ஜனநாயகமா - சர்வாதிகாரமா என்ற கடும் நிலை இப்போது! இந்த நேரத்தில் காங்கிரசின் தலைமையை ஏற்று செயல்படவேண்டும் ராகுல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

ஜனநாயகமா - சர்வாதிகாரமா என்ற கடும் நிலை இப்போது! இந்த நேரத்தில் காங்கிரசின் தலைமையை ஏற்று செயல்படவேண்டும் ராகுல்!

காங்கிரஸ் மட்டுமல்ல - அதற்கு அப்பாற்பட்ட கொள்கையாளர்களின் எதிர்பார்ப்பும் இதுவே!

ஜனநாயகத்துக்கு அறைகூவல் விடுத்து மதவாத சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தும் சக்திகள் தலைதூக்கும் இக்காலகட்டத்தில், ராகுல் காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் - காங்கிரஸ் கட்சியினரின் கருத்து மட்டுமல்ல; கட்சிக்கு அப்பாற்பட்ட கொள்கையாளர்களின் எதிர்பார்ப்பும் இதுவே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்திய நாட்டின் மூத்த அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி.

137 ஆண்டு வரலாறு படைத்த காங்கிரஸ்

137 ஆண்டுகள் வரலாற்றுப் பின்னணியுள்ள அதில் பல்வேறு நிகழ்வுகளும், தலைமை மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

1947-க்கு முன்னும் பின்னும் தொடர்ந்து நாட்டை ஆண்ட அரசியல் கட்சியும் அதுதான்!

அதன் பெரும் பகுதி பண்டித நேரு குடும்பம் அங்கம் வகித்து தலைமை ஏற்று பங்கு பணியாற்றிய காலமும் அதிகம்.

முன்பு அதுவே காங்கிரஸ் கட்சியின் பலமாக வர்ணிக்கப்பட்டது.

இன்று அதுவே அதன் பலவீனமாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது!

அதன் ஆளுமையால்தான் நாடு மதச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக குடியரசு என்ற ஓர் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பையும் பெற்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு (Largest Democracy in the world) என்ற தனிப் பெருமைப் பெற்றுள்ளது!

தொடர்ந்த அதன் ஆட்சிகளில் ஏற்றங்களும், இறக்கங்களும், சாதனைகளும், சறுக்கல்களும் உண்டு.

அதுதான் ஜனநாயக நாட்டின் வலிமை என்னும் நிலையில், சிற்சில நேர அரசியல் வலிகளும் ஏற்பட் டுள்ளன.

இன்று அக்கட்சியை அறவே அழித்து ஒழித்து விட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. ஆளுமைகள் துடிக்கின்றன.

சித்தாந்த அடிப்படையில் இப்போது களத்தில் இந்த அரசியல் யுத்தம் - ஜனநாயகமா? யதேச்சதிகார சர்வாதி காரமா? என்ற லட்சியங்களின் அடிப்படையில்தான் ஓர் அரசியல் போர் நடைபெற்று வருகிறது!

இந்தியாவா? ஹிந்துஇயாவா?

பன் மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பரந்துபட்ட நாட்டில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற திணிப்பு முயற்சிகள் - சித்தாந்தப் போராக நாட்டில் நடைபெறும் சூழ்நிலையில், இனி இந்தியாவா? ஹிந்துஇயாவா? என்ற மிக ஆபத்தான அரசியல் களப்போர் நடைபெறும் நிலையில், காங்கிரசின் பாத்திரம் மிகவும் முக்கியமானது.

காங்கிரஸ் கட்சி முதிர்ந்த ஒரு கட்சி - இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் கிளைகள் உள்ள ஒரே அரசியல் கட்சி என்ற சிறப்புக்குரியதாகும்.

அது பல தேர்தல்களில் தொடர் தோல்விகளைப் பெற்றாலும்கூட, அதன் தொண்டர்கள், வெகுமக்கள் ஆதரவு என்பது இல்லாமல் இல்லை. தேர்தல் தோல்விகள் ஒரு கட்சியின் இன்றியமையாமையை நிர்ணயிப்பதாகாது!

''யானை படுத்தாலும் குதிரை மட்டம்'' என்ற பழமொழியை மறக்க முடியாது. படுத்திருக்கும் யானை மக்கள் ஜனநாயகத்தில் எப்போது வேண்டுமானாலும் எழும்.

அதற்கு முக்கியம் அதன் கொள்கை, உறுதிமிக்க தலைமை!

அதற்குப் புதிய இரத்தம் - இளமை ரத்தம், கொள்கை லட்சிய ஊசிகள்மூலம் செலுத்தப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில், நாடு போகும் போக்கில் மிக முக்கியமானதாகும்.

குடும்ப அரசியல்பற்றிப் பேசுவோர் குடும்பத் தியாகத்தைப்பற்றிப் பேசாதது ஏன்?

"குடும்ப அரசியல்" என்று குற்றம் சாட்டுவோர், அக்குடும்பம் ஏற்றுள்ள உயிரிழப்புகள், செய்துள்ள தியாகம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.

அக்குடும்பத்திற்கு வெறும் அரசியல், பதவி மோகம் என்று மட்டுமே கூப்பாடு போடுவதா? இன்றைய அதன் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையாருக்கு பிரதமர் வாய்ப்பு இரண்டு முறை இருந்தும், அவர் மறுத்து, பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் அவர் களை பிரதமர் ஆக்கினார் என்பதை ஏனோ மறைத்துப் பேசுகின்றனர்!

காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பதவி சுகம் அனுபவித்த இரண்டாம் கட்ட தலைவர்கள் ஜி-23 என்ற பிரிவின்படி வெளியேறி, விமர்சனத்தில் ஈடுபட்டு அடி மரத்தை மறந்த, நுனிக் கிளைகளாகி வருகின்றனர்! அதை ஓர் உட்கட்சி விவகாரம் என்று இன்றைய நிலையில் புறந்தள்ளி விட முடியாது!

