திருப்பத்தூர் 'விடுதலை ' சந்தா அளிப்பு விழாவில் தமிழர் தலைவர் உரை வீச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

திருப்பத்தூர் 'விடுதலை ' சந்தா அளிப்பு விழாவில் தமிழர் தலைவர் உரை வீச்சு

 போராட்டம் என்றாலே அதற்கு அடையாளம் கருப்புச் சட்டைதான் கருப்பு இளமையைக் காட்டும் அடையாளம்!

டில்லி விலைவாசி எதிர்ப்புப் போராட்டத்திலும் சோனியா முதல் காங்கிரஸ் தொண்டர்கள் வரை கருப்புடை அணிந்து வந்தது எதைக் காட்டுகிறது?

திருப்பத்தூர், ஆக.22  போராட்டம் என்றாலே அதற்கு அடையாளம் கருப்புச் சட்டைதான் கருப்பு இளமையைக் காட்டும் அடையாளம்! டில்லி விலைவாசி எதிர்ப்புப் போராட்டத்திலும் சோனியா முதல் காங்கிரஸ் தொண்டர் கள் வரை கருப்புடை அணிந்து வந்தது எதைக் காட்டு கிறது? என்று கேள்வி எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திருப்பத்தூரில் நடைபெற்ற கலந்துரையாடல்

கடந்த 14.8.2022 அன்று மாலை 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா திரட்டுவது குறித்து திருப்பத்தூரில் நடைபெற்ற திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, செய்யாறு, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் திராவிடர் கழக கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார். 

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இப்பொழுது நாட்டில் ஜனநாயக உரிமை இல்லை - அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிற சமூகநீதி இல்லை - ஒரு போட்டி அரசாங்கம் - மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் அரசாங்கம் - அய்ந்தாண்டு காலத்திற்கு இருக்கின்ற ஓர் அரசாங்கம் - அதனை ஒழுங்காக ஆட்சி செய்யவிடக்கூடாது என்பதற்காக, தமிழ்நாட்டில் காவி மண்ணை உருவாக்கலாம் என்று ஒருவரை அனுப்பியிருக்கிறார்கள் - அண்ணாமலை போன்ற வர்கள், கட்சியில் திராவிட பெயரை வைத்துக் கொண் டுள்ள சிலரும், அவர்களிடம் அடிமையாகப் போய், அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து - அடமானம் ஆகியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் எதிர்த்துக் கேட்பதற்கு நாதி இல்லையே!

‘திராவிட மாடல்’ ஆட்சி 

இந்தியா முழுவதும் வரவேண்டும்!

இதையெல்லாம் எதிர்த்து வெல்லவேண்டும் என்கிற அளவிற்கு வந்தால், தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி இருக்கிறது. இதுபோன்ற ஆட்சி இந்தியா முழுவதும் வேண்டும் - ‘திராவிட மாடல்’  நாடு முழு வதும் வேகமாகப் பரவவேண்டும். சமூகநீதி - இந்தக் கருத்து தோற்காது என்பதற்கு அடையாளம் - நேற்று முன்தினம் பீகாரில் மிகப்பெரிய அளவிற்கு ஓர் அமைதியான அரசியல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

அடுத்ததாக கருநாடக மாநிலத்தில் வரவிருக்கிறது. மற்ற மற்ற மாநிலங்களிலும் இந்நிலை வரும்.

சாதாரணமாக இந்நிலை வந்துவிடும் என்று நினைக்காதீர்கள். எல்லோரும் எங்கே பார்க்கிறார்கள்?

பெரியாருடைய தத்துவங்கள் என்றென்றைக்கும் தேவைப்படுகின்ற தத்துவங்கள்!

பெரியார் சிலையை நோக்குகிறார்கள் -

பெரியாருடைய தத்துவங்கள் என்றென்றைக் கும் வாழக்கூடிய, வளரக்கூடிய, தேவைப்படு கின்ற தத்துவங்கள்.

அதற்கு என்ன சிறப்பு என்றால், அது விஞ்ஞானம்.

விஞ்ஞானத்தை  யாராவது அழிக்க முடியுமா?

சனாதனம், சனாதனம், சனாதனம் என்று சங்கீதம் பாடுகிறார்கள்; சனாதனம் என்றால், மாறாதது - அப்படியே நிலைத்து நிற்பது என்று சொல்கிறார்கள்.

