செப்.17 காலை 9.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் ‘‘பெரியார் உலகத்திற்கு'' அடிக்கல் நாட்டு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

செப்.17 காலை 9.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் ‘‘பெரியார் உலகத்திற்கு'' அடிக்கல் நாட்டு விழா!

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் திறக்கிறார் -

வாரீர், தோழர்களே, வாரீர்! பெரியார் மண் பாரெங்கும் ஜொலிக்கட்டும்!

தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17 அன்று காலை 9.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில், 'பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழா' நடைபெறவுள்ளது. மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார், வாரீர்! வாரீர்!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைப்பு  விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அருமைப் பெரியார் கொள்கை உறவுகளே, பெரியாரை உலகமயமாக்க உலகப் பெரியார் பற்றாளர் களான பகுத்தறிவாளர்களே, மனிதநேய மானமிகு தோழர்களே, பெரியார் என்ற பேராயுதத்துடன் கள மாடும் கருஞ்சிறுத்தைகளான எம்மருந்தோழர்களே!

உங்களது ஓய்வறியா உழைப்பும், தொண்டும் ஒப்புவமை கூற இயலாதவை.

நமது பணி எத்தகைய உன்னதமானது?

எந்த ஓர் இயக்கத்திற்கும் கிடைக்காத தனிப்பெருமை நீங்கள் அனைவரும்! இதை நம்மிடமிருந்து எவரும் தட்டிப் பறிக்க முடியாது.

எந்தப் பதவியையோ, படாடோபத்தையோ, பலரும் புகழவேண்டும் என்பதற்கான புகழ் வேட்டையையோ நாடி நடத்தாத நற்பணியே நம் பணி!  இதுவே நம் தனித்தன்மை!!

மானம் பாராத,

நன்றி எதிர்பாராத,

சுயநலம் மறுத்த,

மற்ற பற்றுகளில் பற்று வைக்காமல்,

அறிவுப் பற்று, வளர்ச்சிப் பற்று,

மானிடப்பற்று வளர்ச்சிக்காகவே

உழைத்துக் கொண்டுள்ள என்னருங்

கருஞ்சட்டைக் கடமை வீரர்களே!

நம்மக்கள் விழி திறந்த வித்தகரின் 144 ஆவது ஆண்டு பிறந்த நாள் பெருவிழா - வருவதற்கு (செப்.17) இன்னும் 3 நாட்களே!

எங்கெங்கும் அய்யாவின் படங்களும், பதாகைகளும், புதுப்புது கொடியேற்றங்களும், புத்தி பரப்பும் புத்தாக்க பெரியார் கொள்கை முழக்கங்களுடன் நாடு நகரம், பட்டிதொட்டியெல்லாம் கொண்டாடுங்கள்!

தந்தை பெரியார் பிறந்த நாளை 

சமூகநீதி நாளாக அறிவித்த முதலமைச்சர்

ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் ‘திராவிட மாடல்' ஆட்சியில், அறிவு ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களது பிறந்த நாளை - சமூகநீதி நாளாக, தமிழ்நாடு அரசு அறிவித்து (2021) நாடெல்லாம், வீடெல்லாம் அய்யா நெறி பரவ, அவர்தம் கொள்கையாம் ஜாதி ஒழிந்த, தீண்டாமை ஒழிந்த, அனைவருக்கும் அனைத்தும் தரும் சமூகநீதி நாளாகக் கொண்டாடிட ஆணையிட்டு, இரண்டாம் ஆண்டு அதன்படிக் கொண்டாடவிருக் கிறோம்!

அதில் நமக்குத் தனிப் பூரிப்பு - ஏனென்றால், அய்யாவின் அருந்தொண்டை அகிலமே புரிந்து உணர்ந்து, காலத்தை வென்ற கருத்துக் கடலான தலைவர் - உலகம் அண்ணாந்து பார்க்கிறது என்ற பெருமையை நிலை நாட்டும் வகையில், திருச்சி சிறுகனூரில்... - (திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் - பெரியார் உலகம் 30 ஏக்கர் பரப்பளவில் 95 அடி உயரச் சிலை, அதன் பீடமோ 45 சதுர அடியில் - அதனுள் ஆய்வகம் - பயிலகம் - அதையொட்டிய நூலகம் முதலிய பல கட்ட திட்டங்களாகத் தொடங்கப்படுகிறது).

மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான் தேங்கிக் கிடந்த கோப்பு களை ஆய்ந்து பார்த்து, அனுமதியளித்து பெருமை தேடிக் கொண்ட ஆட்சி - பொற்கால ‘திராவிட மாடல்' ஆட்சி. அதன் நாயகரே செப்.17 காலை பெரியார் திடலில் அந்தப் ‘பெரியார் உலகத்திற்கான' அடிக்கல் நாட்டு விழாவைச் செய்து, பணி தொடங்கி வைக்கிறார்!

பெரியார் தொண்டர்களாகிய நமக்கு இதைவிட வாழ்நாளில் பேறு வேறு வேண்டுமோ?

அதற்காக நமக்கு என்றும் துணை நின்று, கோப்புகள் தேக்கமின்றி  ஒத்துழைப்புத் தரும் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி கூறுவதுடன்,

‘‘பெரியார் உலக''த்திற்கு 

அடிக்கல் நாட்டு விழா!

எந்தக் கரங்கள், நாடெல்லாம் பெரியார் நினைவு (ஜாதி ஒழிப்பு), சமத்துவபுரங்களைத் திறந்துகொண்டே வருகின்றதோ, அக்கரங்களே இந்தப் பெரியார் உலகம் என்ற புத்தாக்கப் புது உலகுக்கும் அடிக்கல் நாட்டி, அதனை நிர்மாணிப்பதில் நமக்கு என்றென்றும் துணையாக நிற்கவும் உள்ள நமது மாண்புமிகு, மானமிகு முதலமைச்சர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி ஒரு முத்தாய்ப்பு நிகழ்வாகவே இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் முத்திரை பதிக்கும் திருவிழாவாக நடக்கவிருக்கிறது!

அன்று திரண்டு வருவீர்கள் என்று தெரியும். அதையொட்டி எங்கும் பெரியார் விழா - நாள் - வாரம் என்று பார்க்கா பிரச்சாரப் பணி கிராமாந்திரங்களில் நடைபெறும்.

பார் முழுதும் பெரியார் மண் 

ஜொலிக்கிறது - வாரீர்!

அனைத்திந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை பெரியார் மண்ணாகிய தமிழ்நாட்டில் தொடங்கிய திரு.ராகுல் காந்தி, ‘‘தமிழ்நாட்டில், ‘பெரியார் மண்ணை' விட்டுப் பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளது'' என்று கூறிய வார்த்தை, எப்படி நம்மை புதிய உற்சாகத்தின் தூண்டுகோலாக்கி, துவளாத பணி செய்யத் தூது அனுப்புகிறது பார்த்தீர்களா?

எனவே, பார் முழுவதும் பெரியார் மண் ஜொலிக்கிறது!

பெரியாரின் கொள்கை ஒளியால் ஏற்பாடுகள் சிறக்கட்டும்!



சென்னை தலைவர்,

13.9.2022 திராவிடர் கழகம்


No comments:

Post a Comment