அரியலூர்: திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

அரியலூர்: திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

 எந்த நம்பிக்கையோடு இந்த அரியலூரைத் தேர்ந்தெடுத்தோமோ அந்த நம்பிக்கையை 

100 சதவிகிதம் அல்ல; 200 சதவிகிதம் நிறைவேற்றிய தோழர்களுக்கு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

அரியலூர், ஆக.11 ''எந்த நம்பிக்கையோடு இந்த அரிய லூரைத் தேர்ந்தெடுத்தோமோ அந்த நம்பிக்கையை 100 சதவிகிதம் அல்ல; 200 சதவிகிதம் நிறைவேற்றிய தோழர்களுக்கு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 30.7.2022 அன்று அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அரியலூர்: திராவிடர் கழக இளைஞரணி 

திறந்தவெளி மாநில மாநாடு

அவரது உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமரியாதைக்கும் உரிய மாண்பு மிகு மானமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் நம்முடைய குடும்பத்துப் பிள்ளை என்கிற உறவோடும், உரிமையோடும் நாங்கள் பழகுகின்ற அருமை திரு.சிவசங்கர் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்து, சிறப்பான வகையில் பங்குகொண்டிருக்கக் கூடிய அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினரும், சிறந்த கொள்கையாளரு மான அருமை மூத்த வழக்குரைஞர் அய்யா சின்னப்பா அவர்களே,

அண்ணல் காந்தியாருடைய சிலையை சில நாள்களுக்கு முன்பு இந்த அரியலூரில் திறந்து வைத்து, எப்பொழுதும் நாங்கள் வருகின்ற மேடையில் எல்லாம் தவறாமல் கலந்துகொள்ளக்கூடிய முதுபெரும் காங்கிரஸ் கொள்கையாளராக இருக்கக்கூடிய, சமூகநீதிப் போராளி அய்யா பெரியவர் பாலகிருஷ்ணன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக உரை யாற்றிய நம்முடைய குடும்பத்தைச் சார்ந்த கொள்கை யாளர், கொள்கை வீரர் அருமை கா.சொ.க.கண்ணன் அவர்களே,

அதேபோல, நம்முடைய சுபா.சந்திரசேகரன் அவர்களே,

திராவிடர் கழகத்தினுடைய துணைத் தலைவர் பெருமதிப்பிற்குரிய கவிஞர் அவர்களே,

திராவிடர் கழகத்தினுடைய செயலவைத் தலைவர் அறிவுக்கரசு அவர்களே, திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே,

திராவிடர் கழகத்தினுடைய பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே, சிறந்த செயல் வீரரும், இந்த மாநாட்டினுடைய வெற்றிக்கு அடித்தளமாக இருக் கக்கூடிய அருமை நண்பர் ஜெயக்குமார் அவர்களே,

மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களே,

இந்த மாநாட்டினுடைய சிறப்புமிகு ஆற்றல்மிகு தலைவர் உழைப்பின் உருவம் இளைஞரணி மாநில செயலாளர் அருமைத் தோழர் இளந்திரையன் அவர்களே,

இவ்வளவு அருமையான மாநாட்டில், மிகச் சிறப்பான வகையில் சிறப்பிக்கின்ற அருமைத் தோழர்களே,

இம்மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திய அத் துணைத் தோழர்களே,

காலையிலிருந்து 

நடைபெற்றுவரும் மாநாடு

இந்த மாநாடு காலையிலிருந்து நடைபெற்று வருகிறது. காலையில் நடைபெற்ற அரங்கத்திலும் சரி, ஒரே ஒரு மேடையல்ல - அரியலூரில் அதுதான் பெரிய மண்டபம். அந்த மண்டபத்தினுள் எல்லாப் பகுதிகளிலும் தோழர்கள் இருந்தார்கள்; வெளியிலும் அரங்கம் இருந் தது - அங்கேயும் ஏராளமான தோழர்கள் அமர்ந்திருந் தார்கள்.

எல்லையற்ற மகிழ்ச்சியோடு நான் உங்களோடு இன்றைக்கு இருக்கிறேன். எந்த அளவிற்கு மகிழ்ச்சி என்று சொன்னால், எல்லோரும் என்னுடைய வயதைக் குறிப்பிட்டார்கள்.

89 வயதுக்காரனாகிய நான் சென்னைக்குத் திரும்பும்போது 29 வயதுக்காரனாவேன்!

