அறிவியல் வளர்ச்சியும் - அர்த்தமில்லா மூடப் பழக்கமும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

அறிவியல் வளர்ச்சியும் - அர்த்தமில்லா மூடப் பழக்கமும்!

அறிவியல் மனப்பாங்கு (Scientific Temper) என்பது ஏன், எதற்கு, எப்படி, எப்போது, எதனால் என்ற கேள்விகளைக் கேட்டு வளர்ச்சிக்கு வித்திடுவதேயாகும்!

ஆராய்ந்து அறிந்ததினால்தான் உலகம் இன்று செயற்கை அறிவுத் திறன் (Artificial Intelligence)  வரை வெகு வேகமாக வளர்ந்து உயர்ந்து நிற்கிறது! 

'வெறும் சடங்கு, சம்பிரதாயம், கண்ணை மூடிக் கொண்டு நம்பு, கேள்வி கேட்காதே என்பதே சனாதனம்  - என்றும் மாறாதது; மாறவே கூடாதது' என்பதே அதன் தத்துவம், இயற்கைக்கும், அறிவுக்கும் மாறான ஒன்று.

சிலவற்றினை விஞ்ஞானம் (அறிவியல்) போல் சித்தரிப்பார்கள். அது போலி அறிவியல் (Pseudo Science), உண்மை அறிவியல் அல்ல!

நம்புவது காரண காரியத்தோடு இருக்க வேண்டும் அல்லவா?

காரண காரியம் பற்றிக் கவலைப்படாமலே "என் முன்னோர் - தாத்தா, அவரின் கொள்ளுத் தாத்தா செய்தது. ஆகவே, அதனை நானும் எந்தக் கேள்விக்கும் உட்படுத்தாமல் நம்புகிறேன்; பின்பற்றுகிறேன்" என்றால் அது ஒரு போதும், வளர்ச்சிக் கண்ணோட்டத்தில், பகுத்தறிவின் அடிப்படையில் ஏற்கத்தக்கது அல்ல! 

ஒரு உதாரணம்: தந்தை பெரியார் சொல்வார்: "சந்தைக்குப் போய் விட்டு வருபவன் குளிக்க வேண்டும் என்றால் - அது ஏன்? என்ற கேள்விக்கு, சரியான பதில் சொல்லாமல் 'என் தாத்தா அப்படித் தான் குளித்தார், என் தந்தையார் குளித்தார்; எனவே, நானும் குளிக்க வேண்டும் என்ற அய்தீகத்தைப் பின்பற்றுகிறேன்' என்றால் அது மூடநம்பிக்கை; வெறும் சடங்காச்சாரம்".

மாறாக சந்தையில் பல பேரை சந்திப்போம். தொற்று நோயும் பரவிட வாய்ப்பு அதிகம்; எனவே நம்மைப் பாதுகாத்து நல்வாழ்வு வாழ குளிக்க வேண்டியது அவசியம் என்று ஒருவர் விளக் கினால் அது அறிவு பூர்வமாக ஏற்க வேண்டிய ஒன்றாகும்.

அப்படியே கண் மூடித்தனமாக நம்புவதே 'ஆத்திகம்'; ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு விளக்கும் அறிவு பொருந்தியதே என்பதை அறிந்த பின்பு, பின்பற்றுவதே 'நாத்திகம்' என்றும் சரியான விளக்கம் தந்தார்!

எனது தந்தையார் (சி.எஸ். கிருஷ்ணசாமி) வைதீக நம்பிக்கையாளர்; வியாழன் மாலை தையற் கடையை விட்டு வெளியே கிளம்பி பல மணித்துளிகள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருப்பார். பறக்கும் கருடன் கண்ணுக்குப்பட வேண்டும். கன்னத்தில் போட்டுக் கொண்டு ('கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று கூறிக் கொண்டு) திரும்புவார்!

மின்னல் இடி இடித்தால், "அர்ச்சுனனை மின்னல் ஒளியாள் என்ற பெண் துரத்துகிறாள்.  அந்த சத்தமே இடி, வெளிச்சம்" என்று ஒரு விசித்திர விளக்கம் தருவதோடு, 'அர்ச்சுனா, அர்ச்சுனா' என்று முகவாய் கட்டை, தாடை பக்கம் போட்டுக் கொள்வார்!

அறிவியல் ரீதியாக ஒலி, ஒளி பற்றிய விளக்கம் என்பதைச் சொன்னால் அது அவருக்கு விளங்காது!

எங்கள் வீட்டின் கீழ் பகுதியைச் சுற்றி சுமார் 30, 40 நிமிடங்கள் நாள்தோறும் காலையில் நடைபயிற்சி செய்வேன். எங்கள் வீடு அடையாறு - சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திற்கு 10, 20 மணித் துளிகளில் செல்லும் தூரம் என்பதால், மேலே பறக்கும் விமானங்கள் தாழ்ந்து, எங்கள் வீட்டு மேலே பறந்து சென்றுதான் விமான தளத்தில் தரையிறங்கும்.

கரோனா கொடுந்தொற்று (Covid 19) கால ஊர் முடக்கத்தினால் எல்லோரும்  வீட்டில் இருந் தார்கள். விமான சர்வீஸ் ரத்து, எந்த விமானமும் பறக்கவில்லை.

ஆனால், அந்த முடக்கத்தை நீக்கிக் கொண்ட போது, சில மாதங்கள் கழித்து உள்நாட்டு, வெளி நாட்டு விமானப் பயணச் சேவைகள் திரும்பவும் செயல்படத் துவங்கின.

அத்தி பூத்ததுபோல ஒரு விமானம் மேலே பறந்தாலே வியப்புத்தான். ஏறத்தாழ ஒரு ஆண்டு இந்த நிலைதான். அதனால் பொருளாதாரச் சீர்கேடு - பின்னடைவு எல்லாம்!

நடை பயிற்சியின்போது, காலையில் குறைந் தது 2 முதல் 3 வரை விமானங்கள் பறக்கின்றன. வானத்தைப் பார்த்து - கன்னத்தில் போட்டுக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன்... காரணம் பொருளா தாரம் மீண்டு வருவதற்கு சுற்றுலா - விமானங்கள் சேவையின் தேவை எல்லாம் அதன் வெளிப் பாடுகள் அல்லவா?

என் தந்தை கருடனைப் பார்த்தார். நானோ விமானத்தைப் பார்த்து மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment