எழுச்சித் தமிழர் மணிவிழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

எழுச்சித் தமிழர் மணிவிழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

 திருமணம் ஆகாவிட்டாலும் மண்ணை மணந்த மணாளர் திருமாவளவன்

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும் - அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தவர் நமது முதலமைச்சர்!

‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதற்கு இது ஒன்றே போதும்; மதவாதத்தை வீழ்த்த ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்தியா முழுவதும் பரவட்டும்!

கொள்கை முத்தான எழுச்சித் தமிழர் நமது மூன்றாவது குழல் துப்பாக்கி

சென்னை, ஆக.18   விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமா ஒரு கொள்கை முத்து - நமது மூன்றாவது குழல் துப்பாக்கி; திருமணம் ஆகாவிட்டாலும், மண்ணை மணந்த மணாளர் இவர். சமூகநீதி - சமத்துவ அடிப்படையில் சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது முதலமைச்சரின் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு உறு துணையாக இருப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

எழுச்சித் தமிழர் தொல்.திருமா அவர்களின் 

60 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!

மிகுந்த எல்லையற்ற மகிழ்ச்சியோடு, எல்லோரும் கூடியிருக்கின்ற ஒரு விழா - இந்த மணியோசை விழா - மணிவிழா என்ற பெருமைக்குரிய அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா அவர்களுடைய 60 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்ற இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு, யார் தலைமை விருந்தினராக இருந்து அவரை வாழ்த்தவேண்டுமோ அப்படி வந்திருக்கின்ற எங்களுடைய ஒப்பற்ற முதலமைச்சர் - ‘திராவிட மாடல்’ என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதற்கும், எல்லா மாநிலங்களும் தங்களுடைய உரிமைகளைப் பெறவேண்டும் என்று நினைத்தால், அத்துணை மாநிலங்களும் பெறக்கூடிய அந்த வாய்ப்பை, இதோ தமிழ்நாடு அளித்துக் கொண்டிருக் கின்றது என்பதற்கு அடையாளமாக, கடந்த ஓராண்டு காலத்திற்குமேலாகத் தந்து, ‘திராவிட மாடல்’ ஆட்சி யைத் தந்து எதிரிகளுடைய ஆயுதங்களை யெல்லாம் பிடுங்கி, ஆயுதபாணிகளாக இருந்தவர்களை, நிராயுத பாணிகளாக ஆக்கியிருக்கிறீர்கள், அதனால்தான் அவர்கள் உளறிக் கொண்டிருக்கிறார்கள், தெளிவில் லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அரு மையான அமைதியான ஒரு புரட்சியை உருவாக்கி யிருக்கிற எங்கள் முதலமைச்சர் அவர்களே, இந்நிகழ்ச்சி யின் தலைமை விருந்தினர் அவர்களே,

எளிமையின் சின்னம், 

பாட்டாளிகளின் தோழர் ஆர்.என்.கே.! 

அதேபோல, 97 வயது ஆனாலும், கருத்தியலில் கொஞ்சம்கூட தடுமாற்றம் கிடையாது என்பதை, தன்னுடைய அருமையான தலைமையுரையின் மூலமாக உணர்த்திக் காட்டி, அவர்களைத் தக்க வகையில், ‘‘தகைசால் தமிழர்’’ என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அடையாளங் கண்டு கொண்டு, அவரைப் பெருமைப்படுத்தியது இருக்கிறதே - அது அவருக்காக அல்ல - நம்மு டைய பண்பு - கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நயத் தக்க நாகரிகம். எளிமையின் சின்னம், பாட்டாளி களின் தோழர் ஆர்.என்.கே. அவர்களே,

என்றைக்கும் - ‘விழா நாயகர்’ 

கொள்கை முத்து அருமை எழுச்சித் தமிழர் திருமா!

இவை எல்லாவற்றையும்விட, இன்றைக்கு விழா நாயகராக இருக்கக்கூடியவர் - விழா நாயகர் - என்றைக்கும் - ‘விழா நாயகர்’ என்பதுதான் மிக முக்கிய மானதாகும். அப்படிப்பட்ட அருமையான எங்கள் சகோதரர் எழுச்சித் தமிழர் மூன்றாவது குழலின் முக்கியமான - முத்தாய்ப்பான - முத்தமிழைப் போன்ற - முச்சங்கத்தைப் போன்ற மிகத் தெளிவான கொள்கை முத்து அருமை எழுச்சித் தமிழர் திருமா அவர்களே,

வரவேற்புரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் ரவிக் குமார் அவர்களே,

இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கின்ற தோழர் சிந்தனைச்செல்வன் அவர்களே,

ஒப்பற்ற ஒரு காட்சி!

எல்லாவற்றையும்விட, தொல்.திருமா அவர் களுடைய அன்னையார் அவர்கள் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்; அவருடைய மணிவிழாவிலே, அவருடைய அன்னையாரோடு அமர்ந்திருக்கிறார் அல்லவா - அதுதான் நமக்கு ஒப்பற்ற ஒரு காட்சி.

வள்ளுவர் குறளுக்கு இலக்கியம் இதோ -

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 

சான்றோன் எனக்கேட்ட தாய்

இதுதான் மிக அற்புதமான, சிறப்பான ஒரு வாய்ப் பாகும்.

முதலமைச்சர் டில்லிக்கு விரையவேண்டிய அவசியத்தில் இருக்கிறார்; எனவே, அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது.

மற்றவர்களுடைய மனப் பிணியைப் 

போக்கக் கூடிய அணி!

எங்கள் மொழி ஒரே மொழிதான்!

எங்கள் அணி ஒரே அணிதான்!

இந்த அணி இருக்கிறதே, இதுதான் மற்றவர்களுடைய பிணியைப் போக்கக் கூடிய அணி - சாதாரணமானதல்ல!

பிணி என்றால், உடல் பிணியல்ல!

மனப் பிணி - உள்ளப் பிணி - பல பேரை மதவெறி பிடித்திருக்கிறது; பல பேரை மதவெறி சங்கடப்படுத்தி இருக்கிறது. இன்றைக்கு ஜாதிவெறி ஆட்டம் போடுகிறது என்றால், தமிழ் மண்ணிலே அதற்கு இடமில்லை என்று காட்டக்கூடியவர்கள் இந்த மேடையில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சியை அழகுற கொள்கைபூர்வமாக நடத்தி, எங்களுக்குப் போராட்டம் நடத்தவேண்டிய அவசிய மில்லை - அதன் காரணமாகத்தான் பல நேரங்களில், காவிகள் ஆள்மாறாட்டம் செய்து பட்டம் வாங்கலாம் என்று கருதக்கூடிய அளவிற்கு, அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற அளவில் இருக்கின்ற சூழ் நிலையில்,

கொள்கைப் பிரகடன விழா!

இது ஓர் அருமையான விழா என்று சொல்லும் பொழுது, இது வெறும் மணிவிழா மட்டுமல்ல நண்பர்களே, ஒரு நல்ல கொள்கைப் பிரகடன விழா.

தமிழ்நாட்டில் நடைபெற்ற  செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்கு  பிரதமர் மோடி அவர்கள் வந்தார். பிரதமர் மகிழும் வண்ணம், தமிழர்களுடைய பண்பாடு, கலை, நாகரிகம் எப்படிப்பட்டது என்பதை அழகாக எடுத்துரைத்த நிலையில்,

பல பேர் அங்கே கொஞ்சம் நுழையலாமா? என்று நினைத்து, கூட்டணி மாறுமோ என்றெல்லாம் சொன் னார்கள்.

அடுத்த நாள், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கேரள மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றியபொழுது, அவர் அந்த மொழியை யும் கலந்து பேசிய நிலையில், மிகப்பெரிய வரவேற்போடு செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் கூட்டணி மாறுமா? என்று கேள்வி கேட்டார்கள்.