5 ஜியை யார் கண்டுபிடித்தது?

சனாதனம் பேசுகிறவர்கள்தான் 5ஜி யை வாங்கு கிறார்கள். 2ஜியிலிருந்து 5ஜி-க்குப் போகிறீர்களே, 5ஜியை யார் கண்டுபிடித்தது?

முப்பத்து முக்கோடி தேவர்களில் எவராவது ஒரு வருக்காவது ஒரு ஜியைப்பற்றியாவது தெரியுமா? என்றால், ஒன்றுமே தெரியாது.

பெயருக்குப் பின்னால் ‘ஜி' போடுகிறார்கள் பாருங்கள், அதுதான் இவனுக்குத் தெரியும்.

அந்த ஜியைத் தவிர, 2ஜியையோ, 5ஜியையோ தெரியாது-இது இவன் கண்டுபிடித்தது அல்ல - அது அறிவியலின் கண்டுபிடிப்பு.

அப்படிப்பட்ட ஒன்று வளர்ச்சியடைந்து இன்றைக்கு 5ஜி அலைக்கற்றையாக வந்திருக்கிறது.

அவர்கள் செய்கின்ற முறைகேட்டை, அதனுடைய ஆபத்துகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அதற்காகத்தான் ‘விடுதலை’ என்ற பேராயுதம். அச்சப்படாமல் எடுத்துச் சொல்லவேண்டும். மற்ற ஏடுகள், தொலைக்காட்சிகளைப் பார்த்தீர்களே யானல், அவற்றை நடத்துவது யார்?

இங்கேகூட சற்று நேரத்திற்குமுன் நிறைய செய்தி யாளர்கள் என்னை பேட்டிக் கண்டார்கள்.

மேஜைமீது நிறைய மைக்குகளையும், பதிவு செய்கிற கருவிகளையும் வைத்திருந்தார்கள்; சிலர் நல்ல எண்ணத்தோடு கேள்வி கேட்டார்கள்; நானும் அதற்குப் பதில் சொன்னேன், 20 நிமிடம் அதற்காக செலவழித் தோம்.

ஆனால், நாளைக்கு ஏதாவது தொலைக்காட்சியிலோ, பத்திரிகையிலோ இந்தச் செய்தி வரும் என்று நினைக்கிறீர்களா?

ஊடக முதலாளிகளின் இருட்டடிப்பு!

என்னுடைய நேரமும், அவர்களுடைய நேரமும் வீணானதே தவிர, வேறொன்றுமில்லை. ஒன்றிரண்டு மீடியாக்களிலோ, நாளிதழ்களிலோ வந்தால், பெரிய அதிசயம்தான்.

செய்தியாளர்கள்மேல் நாங்கள் குற்றம் சொல்ல வில்லை; இதைப் பதிவு செய்துகொண்டு, அவரவர் களுடைய அலுவலகம் சென்றால், ஊடகங்கள், ஊடக முதலாளிகளாக இருக்கின்ற அம்பானி, அதானி, டாட்டா போன்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்கள் சொல்வதைத்தான் அந்த ஊடகத்தில் உள்ள மேலதி காரிகள் கேட்பார்கள் - ஆகவே, இந்தச் செய்தியை வெளிவராமல் செய்கின்ற நிலைதான் இருக்கும். அப்படியே தப்பித் தவறி வந்தால்கூட ஒரு வரி, இரண்டு வரிதான் வரும்.

 இறுதி வெற்றியை 

நாங்கள்தான் அடைவோம்!

எங்களை இருட்டடிக்கலாம், இந்தக் கொள் கையை விரட்டிவிடலாம்; இந்த மண்ணை காவி மண்ணாக்கலாம் என்று ஒருபோதும் அவர்கள் நினைக்கக் கூடாது. எதிரிகளுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், இறுதி வெற்றியை நாங்கள்தான் அடைவோம்.

பெரியாரை நீங்கள் அவ்வளவு சுலபமாகப் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால், அவர்தான் எங்கள் மூச்சுக் காற்று. மூச்சுக் காற்றை யாராவது புறக்கணிக்க முடியுமா? 

ஒரே ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒரு புதுமை - அய்யா அவர்கள் கருப்புச் சட்டையைப் போட்டார்.

எல்லோரும் கருப்பு வண்ணத்தைக் கண்டு பயந்தார்கள். அபசகுனமாக இருக்கிறதே என் றெல்லாம் கேட்டதும் உண்டு.