நான் மிக மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு பணியாற்ற வேண்டும் என்று உறுதி எடுக்கக்ககூடிய அளவிலே, நான் வரும்போது வேண்டுமானால், 89 வயதுக்காரனாக, 90 வயதை நெருங்கக்கூடியவனாக இருக்கலாம்; ஆனால், இந்த மாநாட்டிலே கலந்துகொண்டு, சென் னைக்குத் திரும்புகின்ற நேரத்தில் என்னுடைய வயது 29 ஆகத்தான் இருக்கும் என்ற அளவிற்கு ஆக்கிய பெருமை - அது அமைச்சரிலிருந்து, சட்டப்பேரவை உறுப்பினரிலிருந்து, அத்துணைக் கட்சித் தோழர்களி லிருந்து, நன்கொடை கொடுத்த வணிகப் பெருமக்கள், பொதுமக்களிலிருந்து, இயக்கத் தோழர்கள் அல்லும் பகலும் பாடுபட்ட, நம்முடைய நீலமேகம் அவர்கள், எதைச் சொன்னாலும், அவர் மறுப்பே சொல்லமாட்டார்.செய்யுங்கள் என்று சொன்னால், முடித்துவிட்டேன் என்று சொல்லக்கூடியவர். அதேபோன்று ஒவ்வொரு தோழரையும்பற்றி ஏராளமாகச் சொல்லலாம்; சிந்தனைச் செல்வன் அவர்களானாலும், செந்தில் அவர்களானாலும் சரி அத்துணைத் தோழர்களுக்கும் உரியதாகும்.

என் நம்பிக்கையை 

200 சதவிகிதம் நிறைவேற்றிய உங்களுக்குப் பாராட்டு

ஆகவேதான், எந்த நம்பிக்கையோடு இந்த அரியலூரைத் தேர்ந்தெடுத்தோமோ அந்த நம்பிக் கையை 100 சதவிகிதம் அல்ல; 200 சதவிகிதம் நிறைவேற்றிய உங்களுக்குப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காரணம், உங்களுக்குப் புரவலர்கள் நிறைய இருக்கிறார்கள். எந்த இடத்தில் நீங்கள் விடுகிறீர் களோ, நாங்கள், அதை அத்தனையும் சரிப்படுத் துவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு, அத்துணைத் தோழர்களும் யாரும் எதற்கும் பின்வாங்க மாட்டார்கள். அதை நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன் அவர்கள் விளக்கமாகச் சொன்னார்.

அப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பு, ஒரு பெரிய வரலாறு இந்த இடத்தில் இருக்கிறது.

ஏனென்றால், கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு கருத்தைப் பரப்பினார்கள். என்ன கருத்து என்றால், தேர்தலுக்கு முன்பாக ஒரு கருத்தைப் பரப்பினார்கள். அரியலூர் என்றால், பெரிய காவிக்கோட்டையைப் போன்று மாற்றிவிடுவோம் என்றெல்லாம் சொன்னார்கள்.

இன்றைக்கு வரலாற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறது!

நிச்சயமாக அப்படியொரு கனவைக் காணாதீர்கள் என்பதற்குப் பதில்தான் இந்த மாநாடு.

ஒரு சாதாரணமான வாய்ப்பல்ல, மிகப்பெரிய ஒரு வாய்ப்பாகத்தான் இந்த மாநாடு மிக அற்புதமான அளவிலே நடந்து, இன்றைக்கு வரலாற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறது.

எந்த இயக்கத்திற்கு இளைஞர்கள் வந்தார்கள்? ஏறத்தாழ 42 மணித் துளிகள் நாங்கள் அமர்ந்திருந்த பொழுது, அந்தப் பேரணி நடந்தது. இவ்வளவுக்கும் நாங்கள் வேக வேகமாக அவர்களைப் போகச் சொன் னோம்; ஏனென்றால், நெருக்கமான இடம் என்பதால்; காவல்துறைக்கோ, மற்றவர்களுக்கோ நாம் ஒரு சிறு பிரச்சினையைக் கொடுக்கக் கூடாது.

தந்தை பெரியாருடைய இயக்கம் - 

இராணுவக் கட்டுப்பாடு உள்ள ஓர் இயக்கம்

நம்மால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது. உங்களுக்கெல்லாம் தெரியும் திராவிடர் கழகம் என்று சொன்னால், தந்தை பெரியாருடைய இயக்கம் என்று சொன்னால், இராணுவக் கட்டுப்பாடு உள்ள ஓர் இயக்கம்.

அமைச்சர்கள் பொதுவாழ்வில் இருக்கக் கூடிய வர்கள்; திடீர் திடீரென்று பணிகள் குறுக்கிடும்; இதில் ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், சி.வி.கணேசன் தாமதமாக வந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல - ஆனால், அவர் எப்பொழுதும் இந்தக் கொள்கை உணர்வோடு இருக்கின்ற ஒருவர். இந்நிகழ்வைத் தவிர்க்காமல், கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காக வந்திருக்கிறார் என்பதுதான்.

