விடுதலையும் - ஆசிரியரும் நூற்றாண்டு கண்டு கடந்து வாழ்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

விடுதலையும் - ஆசிரியரும் நூற்றாண்டு கண்டு கடந்து வாழ்க!

ஓய்வறியாத உழைப்பு, அயர்வறியாத ஆக்கப்பணி, கூட்டு முயற்சியுடன் கூடிய களப்பணி ஆகியவற்றை அணி கலன்களாகக் கொண்ட கருஞ்சட்டை மான மறவர்கள் 'விடுதலை' சந்தா திரட்டும் பணியில் முழுவீச்சில் முனைப்புடன் ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள்!

தோழர்கள், பொறுப்பாளர்கள் தேனீக்கள் தேனைத் திரட்டப் பறந்து செல்வதைப் போல பாய்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள்!

தலைமைக்கழக நிருவாகிகள் - களத்தில் நிற்கிறார்கள்! 90 வயதை எட்டிப்பிடிக்க உள்ள நம் தமிழர் தலைவரும் 'விடுதலை' ஆசிரியராக வீதிக்கு வந்து சந்தாக்களைத் திரட்டிக் கொண்டி ருக்கிறார்!

பொது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த போதே, 1943 ஆம் ஆண்டில், கடலூர் முதுநகர் செட்டிக்கோயில் தெருவில் மேடை அமைத்து, அறிஞர் அண்ணா அவர்களை அழைத்து அவர் நடத்திய 'திராவிடநாடு' இதழுக்கு 101 ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்து முதன் முதலாக ஒலி பெருக்கி முன் உரையாற்றிய சிறுவன் வீரமணி இன்று தலைவர் வீரமணியாய், உயர்ந்த நிலையிலும் அதே பணியை இன்னும் தொடர்கிறார்!

1962 ஆம் ஆண்டில், 29 வயதில் தந்தை பெரியார் அவர்களால் 'விடுதலை' ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தப்பட்ட மானமிகு அய்யா கி.வீரமணி அவர்கள் ஆயிரம் சந்தாக்களைச் சேர்த்துத் தந்து தந்தை பெரியாரின் பாராட்டு களைப் பெற்றார். அதனைப் போல் 'விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்ற 50 ஆம் ஆண்டில் 50,000 சந்தாக்களைத் திரட்டித் தந்த நம் தோழர்கள். 60ஆம் ஆண்டில் 60,000 சந்தாக் களைத் திரட்டித் தரும் பணியில் அல்லும் பகலும் அயராது செயல்பட்டு வருகிறார்கள். ஆசிரியரை மகிழ்விக்க வேண்டும், உற்சாகப்படுத்த வேண் டும் என்பதைவிட, வீடுதோறும் விடுதலையைக் கொண்டு சேர்க்க வேண்டும். காவிக்கூட்டத்தின் நச்சுப் பிரச்சாரத்தினை முறியடிக்க, விடுதலையை மக்களிடம் அறிமுகம் செய்தே தீர வேண்டும் என்ற உள்ளுணர்வே நம் தோழர்களை இப்போது இயக்கிக் கொண்டிருக்கிறது. 

'விடுதலை' பத்திரிகை இன்று வாரம் இருமுறையாக வெளிவந்தாலும், கூடிய சீக்கிரம் தமிழ்மக்கள் ஆதரவுக்கு ஏற்ப தினசரி ஆகும் என்பதில் நமக்கு அய்யமில்லை என்று தொலைநோக்குப் பார்வையுடன் கணித்து 1935 ஆம் ஆண்டிலேயே அறிவித்தார் நம் அறிவு ஆசான் அய்யா பெரியார்!

இன்று எட்டுப் பக்கங்களில், கண்கவர் வண்ணங்களில், சென்னையில் இருந்தும், திருச்சியிலிருந்தும் கம்பீரமாக வருகிறது 'விடுதலை!' மாலை 5:00 மணிக்கெல்லாம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்மக்கள் இணையதளம் வழியாக விடுதலையைப் பார்த்து - படித்து மகிழ்ச்சியில் துள்ளுகிறார்கள். 

இன்று  முதல் 'விடுதலை' காலணா தினசரியாக வெளிவருகிறது. என்று 1.7.1937 அன்று அறிவித்தார் பெரியார்!  "தமிழ் மக்களின் வாழ்வுக்குக் கேடு உண்டாக்கும் படியான நிலையில், எதிரிகளின் ஆதிக்கம் பலப்படத்தக்க நிலைமை மேலேறிக் கொண்டு வருவதாகக் காணப் பட்டதாலும், அதற்குப் பெரும் காரணம், ஒரு தமிழ் தினசரி வர்த்தமான பத்திரிகை இல்லாதது என்று உணர்ந்ததாலும், அதனாலேயே தமிழ்ப் பெருங்குடி மக்கள் பலரும் பயந்து எதிரிகளைத் தஞ்சமடைந்து மற்ற தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கவும் துணிகிறார்கள் என்றும். நான் உண்மையாய் உணர்ந்ததால் எவ்வளவு நஷ் டமும் தொல்லையும் ஏற்பட்டாலும் சரி, அவற்றைச் சமாளிக்க தமிழ்மக்கள் ஆதரவு கிடைக்கலாம் என்கின்ற நம்பிக்கையின் மீது  துணிந்து ஒரு தமிழ்ப் பத்திரிகை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டுவிட்டேன்" என்று அந்தத் தலையங்கத்தில் அய்யா பெரியார் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும், வரியும் இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதை நாம் காண்கிறோம்.