எங்களுடைய கூட்டணி 

பதவிக் கூட்டணி அல்ல - கொள்கைக் கூட்டணி!

அப்பொழுது நம்முடைய முதலமைச்சர், திராவிட மாடல்   முதலமைச்சர் அவர்கள் பளிச் சென்றும், தெளிவாகவும் சொன்னார், ‘‘எங்களு டைய கூட்டணி பதவிக் கூட்டணி அல்ல - கொள்கைக் கூட்டணி; ஆகவே, இது எப்பொழுதும் தொடரும்'' என்று சொன்னார்.

இதுதான் இந்தியாவிற்கே பிரகடனம்.

இந்தியாவிலே ஏன் சிக்கல்?

எல்லோருக்கும் உணர்விருந்தாலும், ஏன் சில நேரங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு கேள்வி இருந்தால், அதற்கு நம்முடைய முதலமைச்சருடைய பதிலில் தெளிவான விளக்கம் இருக்கிறது.

வட மாநிலங்களில் சேருவது அரசியல் கூட்டணி - இங்கே சேர்ந்தது கொள்கைக் கூட்டணி!

அங்கே பல நேரங்களில் சேருவது அரசியல் கூட்டணி - இங்கே சேர்ந்தது கொள்கைக் கூட்டணி!

அரசியல் கூட்டணிகளுக்குப் பின்னடைவு ஏற்பட லாம்; ஆனால், கொள்கைக் கூட்டணிக்கு ஒருபோதும் பின்னடைவு ஏற்படாது என்பதற்குத்தான் - 97 வயது நிறைந்த நம்முடைய அய்யா எளிமையின் சின்னம் - அய்யா ஆர்.என்.கே. இந்த நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்திக் கொண்டிருக்கின்றார்.

அதனுடைய அடையாளம்தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ‘‘உறவுக்குக் கைகொடுப்போம்; அதே நேரத்தில் உரிமைக்குக் குரல் கொடுத்தே தீருவோம்’’  என்ற உணர்ச்சியோடு அவர்கள் இந்தப் பணியை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

சனாதன எதிர்ப்பு மாநாடு!

இப்பொழுது நம்மை சூழ்ந்திருக்கின்ற ஆபத்துகளை - இங்கே வெறும் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிவிட்டுப் போய்விடக் கூடாது - அதனை நினைவூட்டவேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு முறையும், மிகத் தெளிவாக கொள்கைப்பூர்வமாக இந்த நிகழ்ச்சிகளை நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர் இதுவரை நடத்திய மாநாடுகளுடைய பட்டியலைச் சொல்வதற்கு நேரம் போதாது.

மகளிர் உரிமை பாதுகாப்பு மாநாடு

சனாதன எதிர்ப்பு மாநாடு என்பது தொலைநோக்கோடு போடப்பட்டதாகும்.

அதுதான் இன்றைய தேவையாகும்.

நாம் புரிந்துகொண்டால் மட்டும் போதாது; மக்களுக்கும் புரிய வைக்கவேண்டும்

நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்று நாம் புரிந்து கொண்டால் மட்டும் போதாது; அதை மக்களுக்கும் புரிய வைக்கவேண்டும்.

அந்தப் பணியைத்தான் இங்கே செய்யக்கூடிய அளவிற்கு, அருமையான ஒரு செய்தியை, தோழர் ரவிக்குமார் அவர்கள் சொன்னதைப்போல, ஒவ்வொரு மாநாட்டிலும், ஒவ்வொரு ஆண்டு விழாவிலும், ஒவ்வொரு பிறந்த நாள் விழாவிலும் ஒரு நல்ல தத்துவச் சுடரை அவர்கள் சிறப்பாக முன்னிறுத்துகிறார்கள்.