1946 இல் மதுரையில் 

கருப்புச் சட்டை மாநாடு

ஆனால், அய்யா கருப்பு என்பது நம்முடைய இனத்தின் இழிவைக் காட்டுவதற்காக, நீதி கேட்பதற் காகத்தான் என்று 77 ஆண்டுகளுக்கு முன்பு கருப்புச் சட்டை அணிய ஆரம்பித்து, கொள்கை ரீதியாக 1946 இல் மதுரையில் கருப்புச் சட்டை மாநாட்டை நடத்தினார்கள்.

காலையில் மாநாடு சிறப்பாக நடந்தது. அன்றைக்கு காங்கிரசில் பார்ப்பனர்கள் ஆதிக்கம்தான் இருந்தது. அவர்கள் கூலிகளை, காலிகளைப் பிடித்து, வைகை மணலில் மாநாட்டுப் பந்தல் அமைத்திருந்ததைக் கொளுத்திவிட்டனர், அடுத்த நாள் மாநாடு நடத்த முடியாத சூழ்நிலை.

நகரத்திற்குள் சென்ற கருப்புச் சட்டை அணிந்த தோழர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். அதற்கு என்ன காரணம் சொன்னார்கள் என்றால், ‘பெண்களைக் கொச்சைப்படுத்தினோம்‘ என்று தவறான தகவலைப் பரப்பினார்கள்.

ஒரு காலத்தில் கருப்புச் சட்டையைப் போட்டாலே, அவர்களை மிரண்டு பார்க்கின்ற அளவிற்கு இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு எப்படி மாறிற்று? இந்த 77 ஆண்டு கால சரித்திரத்தில்.

இன்றைக்கு ஏன் கருப்புச் சட்டையை 

தைத்து வைத்திருக்கிறார்கள்?

இப்பொழுது எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்திருக்கிறார்கள். இதை யாராவது மறுக்க முடியுமா?

ஏன் கருப்புச் சட்டையை தைத்து வைத்திருக் கிறார்கள்? போராட்டம் நடத்துகிறார்களே, அந்தப் போராட்டம் வலிமையாக இருக்கவேண்டும் என்றால், கருப்புச் சட்டை அணிந்து போராடினால் வலிமையாக இருக்கும் என்பதினால்தான்.

பாதிரிமார்கள்கூட கருப்புச் சட்டை அணிகிறார்கள்; அண்மையில் கிறிஸ்தவ நண்பர்கள், ஆதிதிராவிட கிறிஸ்தவ நண்பர்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகிறார்கள்.

ஆகவே, காவிகளைத் தவிர, மீதமுள்ள அனைவரும் கருப்புச் சட்டையைத்தான் அணிகிறார்கள்.

கருப்புக்கு இருக்கிற சிறப்பு இது.

இன்னொரு செய்தியை சொன்னால், சில பேருக்கு சங்கடமாக இருக்கும்.

கருப்புதான் இளமையைக் காட்டுவது.

உண்மைதானே!

இதை யாராவது மறுக்க முடியுமா?

வளமையைக் காட்டுகிறதோ இல்லையோ, இளமையைக் காட்டுவதற்கு அதுதானே மிக முக்கியம்.

என்னைப் போன்ற ஆள்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. முடி வெள்ளையாக இருந்து விட்டுப் போகட்டும் என்று இருப்பவர்கள்; உள்ளமும் வெள்ளை, முடியும் வெள்ளையாக இருக்கட்டுமே என்று விட்டுவிட்டுப் போவோம்.

கருப்புக்குத்தான் அந்த சக்தி உண்டு!

ஆனால், இப்படி எல்லோராலும் இருக்க முடிகிறதா? குறிப்பாக மகளிரால் இப்படி இருக்க முடியுமா?

ஆகவே, இளமையாக இருக்கவேண்டும் என்றால், கருப்புக்குத்தான் அந்த சக்தி உண்டு. 

பி.ஜே.பி.,க்காரரும் வெள்ளை முடிக்குக் கருப்பு மை அடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவரை அறியா மலேயே கருப்பை அவர் ஆக்கிரமித்துக் கொண்டி ருக்கிறார். அவருடைய தலைக்குமேலே இருக்கிறது கருப்பு - இந்தக் கருப்பு சாதாரணமான கருப்பு அல்ல - விடாது கருப்பு என்பதுதான் மிக முக்கியம்.

