60 ஆண்டு 'விடுதலை' பணியில் சில நினைவுகள் நிகழ்வுகள்! -6 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

60 ஆண்டு 'விடுதலை' பணியில் சில நினைவுகள் நிகழ்வுகள்! -6

கி.வீரமணி

நோய் வந்தவர்கள் மருத்துவரைத் தேடி மருத்துவ மனைக்குச் செல்வதுபோல், சமூக பாதிப்புக்கு ஆளான வர்களுக்கு "அருமருந்தாக", - ஏன் சில நேரங்களில் "அறுவைச் சிகிச்சை மருத்துவமாக"க்கூடப் பயன்பட்டது (இன்றும் பயன்படுவது) 'விடுதலை' நாளேடு ஆகும்!

''நெய்வேலியா? பூணூல் வேலியா?'' என்ற தலைப்பில் 'விடுதலை'யில் வெளியிடப்பட்ட அதிர்ச்சித் தகவல் -  அங்கே தலை முதல் அடி வரை 'சர்வம் பார்ப்பனமயம்' என்ற ஆதிக்கம்! (இன்றும் வடநாட்டுக்காரர்கள் 'வாசஸ்தலம்' என்ற அளவில் ஆகி மிகப் பெரிய அதிரடி தொடர் போராட்டங்களுக்கு அறை கூவல் விடுக்கும் நிலைதான்) என்பதில், முதன் முதலில் பட்டியலிட்டு, பார்ப்பனரின் பகல் கொள்ளையாக பதவிகள் அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டிய பிறகே, அங்கு பார்ப்பனரல்லாதாரருக்கு ஓரளவு கதவு திறந்த நிலைமைக்கு 'விடுதலை' நாளேடும், தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் அல்லவா காரணம்?

'விடுதலை' நாளேடு சாதித்த களங்கள் இவை! 'இந்தியன் வங்கி' மிஸீபீவீணீஸீ ஙிணீஸீளீ என்பது நகரத்தார்கள் முதல் போட்டு துவக்கிய வங்கி; டாக்டர் இராஜா சர். முத்தய்யா (செட்டியார்) பல காலம் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார்!

1958-1959 என்று நினைவு, "வங்கிகள் எல்லாம் வீழ்ந்து விட்டன; இந்தியன் வங்கி ஒன்றுமில்லாத காலாவதி வங்கியாகி விட்டது" என்ற ஒரு திட்டமிட்ட புரளி - அவதூறை, அவரது எதிரிகள் கிளப்பிவிட, பணம் 'டெப்பாசிட்' செய்த வாடிக்கையாளர்கள் எல்லாக் கிளைகளிலும் கூட்டம்  கூட்டமாகப் படையெடுத்துத் தங்கள் பணத்தை திருப்பி எடுத்துவிடத் திரண்டனர்.

இந்த புரளியில் உண்மையில்லை என்று காட்ட டாக்டர் முத்தய்யவேள் அவர்கள் சில மணி நேரத்தில் பெரிய தொகைகளை அனுப்பி பணத்தைத் திருப்பிக் கேட்டவர்களுக்கு - நம்பிக்கை மீண்டும் திரும்பும் வகையில், அய்ந்து, பத்து மணிகளில் - அந்த வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்கள் கேட்கும் பணத்தைப் பட்டுவாடா செய்து புரளியின் பொய் முகத்தை அம்பலப்படுத்தி அந்த வங்கியின் புகழைக் காப்பாற்றினார்!

அப்படிப்பட்ட பல சோதனைகளை வென் றெடுத்து வளர்க்கப்பட்ட இந்தியன் வங்கியில் அவரிடம் வேலை கேட்டு உள்ளே நுழைந்த ஒரு பார்ப்பனர் தலைமைக்கு வந்து, முத்தய்யவேள் குடும்பத்தினருக்கே வேட்டு வைத்தவரானார் - தேசியமயம் என்ற ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு.

பார்ப்பனப் பாம்புகளுக்கு பாலூற்றினால் அது படமெடுக்க வேண்டிய நேரத்தில் படமெடுத்து என்றும் விஷத்தைக் கக்கும் என்பதை அவர் உணர்ந்து, ஒன்றிய அரசின் கவனத்திற்கு உரிய நடவடிக்கைக்குக் கொண்டு செல்ல, அவரைச் சார்ந்தவர்கள் என்னை நேரில் சந்தித்து - பல புள்ளி விவரங்கள் பார்ப்பனமயமானதன் நீண்ட பட்டியலை - தந்தவற்றை 'விடுதலை' வெளிச்சம் போட்டுக் காட்டி உரிய பரிகாரம் தேட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். (இது எனக்கு மட்டும்தான் தெரியும்; அலுவலகத்தில் உள்ள எவருக்கும்கூட தெரியாது) தொடர் கட்டுரைகளை 'விடுதலை' வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் தந்தது!

'விடுதலை' கட்டுரைத் தொடர் - இந்தியன் வங்கியின் பார்ப்பனமயமாக்குதல் பற்றிய தொடர் - ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு ரிசர்வ் வங்கி, மற்றும் ஒன்றிய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பல நூற்றுக்கணக்கான பொருளாதார வல்லுநர்கள் உள்பட பல இடங்களுக்கும் பறந்தது!

நல்ல மாற்றம் ஏற்பட்டது - நாடாளுமன்றத் திலேயே கேள்விகள் கேட்கப்பட்டு, உருப்படியான பலன் - பதவி மாற்றங்கள் ஏற்பட்டன!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்  இணைவேந்தர் -   - மாண்பமை முத்தய்யவேள் நான் படிக்கும் போது என்னை அழைத்து செட்டிநாடு அரண்மனையில் பாராட்டு தெரிவித்தார். தேநீர் விருந்தளித்து மகிழ்கிறார். 'விடுதலை' சாதனையையும், எழுத்தில் தெரிந்த உண்மைகளையும், ஆதார பூர்வ தகவல்களையும் - அதனை தந்துள்ள முறையையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

இந்திய நாடாளுமன்றத்தில் இந்தக் கட்டுரைகள் (ஆங்கில மொழி பெயர்ப்பு) எதிரொலித்தன - பயன் தந்தன!

இது போன்று, வந்த ஆபத்துகளைத் தீர்க்க சமூகநீதிக் கொடி தலை தாழாது பறக்கச் செய்தது மட்டுமல்லாது, வரவிருந்த ஆபத்துக்களை, இன விபத்துக்களை, 'விடுதலை',யின் பெட்டிச் செய்திகள் 'எழுத்தெறிகுண்டாகி' அழித்து எம் இனமானத்தை, சமூகநீதியை, தமிழ் மண்ணின் தகத்தாய தனித்ததோர் ஒளியை பொலிவிழக்கச் செய்யாமல் பாதுகாத்தப் பெருமைகள் 'விடுதலை' நாளேட்டின் வரலாற்றின் ஒப்பற்ற சரித்திரம் படைத்த நிகழ்வுகள் - அதுவும் பார்ப்பனத் தலைமை இருந்த ஆட்சிகளில் நிகழ்ந்த அற்புதங்கள் -  நாளை படிப்பீர்கள்!

(வளரும்)


No comments:

Post a Comment