறது.

புகழ் வெளிச்சத்தின்கீழ்... (சில விளக்கொளி களைக் கற்பனை செய்து பாருங்கள்)

மற்ற இடங்களில் எல்லாம் பரவி ஒளி விடும் வெளிச்ச விளக்கைச் சுற்றி ஒருவகை சிறு நிழல் வட்ட இருள் போன்ற ஒன்று இருக்கச் செய்யும்!

இதனை எதற்கு, உவமையாக கூறினால் பொருத்தம்? சற்றே எண்ணிப் பாருங்கள்.

பெரிய பெரிய தலைவர்கள், ஆய்வாளர்கள், செயல் திறனால் புகழ் வெளிச்சம் பெற்றவர்களின் அருகில் அவர்களுக்கு உதவியாளராக உள்ளவர்கள்தான் அந்த சிறு வட்ட - வெளிச்சம் பாயாத இருள் பகுதி.

அவர்களில் யார் யார் அவசரப்படாமல் - தன் கடன் தலைமைக்கு உதவுவதே, ஆய்வுப் புலமை அருகில் இருக்க மேலும் கற்று தானே வெளிச்சம்  தரும் விளக்காய் ஆகும் தகுதி பெறும் வரை பொறுமை காத்து நிற்பதே அவர்களின் நிரந்தரப் புகழ் ஈட்டுதலுக்கு - நீடு புகழ் நிலைத்த புகழ் தங்கும் புகழாக அமைந்து தகத்தாய ஒளியுடன் இறங்கி சிறக்கும் தரணி முழுவதும்!

விலை கொடுத்து வாங்கும் புகழ், காலையில் பூத்து மாலையில்கூட அல்ல - மதியத்திலேயே உதிரும் மண மற்ற மலர்போலும் ஆகி விழும்!

எனவே புகழுக்காக கதவைத் தட்டாதீர்கள்!

புகழ் வந்து உங்கள் கதவை தட்டித் திறக்கட்டும்

அதன் பிறகுதானே வாசனையும் நிரந்தரம் ஆகும்  - இல்லையா?

No comments:

Post a Comment