டில்லியை 

ஒரு கலக்குக் கலக்கிற்று கருப்பு!

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் கருப்புச் சட்டை தைத்தது மட்டுமல்லாமல், அண்மையில் விலை வாசி உயர்வைக் கண்டித்து டில்லியில் போராட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடை பெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அம்மையார், ராகுல் காந்தி, மற்ற காங்கிரஸ் தலை வர்கள் எல்லாம் கருப்பு உடை அணிந்து கொண்டு தானே போராடினார்கள். டில்லியை ஒரு கலக்குக் கலக்கிற்று அந்தப் போராட்டம்.

டில்லி ஏன் கலங்கிப் போயிற்று என்று சொன் னால், ஏதோ கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினார்கள் - என்று நினைத்துவிட்டுவிட் டார்கள். ஆனால், அதனை அவ்வாறு யாரும் அலட்சியப்படுத்தக் கூடாது என்று பிரதமர் மோடி பதிலளித்திருக்கிறார்.

இன்றைக்குப் போராட்டக் கருவியாக 

இருக்கிறது கருப்பு!

ஆக, கருப்பு இப்பொழுது எங்கே போயிற்று பார்த்தீர்களா?

77 ஆண்டுகளுக்கு முன்பு எந்தக் கருப்புச் சட்டை மாநாட்டிற்குத் தீ வைத்தார்களோ, அதே கருப்பு உடைதான் இன்றைக்குப் போராட்டக் கருவியாக இருந்துகொண்டிருக்கிறது. அதே கருப்புதான் இளமை யைத் தருகிறது.

பெரியார் எப்போதும் தேவைப்படுவார்!

எனவேதான், பெரியார் எப்போதும் தேவைப் படுவார்- 

எந்த ரூபத்திலும் தேவைப்படுவார் -

என்றைக்கும் இந்த இயக்கம் வெற்றி பெறும்-

இந்த இயக்கம் தோல்வியடையாது -

ஏனென்றால், இது அறிவியல், விஞ்ஞானம் -

விஞ்ஞானம் ஒருபோதும் தோற்காது - 

மேலும் மேலும் விஞ்ஞானம் வளர்ச்சிய டையுமே தவிர, தோல்வியடையாது.

2ஜியிலிருந்து 5ஜி வரை போகும்; அதற்கு மேலும் போகும்; எத்தனை ஜி வரும் என்று  இந்த ஜிக்களுக்கே தெரியாது.

ஆகவே நண்பர்களே, இந்த இயக்கம் எத்த கையது? அது இயங்கிக் கொண்டே இருப்பதற்குப் பெயர்தான் இயக்கம்.

தோழர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அரியலூர் மாநாடு, அதற்கு முன் போராட்டம் - மாநாடு - பொதுக்கூட்டம் - இங்கேகூட நான்கு மாதங்களுக்கு முன்பு திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிவிட்டுத்தான் சென்றேன்.

இன்னும் சந்தாக்களைத் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்!

அடுத்து இவ்வளவும் செய்துவிட்டு, சலிப்படைய வில்லை தோழர்கள் - ‘‘இது முதல் தவணை - குறைவாகக் கொடுத்திருக்கின்றோம் என்று நினைக்கவேண்டாம்; அடுத்ததாக இன்னும் சந்தாக்களைத் தருகிறோம்’’ என்று சொன்னார்கள்.

இனிமேல் அவர்கள் பின்வாங்க முடியாது - ஏனென் றால், எல்லோரும் சாட்சியாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு ஒரு பெரிய உற்சாகம், பெரிய வாய்ப்பு.

ஆகவேதான் நண்பர்களே, நம்முடைய 60 ஆயிரம் விடுதலை சந்தா திரட்டும் இலக்கு வருகின்ற 25 ஆம் தேதியோடு முடிகிறது. அதற்குமேல் நாளை நீட்டிக்க முடியாது.

அதைவிட முக்கியமானது நகரங்களில் இருப்பதை விட, மிக முக்கியமாக கிராமப் பகுதிகளுக்கு ‘விடுதலை' நாளிதழ் செல்லவேண்டும்.

ஏனென்றால், சாதாரணமாக நீங்கள் வாங்குகின்ற பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ இது போன்ற விவாதங்களோ, விமர்சனங்களோ வராது. நம்முடைய ‘விடுதலை’ நாளிதழில் மட்டும்தான் வரும்.