ஆகவே, இது ஒரு குடும்ப நிகழ்வு மாதிரி. நான் காலையில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரை யாற்றினேன். நான் எப்பொழுது வேண்டுமானாலும் உரையாற்றுவேன். நான் முடிவுரையாக உரையாற்று கிறேன்.

இப்பொழுது அமைச்சர் அவர்கள் உரையாற்றுவார்.

(அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் உரை யாற்றினார்).

தமிழர் தலைவர் உரையைத் தொடர்கிறார்.

மீண்டு வருகிற ஓர் இனத்தின் எழுச்சியை சொல்ல மீண்டும் வருகிறேன். அமைச்சர் அவர்களின் அருமையான உரை, சிறப்பான உரை, நம்மை உற்சாகப் படுத்தக் கூடிய வகையில் அவர்கள் சொன்னார்கள், ஓர் இளைஞரைப் போல இருக்கிறேன் என்று. அத னுடைய ரகசியம் வேறொன்றுமில்லை - அவருடைய உரையிலேயே முதலில் அவர் சொன்னார்.

ஆத்தூரில் சிலை திறப்பு விழாவில், கலைஞரிடம் கேட்டார்கள், தந்தை பெரியார் என்ற மாமனிதர் பிறந் திருக்காவிட்டால், சமுதாயம் எப்படி இருந்திருக்கும்? என்று கேள்வி கேட்ட நேரத்தில்,

இங்கே உரையாற்றிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சொன்னார், என்னுடைய பாட்டன் எப்படி இருந்தார், என்னுடைய தந்தையார் எப்படி இருந்தார், நாங்கள் இப்படி இருப்பதற்கு யார் காரணம்? என்று.

இந்த இரட்டைக் குழல் 

துப்பாக்கிகளுடைய பணி!

‘திராவிட மாடல்’ என்றால் என்ன? என்று தூங்குவது போன்று பாசாங்கு செய்கிறார்கள்.

இதுதான் ‘திராவிட மாடல்’.

முழங்காலுக்குக் கீழே வேட்டி வந்தது என்றால், திராவிட மாடலால் வந்தது.

தோளில் துண்டு போட்டிருக்கின்றோம் என்றால், திராவிட மாடலால் வந்தது.

இன்றைக்குப் போராட்டம் எதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், மறுபடியும் அந்தத் துண்டு இடுப்பில் போகவேண்டும் என்று நினைக்கிறார்கள்; துண்டு தோளில் போடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

அமைச்சர் அவர்கள் சொன்னதுபோன்று, எங்களு டைய பாட்டன் சட்டை அணியாமல் இருக்கவேண்டும்; எங்களுடைய பாட்டி, ரவிக்கை போடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய கட்டத்திற்கு வந் திருக்கிறார்கள் என்று சொன்னால், 

அதைப் போக்குகின்ற வகையிலே பணி செய்வதுதான் இந்த இயக்கத்தினுடைய பணி - இந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகளுடைய பணியாகும்.

இவர்கள் எல்லாம் அமைச்சரானார்கள் - எங்களுக்கு அதனால் மிகப்பெரிய பெருமை.

ஒரு காலத்தில், நம்மவர்கள் எல்லாம் இந்த இடத்தை நினைத்துப் பார்க்க முடியுமா? என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும், ‘திராவிட மாடல் ஆட்சி’ என்ன செய்தது என்று பதில் சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தாலும், அமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட செய்தியால் எனக்கு ஒரு செய்தி நினைவிற்கு வந்ததை உங்களுக்குச் சொல்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் பெரியார் நாட்குறிப்பு - டைரி அச்சடிப்போம்.

‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எது முன்னோடி முழுக்க முழுக்க நீதிக்கட்சி!

அதில் பல அரிய தகவல்கள் இருக்கும். இன் றைய இளைஞர்களுக்கு அந்த அரிய தகவல்கள் எல்லாம் தெரிய வாய்ப்பில்லை.

‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எது முன்னோடி யான ஆட்சி - முழுக்க முழுக்க நீதிக்கட்சி என்ற திராவிட ஆட்சி.

இன்று நம்முடைய ஊர்வலத்தில், நீதிக்கட்சித் தலைவர்களின் படங்களைக் கொண்டு வந்தார்கள்.

சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், பனகல் அரசர்.

பனகல் அரசர் செய்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பு, அது சாதாரணமானதல்ல.

பார்ப்பனரல்லாதாரையும் கட்டாயம் மாநிலக் கல்லூரியில் சேர்க்கவேண்டும் என்ற ஆணை!

