அடுத்த தலைமுறையினருக்கு இவர் வரலாற்றுப் பாடம். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

அடுத்த தலைமுறையினருக்கு இவர் வரலாற்றுப் பாடம்.

பொறுப்பாசிரியர் “கருஞ்சட்டை தமிழர்”

தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட ‘விடுதலை’ இதழ் வார இதழாக, மாத இதழாக, நாளிதழாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டு இருக்கிறது, திராவிடர் கழகத்தால்.

1962 ஆம் ஆண்டு குத்தூசி குருசாமி அவர்கள் ‘விடுதலை’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, தன் 29ஆம் வயதில் அவ்விதழின் ஆசிரியர் பொறுப்பேற்ற அய்யா மானமிகு கி.வீரமணி அவர்கள், 60 ஆண்டு கால ஆசிரியர் பணியை நிறைவு செய்து கொண்டு பணியைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார் என்பது தமிழ்நாடு நாளேடுகளின் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதழ்ப் பணி என்பது எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதைப் போலன்று. அதிலும் நாளேட்டின் ஆசிரியர் பணி என்றால் சொல்லவும் வேண்டுமா!

பொதுவாக நாளேடுகளில் போட்டுக் கொள்வார்கள் ‘நடுநிலை’ நாளேடு என்று. அது என்ன நடுநிலை? சமன்செய்து  சீர்தூக்கும் கோல் போன்றா நடுநிலை நாளேடுகள் வெளிவருகின்றன? ஒரு பக்கச் சார்பு நிலையில் நிற்கும் அவற்றுக்கு நடுநிலை என்பது ஒரு போர்வை, அவ்வளவே!

1960களில் தொழிலாளர்களின் கூட்ட மைப்பால் ‘நவமணி’ என்னும் நாளிதழ் வெளிவந்தது. அந்த இதழ் நடுநிலையாக வெளிவந்தது எனலாம். ஆனால் ‘விடுதலை’ நாளிதழ் அப்படியன்று.

ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, இட ஒதுக்கீடு, சமத்துவம் உள்ளிட்ட சமூக நீதியை, அரசியல் படுத்தும் நாளேடாக, திராவிட இயக்கப் பகுத்தறிவு நாளேடாக 1935ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் ஈரோட்டில் இருந்து வெளியிட்டார் தந்தை பெரியார் அவர்கள்.

இன்று சென்னை, பெரியார் திடலில் இருந்து வெளிவரும் 'விடுதலை' இதழின் ஆசிரியராகக் கடந்த 60 ஆண்டு காலம், அய்யாவின் அடியொற்றித் திராவிட இயக்கப் போர்வாளாக ஏந்தி வந்து கொண்டு இருக்கிறார், ஆசிரியர் அவர்கள்.

ஆரிய-திராவிடப் போரில், ஆரியர்களின் பண்பாட்டுப் போரையே மிகவும் ஆபத்தானது என்று கருதுகிறார், ஆசிரியர். அவரின் எழுத்துகளில் இதனைக் காணலாம்.

நம் ஆசிரியர் சொல்வதைத் கேட்போம், “அரசியல் படையெடுப்பு என்பது கைகளில் போடப்பட்ட விலங்கு. பொருளாதாரப் படையெடுப்பு என்பது காலில் பூட்டப்பட்ட விலங்கு. பண்பாட்டுப் படையெடுப்பு என்பது மனித மூளையில் போடப்பட்ட விலங்கு. அரசியல் மற்றும் பொருளாதாரப் படையெடுப்புகள் கண்களுக்குத் தெரியும், பார்ப்பவருக்கும் தெரியும். ஆனால், மூளையில் போடப்பட்ட இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு கண்ணுக்கும், கருத்துக்குமே தெரியாது..... இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு நமது திராவிட இனத்தின் மூளையை, சிந்தனையைப் பூட்டி, அதன் மொழி, கலை, நாகரிகம், வாழ்க்கை முறை எல்லாவற்றையும் செயல்படாது செய்வதோடு, நம்இன எதிரிகளின் மொழியை, கலைகளை, நாகரிகத்தினை நம்முடையது என்று எண்ணி, அபின் - கஞ்சா போதையில் உள்ளவன் எப்படி மீள முடியாமல் கிடக்கின்றானோ, அது போன்ற வீழ்ச்சி அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டு விடும்”.

