ஆரியத்தின் வேரறுக்கும் அரியலூர் மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

ஆரியத்தின் வேரறுக்கும் அரியலூர் மாநாடு

கடந்த 30-7-2022   அன்று ஒருநாள் மாநாடு. திராவிட இயக்கக் கொள்கைகள், கோட்பாடுகள் பள்ளி வகுப்பை போல அரங்க நிகழ்ச்சியாக மண்டபத்தில் பகல் நேரத்தில் நடத்தப்பட்டது. 

மாலை அண்ணாசிலை அருகில் திறந்தவெளி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

மாநாட்டில் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பேருரை கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்திற்கும் ஏற்றதாக அமைந்திருந்தது. 

மாநாட்டில் திராவிட இயக்க சிந்தனையாளர்கள் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான மாண்புமிகு சா. சி. சிவசங்கர் அவர்களும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வெ. கணேசன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். 

மாநாட்டு மேடையில் திராவிடர் கழக மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் பொன்.செந்தில்குமார் தனது துணைவியார் ராதிகா கழுத்தில் அணிந்திருந்த தாலியை அடிமைச் சின்னமாக கருதி அகற்றும் நிகழ்ச்சி மற்றும் சனிக்கிழமை மாலை நேரத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திராவிட விஷ்ணு-விஜயராணி ஆகியோருக்கு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் ஆகிய நிகழ்வுகள் கனவு மெய்ப்படல் என்பன போல தந்தைப் பெரியாரின் கனவை மெய்ப்பித்துக் காண்பித்தனர்.. 

மாலையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞர் அணி பேரணியில் கருப்பு-வெள்ளை ஆடையில் தலையில் வெண்மைநிற தொப்பி, கையில் தமிழர் இனம்காக்கும் கழகக் கொடியேந்தி அணிவகுத்து வந்த சுயமரியாதை வீரர்களின் அணிவகுப்பு காண்போரை பரவசமூட்டியது. 

ஆரியத்தின் வேரறுத்து,  ஆர்.எஸ்.எஸ்சின் தோலுரித்து, சனாதனத்தின் சங்கறுத்து, திராவிடத்தின் திறன் விதைக்கும்

தீரர்களாய் வந்த காட்சி......

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 

மங்காத தமிழென்று சங்கே முழங்கு! 

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் 

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் 

விண்ணோடும் உடுக்களோடும் 

மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், 

ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு ஞாபகம் 

செய் முழங்கு சங்கே! 

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் 

தீராதி தீரரென்று ஊது சங்கே! 

பொங்கு தமிழர்க்கு 

இன்னல் விளைத்தால்

சம்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! 

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள் 

வெற்றித் தோள்கள்! 

கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் 

எங்கள் உள்ளம்! 

வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்!" என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதையை நினைவூட்டுவதாக அமைந்தது. வாழ்த்துகள். பாராட்டுகள். 

களப்பணியில் விஞ்சிநிற்கும் அரியலூர் மாவட்ட திராவிடர் கழக தோழர்களுக்கு வாழ்த்துகள் , பாராட்டுகள்.

- மு. ஞானமூர்த்தி

ஒன்றிய செயலாளர் திமுக, செந்துறை














No comments:

Post a Comment