"திராவிட மாடல்" என்றால் குருதிக் கொதிப்பானேன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

"திராவிட மாடல்" என்றால் குருதிக் கொதிப்பானேன்?

"திராவிட மாடல்" என்றால் சிலருக்கு - குறிப்பாகப் பார்ப்பனர் களுக்கு - அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யும் விபீஷணர்க ளுக்கு, சங்கிகளுக்கு குருதிக் கொதிப்பு உச்சத்துக்குச் செல்லுகிறது.

பார்ப்பன ஏடுகளான ‘துக்ளக்', ‘தினமலர்'களுக்கு வாந்தியும் பேதியும் ஏற்படுகின்றன. 

எடுத்துக்காட்டாக இவ்வார ‘துக்ளக்'கில் (17.8.2022) பக்கத்துக்குப் பக்கம் "திராவிட மாடல்" பற்றி ஏகடியம், வயிற்றெரிச்சல், ஆற்றாமை - இவை எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு கூத்தாடுவதைப் பார்க்க முடிகிறது.

எடுத்துக்காட்டாக,

கேள்வி: அந்தக் காலத்தில் பர்மா தேக்கு, பெல்ஜியம் கண்ணாடி போன்று இந்தக் காலத்தில்?

பதில்: ஸ்டாலினின் "திராவிட மாடல்" (‘துக்ளக்', 17.8.2022, பக். 8)

கேலி செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் பதில், பதிலளிப்பவர்களையே பதம் பார்க்கிறது.

பர்மா தேக்கு என்றாலும், பெல்ஜியம் கண்ணாடி என்றாலும் அவை தரத்தில் உயர்ந்தவை தானே! - அதேபோல இந்தக்கால கட்டத்தில் "திராவிட மாடல்" என்பது தலை நிமிர்ந்து நிற்கிறது.

திராவிட மாடலைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்று எழுதப்போய் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் விசித்திரத்தை என்ன சொல்ல!

இன்னொரு கேள்வி-பதில்:

கேள்வி: முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளில் எதைப் பாராட்டுகிறீர்கள்?

பதில்: குடும்பத்தினரும், கட்சியினரும் என்ன அடாவடிகள் செய்தாலும் கண்ணை மூடி யோகி போல "திராவிட மாடல்" "திராவிட மாடல்" என்று விடாமல் பஜனை செய்யும் அவரை திராவிட அரசியல் பிடிக்காத என்னால்கூட பாராட்டாமல் இருக்க முடியவில்லை (இந்தவார துக்ளக்).

திராவிட மாடல் - குருமூர்த்தி கூட்டத்துக்குப் பிடிக்காது என்பது ஊரறிந்த ஒன்றுதான்.

"திராவிட மாடல்" என்றால் ஆரிய மாடலுக்கு எதிரானதாயிற்றே! அப்படி இருக்கும்போது எப்படி "திராவிட மாடல்" பிடிக்கும்? ஆனாலும், திராவிட மாடல் என்பதில் திமுக தலைவர், முதலமைச்சர் உறுதியாக இருப்பது என்பது காலத்தின் கல்வெட்டாகும்.

மற்றொரு கேள்வி-பதில்:

கேள்வி: திராவிட மாடல் ஆட்சியில் கருணாநிதிக்கு கடற்கரை யில் பேனா நினைவுச் சின்னம் நிறுவுவது பற்றி?

பதில்: கருணாநிதி இளைஞராக இருந்தபோது லேப்டாப் வந்திருந்தால், அதைத்தான் அவர் பயன்படுத்தி இருப்பார். பேனாவை அல்ல. கருணாநிதி நினைவாக பேனா சிலைக்குப் பதில், லேப்டாப் சிலை வந்திருக்கும். லேட்டாக வந்த லேப்டாப் அதிர்ஷ்டக் கட்டை, பேனா அதிர்ஷ்டசாலி. (இதே வார துக்ளக் பக். 9).

பட்டேலுக்கு ரூ.3000 கோடி செலவில் சிலை வைத்தால் அது என்ன கட்டை? விவேகானந்தருக்கு குமரிக்கடலில் சிலை வைத்தால் அது என்ன கட்டை?

தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் கூறு கெட்ட கீழ்த்தர புத்தி உடைய ஓர் ஆசாமியை ஜெகத்குரு என்று அழைத்ததோடு அல்லாமல் காஞ்சிபுரத்தையடுத்த ஏனாத்தூரில் அவர் செருப்பை வைத்து மண்டபம் கட்டி காலில் விழும் கூட்டம் இதைப்பற்றி எல்லாம் பேசலாமா?

பத்திரிகை நடத்த வேண்டும் என்று கூறி, மடத்துக்கு அழைத்த ஒரு பெண் எழுத்தாளரின் கையைப் பிடித்து இழுத்த ஈனர்கள் இவர்களுக்கு ஜெகத்குரு.

அதே காஞ்சிபுரத்தில் மச்சேந்திர நாதன் கோயில், அர்ச்சகப் பார்ப்பான், சாமி கும்பிட வந்த பெண்களை கோயில் கருவறையில் வைத்து சல்லாபம் நடத்தியது குறித்து இதுவரை ஒரே ஒரு சொல்லால் கூட கண்டனம் தெரிவிக்காத கசமாலங்களுக்குப் பேனா (எழுத்து) ஒரு கேடா... பத்திரிகைதான் ஒரு கேடா?

ஆண்டாண்டு காலமாக ஆதிக்கத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு, இந்நாட்டுக்குரிய மக்களைப் பிறப்பின் அடிப்படையில் இழி ஜாதி என்றும், வேசி மக்கள் என்றும், படிக்க உரிமை கிடையாது என்றும் ஆக்கி வைத்த ஆதிக்க சக்திகளின் ஆணிவேரில் மரண அடி கொடுத்து, ‘நீயும் மனிதன் நானும் மனிதன், உனக்குள்ள உரிமை எனக்கும் உண்டு' என்ற தத்துவத்தைக் கூறிய இயக்கம் திராவிட இயக்கம் - செய்துகாட்டிய தலைவர் தந்தை பெரியார்.

இந்தத் தத்துவத்துக்குப் பெயர்தான், "திராவிட மாடல்"! ஆத்திரம் அலை புரளாதா ஆரிய கூட்டத்துக்கு? ஆண்டாண்டு காலமாக அனுபவித்த கும்பல் ஆயிற்றே! அதனால்தான் திராவிட மாடல் என்றால் அவ்வளவு எரிச்சல்!

பெரியாரோடு மறைந்து போகும் கலைஞரோடு கலைந்து போகும் என்று மனப்பால் குடித்திருந்தது - ஆரியக் கூட்டம். ஆனால், நடந்ததோ நடப்பதோ வேறு மாதிரியாகி விட்டது. வீரமணியைப் பாடை கட்டித் தூக்கும் அளவுக்குப் பார்ப்பனர்களின் ஆத்திரமும், ஆவேசமும் எகிறிக் குதித்தது - அடி வயிறு பற்றிக் கொண்டு எரிந்தது.

மு.க.ஸ்டாலின் நல்லவர்தான். திராவிடர் கழகத்திடமிருந்தும் வீரமணியிடமிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று துக்ளக்கில் எழுதியவர் குருமூர்த்தி.

அதற்கு மறுப்பு கொடுத்தது போல, மானமிகு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தாரே! "திராவிடர் கழகம் நேற்றைக்கும் இன்றைக்கும், நாளைக்கும் என்றைக்கும் எங்களுக்கு வழிகாட்டிதான்" என்றார் (தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் 24.2.2019).

அதோடு மட்டுமல்ல "நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்" (முரசொலி, 2.12.2018) என்றும் அடித்துச் சொன்னவர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இதுதானே திராவிட மாடல்! அந்தக் கோபம்தான் குருமூர்த்தி கும்பலுக்கு "திராவிட மாடல்" என்ற சொல்லைப் படிக்கும் போதும், பேசும் போதும் குமட்டிக் கொண்டு வருகிறது - பார்ப்பனர்களைப் புரிந்து கொள்வீர்!

No comments:

Post a Comment