60 ஆண்டு 'விடுதலை' பணியில் சில நினைவுகள் நிகழ்வுகள்!-6 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 7, 2022

60 ஆண்டு 'விடுதலை' பணியில் சில நினைவுகள் நிகழ்வுகள்!-6

கி.வீரமணி

'தோட்டாக்கள்' எப்போதும் சிறியவைதான்; ஆனால் அது துப்பாக்கிகளின் உள் புகுந்து வெடிப்பதில் எப்படி பணியாற்றுமோ அது போன்றவைதான் 'விடுதலை' துப்பாக்கியும் - அதில், 'இது உண்மையா?' என்ற தலைப்பிட்டு அவ்வப்போது வெளிவந்த செய்திகளும்!

நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் ஏற்படவிருந்த பல கேடுகளில் அவை தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தின 'விடுதலை'யின் இது உண்மையா?' என்ற தலைப்பில் வெளியான பெட்டிச் செய்திகள்!

வாஜ்பாய் தலைமையில் ஒன்றிய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சராக, அ.தி.மு.க. வுடன் வாழப்பாடியின் கட்சி கூட்டுச் சேர்ந்திருந் ததன் காரணமாக, கூட்டணி முறையில் வாழப்பாடி இராமமூர்த்தி அமைச்சராக வாய்ப்பை நல்கினார். அன்றைய முதல் அமைச்சரும், கூட்டணியின் தமிழ் நாட்டுத் தலைவர் என்ற பொறுப்பில் இருந்தவருமான ஜெயலலிதா அவர்கள்.

வாழப்பாடி கே.இராமமூர்த்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் துடிப்பு மிகுந்த  தலைவராகவே செயல்பட்டவர். அவர் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் படித்தபோது, திராவிட மாணவர் கழகத்தில் (திராவிடர் கழக அமைப்பு அது) புலவர் கோ. இமயவரம்பன் போன்றவர்களுடன்  நெருக்கமான நண்பராகவும் இருந்தவர்.

பிறகு அவர் காமராசர் பக்தராக காங்கிரசில் இணைந்து; அதன் தலைவராகி பல பொறுப்புகளை வகித்தார். ஒரு நல்ல இன உணர்வாளராக மாறுபட்ட அரசியல் அணி நிலைப்பாட்டிலும்கூட நம்மிடம் நட்பு ரீதியிலும், இனவுணர்வுக் கொள்கை முறையிலும் எப்போதும் அன்புடன் நடந்து கொண்டவர். அவர் டில்லியில் ஒன்றிய   அமைச்சராக  இருந்தபோது, திடீரென்று ஒரு நாள் காலை என்னிடம் தொலைபேசியில் பேசினார்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முக்கிய பொறுப்பாளராக பணியாற்றி, எங்களுடன் மிகவும் நெருங்கிப் பழங்கியவர் நண்பர் தி.சு. கிள்ளிவளவன் அவர்களாவார். "தி.சு. கிள்ளி வளவன் வந்து உங்களைச் சந்தித்து சில செய்திகளைச் சொல்வார். அதற்கேற்ப நீங்கள் எப்படிச் செய்வது என்பதை உங்கள் முதிர்ந்த அனுபவத்தால் முடிவு செய்து அதன்படி அவசர நடவடிக்கை எடுங்கள்" என்று மட்டும் (தொலை பேசியில்) கூறினார்.

அவர் சொன்னது போலவே ஒரு சில மணித்துளிகளில் நண்பர் தி.சு. கிள்ளிவளவன் அவர்கள் வந்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு காஞ்சி சங்கராச்சாரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டவிருப்பதாகவும், அந்த அறிவிப்பை நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிகழ்த்தவிருப்பதாகவும் கூறினார். "அப்பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூக தலைவர்கள் பலர் தொண்டாற்றியுள்ள நிலையில், அவர்களது பெயரை வைக்காமல், 'பிராமண' சங்கத்தினர் வேண்டுகோளுக்கு இணங்கி காஞ்சி சங்கராச்சாரியார் பெயர் சூட்டப்படவிருப்பதாக வரும் செய்திகள் உண்மையா?"  என்று 'விடுதலை'யில் ஒரு நீண்ட பெட்டிச் செய்தியை எழுதி முதல் அமைச்சரின் (ஜெயலலிதா) பார்வைக்கும் இது உடனே அனுப்பப்பட்டது.

அன்றோ, அடுத்த நாளோ சட்டமன்றத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உழைப்பாளர் கட்சித் தலைவர், மேனாள் எம்.பி. "எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார்" மாவட்டம் என்ற பெயரினை பலத்த கைத் தட்டலுக்கிடையே முதலமைச்சர் அறிவித்தார்.

