திருவாரூரில் செப்.4இல் நடக்க இருக்கும் சனாதன எதிர்ப்பு மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று பிஜேபி கூக்குரல் போடுவது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

திருவாரூரில் செப்.4இல் நடக்க இருக்கும் சனாதன எதிர்ப்பு மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று பிஜேபி கூக்குரல் போடுவது ஏன்?

தந்தை பெரியார் கூறியதுபோல நாம் நடத்தவிருக்கும் மாநாட்டுக்கு

எதிரிகள் செய்யும் விளம்பரத்தை வரவேற்கிறோம் - மேலும் விளம்பரம் செய்யுங்கள் 

வரும் 4ஆம் தேதி திருவாரூரில் மதச் சார்பற்ற கட்சிகளால் நடத்தப்படவிருக்கும் சனாதன எதிர்ப்பு மாநாட்டை தடை செய்ய வேண்டும் என பி.ஜே.பி.யின் மாநிலத் துணைத் தலைவர் கூக்குரல் போட்டுள்ளார் - இது எங்கள் மாநாட்டுக்கு எதிரிகள் செய்யும் விளம்பரம், அதனை வரவேற்கிறோம் - மேலும் விளம்பரம் செய்யுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திருவாரூரில் வரும் (செப்டம்பர்) 4.9.2022 அன்று மாலை மிகப் பெரிய அளவில் - "சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு" - திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ்நாட்டின் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளுகின்றனர்.

இந்த மாபெரும் வரலாறு படைக்கவிருக்கும் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை திராவிடர் கழகமும், தோழமைக் கட்சிகளும் மிகச் சிறந்த முறையில் - அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார சூறாவளியாக நடத்திட பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருவது அறிய மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

கடும் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திருவாரூர் மாநாடு

இந்த மாநாடு கடந்த 22.8.2022 அன்றே நடைபெற்று இருக்க வேண்டிய மாநாடு. அத்துணைக் கட்சித் தலைவர்கள் - தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் அனைவரும் வந்து மேடைக்குச் செல்லவிருந்த நேரத்தில் மாலையில் கடும் மழை, மின்னல், இடி தொடர்ந்த நிலையிலும் சுற்று வட்டாரத்திலுள்ள ஒரு பகுதி மக்கள் வந்து ஏமாற்றத்துடன் ஊர்த் திரும்பினர்.

அப்போதே அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கலந்துதான் திராவிடர் கழகம் 4.9.2022 அன்று மாநாட்டை நடத்திடுவது என்று முடிவு எடுத்து தி.க. தி.மு.க. மற்ற தோழமைக் கட்சியினரும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்!

நமக்காக விளம்பரம் செய்வார்கள்

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் முன்பு பல நேரங்களில் மாநாடுகளை நாங்கள் ஏற்பாடு செய்கையில், பெரிய போஸ்டர்கள் அடித்து விளம்பரம் செய்வதைக்கூட அனுமதிக்க மாட்டார்கள்; அய்யா சொல்வார்; "ஏன் தேவையில்லாமல் விளம்பரச் செலவு என்ற பெயரில் பணத்தைச் செலவழிக்கிறீர்கள்? மாநாடு நெருங்கும் போது நம் இன எதிரிகளே, கொள்கை எதிரிகளே நம் மாநாட்டை விளம்பரப்படுத்தி எதிர்த்து அறிக்கை கொடுப்பார்கள் மக்கள் தானே பரபரப்புடன் கூடுவர்" என்பார்!

என்னே அனுபவம் பூத்த அழகான சிக்கன சீர்மிகு அறிவுரை!

ஆளுநரின் அரசமைப்புச் 

சட்ட விரோதப் பிரச்சாரம்

அதற்கேற்றாற் போன்றே திருவாரூரில் நடைபெறும் சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு குறித்து அதைத் தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க.வின்  துணைத் தலைவர் தி. நாராயணன் என்பவர் ஏடுகளில் அறிக்கை கொடுத்து தமிழ்நாடு அரசினை வற்புறுத்தியுள்ளாராம்.

மாநாடு நடப்பதை முன்கூட்டி பல ஏடுகளில் நாம் விளம்பரங்கள் கொடுத்து செலவழிப்பதை மிச்சப்படுத்தி, மாநாட்டுச் செய்திகளையேகூட வெளியிடாமல் இருட்டடிக்கும் செய்தி ஊடகங்கள் இருக்கும் இன்றைய நிலையில் இப்படி முன்கூட்டியே நம்மாநாட்டை விளம்பரப்படுத்தும் பா.ஜ.க.வினருக்கு நமது நன்றி!

இதைவிட மற்றொரு முக்கியமானதொன்று, இதுவரை பல பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஆதரவு ஊடகங்களில் ஹிந்து மதவெறிப் பரப்புவதை, 'ஆன்மிகம், ஆன்மிகம்' என்ற முகமூடி போட்டுச் செய்வதை  இந்த அறிக்கை மூலம் அந்த நபர், அந்த முகமூடியைக் கழற்றி உண்மை முகத்தை மக்கள் தெரிந்து கொள்ள உதவியும் செய்துள்ளார்!

சனாதனம் என்பது ஹிந்து மதத்தைக் குறிப்பதே!

