எந்தக் காலகட்டத்திலும் நான் பொறுப்பேற்ற பிறகு ‘விடுதலை’ நாளிதழ் ஒரு நாள்கூட நின்றதே கிடையாது; தவறி நிறுத்தப்பட்டதும் கிடையாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

எந்தக் காலகட்டத்திலும் நான் பொறுப்பேற்ற பிறகு ‘விடுதலை’ நாளிதழ் ஒரு நாள்கூட நின்றதே கிடையாது; தவறி நிறுத்தப்பட்டதும் கிடையாது

கரோனா காலகட்டத்தில்  பல லட்சக்கணக்கான மக்களிடம் ‘விடுதலை' நாளேடு மின்னிதழ்மூலம் கொண்டு செல்லப்பட்டது

மன்னார்குடி, ஆக.23 எந்தக் காலகட்டத்திலும் நான் பொறுப்பேற்ற பிறகு ‘விடுதலை’ நாளிதழ் ஒரு நாள்கூட நின்றதே கிடையாது; தவறி நிறுத்தப்பட்டதும் கிடையாது. நாம் விடுமுறை விட்டால்தான் வெளிவராமல் இருந் திருக்கலாம்;  கரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு தோழர்களும் மின்னிதழ்மூலம் 200 பேருக்கு, 300 பேருக்கு அனுப்பினர். பல லட்சக் கணக்கான மக்களை அந்தக் காலகட்டத்தில் வழமைக்கு மாறாக ‘விடுதலை’ சந்தித்தது. இது ‘விடுதலை’யினுடைய சிறப்பாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மன்னார்குடியில் நடைபெற்ற கலந்துரையாடல்

கடந்த 13.8.2022 அன்று மாலை 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா திரட்டுவது குறித்து மன்னார்குடியில் நடைபெற்ற மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, காரைக்கால் மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:

நம் கழகத்தின் பாசமிகு கொள்கை வீரர்களே!

மன்னை மாநகரில் தஞ்சாவூர், திருவாரூர், காரைக் கால் ஆகிய மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மிகச் சிறப்பாக இங்கே தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட் டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களுடைய  திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, திராவிடர் மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய நகரப் பொறுப்பாளர்கள் ஆகிய அத்துணை பேரும் கலந்த இந்த சிறப்புமிகுந்த கூட்டத்திற்கு வருகை புரிந்து, அருமையான கருத்து களை இங்கே எடுத்து வைத்துள்ள ‘விடுதலை’ சந்தா திரட்டல் என்ற பணிக்கு, ஓய்வறியாத உழைப்புத் தேனீக்களாக தங்களை ஆக்கிக்கொண்டுள்ள, நம்முடைய கழகத்தின் பாசமிகு கொள்கை வீரர்களே!

பழைய தஞ்சை மாவட்டத்தினுடைய ஒருங்கிணைந்த ஒரு கூட்டம்தான் இந்தக் கலந்துரையாடல்!

கழகப் பொதுச்செயலாளர் தோழர் ஜெயக்குமார் அவர்களே,  மாநில அமைப்பாளர் குணசேகரன் அவர் களே,  அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் அவர்களே,  தஞ்சை மண்டல தலைவர் அய்யனார் அவர்களே, செயலாளர் குருசாமி அவர்களே,  திருவாரூர் மண்டலத் தலைவர் முருகைய்யன் அவர்களே, மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களே,  மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அவர் களே, செயலாளர் கணேசன் அவர்களே,  தஞ்சை மாவட்டத் தலைவர் தோழர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களே, செயலாளர் தோழர் வழக்குரைஞர் அருணகிரி அவர்களே,  திருவாரூர் மாவட்டத் தலைவர் தோழர் மோகன் அவர்களே, செயலாளர் வீர.கோவிந்த ராசு அவர்களே, நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் அவர்களே, செயலாளர் பூபேஷ்குப்தா அவர்களே, குடந்தை மாவட்ட செய லாளர் உள்ளிக்கடை துரைராசு அவர்களே, பட்டுக் கோட்டை மாவட்டச் செயலாளர் பேராவூரணி தோழர் சிதம்பரம் அவர்களே, மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் தோழர் குணசேகரன் அவர்களே, மாவட்டச் செயலாளர் தோழர் தளபதி ராஜ் அவர்களே, மண்டல மகளிரணி செயலாளர் தோழர் கலைச்செல்வி அவர்களே,

கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் அவர்களே, மாநில இளைஞரணியின் துணைச் செயலாளர் தோழர் வெற்றிக்குமார் அவர்களே, மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டியன் அவர்களே, மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் இராஜ வேல் அவர்களே, பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் தோழர் இராமகிருஷ்ணன் அவர்களே,

தஞ்சை மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி அமைப் பாளர்  கணேஷ் அவர்களே, திருவாரூர் மண்டல இளை ஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி அவர்களே, கழகப் பேச்சாளர் தோழர் இராம.அன்பழகன் அவர்களே, மாநில விவசாயத் தொழிலாளரணி செயலாளர் தோழர் குடவாசல் வீரைய்யன் அவர்களே, திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் மகேஷ்வரி அவர்களே,

மற்றும் இயக்கப் பொறுப்பாளர்களே, இயக்கக் குடும் பத்தவர்களே, செயல்வீரர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழைய தஞ்சை மாவட்டத்தினுடைய ஒருங்கிணைந்த ஒரு கூட்டம்தான் இந்தக் கலந்துரையாடல் என்பதாகும்.

பெரிய கருத்தரங்கம் போன்று- பெரிய மாநாடு போன்று கலந்துரையாடல்

இன்றைக்கு அரசியல் ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருந்தாலும்கூட, நாம் ஒன்றான இந்த உணர்வோடு உங்களையெல்லாம் சந்திக் கின்றபொழுது, இந்தக் கலந்துரையாடலே ஒரு பெரிய மாநாடு போன்று, ஒரு பெரிய கருத்தரங்கம் போன்று இந்த மண்டலத்தில் நம்முடைய சித் தார்த்தன் மற்றும் மன்னார்குடி பொறுப் பாளர்கள், தோழர்கள் இந்த ஊரே வியக்கத்தக்க வகையில் வழிநெடுகிலும் கழகக் கொடிகள், விளம்பரப் பதாகைகளை வைத்திருக்கிறார்கள்.

நாம் கலந்துரையாடலுக்குத்தானே செல்கி றோம்;  அங்கே சென்று நம்முடைய தோழர்களை சந்தித்துவிட்டுத்தான் திரும்புவோம் என்று நினைத்தேன்.

நன்றாக விளம்பரப்படுத்தவேண்டும் என்று தான் நான் ஆர்.பி.எஸ். அவர்களிடம் சொன்னேன். ஆனால், இங்கே இவ்வளவு பெரிய ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; பொதுக்கூட்டமாகவே ஏற் பாடு செய்திருந்தால், நான் உரையாற்றிவிட்டுச் சென்றிருப்பேன் என்ற நிலை.

இவ்வளவு சிறப்பாக, மகிழ்ச்சியோடு ஏற்பாடு செய்த தோழர்களுக்குப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடுமையாக உழைத்து, மேலும் இலக்கை நோக்கிச் செல்லவேண்டும். இடையில் 10 நாள்கள்தான் உள்ளன. வெண்ணெய்த் திரண்டு  வருகின்ற நேரத்தில், அதனை நெய்யாக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.

இந்த 10 நாள்கள், கடுமையாக உழைக்கவேண்டும்; நம்முடைய உழைப்பினுடைய அறுவடை நாள். அறு வடை செய்ததை களத்துமேட்டுக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

மாவட்டத் தோழர்கள் இடையே நல்ல ஆரோக்கிய மான போட்டி இருக்கிறது.

நாகை மாவட்டத்தை நன்றாகப் பக்குவப்படுத்தி இருக்கிறார்கள் தோழர்கள்!