விடுதலை’ நாளிதழ் ஒரு சிறப்பு நாளிதழ்!

எப்படி சில சிறப்புப் மருத்துவர்கள் மட்டும்தான் சில நோய்களுக்கு மருந்தைத் தர முடியுமோ அதுபோன்று ‘விடுதலை’ நாளிதழ் ஒரு சிறப்பு நாளிதழாகும்.

அது நாடெங்கும் பரவுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.

இந்த வாய்ப்பு அருமையானது - நான் சுற்றுப்பயணம் செய்து ஏற்பட்ட களைப்பு - அலைச்சல் தீர்ந்துவிட்டது. திருப்பத்தூருக்கு வந்து உங்களையெல்லாம் பார்த்து விட்டு, நான் சென்னைக்குத் திரும்பும்போது ஒரு புத்துணர்ச்சியோடு நாங்கள் திரும்பக் கூடிய வாய்ப்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். புதிய நம்பிக்கையை நீங்கள் அளித்திருக்கிறீர்கள், ஊட்டியிருக்கிறீர்கள். எல்லோரும் கடுமையாக உழைத்து இந்த சந்தாக்களை அளித்திருக்கிறீர்கள்.

கிராமங்கள்தோறும் ‘விடுதலை’யைப் பரப்பவேண் டும். யார் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் சேர்ந்து வசதியற்றவர்களுக்குக்கூட ‘விடுதலை’ நாளிதழைப் படிப்பதற்குரிய வாய்ப்பை  உண்டாக்க வேண்டும்.

இதுவரை ‘விடுதலை’யைப் படிக்காதவர்களை படிக்கச் செய்யுங்கள்!

தான் சந்தா சேர்த்து ‘விடுதலை’யைப் படித்தால் மட்டும் போதாது; தன் மூலம் நான்கு பேரை‘விடுதலை’ சந்தாதாரராக சேர்த்து, இதுவரை ‘விடுதலை’யைப் படிக்காதவர்களை படிக்கச் செய்யுங்கள்.

88 ஆண்டுகளாக ‘விடுதலை’ நாளிதழ் வருகிறது என்பதைக் கேள்விப்பட்டு அவர்கள் ஆச்சரியப் படுவார்கள்.

அதற்காகத்தான் வருகிற 18, 19, 20 ஆகிய மூன்று நாள்களிலும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்கள் அல்லது பெருநகரங்களில் ‘விடுதலை’ சந்தாவினை கடைவீதிகள் தோறும் சென்று தோழர்கள் கேட்கவிருக் கிறார்கள். அந்த வாய்ப்புகளையெல்லாம் தோழர்கள் சந்தா சேர்க்க பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இன்னும் இடையில் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இந்த பத்து நாள்கள் என்பது இயக்கத் தோழர்களுக்கு மிக முக்கிய வாய்ப்பு.

மகளிர் தோழர்களின் தொண்டு மிகவும் முக்கியம். அவர்களும், அந்த அணியில் வரவேண்டும். மகளிர்  கேட்டால், நிச்சயம் அதற்கான வாய்ப்பு உண்டு.

‘‘எவ்வளவு சந்தாத் தொகை? என்று கேட்டார்களே தவிர, ஏன் ‘விடுதலை’க்கு சந்தா கொடுக்க வேண்டும்? 

என்று கேட்டது கிடையாது!

மகிழ்ச்சிகரமான ஒரு செய்தி, தெம்பூட்டக் கூடிய ஒரு செய்தி என்னவென்றால், நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்; ஒவ்வொரு தோழரிடமும் நான் கேட்டு தெரிந்துகொண்ட விஷயம் என்னவென்றால், ‘விடுதலை’ சந்தா கொடுங்கள் என்று கேட்பவர்களிடம், நம் கருத்துகளுக்கு மாறுபட்டவர் கள்கூட ‘‘எவ்வளவு சந்தாத் தொகை? என்று கேட்டார்களே தவிர, ஏன் ‘விடுதலை’க்கு சந்தா கொடுக்க வேண்டும்? கிடையாது போங்கள்’’ என்று சொன்னதே இல்லையாம்.

இப்பொழுது கடைவீதியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம் என்றால், இரண்டு பேர் சந்தா இல்லை என்று சொல்லட்டும்; இரண்டு பேர் சந்தாக்கள் கொடுக்கட்டும்; பத்து பேருக்கு ‘விடுதலை’ வருகிறது என்று தெரிவதுதான் முக்கியம்; விடுதலை யினுடைய தேவை என்ன என்பதுதான் அதனுடைய அடிப்படை.