டில்லியிலிருந்து அமைச்சர் வாழப்பாடி கே. இராமமூர்த்தி அவர்கள் எனக்குத் தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்!

'விடுதலை'யின் ஒரு 'பெட்டிச் செய்தி'யால் என்ன பயன் என்று பார்த்தீர்களா?

அதுபோலவே தி.மு.க. ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராகவும் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் கல்வி அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக டாக்டர் ஆனந்த கிருஷ்ணனை (அமெரிக்காவில் அவர் பணிபுரிந்த நிலையில்) தேர்வு செய்து நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். அவர் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவர்.

அவர் பொறுப்பேற்று பணியாற்றிய நிலையில் பெரியார் - மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில்கூட கலந்து கொண்டார். அவருடன் அந்நிகழ்வு முடிந்து திரும்பும்போது, நான் உரையாடிக் கொண்டி ருந்தேன்.

அவரது பதவிக் காலம் 3 ஆண்டுகள், முடிந்துள்ள நிலையில் இரண்டாம் முறை அவரே பதவிப் பொறுப்பில் நியமிக்கப்பட வேறு என்ன தடை? என்று கேட்ட எனக்கு "இந்த அம்மையார் ஜெயலலிதா இரண்டாம் முறை பதவி தருவதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்; காரணம் நான் கலைஞர் முதல் அமைச்சராக இருந்த போது நியமிக்கப்பட்டவராயிற்றே"  என்று பதில் கூறினார். அதனால் தான் ஓய்வு பெற்று வேறு பணிக்கோ, அல்லது அமெரிக்காவிற்கோ திரும்பிச் செல்ல நினைத்துள்ளதாகவும் என்னிடம் கூறினார்!

"அப்படி அல்ல, எனக்கு, இப்போது இரண்டு பார்ப்பனர்கள் துணைவேந்தராக முயற்சிப்பதாக தகவல் வருகிறது. உங்கள் பெயர் மீண்டும் தேர்வு பெறும் பட்டியலில் (ஷிமீறீமீநீtவீஷீஸீ றிணீஸீமீறீ) வரும்படி செய்ய நாங்கள் முயற்சி எடுக்கிறோம். நீங்கள் வேண்டாம் என்று மறுத்து விடாதீர்கள்" என்று கூறி,  கல்வியாளர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றோம். பேராசிரியை திருமதி குந்தளா ஜெயராமன் என்ற பார்ப்பன அம்மையாருக்கு அரசு தரப்பில் வாக்குறுதி  - நம்பிக்கையூட்டியிருப்பதாக சில தகவல்கள் வருகிறது என்று கூறினர்.  

அதை அறிந்து உடனே 'இது உண்மையா?' என்ற தலைப்பில்

ஒரு பெட்டிச் செய்தி எழுதி, 

அதன் தலைப்பு : "முதல் அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு..." என்பதில்,

"ஒரு பார்ப்பன அம்மையார் பெயர் அடிபடுவதோடு, உறுதியாக நான்தான் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே இப் பணியாற்றிய துணைவேந்தர் டாக்டர் எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் சிறப்புடன் பணியாற்றியபிறகு, அவர் இரண்டாம் முறையில் - இரண்டாம் தடவை துணைவேந்தராக வருவது முக்கியமல்ல. திறமை வாய்ந்த ஒரு பிற்படுத்தப் பட்ட சமூகப் பேராசிரியருக்கு ஏன் இந்த வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும்?" என்று கேள்வி கேட்டு பெட்டிச் செய்தி வெளியிட்டோம். திருமதி குந்தளா ஜெயராமன் என்ற பார்ப்பன பெண்மணி தயார் நிலையில் இருந்த திட்டம் திடீரென்று மாறி, மீண்டும் இரண்டாவதுமுறையும் - அவரே எதிர்பார்க்காத நிலையில் - 'விடுதலை'யின் பெட்டிச் செய்தியால் அப்பணி அவருக்குக் கிடைத்தது - பிறகு நம்மிடம் அவர் "நானே அதை எதிர்பார்க்கவில்லை - எனக்கே ஒரு மகிழ்ச்சியும்  ஆச்சரியமும்?" என்று கூறினார்.

(அப்படி இரண்டாம் முறை பதவி பெற்ற அப்பெருமகனார் நம் கல்வி நிறுவன வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு தனது 'நன்றி உணர்ச்சியை'க் காட்டிக் கொண்டு பதிவு செய்தார்! 'இதுதான் தமிழர்கள் பலரது நன்றி காட்டும் முறை' -  நமது தொண்டு "நன்றி பாராட்டாத பணி" என்று தந்தை பெரியார் கூறுவார். அது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?)


No comments:

Post a Comment