காவல்துறையினர் உதவியுடன் இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பணிகள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

காவல்துறையினர் உதவியுடன் இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பணிகள் தீவிரம்

சென்னை, ஆக.30 இடைநின்ற மாணவர்களை காவல் துறையினர் மூலம் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவர்கள் குடும்பச் சூழல் உட்பட பல்வேறு காரணங்களால் இடைநிற்கும் நிலை நிலவுகிறது. பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆண்டு தோறும் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டு மீண்டும் பள்ளிகளில் சேர்க்கநடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது.

அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் இடைநிற்றல் குறை வாகவே உள்ளது. இதற்கிடையே கரோனா பாதிப்பால் பொருளாதார இழப்பு, இடம் பெயர்தல் உட்பட காரணங்களால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே கைவிட்டனர்.

இதையடுத்து 6 முதல் 19 வயதுடைய இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்மூலம் சுமார் 2.6 லட்சம் மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுவிட்டனர்.

எனினும், மற்ற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறியும் பணிகளில் சுணக்கம் நிலவியது. இதன்காரணமாக காவல்துறையினர் உதவியுடன் இடைநின்ற மாணவர்களை தேடும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘நடப்பு கல்வியாண்டு நிலவரங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் மாநிலம் முழுவதும் சுமார் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநின்ற மாணவர்களை கண்டறிவதில் சிரமங்கள் உள்ளன. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியூர் களில் வேலைக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து பள்ளிகளில் பெறப்பட்ட மாணவர் பட்டியலை காவல்துறையிடம் வழங்கியுள்ளோம்.

அவர்கள் மூலம் மாணவர்கள் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அதன்படி தற்போதுகாஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இடைநிற்றல் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம்’’என்றனர்.


No comments:

Post a Comment