"சனாதனம் என்பது ஹிந்து மதத்தையே குறிக்கிறது என்பது உலகறிந்த உண்மை" என்று அவர் கூறியதன் மூலம் சனாதனப் பிரச்சாரத்தை நாள்தோறும், செய்து வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி போன்றவர்கள் - மக்கள் வரிப்பணத்தைச் சம்பளமாகப் பெற்றுக் கொண்டு இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு  என்ற அரசின் அரசமைப்புச் சட்டத்தைக் காப்பது கடமை என்ற உறுதி எடுத்து - அதற்கு நேர் விரோதமாக, நாள்தோறும் ஏதோ ஒரு மேடையிலோ, அல்லது ராஜ் பவனிலோ பிரச்சாரம் செய்து வருவதும் உலகறிந்த உண்மை. அவர்கள் செய்து வருவது சனாதனப் பிரச்சாரம் என்ற ஹிந்து மதப் பிரச்சாரமே என்பதை இந்த அறிக்கை மூலம் திருப்பதி நாராயணன் ஒப்புக் கொண்டதோடு, அம்பலப்படுத்தியும் விட்டார்!

மதக்கலவரங்களைத் தூண்டுவோர் யார்?

"மக்கள் மன்றமாகவிருந்தாலும், நீதிமன்றமாக விருந்தாலும் ஆளுநர் போன்றவர்கள் சனாதனம் என்ற பெயரில் ஹிந்து மத - மனுதர்மப் பிரச் சாரங்கள்தான் செய்து வருகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்குரியது" என்று நாம் கூறி வருவதற்குச் சரியான சாட்சியம் என்பதால், அதற்கு நமக்குப் பயன்படும் பேச்சே அவை ஆகும்! அதற்கும் திருப்பதி நாராயண்களுக்கு நமது நன்றி!

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் திராவிடர் கழகம் ஏதோ மதக்கலவரங்களைத் தூண்டத்தான் கூட்டணி கட்சித் தலைவர்களோடு சேர்ந்து இப்படிஒரு மாநாட்டைப் போடுவதாகப் புரளியும் - புரட்டும் கலந்த அறிக்கை விடுகிறார்களே, அந்த காவியினரைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி இது!

கடவுள் இல்லை என்று கூறுவோர் 

எந்தக் கோயிலை இடித்தனர்?

'கடவுள் இல்லை' என்ற கொள்கை - திட்டம் உடைய திராவிடர் கழகத்தால், இதுவரை எந்தக் கோயில்களுக்காவது, எந்த சிலைகளுக்காவது ஆபத்து வந்துள்ளதா?

வடக்கே பாபர் மசூதி இடிப்பை நடத்திட்டவர்கள் யார்?

சட்டத்திற்குப் புறம்பாக பல மதத்தவரின் வழிபாட்டு இடங்களை ஆக்கிரமிக்க நுழைந்தவர்களும், நுழைய முயன்றவர்களும் எந்தக் கட்சியினர்? தி.க. தி.மு.க. மற்றும் மாநாட்டில் கலந்து கொள்ளும் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சியினர் எவராவது உண்டா?

1954இல் தந்தை பெரியார் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தினை நடத்தியபோதுகூட, சொந்த செலவில் பிள்ளையார் பொம்மைகள் வாங்கி - மக்களுக்கு, 'கடவுள் சக்தி' என்ற ஒன்று இல்லை அது வெறும் புருடா - புரட்டுதான் என்பதை நடைமுறையில் Practical  வகுப்புபோல செய்து காட்டினார். அப்போது தெரு ஓரப் பிள்ளையார், ஆற்றங்கரைப் பிள்ளையார் சிலைகளுக்குக்கூட ஒரு சிறு சேதாரம் உண்டா?

மாறாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நடத்தும் அரசியல் பிள்ளையார் சதுர்த்திக்கு ஏன் லட்சக்கணக்கில் காவல்துறையினர் தேவைப்படுகின்றனர்?

நேற்று முன்தினம் கூட கருநாடகத்தில் மற்ற  சிறுபான்மை மதக்காரர்களின் இடத்தில் வலுக்கட்டாயமாக பிள்ளையார் காட்சி நடத்த முயற்சியை உச்சநீதிமன்றமே தடை செய்துள்ளதே, அதுபோன்ற நிகழ்வை தமிழ்நாட்டில்    மதச்சார்பற்ற எந்தக் கட்சியினராவது செய்ததைக் கண்டதுண்டா?

மறுபடியும் மறுபடியும் 

விளம்பரம் செய்யுங்கள்

திராவிடர் கழகப் பொதுக் கூட்டங்கள் பலவும் பல ஆண்டுகள் "மாலை நேர வகுப்புகளாக" நடைபெற்று வருகின்றன, கோயில் உள்ள மைதானத்திலும்கூட...  எந்த கோயிலுக்காவது, சிலைகளுக்கு ஆபத்து வந்தது உண்டா? கலவரம் உண்டா?

'ஹிந்து மதம்' என்பதின் பெயரே அந்நியர்கள் வைத்தது என்று கூறிய காஞ்சி சங்கராச்சாரியாரின் கூற்று ஏனோ மறந்து விட்டது போலும்!

இப்படி அறிக்கைவிட்டு கலவரத்திற்கு முன்னுரைப் பாடுகிறவர்களைத்தான் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் கண்காணிக்க வேண்டும்.

"மருத்துவர்களால்தான் நோய் ஏற்படுகிறது" என்று ஒருவர் சொன்னால், சொல்பவர்களின் அறிவுக் குறைபாடு என்ற பரிதாபம் தவிர மிஞ்சுவது வேறில்லை! நம் மாநாட்டை முன்கூட்டியே விளம்பரப்படுத்திய காவிகளுக்கு நம் நன்றி!

மற்றொரு முறை -  தொடர்ந்து இப்படி விளம்பரப்படுத்துங்கள்!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

1.9.2022


No comments:

Post a Comment