மற்ற மாவட்டங்களைவிட, பிரிந்த மாவட்டங்களில், நாகை மாவட்டத்தைப்பற்றி கொஞ்சம் கவலையிருந்தது. என்ன கவலை என்றால், நாகை மாவட்டத்தை சில மாதங்களுக்கு முன்புவரையில், திராவிட இயக்கத்தை விட்டு, அம்மாவட்டம் கொஞ்சம் நகர்ந்துகொண்டு போய்க்கொண்டே இருந்தது. காவி மண்ணாக நாகை மாவட்டத்தை ஆக்குவதற்குக் கடுமையான முயற்சி களை இன எதிரிகள் செய்தனர்.

ஆனால், நம்முடைய தோழர்கள் நெப்போலியன், பூபேஷ்குப்தா போன்றவர்கள் ஒருங்கிணைந்து, ஒருமனதோடு பணியாற்றிக் கூடியவர்கள் வந்தவுடன், நாகை மாவட்டத்தில் எந்த அரசியல் கட்சியும் திராவிடர் கழகத்தோடு இணைந்து செயல்பட்டால்தான், அவர் களுக்கு வாய்ப்பு ஏற்படும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் அந்த மாவட்டத்தை நன்றாகப் பக்குவப்படுத்தி இருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டம், வழக்கமாக வரும். பல காரணங்களால், ஒரு சோர்வு தட்டியிருக்கிறது. விவசாய அணி - நமக்கு சிறப்பாக இயங்குகின்ற பகுதி அது.

கிழக்குத் தஞ்சை என்று சொன்னால், திருவாரூர், நாகை மாவட்டம், கீழத்தஞ்சை மாவட்டம் போன்ற ஊர்களிலும், கிராமங்களிலும் இயக்கத் தோழர்கள் இருந்தனர். அதை மீண்டும் புதுப்பிக்கவேண்டும்.

தோழர் மகேஷ்வரி அவர்கள் இங்கே சொன்னார்கள். கிராமத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில், எல்லா கிராமங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்கள் அத்தனை பேரையும் சந்திப்பேன்.

அதன்மூலமாக ஒரு பெரிய வாய்ப்பு, மகிழ்ச்சி நமக்கு ஏற்படும். நம்முடைய உறவுகள் என்பது இதுதான்.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய தலைதாழ்ந்த நன்றி!

அருமையான முயற்சியை எடுத்து, இலக்கை நாங்கள் முடித்துக்கொடுப்போம்; இலக்கையும் தாண்டு வோம் என்ற அருமையான உறுதிமொழியைச் சொல்லி, அதற்கு முதல் தவணை - இரண்டாம் தவணை என்று வைத்திருக்கிறார்கள். அடுத்து வருவதுதான் கடைசி தவணை என்பது மிகவும் முக்கியம்.

அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சந்தாக்களைக் கொடுக்கவிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் னுடைய தலைதாழ்ந்த நன்றியை, மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த அன்பைக் காட்டி என்னை நீங்கள் வாழ வைக்கின்றீர்கள் என்று சொல்லும்பொழுது, ஒன்றை நம்முடைய குணசேகரன் அவர்களும், ஜெயக்குமார் அவர்களும், ஊமை.ஜெயராமன் அவர்களும் சொன் னார்கள்.

பெரியார் தொண்டனாக என்னை சிறுவயதிலேயே ஒப்படைத்துக் கொண்டேன்

88 ஆண்டு ‘விடுதலை’க்கு 60 ஆண்டுகள் ஆசிரிய ராக இருந்து வருகிறேன் என்பதற்காக நன்றி செலுத்து கிறோம் என்று சொன்னார்கள். நான் அதில் ஒரு திருத்தம் சொன்னேன். 60 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா அவர்கள் என்னை அழைத்தார்; நான் அந்தப் பணிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டேன். பெரியார் தொண்டனாக என்னை சிறுவயதிலேயே ஒப்படைத்துக் கொண்டேன். அய்யா அவர்கள் என்ன சொன்னாலும் கேட்பேன்; என்னுடைய குடும்பத்தினரும் அப்படியே.

நான் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று என்னு டைய துணைவியாரும் ஒத்துழைப்புத் தரக் கூடிய அளவிற்கு இருந்தார்கள்.  அதன்படி முடிவெடுத்தோம்.

மரணம் ஒன்றுதான்  பிரிக்குமே தவிர, வேறொன்றும் பிரிக்காது!