கூச்சப்படக் கூடாது; வெட்கப்படக்கூடாது!

ஆகவேதான், கூச்சப்படக் கூடாது; வெட்கப்படக் கூடாது. நமக்காக கேட்கவில்லை; நமக்காக, சுயநலத்திற்காகக் கேட்டால்தான் வெட்கப்படவேண்டும். இது பொதுநலமாகும்.

ஆகவேதான் நண்பர்களே, உங்களுடைய அன்பான ஒத்துழைப்பிற்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றி!

குறிப்பாக, இங்கே நண்பர்கள் நினைவுபடுத்தியிருக் கிறார்கள். இந்த நிகழ்விற்குப் பெருமைத் தேடித்தந்த திருப்பத்தூர் மாவட்ட இணை செயலாளர் கலைவாணன் அவர்களுக்கும் சேர்த்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோருக்கும், பெயர் சொன்னவர்கள், பெயரைச் சொல்லாதவர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, மீண்டும் பொதுக்கூட்டம், மாநாடு வாயிலாக உங்களையெல்லாம் சந்திப்பேன்.

ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா!

அடுத்த மாதம் ஏ.டி.கோபால் அவர்களுடைய நூற்றாண்டு விழா. எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், ஏ.டி.கோபால் போன்றவர்களுடைய தொண்டைப் போற்றும் வகையில், அவர் இருக்கும் பொழுதே, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் ஏ.டி.கோபால் தோட்டம் என்று பெயர் வைத்தோம் - அந்தத் தோட்டத்திற்குப் பக்கத்தில் நின்று அவர் ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.

நம்மூரில் ஒரு தவறான சிந்தனை இருக்கிறது; ஒருவர் மறைந்த பிறகுதான், அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று. அதை மாற்றியது நாம்தான். அவர் உயிரோடு இருக்கும்பொழுதே செய்தால்தான், அவரு டைய ஆயுள் அதிகரிக்கும் - மகிழ்ச்சியாக இருப்பார்.

ஆகவே, உங்களுடைய அன்பிற்கு நன்றி!

‘விலை’ என்று இருக்காது - ‘நன்கொடை’ என்றுதான் இருக்கும்!

பல மாவட்டங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள். ‘விடுதலை’ சந்தா என்பது நமக்காக கேட்கவில்லை - நம்முடைய வருவாய்க்காக கேட்கவில்லை. விடுத லையை இதுவரை படித்தவர்களில் எத்தனை பேர் இதைக் கவனித்திருப்பீர்கள் என்று தெரியாது - அதில் விலை என்று போட்டிருக்காது - நன்கொடை என்றுதான் இருக்கும்.

மற்ற பத்திரிகைகள் வணிகத்திற்காக - நம்முடைய பத்திரிகைகள் என்பது  கொள்கைகளைப் பரப்புவது.

மக்களாகப் பார்த்து அதற்கு நன்கொடை கொடுக் கிறார்கள் என்பதுதான் அதனுடைய தத்துவம்.

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய பெருமைகளை யும், நம்முடைய எதிரிகளுடைய புரட்டுகளையும் அம்பலப்படுத்துவதற்கு இதுதான் நல்ல வாய்ப்புயாகும்.

புதிய வரலாற்றை - புதிய திருப்பத்தை - 

புதிய நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்

அருமையான ஏற்பாடுகளைச் செய்த தோழர் எழிலரசன், அவருக்கு ஒத்துழைத்த இயக்கத் தோழர்கள், அனைத்துக் கட்சி நண்பர்கள், வியாபாரப் பிரமுகர்கள், கிராமத்துப் பெரியவர்கள், விவசாயிகள், சமூக இயக்கத் தோழர்கள், அதுபோலவே, ஒவ்வொரு மாவட்டத்தி லிருந்தும் பொறுப்பாளர்கள் வந்திருக்கிறார்கள், அவர் களும் கடுமையாக உழைத்து, இருக்கின்ற 10 நாள்கள் மிகவும் சிறப்பான நாள்கள் - நாம் ஒரு புதிய வரலாற்றை - புதிய திருப்பத்தை - புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டு, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க விடுதலை!

பரவுக விடுதலை!

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.


No comments:

Post a Comment