பாராட்டுக்குரிய செயல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

பாராட்டுக்குரிய செயல்!

இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுக்க விழிப்புணர்வு ஓவியங்கள்

சாயல்குடி,ஆக.26- இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்கும் நோக்கில் சமூக நலத்துறை சார்பில் பொது இடங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் சமூக பாதுகாப்பு திட்டம், சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். 2019 கரோனா பாதிப்பிற்கு பிறகு குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, ராமநாதபுரம், திருப்புல்லாணி மற்றும் மண்பம் உள்ளிட்ட 11 யூனியன்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள், சாலையோரங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஓவியம் வரையப்பட்டு வருகிறது. இதில் பெண்ணின் திருமண வயது 18க்கு மேல், ஆணின் திருமண வயது 21க்கு மேல் என குறிப்பிடப்பட்டு குழந்தை திருமணத்தால் பெண் பிள்ளைகள் படும் அவதிகள், உடல்நலப் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைத் திருமணம் குடும்ப வன்செயல் ஆகும், இதனை ஆதரிப்பதும், திருமணத்தை நடத்தி வைப்பதும் சட்டப்படி குற்றமாகும். குழந்தை திருமணம் நடந்தால் 1098 என்ற 'டோல் ப்ரீ' நம்பரில் புகார் செய்யலாம் அல்லது அருகிலுள்ள யூனியன், தாலுகா, சமூக பாதுகாப்பு திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்கள் மற்றும் காவல்துறை, உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு விளம்பரம் பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


No comments:

Post a Comment