‘திராவிட மாடல்’ ஆட்சியில், 

சனாதனத்திற்கு இடம் கிடையாது

அந்த வகையில் நண்பர்களே, அவரை நாம் வாழ்த்து கின்ற நேரத்தில், பாராட்டுவதற்கு எல்லை இல்லை என்று சொல்லக்கூடிய மகிழ்ச்சியடைகிற நேரத்தில், தெளிவாகச் சொல்லுகிறார், 

‘‘சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்!’’

‘‘ஜனநாயக சக்திகளை அய்க்கியப்படுத்துவோம்!’’

ஒன்றுபடுத்துவோம் என்பதுதான் இந்த விழாவி னுடைய நோக்கம் என்று சொல்கிறார்.

அதைச் செய்வதுதான் - சுருக்கமாக ஒரே வார்த்தை யில் சொல்லவேண்டுமானால், ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி என்பதாகும். ‘திராவிட மாடல்’ ஆட்சியில், சனாதனத் திற்கு இடம் கிடையாது.

அனைவரும் சமம் என்று சொல்வதே, சனாதனத்திற்கு விரோதம்.

அம்பேத்கர் பிறந்த நாள் - சமத்துவ நாள்; தந்தை பெரியாரின் பிறந்த நாள் - சமூகநீதி நாள்!

சமத்துவம், இங்கே சற்று நேரத்திற்கு முன்பு தோழர் சொன்னார், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர் களுடைய பிறந்த நாள் விழாவை - நம்முடைய மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் அவர்கள் சமத்துவ நாளாகக் கொண்டாடினார் என்பது மட்டுமல்ல, நரிக்குறவர் வீட்டிலே உண்டாடினார்.

உங்களுக்கெல்லாம் தெரியும் - தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

திருப்பூரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் காணொலிமூலமாக உரையாற்றியபொழுது நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘‘தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்’’ என்று குறிப்பிட்டார். தந்தை பெரியாருடைய பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை, சமூகநீதி நாள் என்று அறிவித்த பெருமை நம்முடைய முதலமைச்சர் அவர்களையே சாரும்.

இரண்டுதான் இந்த நாட்டிற்குத் தேவை -

ஒன்று சமத்துவம் - இரண்டு சமூகநீதி!

இரண்டு தலைவர்களுடைய தத்துவம்தான் இந்த நாட்டிற்குத் தேவை! இந்த இரண்டையும் சேர்த்துத் தருவதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி.

அந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கவேண்டியது நம்மைப் போன்றவர்களுடைய பணி.

உறுதுணை என்பதைவிட, போர் வீரர்களாக இருந்து, எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வது நம்மைப் போன்றவர்களின் வேலை.

ஆகவே, அன்புள்ள முதலமைச்சர் அவர்களே, எங்களின் பெருமைக்குரிய முதலமைச்சர் அவர்களே,

நீங்கள் உங்களுடைய பாதையில் வேகமாகச் செல்லுங்கள்; துணிவாகச் செல்லுங்கள்.

விடுதலை சிறுத்தைகளுடைய பட்டாளம் - திராவிடர் இயக்கப் பட்டாளம் இருக்கின்றன!

ஏனென்றால், இங்கே எப்படியெல்லாம் உள்ளே நுழையலாம் என்பதற்காக ஏதேதோ வித்தைகளைச் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்; அந்த வித்தை களையெல்லாம் வெறும் சொத்தைகள் என்று ஆக்கக் கூடிய அளவிற்கு, நம்மால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்பதற்கு, இதோ இந்தப் பட்டாளம் இருக்கிறது - விடுதலை சிறுத்தைகளுடைய பட்டாளம் இருக்கிறது - திராவிடர் இயக்கப் பட்டாளம் இருக்கிறது.

எனவே, ‘திராவிட மாடல்’ ஆட்சியை எதிர்த்து எத்தனை கூலிப் பட்டாளங்கள் வந்தாலும், எத்தனை விபீஷணர்கள் வந்தாலும், எத்தனை அனுமார் பட்டா ளங்கள் வந்தாலும் அசைக்க முடியாது; இதில் உறுதியாக இருக்கவேண்டும் என்று சொல்வதுதான் இந்த பிறந்த நாள் விழா - ஒரு மாபெரும் விழாவாக நடைபெறுகிறது.