"உண்மைத் தமிழ்மக்கள் என்று கருதும் ஒவ்வொருவரும் என்னை உண்மை உழைப்பாளி என்று கருதினால் ஒவ்வொரு வரும்  தங்களால் ஆன உதவியைச் செய்து 'விடுதலை'க்கு ஆதரவும் உதவியும் அளிக்க வேண்டு மாய் வேண்டிக் கொள்கிறேன். பணம் உள்ளவர்கள் பணம் கொடுக்கலாம். விளம்பரங்கள் கொடுத்து ஆதரிக்க வசதி உள்ளவர்கள் விளம்பரம் கொடுக்கலாம். சந்தாதாரரைச் சேர்த்து பணம் வசூலித்து அனுப்பக் கூடியவர்கள் சந்தா சேர்த்து அனுப்பலாம். வாக்குச் சகாயம், எழுத்துச் சகாயம் செய்து பத்திரிகையின் தொண்டை பரவச் செய்ய வசதி உள்ளவர்கள் அத் தொண்டைப் பரப்பலாம்.  என்று 'விடுதலை'த் தொண்டு நடைபெறுவதற்கு அடியேனது விண்ணப்பம் என்று அடக்க உணர்ச்சியோடு அப்போது அய்யா பெரியார் வலியுறுத்தினாரே, அதனை அப்படியே வழிமொழிகிற நிலையில்தான் நாம் இருக்கிறோம்; நாட்டு நடப்பும் இருக்கிறது! எனவேதான்  'விடுதலை' பரப்பும் பணியில் வீதியில் நின்று ஈடுபட்டு வருகிறோம்! 

அரசின் அடக்குமுறை - அச்சுறுத்தல் - பொருளாதார நெருக்கடி இழப்பு - நட்டம், விழிப்புணர்வு இல்லாத தமிழ்மக்களின் அலட்சியப் போக்கு, எதிரிகளின் விஷமப் பிரச்சாரம், எடுபிடிகளாக மாறிவிட்ட துரோகக் கும்பலின் அழிவு வேலை இவற்றுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் தமிழர் உரிமைக்காக களத்தில் நின்று போராடி வருகிறது - 'விடுதலை' ஏடு! 

"உண்மையைச் சொல்கிறேன், தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையா திருந்தால், தினசரி விடுதலையை நிறுத்தி, வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன். எனக்குத் தாங்க முடியாத பளு ஏற்பட்டு விட்டது" என்று 10.8.1962 விடுதலையில் வேதனையுடன் எழுதுகிற அளவுக்கு, சங்கடங்களும், சவால்களும் இடர்பாடுகளும் கைகோத்துக் கொண்டு  தாக்குதல் தொடர்ந்தன. 

பெரும் கவலையுடன் இருந்த பெரியார் தோழர் ஆனைமலை நரசிம்மன் அவர்களைத் துணைக்கழைத்தார். அவரின் இளம் வயது மகனின் உடல்நலக்குறைவு. அதனால் குடும்ப நிருவாகத்தில் ஏற்பட்ட சிக்கல் இவைகளால் பெரியாரின் விருப்பத்தை ஆனைமலை நரசிம்மன் அவர்களால் நிறைவேற்ற முடிய வில்லை. இந்த நிலையில், நம் ஆசிரியரை முழுநேரத் தொண்டாற்ற அழைத்தார் அய்யா பெரியார்; ஆசிரியரும் இசைந்தார்.

"இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி திரு.வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உளம்பூரிக்க எழுதினார் தந்தை பெரியார்!

"வரவேற்கிறேன்" என்று மட்டுமல்ல, அதிசயத்தோடு வரவேற்கிறேன் என்றும் 'விடுதலை'யில் எழுதினார் பெரியார். உயர்ந்த நிலையில் இருந்த ஆசிரியர் வீரமணி, அதனைப் புறந்தள்ளிவிட்டு, பெரியாரின் அழைப்பினை ஆணையாக ஏற்று, இடர்நிறைந்த பாதையில், இலட்சியப்பணியாற்றிட வரவேற்கிறேன் என்று வியந்து எழுதினார் பெரியார்!

