1920 இல் நீதிக்கட்சி தொடங்கிக் கொடுத்த மாணவர்களுக்கு இலவச உணவுத் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

1920 இல் நீதிக்கட்சி தொடங்கிக் கொடுத்த மாணவர்களுக்கு இலவச உணவுத் திட்டம்

‘திராவிட மாடல்' ஆட்சியில் அடுத்தகட்ட பரிணாமம்!

சென்னை, செப்.14-  1920 இல் நீதிக்கட்சித் தலைவர் வெள் ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது சென்னையில், குறிப்பாக ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. காமராசர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. கலைஞர், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும் சிறப்பாக சத்துணவுத் திட்டமாக வளர்ந்து ‘திராவிட மாடல்' ஆட்சியின் தலைவர் - ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருக் கும் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக பள்ளிப் பிள்ளைகளுக்குக் காலை உணவும் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மதுரையில் நாளை (15.9.2022) தொடங்க உள்ள காலை உணவுத் திட்டத்தைத் தொடர்ந்து, 16 ஆம் தேதி  முதல் மற்ற பள்ளிகளில் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான வழி காட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் அரசாணை

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நேற்று (13.9.2022) வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு: 

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க் கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை விதி எண் 110 இன்கீழ், சில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகளுக்கு முதற்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மதுரையில் முதலமைச்சர் 

தொடங்கி வைக்கிறார்

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள, முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை நாளை (15.9.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவிகளுக்கு முதற்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பை செயல் படுத்தும் பொருட்டு  16 ஆம் தேதி (நாளை மறுதினம்) முதல் தொடங்கப்படும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செம்மையான முறையில் நடைமுறைப்படுத்திடும் பொருட்டு திட்டச் செயலாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15 ஆம் தேதி மதுரை மாநகரில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், அன்றைய தினம்  துவக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர்  15 ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பிற பகுதிகள் அடங்கியுள்ள மாவட்டங் களில் 16 ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் துவக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15 ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் 16 ஆம் தேதி  அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களால்,  தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் (மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகள்) ஏதேனும் ஒரு பள்ளி யினை தேர்வு செய்து அங்கு அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு திட்டம் தொடங்க வேண்டும்.

திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களை பொறுத்தவரை ஊரகப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பள்ளியினை தேர்வு செய்தும், திருப்பூர், விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை பொறுத்தவரை ஊரக / மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்தும் மற்றும் நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை மலைப் பகுதியில் உள்ள பள்ளியினை தேர்வு செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்டங்களில் 16 ஆம் தேதி செயல்படுத்த உள்ளாட்சி முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கவேண்டும்.

காலை சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு  பள்ளிகளில் நாள்தோறும் காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் குழந்தைகளுக்கு வழங்க  வேண்டும். நாள்தோறும் உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை திட்ட  செயலாக்க அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும். (ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் சிற்றுண்டிக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம், உள்ளூரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள். சமைத்த பின் 150 முதல் 200 கிராம் உணவு மற்றும் 60 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்கப்பட வேண்டும். கிச்சடி 100 கிராம் அளவிலும், ரவை அல்லது சேமியா கேசரி 60 கிராம் அளவிலும் வழங்கப்பட வேண்டும்.)

வழங்கப்படும் உணவு

திங்கள்    

ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்

அரிசி உப்புமா + காய்கறி சாம்பார்

கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

செவ்வாய்   

ரவா காய்கறி கிச்சடி

சேமியா காய்கறி கிச்சடி

சோள காய்கறி கிச்சடி

கோதுமை ரவா காய்கறி கிச்சடி

புதன்   

ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்

வெண்பொங்கல் + காய்கறி சாம்பார்

வியாழன்   

சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்

அரிசி உப்புமா + காய்கறி சாம்பார்

ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளி   

ரவா காய்கறி கிச்சடி

சேமியா காய்கறி கிச்சடி

சோள காய்கறி கிச்சடி

கோதுமை ரவா காய்கறி கிச்சடி மற்றும்

கூடுதலாக ரவா கேசரி, சேமியா கேசரி

No comments:

Post a Comment