பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்

06.02.1927- குடிஅரசிலிருந்து.... 

மதுரை, மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலுகா மகாநாடுகள் நடத்தப்படவேண்டுமென்பதாக அந்தந்த  ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம்.  அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர், வட ஆற்காடு ஜில்லாக்காரர்கள் ஜில்லா மகாநாடு நடத்த கமிட்டி முதலியவைகள் நியமித்து துரிதமாய் முயற்சி எடுத்து வருகிறார்கள். இம்மகாநாடுகள் அநேகமாய் இம்மாத முடிவிலோ, மார்ச்சு மாத ஆரம்பத்திலோ நடக்கக்கூடும். மற்ற ஜில்லாக்காரர் களும் அதாவது செங்கற்பட்டு, தென் ஆற்காடு, திருச்சி, ராமனாதபுரம், திருநெல்வேலி முதலிய ஜில்லாக்காரர்கள் எதுவும் செய்ததாக நமக்குத் தகவலே இல்லாமலிருக்கிறது. 

ஆதலால் அவர்களும் சீக்கிரம் முயற்சி எடுத்து சீக்கிரத்தில் மகாநாடுகள் நடத்தி, திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய ஏற்பாடுகள் செய்து வரவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறோம். பார்ப்பனர்கள் பணம் சேர்க்கவோ, தங்கள் ஆதிக்கத் திட்டங்களை நிறைவேற்றவோ எப்படியாவது தந்திரங்கள் செய்து அவர்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளுகிறார்கள். உதாரணமாக, பார்ப்பனர்களின் சர்வ ஜீவநாடியும் செத்து போய் இருக்கும் இச்சமயத்தில் மகாத்மாவைத் தருவிக்கப் போகிறார்கள். அவர் பெயரால் ஆங்காங்கு நம்மவர்களிலேயே சில சோணகிரிகளைப் பிடித்து கூட்டம் கூட்டி நம்மையே நம்பச்செய்து அடுத்த தேர்தல்வரை தங்களுக்குச் செல்வாக்கு இருக்கும் படியான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளப் போகிறார்கள், நாம் அதைப் பார்த்து பொறாமைப்படுவதிலோ, அவர்கள் அப்படிச் செய்கிறார்கள், இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பதிலோ ஒரு பயனும் விளையப் போவதில்லை. உருப்படியான காரியத்தைச் செய்தாலல்லது, நமது திட்டங்களை நிறைவேற்றி வைக்க முடியவே முடியாது. 

நமக்கு இருக்கும் பொறுப்புக்கும் பார்ப்பனர்களுக்கு இருக்கும் பொறுப்புக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன. பார்ப்பனர்களின் காங்கிரசும், தேச சேவையும் அவர்கள் ஆதிக்கம் நிலை நிற்கவும், அவர்கள் பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகம் சம்பாதிப்பதும் தவிர வேறில்லை. நாம் மகாத்மாவின் நிர்மாண திட்டம் முழுவதையும் நிறைவேற்றி வைக்க வேண்டிய பொறுப்புடையவர்களாயிருக்கிறோம். பார்ப்பனர்கள் கூட்டம் கூடி, பாமர ஜனங்கள் ஏமாறும்படி வாயில் பேசி விட்டு சட்டசபை ஜில்லா தாலுகா முனிசிபாலிடி போர்ட்டுகளில் ஸ்தானம் பெற்று கூச்சல் போட்டு விட்டால் அவர்கள் கடமையும், காங்கிரஸ் வேலையும் தீர்ந்து விட்டது. நமது கடமையோ முதலாவது, இப்பார்ப்பனர்கள் செய்யும் புரட்டுகளை வெளியிட வேண்டியதும், ஒவ்வொரு மனிதனுள்ளத்திலும் நமது நிலையை உணரும்படி செய்விப்பதும், நமது உண்மையான சுயமரியாதைக்கும் முன் னேற்றத்திற்கும் ஆனவழிகளை எடுத்துச் சொல்லி நடக்கச் செய்தலும் ஆகிய அநேக கஷ்டங்கள் இருக்கின்றன. 

இவ்வளவுடன், இதுகளுக்கு எதிரிடையாக வேலை செய்யும்படியாக நமது பார்ப்பனர்கள் நம்மவர்களிலேயே சிலரைப் பிடித்து கூலிகொடுத்து ஏவிவிட்டுச் செய்யும் உபத்திரவங்களுக்கும் தலை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆகையால் நமது பொறுப்பும், கடமையும் என்ன என்பதை யோசிப்பவர்களுக்குப் பயமாகவே இருக்கும். ஆனால், இவற்றை இது சமயம் கவனியாமல் அசார்சமாகவோ, சுயநலத்திற் கவலையாகவோ இருந்து விடுவோமேயானால் பின்னால் சுலபத்தில் மீளமுடியாது என்பதை ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் நன்றாய்க் கவனத்தில் வைக்கவேண்டும்.

தவிரவும், மதுரை மகாநாட்டிற்குப் பிறகு நாம் ஆசைப்பட்டது போலவே அநேகமாய், ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பனரல்லாதார் சங்கங்களும், பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கங்களும், சுயமரியாதை சங்கங்களுமாக ஏற்படுத்துவதுகளில் இருந்தும், ஏற்படுத்த முன்வருவதிலிருந்தும் இவற்றின் பொருட்டு ஆங்காங்கு செல்லுமிடங்களில் காணப்படும் உற்சாகத்திலிருந்தும், ஒத்துழையாமையின்போது திரிகரண சுத்தியாய் காங்கிரசில் உழைத்து வந்த பார்ப்பனரல்லாத உண்மைத் தியாகிகள் பலர் ஆங்காங்கு இவற்றில் மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கலந்து உழைத்து வருவதினாலும் நமது பிற்கால வாழ்வில் கொஞ்சம் நம்பிக்கை கொள்ள இடமேற்படுகிறது. 

ஆனாலும், புராண வைராக்கியம் போல் இந்தச் சமயத்தில் மாத்திரம் ஏற்படும் எழுச்சியில் தலை கால் தெரியாமல் திரிந்து விட்டுப் பின்னால் சோதனை ஏற்படுங்காலத்தில் அடியோடு படுத்துப் போய்விடுமோ என்று பயப்படவும் வேண்டி இருக்கிறது. 

ஆதலால், தொடர்ச்சியாய் இருந்து வேலைசெய்ய பிரசாரங்களும், பத்திரிகைகளும் வேண்டியதற்கு ஆகவும் தக்க ஏற்பாடுகளும் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே இவைகளுக்கெல்லாம் பூர்வாங்க வேலையாக முதலில் ஜில்லா மகாநாடுகளைக் கூட்டுவதிலும் அதன் மூலமாகத் தொகைகள் வசூலிப்பதிலும் ஆங்காங்குள்ளவர்கள் கவனம் செலுத்த வேண்டுமாய் மறுபடியும் மறுபடியும் வற்புறுத்துகிறோம். 

No comments:

Post a Comment