ஆகவே, எந்தப் பிரச்சினையும் இல்லை; மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதை நான் ஒரு பெரிய சாதனையாக நினைக்கவில்லை.

‘விடுதலை’யும் என்னை விட்டுப் போகப் போவதில்லை - ‘விடுதலை’யை விட்டு நானும் போகப் போவதில்லை. மரணம் ஒன்றுதான் பிரிக்குமே தவிர, வேறொன்றும் பிரிக்காது.

திராவிடர் கழகத்திற்குக்கூட அடுத்த தலை முறை என்று நான் சொல்வேன். ஆனால், ‘விடுதலை'யைப் பொறுத்தவரையில், நான்தான் நிரந்தர ஆசிரியர் என்று சொல்லக்கூடிய அள விற்கு அதைத் தூக்கி நிறுத்தவேண்டும்.

நம்முடைய மகிழ்ச்சிக்காக அல்ல - எதிரிகளுடைய மிரட்சிக்காக!

‘இல்லந்தோறும் விடுதலை' என்பதைப் பார்த்து மகிழவேண்டும். அது நம்முடைய மகிழ்ச்சிக்காக அல்ல - எதிரிகளுடைய மிரட்சிக்காக அது மிகவும் முக்கியம்.

அந்த எதிரிகள், ஒரு நோய்க் கிருமி ஊடுருவுவதைப் போல, காவிக் கிருமிகள் இப்போது வேகமாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஒரு நல்ல தடுப்பூசி எது என்று சொன்னால், ‘விடுதலை’ என்ற ஆயும்தான்.

எனவே, ‘விடுதலை’க்கு சந்தா சேருங்கள் என்று சொல்வது இருக்கிறதே, அது ‘விடுதலை’க்கு பணம் சேர்ப்பதற்கு அல்ல; அல்லது நமக்குப் பெருமை சேர்ப்ப தற்காக அல்ல. அல்லது எனக்கு நன்றி சொல்லவோ, பாராட்டு சொல்லவோ அல்ல.

யார் பாராட்டினாலும், ‘விடுதலை’யில்தான் இருக்கப் போகிறேன்; யார் எதிர்த்தாலும் ‘விடுதலை’யில்தான் இருக்கப் போகிறேன்.

நாளைக்கு சிறைச்சாலைக்கு அனுப்பினாலும், அப்போதும் ‘விடுதலை’யில்தான் இருப்பேன்.

ஆனால், ‘விடுதலை’க்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

இதை நம்மவர்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. அதை அறிந்தவர்கள் நீங்கள். இருந்தாலும் அதை நினைவூட்டுவதற்காக சொல்கிறேன்.

‘விடுதலை’ நாளிதழ் ஒரு நாள்கூட நின்றதே கிடையாது; தவறி நிறுத்தப்பட்டதே கிடையாது

எந்தக் காலகட்டத்திலும் நான் பொறுப்பேற்ற பிறகு ‘விடுதலை' நாளிதழ் ஒரு நாள்கூட நின்றதே கிடையாது; தவறி நிறுத்தப்பட்டதே கிடையாது. நாம் விடுமுறை விட்டால்தான் வெளிவராமல் இருந்திருக்கலாம்.

நெருக்கடி காலத்தில் நான் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருந்தேன். அன்னை மணியம்மையார் அவர்கள் உடல்நலக் குறைவோடு இருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் ‘விடுதலை'யை தொடர்ந்து நடத்தினார். இன்றைய ‘விடுதலை' நிர்வாக ஆசிரியர் அன்றைக்கு அரசு ஊழியராக இருந்தார்;  கீழ்வேளூர் பக்கத்தில்தான் இருந்தவர்; மயிலாடு துறையை சார்ந்த கலி.பூங்குன்றன். அவர் தன்னுடைய வாழ்க்கையை துச்சமென மதித்து, நெருக்கடி கால கட்டத்தில் பலர் பெரியார் திடலுக்கே வருவதற்கு அஞ்சிய நேரத்தில், அம்மா  மணியம்மையார் அவர்களுடைய மன உறுதிகொண்ட தலைமை - பூங்குன்றன் போன்ற தோழர்கள், புகைப்பட நிபுணர் குருசாமி, சுந்தரப்பெரு மாள் கோவில்தான் அவருடைய சொந்த ஊர். நன்னிலம் போன்ற பகுதிகளில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி யவர். அரசு ஊழியராக இருந்த அவருடைய பணி நெருக்கடி காலத்தில் போயிற்று.