சென்னையில் மாநிலக் கல்லூரி இருக்கிறதே - அண்மையில்கூட நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அதனு டைய சிறப்புகளைப்பற்றி எடுத்துச் சொன்னார். அவரே அந்தக் கல்லூரி மாணவர் என்பதையும் எடுத்துச் சொன்னார்.

அந்தக் கல்லூரியில், பார்ப்பனரல்லாதார் படிக்க முடியாத சூழ்நிலை இருந்த காரணத்தினால், பார்ப்பனரல் லாதாரையும் கட்டாயம் மாநிலக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று அரசு ஆணை போட்டது என்று சொன்னால், அது முதலில் நீதிக்கட்சி ஆட்சியில்தான்.

அந்த ஆணையை, பெரியார் நாட்குறிப்பில் போட்டிருக்கின்றோம்.

அமைச்சர் அவர்கள் உரையாற்றும்பொழுது எனக்கு ஒன்று நினைவிற்கு வந்தது.

மிகப்பெரிய ஆய்வாளர் தொ.பரமசிவம் அவர்கள் அண்மையில் மறைந்தார். நல்ல சிந்தனையாளர் அவர்கள். அவர் எழுதிய ஒரு புத்தகம் ‘‘பண்பாட்டு அசைவுகள்’’ என்பது.

‘திராவிட மாடல் ஆட்சி’ என்ன செய்தது?

திராவிட இயக்கம் என்ன செய்தது?

இந்தக் கொள்கை என்ன செய்தது?

பெரியார் என்ன செய்தார்?

அண்ணா என்ன செய்தார்?

கலைஞர் என்ன செய்தார்?

இன்றைக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ன செய்துகொண்டிருக்கிறது என்று சொல்லும்பொழுது நண்பர்களே, ஒரே ஒரு செய்தியை சொல்கிறேன்.

‘‘பண்பாட்டு அசைவுகள்’’

‘‘பண்பாட்டு அசைவுகள்’’ புத்தகத்தில், ‘‘வீடும், வாழும்’’ என்ற அத்தியாயத்தில் உள்ள ஒரு செய்தியை சொல்லுகிறேன்.

சேர, சோழ, பாண்டியர்கள் காலத்தில், சுக ஜீவனம் என்று இருந்த நேரத்தில் - பத்திரத்தில் எழுதுவார்கள் கஷ்ட ஜீவனம் - கஷ்ட ஜீவனம் என்று.

அந்த சுகஜீவனம் அக்காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை பெரியாழ்வார் பாசுரத்தில் சொல்லி இருக்கிறார் என்று, மற்றுமொரு செப்பேட் டால், மற்றுமொரு செய்தியை அறிகிறோம்.

பார்ப்பனர் 308 பேருக்கு அரசன் ஒரே செப்பேட்டின் வழி பிரம்மதேயம் வழங்குகிறான். இதன்படி, அரசன் அளித்த உரிமைகளில், சில சித்தடிக்கிளவியால், மாட மாளிகை எடுக்கப் பெறு வதாகவும், துறவு கிணவு இழிச்சப் பெறுவதாகவும் வார்த்தையைப் போட்டிருக்கிறார்.

பார்ப்பனரல்லாதாருக்கு 

அக்காலத்தில் அனுமதி கிடையாது

அதற்கு என்ன அர்த்தம் என்னவென்றால், சுட்ட செங்கல்லால் வீடு கட்டிக் கொள்ளவேண்டும்; வீட்டிற்கு மாடி எடுத்துக் கட்டவும், வீட்டுத் தோட்டத்தில் கிணறு வெட்டிக் கொள்ளவும் அக்காலத்தில் அனுமதி கிடையாது.

யாருக்கு?

பார்ப்பனரல்லாதாருக்கு.

அந்த அனுமதி, பார்ப்பனர்களுக்கு மட்டுமே வழங்கப் பெற்றிருந்தது.

பார்ப்பனர்களின் தீட்டுக் கோட்பாட்டை அறன் செய்வதற்கும், பேணிக் கொள்வதற்கும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக கிணறு இருப்பதை இப் பொழுதும் பார்ப்பனத் தெருக்களில், அக்கிரகாரங்களில் காணலாம். இந்த உரிமையினை அரசர்கள், மற்ற ஜாதியாருக்கு வழங்க முடியவில்லை.

இவை அத்தனையும் மாற்றியது எப்படி?

தானாக மாறிவிட்டதா?

திராவிடர் இயக்கம் - சுயமரியாதை இயக்கம் - அறிவாசான் தந்தை பெரியார் - இந்தக் கருப்புச் சட்டை - அத்தனை பேருடைய உழைப்புதான்.

(தொடரும்)


No comments:

Post a Comment