இன்றைக்குக் காலையிலிருந்து எனக்கு ஏராளமான தொலைப்பேசி அழைப்புகள் - இதில் ஒன்றும் ரகசியம் இல்லை. அவருடைய செயல்திறன் என்பதற்கு அடையாளமாக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.

ஊடுருவக் கூடாத ஒருவர், ஒரு அதிகாரத்தில் எப்படியோ உள்ளே நுழைந்து, அப்பொறுப்பை ஏற்கப் போகிறார் என்கிற செய்தி வந்தவுடன், நம்முடைய அரசாங்கத்தில், சனாதன சக்திகள் ஊடுருவுவதா? பொறுப்பில் வருவதா? என்று நினைத்தோம்.

மாலையில் அவரிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று காலையில் புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இப்பொழுதுதான் சென்னைக்கு வந்தேன்.

அந்தச் செய்தி என்னாயிற்று என்று கேட்பதற்கு முன்பே - அந்தச் செய்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது என்ற செய்தி தொலைக்காட்சியில் வந்திருக்கிறது.

‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு 

என்றும் துணையாக இருப்போம்!

ஆகவேதான், எப்பொழுதெல்லாம் கிருமிகள் நுழை கிறதோ- அவருடைய தகவலுக்கு அப்பாற்பட்டு சாமர்த் தியமாக உள்ளே நுழைந்தாலும்,  அந்தக் கிருமிகளுக்கு மருந்து அடிக்கிற முதலமைச்சர்தான், எங்கள் மருத்துவ முதலமைச்சர் என்ற பெருமை இருக்கிறது. ஆகவே, ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு என்றும் துணையாக இருப்போம்!

எழுச்சித் தமிழரே! அதேபோல, இங்கே சேர்ந்தி ருக்கின்ற என்னருந் சகோதரர்களே, இதுதான் மிகவும் முக்கியம்!

சிறுத்தை, சிறுத்தைதான்!

சிறுத்தைகளைப்பற்றி சொல்லும்பொழுது, அது நீலச் சிறுத்தைகளா? கருஞ்சிறுத்தைகளா? சிவப்பு சிறுத்தை களா? என்று பார்க்கவேண்டிய அவசியமில்லை. சிறுத்தை, சிறுத்தைதான்!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அழகாகச் சொன்னார்,

‘‘காட்டிலொரு முயற்குட்டி துள்ளக்கூடும்

கருஞ்சிறுத்தை கண்விழித்தால்

தெரியும் சேதி!

தூங்கி விழித்தான் தமிழன்

விழித்தால் தோலை உரிப்பான் தமிழன்!’’

என்று சொன்னார்.

இது புரட்சிக்கவிஞருடைய வாக்கியம்!

இதைத்தான் துள்ளுகின்றவர்களுக்கு எச்சரிக்கை யாக சொல்கிறேன்.

முதலமைச்சர் அவர்கள் இந்த மேடையில் இருக்கின்ற காரணத்தினால் அடக்கி வாசிக்கிறோம்!

முதலமைச்சர் அவர்கள் இருக்கின்ற காரணத்தினால், நாகரிகத்தோடும், பொறுப்போடும் பேசவேண்டும் என்ப தால், நாங்கள் அடக்கி வாசிக்கிறோம்.

அதிகமாக வாசிக்கவேண்டிய இடத்திலே, நானாக இருந்தாலும், எழுச்சித் தமிழராக இருந்தாலும் எப் பொழுதும் வாசிப்போம்! அதேநேரத்தில்,  அதற்குக் காரணம், உங்களை அதிகமாக நேசிப்போம். அதன் காரணமாகத்தான் வாசிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்று சொல்லி விடைபெறுகிறேன்.