அப்படிப்பட்டவர்கள் எல்லாம் அன்னையாரோடு ஒத்துழைத்து, ‘விடுதலை' நாளேடு வெளிவந்தது.

‘விடுதலை', ‘முரசொலி'தான் நெருக்கடி காலகட்டத் தில் மிகப்பெரிய அளவிற்குத் தாக்குதலுக்குள்ளான பத்திரிகைகள். அதற்குப் பிறகு ‘தீக்கதிர்' நாளேடு. ‘தினமணி', ‘எக்ஸ்பிரஸ்' போன்ற நாளேடுகள் கோயங்கா நெருக்கடி நிலையை எதிர்த்ததால், அவர்களுக்கும் அந்த நெருக்கடி இருந்தது. பத்திரிகை சுதந்திரம் இப்படித்தான் இருந்தது.

‘விடுதலை’யினுடைய சிறப்பு

அதற்கடுத்து உங்களுக்கெல்லாம் தெரியும். கோவிட் தொற்று காலகட்டத்தில் பெரிய பெரிய பத்திரிகைகள் எல்லாம் நிறுத்தப்பட்டன. ஆனால், நம்முடைய ‘விடுதலை' நாளேடு ஒரு நாள்கூட நிறுத்தப்படவில்லை. பத்திரிகையினுடைய பக்கம் தான் குறைந்தது. அதுமட்டுமல்ல,  சந்தாக்களே நாம் வாங்கவில்லை. நான்கு பக்கங்களில் ‘விடுதலை' நாளேடு நாடெங்கும் சென்றது. ஒவ்வொரு தோழர்களும் மின்னிதழ்மூலம் 200 பேருக்கு, 300 பேருக்கு அனுப்பினர். பல லட்சக்கணக்கான மக்களை அந்தக் காலகட்டத்தில் வழமைக்கு மாறாக ‘விடுதலை' சந்தித்தது. இது ‘விடுதலை'யினுடைய சிறப்பாகும்.

அதுமட்டுமல்ல, சில பத்திரிகைகள் விளம்பரத் திலே வாழ்கின்றன. ஆனால், நம்முடைய ‘விடுதலை’ நாளேடு விளம்பரம் இல்லாமல்தான் வெளிவருகிறது. நம்முடைய நாளேட்டில் கவர்ச்சிகரமான படங்களைப் போடுவதில்லை. பரபரப்பான செய்திகளை வெளியிடுவதில்லை. ஜோதிடம், திரைப்படம் போன்ற போதைப் பொருள்களை நாம் பரப்புவதில்லை.

கொள்கை, லட்சியம்,  திராவிட இனத்தினுடைய மான மீட்பு, பாதுகாப்பு, ஒரு ‘திராவிட மாடல்' ஆட்சி ஏற்பட்டு இருக்கின்றது என்றால், கண்ணை இமை காப்பதைப்போல, காக்கின்ற மிகப்பெரிய பணிதான் ‘விடுதலை'யினுடைய பணிகளாகும்.

தந்தை பெரியார் என்ற அறிவாயுதம் தயாரித்த போராயுதம் ‘விடுதலை’ நாளேடு!

எனவே, ‘விடுதலை’ நாளேடு நாடெங்கும் பரவ வேண்டும். முன்பு எந்தக் காலகட்டத்திலும் ‘விடுதலை’ தேவைப்பட்டது என்றாலும், தற்போது நம்முடைய எதிரிகளுக்குப் பதில் சொல்வதற்கு மிகவும் அவசியப் படுவது தந்தை பெரியார் என்ற அறிவாயுதம் தயாரித்த போராயுதமான ‘விடுதலை’ நாளேடு ஆகும்.

(தொடரும்) 


No comments:

Post a Comment