எதிரிகளை சரியாக அடையாளம் 

காண்பவர் ராகுல்காந்தி

கொள்கை, லட்சியங்களைத் தெளிவாய்த் தெரிந்து, தனது லட்சிய  எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு, பல இளைஞர்கள் கொள்கையாளர்களின் பாராட்டைப் பெறும் திருவாளர் ராகுல் காந்தி - தேர்தல் தோல்வியைக் - கட்சி கண்டது என்பதற்காக ஜனநாயக நெறிப்படி ராஜினாமா செய்து, அவர் மீண்டும் தலைமையேற்க - தொண்டர்கள் தொடர்ந்து வற்புறுத்திடும் நிலையில் மறுதலித்து வருகிறார்.

இந்தக் கால கட்டத்தில் காங்கிரசுக்கு எப்படிப்பட்ட வலிமையான தலைமை - வளமான தலைமையல்ல - வலிமையான தலைமை தேவையென்றால் அதற்கு முழுத் தகுதி ஏற்க அவரே உரியர் என்பது பொதுவான முற்போக்காளர்களின் கருத்து.

இதற்குரிய காரணம்,

கிரேக்க நாட்டு அரசியல் அறிஞரான பிளாட்டோ கூறினார்:

"தலைமைப் பதவிக்கு முதல் தகுதி, யார் அதை விரும்பவில்லையோ அவர்தான் தகுதியுடையவர்" என்று!

இன்றைய அரசியல் தட்பவெப்பத்தில், ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.,  அதன் ஆக்டோபஸ் ஆதிக்கம் விரிவடைந்த நிலையில், அதனை கொள்கையளவில் - எதிர்க்க முதல் தேவை அதன் கொடூரத்தைப் புரிந்து, சமரசமற்று, அதனை எதிர்க்கும் துணிவு கொண்டவரே, காங்கிரஸ் போன்ற மூத்த கட்சிக்குத் தலைமையேற்றால், அரசியல் களத்தில் நின்று வென்று காட்ட முடியும்!

இன்றைய நிலையில் 

ராகுலின் தலைமை மிக முக்கியம்!

நண்பர் ராகுல் காந்தி அவர்கள் கொள்கை எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு, துணிவுடன் அவர்களை எதிர்ப்பவர் - துடிப்புடன் நாடு முழுவதும் சுற்றி வந்து, மக்களால்  அறியப்பட்டவர், இளைஞர்களால் விரும்பப் படுபவர்.

அவர் நேரு குடும்பத்திலிருந்து வருகிறார் என்பதை ‘வாரிசு அரசியல்' என்று லேபிள் இட்டுத் தள்ளினால், யாருக்கு அதனால் இழப்பு? இன்றைய நிலையில் கடுமையான ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு, அரசமைப்புச் சட்ட நெறிகளைக் காப்பாற்றி நாட்டை வெறும் ஒரு மத, ஒரு மொழி, ஒற்றை அரசுள்ள நாடாக மாற்றும் தீவிர முயற்சி தோல்வியடைய, இவரைப் போன்றவர் தலைமை, மூத்த அரசியல் கட்சியான காங்கிரசுக்கு அவசிய தேவையாகும்

எனவே தொண்டர்கள் உணர்வையும், நாட்டின் அபாயகரமான போக்கையும் உணர்ந்து, அவர் தனது பிடிவாதத்தினை விட்டு, தலைவராக இசையவேண்டும்.

அது அவருக்காகவோ, காங்கிரசுக்காகவோ அல்ல! இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டப்படியான மதச்சார் பற்ற, சமதர்ம ஜனநாயகக் குடியரசை காப்பாற்றிடவே!

மற்ற கட்சிகளுடன் ஒருங்கிணைந்து சென்று, 2024 இல் களத்தில் நிற்க கட்சியை மீண்டும் மறுகட்டமைப்பை உருவாக்குங்கள்.

பொறுப்பைத் தட்டிக் கழிக்க வேண்டாம் ராகுல்

"யார் ஜனநாயகத்தின் பொது எதிரி, எப்படி நாட்டைக் காப்பாற்ற முடியும்?" என்பதை மட்டும் முன்னிறுத்தி, சிந்திக்க வேண்டும். செயல்பட முனைதல் அவசரம்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணி வலிமை பெற்று, மூன்று பெரும் தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய அணுகுமுறைக்கு ‘திராவிட மாடல்' முதலமைச்சர், தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது அரவணைப்பு ஒருங் கிணைப்பு எப்படிப் பயன்பட்டது, பயன்படுகிறது என்பது கண் கூடு.

அதே வகை அணுகுமுறை - ஒரே அஜெண்டா - ‘‘யார் வரக்கூடாது என்பதற்கே முன்னுரிமை''  என்ற தீயணைப்புப் பணி போல களத்தில் இறங்கிட நல்ல சமயம் இது; காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ள வேண்டும்; அதற்குத் தகுதிமிக்க தலைமை ராகுல் காந்திதான் என்று தெளிவாக செயல்பட்டால், இலக்கை எளிதில் அடையலாம்.

அக்கட்சியினர் சிந்திப்பது; அத்துடன் ‘‘கொள்கை வீரர் ராகுல் காந்தி, தனது முடிவை மறுபரிசீலனை செய்து, பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், களமாடக் கடமையாற்ற முன்வருதல் அவசியம்'' என்பது அக் கட்சிக்கு அப்பாற்பட்டும் உள்ள கொள்கையாளர்களின் உறுதியான கருத்து!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

30.8.2022


No comments:

Post a Comment