வாழ்க நம்முடைய எழுச்சித் தமிழர்!

நூறாண்டு அல்ல - அதற்குமேலும் அவர் வாழ வேண்டும். ஏனென்றால், விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே போகும்.

அதுமட்டுமல்ல, ஒரே ஒரு குறை அவருடைய அம்மாவிற்கு இருக்கும் - அவர் பொதுவாழ்க்கையை மணந்துகொண்டாரே என்று - அது அவருடைய முடிவு.

காமராசரின் தாயார் பெரியாரிடம் வைத்த வேண்டுகோள்!

தந்தை பெரியார் அவர்கள், காமராசரை அவர்களை ஆதரித்த நேரத்தில் ஒரு செய்தி வேடிக்கையாக வந்தது.

காமராசருடைய தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்ப்பதற்காக, தந்தை பெரியார் விருதுநகர் சென்ற பொழுது அவரை சந்தித்தார். அதுவரையில், தந்தை பெரியார் அவர்களை சந்தித்தது இல்லை.  ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களுடைய தந்தையார் பழனியப்பன் அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார். அவர், அம்மையாரை ‘‘அக்கா’’ என்று கூப்பிடுவார்.

அந்த அம்மையார், தந்தை பெரியார் அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு - இங்கே எப்படி முதலமைச்சர் கையைப் பிடித்துக்கொண்டு, இங்கே அம்மையார் அவர்கள் இருந்தாரோ - அப்படி அவர்கள் அய்யாவின் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னார்,  ‘‘அய்யா, உங்களைப் பார்க்கணும், பார்க்கணும் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்; உங்களைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்‘‘ என்றார்.

‘‘என்னம்மா, நான்தான் உங்களைப் பார்க்கணும்ணு வந்தேன்’’ என்று பெரியார் சொன்னார்.

‘‘எல்லோரும் சொல்றாங்க, என் பையனுக்கு கல் யாணம் ஆகலையா? நீங்க ஒரு வார்த்தை சொன்னீங் கன்னா, நிச்சயம் அவனுக்குக் கல்யாணம் ஆகும்’’ என்றார்.

‘‘என்னம்மா, இப்படி சொல்றீங்க?’’ என்று பெரியார் கேட்டார்.

‘‘என் பையன் நீங்க சொல்றபடிதான் கேட்கிறார் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்காங்க’’ என்றார்.

நல்லவாய்ப்பாக இன்றைக்கு இந்த சூழ்நிலை இல்லை. அதற்கு முடிவாக, அவர் முடிவாக, உறுதியாக இருக்கிறார் என்ற நிலை.

பொதுவாழ்க்கையை மணந்து கொண்டிருக்கின்ற எழுச்சித் தமிழர்!

ஆகவே, பொதுவாழ்க்கையை மணந்து கொண்டி ருக்கின்றவருக்கு நம்முடைய வாழ்க்கை -அத்துணை பேருடைய  வாழ்க்கையையும் கொடுப்போம்!

அவரைப் பாதுகாப்போம்!

அவருக்கு உறுதுணையாக இருப்போம்!

வாழ்க வளர்க!

வாழட்டும் எங்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சி!

பரவட்டும், இந்தியா முழுவதும்!

எல்லாப் பகுதிகளிலும் பீகார் தோன்றட்டும்!

அடுத்து தென்னாட்டிலே கருநாடகத்தில் பீகார் போன்று வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது - மக்கள் எழுச்சி வரும்.

சனாதன சக்திகளை வேரறுப்போம்!

எனவேதான், இந்த வாய்ப்பை - எழுச்சித் தமிழர் மூலமாக புதிதான ஒரு சூளுரையை ஏற்போம்!

அந்தச் சூளுரையினுடைய சக்திதான் -

சனாதன சக்திகளை வேரறுப்போம் -

அதேபோல, சமதர்மத்தை நிலைநாட்டுவோம்! என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.


No comments:

Post a Comment