"மனைவி, குழந்தை குட்டி இல்லாத வாலிபப்பருவத்தில் பொதுத்தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால் மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு இவை உள்ள நிலையிலும், நாளைக்கும் அவர் (வீரமணி) ஒப்புக் கொள்வதானால், (எம்.ஏ.பி.எல்) என்பதனாலும் பரீட்சையில் உயர்ந்த மார்க் வாங்கி இருக்கும் தகுதியாலும் மாதம் 1க்கு ரூ.250க்கு குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரியர் பதவி அவருக்கு காத்திருந்து ஆசை காட்டிக் கொண்டிருக்கும் போதும்; அவற்றைப் பற்றிய கவலையில்லாமல் முழுநேரத் தொண்டில் இறங்குவதென்றால், இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர் பார்க்க முடியாத விஷயமாகும்" என்று தன் வியப்புக்கான காரணங்களைப் பட்டியலிட்டுக் காட்டி, ஆசிரியர் அய்யா எடுத்த முடிவினை மனம் மகிழ்ந்து வரவேற்றார் பெரியார்! அவரின் முழுப் பொறுப்பல்ல - 'விடுதலை'யை ஒப்படைப் பதாக - அவரின் ஏகபோகத்தில் விடுவதாக, முழு நம்பிக்கை யுடன் அறிவித்தார் தந்தை பெரியார்!

தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கை - எதிர்பார்ப்பு முழுஅளவில் வெற்றி பெற்றிருக் கின்றது என்பதற்கு ஆசிரியர் தலைமையில் விடுதலையும் - திராவிடர் கழகமும் வீறுநடை போடுகிறதே அதுவே சாட்சி!

'வரவேற்கிறேன்' என்ற பெரியாரின் அறிக்கை வெளியான 60 ஆம் ஆண்டில், அதே நாளில் (10.8.1922) பெரியார்திடலில் 'விடுதலை' குழுமத் தினர் கூடி விழா  எடுத்து, விடுதலையை வென்றெடுப்போம் என்று வீரமுழக்கமிட்டு, ஒரு லட்ச ரூபாய் தொகையை 'விடுதலை' சந்தாவாக ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களிடம் அளித்து மகிழ்கிறார்கள். 

'விடுதலை'யில், அறிக்கை, தலையங்கம் எழுதுபவர் எவ்வளவு முக்கியமோ, அது போலவே சந்தா அனுப்பி வைக்க பசை ஒட்டும் தோழர் வரை அனைவரும் முக்கியமானவர்களே! என்று அந்த விழாவில் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறார் ஆசிரியர் அய்யா கி.வீரமணி.  திராவிடர் கழகம் கருவாகி உருவான ஆகஸ்ட் 27 என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளில் 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு தமிழர் நலன் காக்கும் விடுதலை நாளேடுக்கு - 60 ஆண்டு காலமாக விடுதலையை காத்து - வளர்த்து, பரப்பி வரும் நம் ஆசிரியர் அய்யா மானமிகு கி.வீரமணி அவர்களிடம் 60,000 சந்தாக்களை அள்ளித்தந்து, அரும்பெரும் சாதனையை நிகழ்த்தக் காத்திருக்கிறது கருஞ்சிறுத்தைப் பட்டாளம். 

"காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் நூலை பொதுமக்கள் ஆதரவுடன் வெளியிட வேண்டும். அதற்கு நிதி திரட்ட, வீரமணியும், வழக்குரைஞர் சண்முகநாதனும், என்.ஆர். சாமியும் இப்போது துண்டேந்தி வருவார்கள், தோழர்களே நன்கொடை தாருங்கள் என காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ஆசிரியரும், அறிவிக்கப்பட்ட தோழர்களும் துண்டேந்தி நன்கொடையைத் திரட்டினார்கள். இதனை நான் தோளில் துண்டு போட்டிருப்பது, அழகிற்காகவோ, அலங்காரத்திற்காகவோ அல்ல. தமிழரின் மானமீட்புக்காகப் பிச்சை எடுக்கவே தோளில்  துண்டு போட்டிருக்கிறேன் என்ற விளக்கம் மானம்பாராத தொண்டைத் தொடரும் பெரியாரின் மாணாக்கர்களுக்கு கற்பிக்கப்பட்ட பாடம் ஆகும்!

"பெரியார் காலத்தில் இருந்த எதிரிகள் நாணயமான எதிரிகள். ஆனால், இப்பொழுது நம்முடைய காலத்தில் இருக்கின்ற எதிரிகள்" மோசமான எதிரிகள் என்று நம் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளது சரியானதுதான் என்பதை வெறுப்பு அரசியலும், செருப்பு அரசியலும், முகமூடிக்குள் பதுங்கி சிலை உடைக்கும் அரசியலும் சாட்சிகளாக நின்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. 

இவற்றையெல்லாம் முறியடித்து, தமிழர் நலன்காக்க தமிழர் உரிமை மீட்க 'விடுதலையும்' ஆசிரியரும் நூறாண்டு கண்டு - நூறாண்டைக் கடந்து வாழ்க! வாழ்க என முழக்கமிடுவோம்! தமிழரின் பாதுகாப்புக் கவசமாம் விடுதலையை உயிர்த்துடிப்புடன் இயங்கச் செய்ய, சந்தா எனும் சுவாசக்காற்றைச் செலுத்தும் பணியில் இன்றும், என்றும் தொய்வின்றித் தொடர்வோம்!

விடுதலையை மக்கள் இயக்கமாக்குவோம்!  

No comments:

Post a Comment