கச்சிதமாகச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர். அரசியல் மற்றும் பொருளாதாரப் படையெடுப்புகள் நாளை மாறும் அல்லது மாற்றிவிடலாம். ஆனால் கடவுள், மதம், ஆன்மா, வருணம், ஜாதி, ஆதிக்கம், அடிமைத் தனம், பெண்ணடிமைத்தனம், மொழி மீது திணிக்கும் ஆதிக்கம் இவை போன்ற பார்ப்பனியத்தை மகாபாரதம், இராமாயணம், கலை, இலக்கிய வடிவங்களின் மூலம் நடத்திய பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவு திராவிடர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாயின.

மதத்தை அபின் என்று சொன்னார் கார்ல் மார்க்ஸ். மதம் அபினைவிட போதையை, வெறியை ஏற்றி மூளையை, சிந்தனையைத் தடுமாறச் செய்து சாய்த்து விடும்.

பேரறிஞர் அண்ணா அந்த ஆரிய மாயையை “போதை ஏறியவன், கல் தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும் திராவிட இனத்திடையே கருத்திலே போதை மூண்டிடச் செய்து விட்டுப் பிறகு கீழே உருட்டி விட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கியானான், சோர்ந்தான், சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே” என்று அடையாளம் காட்டுகிறார்.

ஆக, ஆசிரியர் அவர்களின் இச்சமூகத்தின் மீதான தொலைநோக்குப் பார்வைக்கு இது ஓர் எடுத்துக் காட்டு. இப்பண்பாட்டுப் படையெடுப்பு  வெவ்வேறு அரசியல் வடிவங்களில் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

1915 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘அகில பாரதிய இந்துமகா சபா’, 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்க்’ போன்ற பார்ப்பனிய அமைப்புகள் பண் பாட்டுப் படையெடுப்பை அரசியல் மய்யப்படுத்தி, இன்று பாரதிய ஜனதா கட்சியாக வளர்ந்து நிற்கிறது.

மதத்தை அரசியல் கேடயமாக வைத்துக் கொண்டு அயோத்தி, ராமன் கோயில், கோமாதா, பசுப்பாதுகாப்பு, மாட்டிறைச்சி, ஜாதியம் இவற்றின் ஊடாக நாட்டில், கலவரத்தை, அமைதியின்மையை உருவாக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவுக்கு எதிராக ஜனநாயகக் குரலை ஆசிரியர் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு இருக்கிறார்.

மாநில அரசின் உரிமையைப் பறித்துப் புதிய கல்விக் கொள்கையை நுழைக்கும் பா.ஜ.க ஒன்றிய அரசுக்கு எதிராக, புதிய தேசிய கல்விக் கொள்கைத் திட்டம் என்பது பார்ப்பனிய, ஆர்.எஸ்.எஸ்.சின் மனுதர்மத் திட்டமே. மாநில அரசுகளைக் கலக்காமல் தன்னிச்சையாகத் திணிக்கப்படும் பார்ப்பனிய - பனியா திட்டத்தை வீழ்த்திட அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துப் போராடும் பணியில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று களத்தில் நிற்கிறார் ஆசிரியர் அவர்கள். அவரால் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வலுப்பெற்று நின்றது என்பதை யாரே மறுப்பர்?

‘விடுதலை’ ஏட்டில் 60 ஆண்டுகள் இதழ் பணியைச் செய்து கொண்டு இருந்த போது, பகுத்தறிவு  நூல்கள் பல எழுதியும், பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியும், மாநில உரிமைகளுக்காகவும், பாசிச சக்திகளுக்கு எதிராகவும், தமிழர்களுக்காகவும், தமிழர் தலைவராகவும், தந்தை பெரியாரின் போர் வாளாகவும் இருக்கிறார் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்பது வரலாறு.

அடுத்த தலைமுறையினருக்கு இவர் வரலாற்றுப் பாடம்.

No comments:

Post a Comment